

பிரிக்க முடியாதது?
சென்னையும் இசைவிழாவும்!
சேர்ந்தே இருப்பது?
கச்சேரியும், கேண்டீனும்!
ஆம்! இந்த வருடத்து இசைவிழா சீசன் களைகட்டிவிட்டது. முன்னணி இசை கலாசார அமைப்புகள், சபாக்கள் இந்த வருடம் யார் யாருக்கு விருது என்று அறிவித்து விட்டார்கள். இன்னொரு பக்கம், சபாக்களும், கேட்டரிங் காண்டிராக்டர்களும் எங்கெங்கே யார் கேண்டீன் கச்சேரி நடத்தப்போகிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இசைக்கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் தங்கள் நிகழ்ச்சிகளில் என்னென்ன இடம் பெறப்போகின்றன என்பதை முடிவு செய்து, அதற்காக பிசியாக பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்திய நுட்பக் கலைகளை உலகளவில் இணைக்கும் முன்னோடி தளமாக MDnD.in இந்த ஆண்டு இசைவிழாவுக்கான தனது திட்டங்களை அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அறிவித்தது.
இசை–நாடகம்–நடனக் கலைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒரே தளத்தில் இணைத்து, அவர்களுக்குள் பரிமாற்றங்களை எளிதாகச் செயல்படச் செய்வதோடு, அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக செயல்படுவதே இதன் நோக்கம்.
இவர்களின் ஸ்பெஷாலிடி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்வது. ஒவ்வொரு ஆண்டும் இவர்களது ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு உலகளாவிய இசை, நடன ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதாக இந்த அமைப்பின் நிறுவனரான கே.கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டும், www.mdnd.in என்ற இணையதளத்தின் மூலமாக ரசிகர்கள் தங்களது அபிமான இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகளுக்கன தினசரி டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த இணையதளம் வழியாக கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், நாரத கான சபா, பிரம்ம கானசபா, தியாக பிரம்ம கான சபா, மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, இன்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, கலாட்சேத்ரா , பாரத் கலாச்சார், நாத சுதா, அப்பாஸ் கல்சுரல், சார்சூர் ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷன், சென்னையில் சங்கீத உத்சவ், கார்நாடிகா குளோபல் ஆகிய சபாக்களின் இசை விழா நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறமுடியும்.
மேலும், ரசிகர்கள் பயன்பெற, டிக்கெட் மற்றும் இலவச நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்வுகளின் விவரங்களையும் MDnD ஒருங்கிணைத்து வழங்குகிறது.
2025ஆன் வருட இசை விழா சீசனுக்கான உங்கள் ஸ்பெஷல் ஏற்பாடு என்ன? என்று கேட்டபோது, கல்யாண சுந்தரம் கூறியதன் தொகுப்பு:
எங்களது HOT DEALS இணைப்பின் மூலம் ரசிகர்கள், டிக்கெட்டுகளுடன் இசை–நடன நூல்கள் மற்றும் கலாசேத்ரா வெளியீடுகளையும் வாங்கலாம்.
இணையதளத்தின் நிகழ்வுகள் பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் 'அடுத்து வரும் நிகழ்ச்சிகள் பகுதியில் அடுத்த 30 நாட்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளின் விவரங்களை எப்போதும் பார்க்கலாம்.
பதிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, அவர்கள் நிகழ்ச்சிகளின் விவரங்களும், டிக்கெட் இணைப்புகளும் அடங்கிய கலைஞர்கள் காலண்டரை உருவாக்க நாங்கள் உதவி செய்வோம்.
இந்த ஆண்டு சென்னை வர இயலாத, உலகம் முழுதும் உள்ள இந்திய இசை–நாட்டிய ரசிகர்களுக்காக, நாரத கான சபா மற்றும் ஸ்ரீ தியாக பிரம்மகான சபா ஆகியவற்றின் கச்சேரிகளை வெளிநாட்டு பார்வையாளர்களுக்கென்று லைவ் ஸ்ட்ரீம் செய்ய நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை வாங்கி, ஒவ்வொரு சபாவின் சீசன் முடிந்த பின் ஒரு வாரம் வரை கச்சேரிகளை காணலாம். ஒரே இணைப்பில் ஒரே நேரத்தில் ஒரு பயனர் மட்டுமே உள்நுழைந்து பார்க்க முடியும்.
இவை மட்டுமில்லாமல், முதல் முறையாக, 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கான "ஆனந்த மார்கழி" கச்சேரி தொடர் ஒன்றையும் நாங்கள் நடத்துகிறோம். இதில் குரலிசை மற்றும் வாத்திய இசை, ஹரிகதா போன்ற பிரிவுகள் இடம்பெறும். வரும் ஆண்டுகளிலும் இந்த “ஆனந்த மார்கழி” கச்சேரிகள் தொடரும்.
இந்த ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை முதல் டிசம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை எம் டி என் டி கலை அரங்கில் நடைபெறும். இதற்கு அனுமதி இலவசம். மேலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக இது நேரலையாகவும் ஒளிபரப்பப்படும்.