இன்றைய மருத்துவ உலகமும் சாமானியனின் தவிப்பும் - ஒரு சுவாரஸ்ய அனுபவம்!

5 ரூபாய் டாக்டர் காலம் முதல் லட்சங்களில் எகிறும் ஆஸ்பத்திரி பில் மற்றும் கேன்டீன் போண்டா வரையிலான ஒரு கலகலப்பான பார்வை.
Medical World | மருத்துவ உலகம்
Medical World | மருத்துவ உலகம்Image Credit: ChatGPT
என்.எஸ்.வி.குருமூர்த்தி

என்.எஸ்.வி.குருமூர்த்தி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து அனுபவம் கொண்டவர். 1970 முதல் கல்கி, குமுதம், விகடன், தினமணி கதிர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட இதழ்களில் எழுதி வருகிறார். சிறுவர்மணியில் சுமார் 90 நாடகங்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் சுஜாதா கையால் பரிசு பெற்றவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மெடிக்கல் மாஃபியா. ஃபார்மா மாஃபியா என இணையத்தில் டாக்டர்கள் மற்றும் மருந்துகளை கிண்டல் அடித்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள். 

நான் மருத்துவத்துறை எத்தனை புனிதமானது. டாக்டர்களின் சேவை எப்படிப்பட்ட தன்னலமற்ற தொண்டு என பல காலம் நினைத்திருந்தேன்.

நல்லவர்கள் இல்லாமல் இல்லை. எல்லாத் துறையிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய நல்லவர்கள், புனித ஆத்மாக்கள் உண்டு. அவர்கள் காலமானபின் அவர்களைப் பற்றி செய்திகளைப் பகிர்வார்கள்.

இப்படியும் ஒரு ஐந்து ரூபா டாக்டரா.. ஒரு வியாதிக்கு மூன்று வேளை மட்டுமே மருந்து தெளிவான கையெழுத்தில் பிரிஸ்கிருப்ஷன் எழுதுவார் என அங்கொருத்தர் இங்கொருத்தர் இருந்தார்கள்.

அப்போ எல்லாம் வியாதிகள் கொஞ்சம், மருந்துகளும் கொஞ்சம். சளி, தலைவலி ஒரு அனாசின் அல்லது  ஆஸ்ப்ரோவில் போய்விடும். அமிர்தாஞ்சன் டப்பா, கோடாலித் தைலம்தான் சர்வரோக நிவாரணி.

சில சமயம் இரவு 12.30க்கு வீட்டு அம்மணி ஆர் எஸ் பதி தைலத்தை உடல் முழுக்கத் தடவிக்கொண்டு வீடு முழுக்க யூகலிப்டஸ் தைல வாசனையைப் பரவவிடுவார். எலிகள் அந்த வாடை தாங்காமல் இரு நாட்கள் வராது.

கணவர் அந்த வாசனையிலும் அயர்ந்து தூங்குவார். 'எழுந்து என்ன செய்யுது?' எனக் கேட்கலாம் எனத் தோன்றும். காலையில் “ராத்திரி சாகக் கிடந்தேன் மனுஷன் எழுந்து என்னன்னு கேட்க மாட்டீங்களா?” என யுத்தம் எப்படியும் ஆரம்பமாகத்தான் போவுது. அப்போ பார்த்துக்கலாம் என சும்மா இருப்பார்.

வெறும் சளி, இருமல், லேசான தும்மலால் யாரும் இறந்ததாக சரித்திரம் இல்லை.

மல்ட்டி ஸ்பெஷலாட்டி ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் பெரிய நகரங்களில்கூட ஒன்று இரண்டுதான். சமயத்தில் வயிறுக் கோளாறு என்றால் ஃபார்மஸிக்காரர் இரண்டு செட் மாத்திரைகள் தருவார். கஞ்சி பிரட் சாப்பிடுங்க என்பார்.

சுய வைத்தியம் தவறுதான். ஆனாலும் அதுதான் யதார்த்தம். சாமானியனுக்கு எட்டக் கூடிய மருத்துவம்.

இப்போவெல்லாம் டயாபடீஸ் (Diabetes) எல்லோருக்கும் இருக்கு. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கு.

'சுகர் எனக்குக் கிடையாது' என்று ஒருவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார். அம்மணி காபியில் சர்க்கரை போட மாட்டார். கூல் டிரிங்க்ஸ் ஐஸ்கிரீம் தொட முடியாது.

சர்க்கரை நோய் வைத்தியம் என்பது ஒரு பெரிய மாஃபியா என்கிறார்கள்.

அதற்கான டெஸ்ட்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்டு ஒண்ணரை மணி கழித்து, மூன்று மாசத்துக்கு ஒரு முறை ஹெச் பி ஏ ஒன் ஸி சராசரி சர்க்கரை அளவு.

டெஸ்டிங் லேபுகள்தான் டாக்டர் பிரிஸ்கிருப்ஷன் பேடுகள் அச்சடித்துத் தருவார்கள். "அந்த லேபுக்குப் போங்க..." என்பார் டாக்டர்.

நண்பர் சொன்னார், "% கமிஷன் டாக்டருக்கு உண்டு லேப் மூலம்… சில சமயம டாக்டரே பினாமியாக மாமனார் மைத்துனன் மூலம் லேப், பார்மஸி நடத்துவார்."

சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகள் உட்கொள்வது உணவைவிட அதிகம். ஆகாரத்துக்கு முன் ஒரு செட் என டாக்டர் எழுதுவார். நம்ம ஆள் எப்போதும் ஞாபகமாய் போட்டதே இல்லை. சாப்பிட்டபின்தான் போடுவார். 

சாதாரணமாக இருவர் ஆணோ பெண்ணோ பேசும் இரண்டாவது வாக்கியம்.

"உங்களுக்கு சுகர் எவ்வளவு இருக்கு?"

“நான் இன்சுலின் போட்டுக்கறேன்.”

இந்த சுகர் வைத்தியத்தில் குறைந்தது ஒரு வேலைக்கு ஆறு முதல் பத்து மாத்திரைகள் வரை எழுதும் டாக்டர்கள் இருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் | Diabetes
நீரிழிவு நோய் | Diabetes

மெட்ஃபார்மின் என்ற ரசாயனம் தான் சுகருக்கு முக்கிய மருந்து ரசாயனம். 

எப்படி அரிசி மாவானது இட்லி, தோசை, இடியாப்பம், கொழுக்கட்டை, புட்டு, பொங்கல் என பல உருவங்கள் எடுக்கிறதோ அந்த மெட்பார்மின் உடன் சில பல வெவ்வேறு மருந்துகளைக் கலந்து காம்பினேஷன் என்ற பெயரில் பல கம்பெனிகள் விற்கின்றன.

இந்தியாவில் மெட்பார்மின் உட்கொள்ளும் அளவு அரிசி, கோதுமை அளவைவிட அதிகம் என என் உள் மனம் சொல்கிறது.

ஓரு கிராமத்து விவசாயி யதார்த்தமாய் சொன்னார்... ”வயசானா உள்ளே இருக்கும் பார்ட்டுகள் வீக் ஆகத்தானே செய்யும். ஜீரணக் கருவிகள் தேய்ஞ்சு போயிடும். செரிக்காது. கால் கை எலும்புகள் தேயும். மூட்டு வலி குத்தல் வரும். இருதயம் பலம் குறையும். மரம் செடி கொடி பட்டு போவுதே அது போலத்தான்.. வைத்தியம் பண்ணிக்கலாம் பணம் இருந்தால்.. தேய்ஞ்சு போனது போனதுதான்.”

எல்லா மாத்திரைகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. வாய் கசப்பு, சாப்பாடு ருசி தெரியாமையும் பக்க விளைவுதான்.

அம்மணி சமயத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட மறந்து சமையல் சுமாராக வந்துவிடும்.  ஓரமாக கிள்ளி வைத்த கருவேப்பிலை இலைகள் இருக்கும். மறதி.

கணவருக்கு அம்மணி சமையல் திறமையைக் குறைத்துச் சொல்ல தைரியம் கிடையாது. ஆகவே, சுவை தெரியாமைக்கு தன் சுகர் கோளாறே காரணம் என்ற முடிவை தனக்குத்தானே உரக்க அறிவித்துக் கொள்வார் மனதுக்குள்.

நெருங்கிய உறவினர் உடம்புக்கு முடியவில்லை. லோக்கல் வைத்தியத்தில் குணமாகாததால் தஞ்சாவூரில் பெரிய மல்ட்டி ஸ்பெஷல் ஆஸ்பத்திரியில் அட்மிஷன் போட்டார்கள். 

அவருக்கு என்ன நோய் என விசாரிக்க அவர் ரூமுக்குப் போனபோது ஒரு இளைஞர் டாக்டர் இருந்தார். அவர்தான் ஸ்பெஷலிஸ்ட் எனச் சொன்னார்கள். அப்போ சின்ன டாக்டர் பிளஸ் 2 பையனா இருப்பானோ என சந்தேகம் எனக்குள் எழுந்தது. 

இதையும் படியுங்கள்:
உலக நீரிழிவு தினம் 2026: சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 
Medical World | மருத்துவ உலகம்

அந்த டாக்டர் உறவினரின் ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு கூகுளில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.

சரிதான். இவரும் நம்ம ஆள்தான். நமக்கு வைத்தியம் தெரியாது. டாக்டர் இல்லே... அதானால் கூகுளைத் தேடறோம். டாக்டருக்கும் வைத்தியம் தெரியாமல் கூகுளைத் தேடினால்.

அந்த மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ்கள் வருவதும் போவதும் சைரன் சத்தம் கேட்டபடி இருக்கும்.

அங்கு வைத்தியம் எப்படியோ. கேன்டீன் சூப்பர்.  காலையில் இட்லி, வடை, பொங்கல், பூரி…

மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர்.

மாலை போண்டா, பஜ்ஜி, டீ, காபி.

இரவு சப்பாத்தி, இட்லி சுவை தனி.

பேஷண்ட்டுக்கு சலைன்தான்... கஞ்சி, பிரட்.

கூட இருப்பவர்கள்தான் கேன்டீனை அனுபவிக்கலாம்.

பேஷண்ட் கூட இருந்த அவர் மனைவி தன் மகள் பேரக் குழந்தைகள், மருமகனுடன் கூட்டமாக கேன்டீனிலேயே கிடந்ததைப் பார்த்தேன். சகாய விலை வேறே.

வைத்தியம் எப்படியோ ஆஸ்பிடல் சாப்பாடு நல்ல அனுபவம்.

கிளினிக் பில் லட்சத்தில் வந்ததால் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார்கள். வியாதி பிடிபடவில்லை.

அவர் மகன் ஒருவன், யூ ட்யூபில் ஒரு கிராமத்து மலை அடிவாரத்தில் ஒரு வைத்தியசாலையில் பச்சிலை மருந்து தருகிறார்கள். பத்தியம் இல்லை என அழைத்துப் போய் விட்டான்.

அங்கேயும் நல்ல சாப்பாடு. சிக்கன், மட்டன் சூப், முட்டை என கேன்டீன் இருந்தது.

இதையும் படியுங்கள்:
குளிர்காலச் சரும வறட்சியா? பாட்டி காலத்து நலங்கு மாவை வீட்டிலேயே தயாரிங்க!
Medical World | மருத்துவ உலகம்

மல்டி ஸ்பெஷலாடி ஹாஸ்பிடலுக்கும் இந்த ஆசிரமத்துக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. அந்த ஸ்பெஷலிஸ்ட் கூகுளில் வைத்தியம் பார்த்தார். இங்கே பச்சிலை நாட்டு வைத்தியர் ஓலைச் சுவடி என சொல்லிக் கொண்டு பழைய ஓலைகளைப் பார்த்து வைத்தியம் செய்தார்.

அந்த ஆயிரம் காலத்து ஓலை என் கண்ணில் பட்டபோது அதில் சில கிறுக்கல்களே தெரிந்தன. தமிழ் நிச்சயம் இல்லை எனத் தெரிந்தது. ஏதோ உள்ளடி இருக்கு என மட்டும் என் உள் மனம் சொன்னது.

வேப்பிலை, துளசி, ஓமம், சுக்கு, கிராம்பு, சீரகம், மிளகு என அனேகமாக அஞ்சறைப்பெட்டி ஐட்டங்களில் தான் மருந்துகள் சூரணம் பஸ்பம் லேகியம் கஷாயம் எனத் தந்தார்கள். அந்த வாசனை என் மூக்குக்கு நன்றாகவே தெரிந்தது.

பேஷண்டுக்குத்தான் சாப்பாட்டில் கட்டுப்பாடுகள். கூட இருந்தவர்கள் அங்கு சாப்பிட்டு ஐந்து கிலோ வரை எடை ஏறி விட்டார்கள். நான் வெஜ் சாப்பாடு மகாத்மியம். இங்கும் குணம் ஆகவில்லை உறவினர்.

வீட்டிலேயே வைத்து உள்ளூர் கம்பவுண்டர் ஒருவர் தனிப்பட்ட முறையில் வைத்தியம் பார்க்கிறார் எனக் கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். காரணம் பலரும் அறியக் கூடியதே. இது வரை எட்டு லட்சம் காலி. பட்ஜெட் தாங்காது இனி என பேஷண்ட குடும்பத்தினர் எடுத்த முடிவு.

இதையும் படியுங்கள்:
தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டுமா? ஆராய்ச்சி சொல்லும் உண்மை!
Medical World | மருத்துவ உலகம்

பிறகு இது வைத்தியத்தால் குணமாகாது. உள்ளூர் பூசாரியிடம் சொல்லி மந்திரிக்கலாம் என முடிவெடுத்தார்கள்.

ஒரு நாள் அந்த உறவினர் குணமாகி சைக்கிளில் மார்க்கெட் பக்கம் வந்தார்.

“என்ன உடம்பெல்லாம் சரியாயிட்டுதா.” எனக் கேட்டேன்

“கோயிலுக்கு வேண்டிக்கிட்டாள் சார் என் மனைவி. குணமானா எனக்கு மொட்டை போடறதா… அடுத்த மாசம் போறோம் எனக்கு மொட்டை போட.”

ஓன்று மட்டும் விளங்கியது. வியாதிக்கு வைத்தியம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் பக்க விளைவுகள் அதிகம். அந்த பக்க விளைவுகளில் ஒன்று தான் பட்ஜெட். அதன் கடைசி எல்லைதான் இந்த வேண்டுதலும் மொட்டையும்.

அவர் வீட்டுக்குப் போனபோது அவர் மனைவி பேச்சு வாக்கில் “தஞ்சாவூரில் அந்த ஆஸ்பத்திரி போண்டா எப்படி போடறாங்க, அருமை. சூடா கெட்டி தேங்காய் சட்னியோட சாப்பிட்டு ஒரு காபி சாப்பிட்டால் அமிர்தமா இருக்கும்.”

ஒரே உலகம் பலர் கண்ணில் பல விதமாய்த் தெரிவது என்பது எப்படி என எனக்கு இப்போ புரிந்தது.