உலக அளவில் நீரிழிவு நோய் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து "Early Action on Diabetes (நீரிழிவு நோயின் மீது ஆரம்பக்கட்ட நடவடிக்கை)" என்பதாகும்.
இந்தப் பதிவில் நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம். நாம் ஒவ்வொருவரும் நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணிகள் என்னென்ன என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வது அவசியம். அதைத் தெரிந்துகொண்டால் நோயின் தாக்கத்தை நம்மால் எளிதாகத் தள்ளிப்போட முடியும்.
டைப் 2 நீரிழிவுக்கான 5 முக்கிய காரணிகள்!
டைப் 2 நீரிழிவு வருவதற்கு நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களே முக்கியக் காரணமாக அமைகின்றன. உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை இதில் முதல் இடத்தில் உள்ளது. வாரம் மூன்று நாட்களுக்குக் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இன்சுலின் செயல்பாடு குறைந்துவிடும். இதனால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வேகமாக அதிகரிக்கும்.
அடுத்ததாக, குடும்பப் பின்னணி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களுக்கு நீரிழிவு இருந்தால் உங்களுக்கும் வர அதிக வாய்ப்புள்ளது. இதனுடன் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அது ரத்த நாளங்களை மிகவும் பாதிக்கும்.
நான்காவதாக, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது ஆபத்தானது. குறிப்பாக ட்ரைகிளிசரைடுகள் அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ரால் (HDL) குறைவது இன்சுலின் தடையை ஏற்படுத்தும். ஐந்தாவது மிக முக்கியக் காரணி அதிகப்படியான உடல் பருமன். குறிப்பாகத் தொப்பை அதிகம் இருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வர வாய்ப்புகள் மிக அதிகம்.
கர்ப்பகால மற்றும் டைப் 1 நீரிழிவு!
பொதுவான காரணிகள் மட்டுமின்றி, வயது மற்றும் பரம்பரை போன்ற வேறு சில காரணிகளும் நீரிழிவைத் தூண்டுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொழுப்பு கல்லீரல் மற்றும் PCOS உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வருவதற்கான அபாயம் அதிகம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. 25 வயதைக் கடந்த, அதிக உடல் எடை கொண்ட அல்லது பிசிஓஎஸ் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த ஆபத்து அதிகம்.
முன்பு பிறந்த குழந்தை 4 கிலோவுக்கும் மேல் இருந்தாலோ அல்லது முந்தைய கர்ப்பத்தில் நீரிழிவு இருந்தாலோ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பகால நீரிழிவு வந்த பெண்களுக்கு எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு வர வாய்ப்பு அதிகம். அதேபோல டைப் 1 நீரிழிவு என்பது முற்றிலும் வேறுபட்டது. இது வாழ்க்கை முறையால் வருவதல்ல. மரபணுக்கள் மற்றும் சில சுற்றுச்சூழல் தூண்டுதல்களால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இது தாக்குகிறது.
முன்கூட்டியே தடுக்கும் வழிகள்!
உலக அளவில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களுக்கு நீரிழிவு இருப்பதை அறியாமலேயே வாழ்கின்றனர். எனவே, முன்கூட்டியே ரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். ரத்த குளுக்கோஸ் அல்லது HbA1c பரிசோதனைகள் மூலம் ப்ரீடயாபடீஸ் நிலையைக் கண்டறியலாம். நோயைத் தவிர்க்க வாரம் ஐந்து நாட்கள் குறைந்தது 30 நிமிடங்களாவது வேகமாக நடப்பது போன்ற மிதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
இது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும். உணவு முறையில் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இந்த அபாயக் காரணிகள் குறித்த விழிப்புணர்வோடு செயல்பட்டால், நீரிழிவு நோயை நிச்சயம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
Disclaimer: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference