இந்தியாவின் உணவுப் பஞ்சத்தைப் போக்கிய எம்.எஸ்.சுவாமிநாதனின் உத்வேகம் தரும் சாதனை வரலாறு!

ஆகஸ்ட் 7- M.S சுவாமிநாதன் நினைவு தினம்..
எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan
எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan
Updated on
Kalki Strip
Kalki Strip

ஐபிஎஸ் வாய்ப்பை மறுத்து, இந்தியாவின் உணவுப் பஞ்சத்தைப் போக்கி பசுமைப் புரட்சி கண்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் ஊக்கமளிக்கும் வரலாறு.

விவசாய நாடு என போற்றப்படும் இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன் எனும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். கும்பகோணத்தில் பிரபல மருத்துவராக விளங்கிய மருத்துவ தம்பதிக்கு மகனாக 1925 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி பிறந்ததால் மருத்துவராக படிக்க வலியுறுத்தப்பட்டார். ஆனால், புகழ்பெற்ற திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து பி. எஸ்சி விலங்கியலில் பட்டம் பெற்றார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

இந்நிலையில், வங்கத்தில் 1943-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக வெளியான செய்தி, இவரது மனதை மிகவும் பாதித்தது. இதையடுத்து உணவு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட முடிவெடுத்தார். இதையடுத்து, கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலை பட்டமும் பெற்றார். அப்போது இந்திய குடிமைப்பணித் தேர்வு எழுதி, ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானார். ஆனாலும், வேளாண்மை மீதான காதலால், அவர் ஐபிஎஸ் பணியை ஏற்கவில்லை.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தாவரங்களின் விதை தொடர்பாக ஆய்வு செய்து 1950-ல் பிஎச்.டி பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆராய்ச்சி மேற்கொள்ள, அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சுவாமிநாதன், அங்கு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவிட பெரும் பங்காற்றினார். அப்போது அமெரிக்காவிலேயே எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பேராசிரியர் பணி கிடைத்தது. ஆனால், அதை மறுத்து 1954-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து, பின்னர் அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். இந்தோ - ஜப்பான் நெல் மரபணு ஆய்வில் ஈடுபட்டார். 1955: டில்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மரபணு ஆய்வாளராக சேர்ந்தார்.

நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது அரசுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

தன் 2000 ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை, வினோபாபாவேயின் பூமி தான இயக்கத்துக்கு வழங்கினார். பட்டினி இல்லாத இந்தியா இவரது கனவாக இருந்தது.

அதிக விளைச்சல் தரும் வீரிய ரகங்கள், திட்டமிட்ட முறையான நீர்ப்பாசனம், வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகிவற்றின் ஒருங்கிணைந்த திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட பல மடங்கு அதிகரித்தது.

இதையும் படியுங்கள்:
அறுபது வருடங்களுக்கு முன்பு பத்து ரூபாய் என்னவெல்லாம் செய்தது தெரியுமா?
எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan

இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி கவுரவமும் உயர்ந்தது. இதையடுத்து, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

1980 ல் திட்ட கமிஷனின் துணை தலைவராக பதவி வகித்தார். 1988 ல் பெற்ற உலக உணவு விருது பரிசுத்தொகையை வைத்து சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார்.

2002 - 2005: ஐ.நா. வறுமை ஒழிப்பு திட்டத்தில் பணியாற்றினார். 2004 ம் ஆண்டு விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் தலைவராக நியமனம் பெற்றார்.

சுவாமி நாதன் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்; அருகில் உள்ள பகுதிகளுக்கு சைக்கிளில் தான் செல்வார். எவ்வளவு வேலை இருந்தாலும் குடும்பத்திற்கு என்று தவறாமல் நேரம் செலவழிப்பார். எதிலும் தாமதம் கூடாது என்பதை வலியுறுத்தி வந்ததுடன் அதை தனது வேலையிலும் கடைபிடித்து வந்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan
எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகையான 'டைம் ' பத்திரிகை 20 ம் நூற்றாண்டில் ஆசியாவில் அதிகம் தாக்கம் ஏற்படுத்திய மூன்று பேர் என்று குறிப்பிட்டதில் ஒருவர் எம்.எஸ்.சுவாமிநாதன். மற்ற இருவர் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர்.

அவர் டெல்லியில் வேளாண்மை துறையில் பணியாற்றிய போது ஞாயிறு விடுமுறை என்றாலும் வீட்டில் சும்மா இருக்க மாட்டார். தன் குழந்தைகளுடன் அருகே இருக்கும் விவசாய நிலங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் பேசி மகிழ்வார். அப்போது தான் கண்டுபிடித்த புதிய ரக விளை விதைகள் பற்றி அவர்களின் கருத்தையும் ஆலோசனைகளையும் கேட்பார். அதன் மேன்மையை விளக்குவார். அப்போது நடந்த ஒரு நெகிழ்வான நிகழ்வு...

ஒரு சமயம் அவர் கண்டுபிடித்த அதிக மகசூல் தரும் விதைகளை பற்றி விளக்க பல முறை ஞாயிற்றுக்கிழமைகளில் வயல்களுக்கு சென்று விவசாயிகளிடம் விளக்குவார். ஆனால், அவர்கள் அந்த விதைகளை ஏற்க தயங்கினார்கள். பின்னர் ஒரு வழியாக சம்மதித்தார்கள். அப்போது சுவாமி நாதன் அவர்களிடம், "நான் பலமுறை சொல்லியும் ஏற்காமல் இப்போது எப்படி சம்மதித்தீர்கள்?" என்றார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை: மாதவனின் 'G.D.N' படம் வசூலில் சாதனை படைக்குமா?
எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan

அதற்கு விவசாயி ஒருவர் கூறுகையில் "ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட வெயில் பனி என்று எதையும் பார்க்காமல் குழந்தைகளுடன் வந்து விதைகள் பற்றி பேசுகிறீர்கள். அதனால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த பயனும் இல்லை; அப்படி இருந்தும் அதன் நல்ல விஷயங்களை பற்றி கூறுகிறீர்கள். எனவே அது உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் தான் ஏற்றுக் கொண்டேன் " என்றார்.

இவர் கண்டுபிடித்த "கல்யாண் சோனா" மற்றும் "சோனலிகா" மிகவும் பிரபலமான அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை ரகங்கள். வட இந்திய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகம் காரணமாக அப்போது அந்த பகுதிகளில் பிறந்த குழந்தைக்கு இந்த பெயர்களை வைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பசுமை புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதனும், வெள்ளை புரட்சியின் தந்தை என போற்றப்படும் வர்கீஸ் குரியனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அந்தந்த துறைகளின் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டவர்கள்.

2007 ம் ஆண்டு ராஜ்யசபா நியமன எம்.பி. யாக பொறுப்பேற்றார். அப்போது பெண்கள் விவசாய உரிமைகள் மசோதாவை கொண்டு வந்தார். பெண்களை சமமாக நடத்த வலியுறுத்தி வந்தார். அதையொட்டிய ஒரு நெகிழ்வான சம்பவம்..

ஒரு முறை பாண்டிச்சேரியில் உள்ள 'சேராபேட்' கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் ஒரு விவசாய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஒரு தலித் இன விவசாய கூலி பெண்ணை கோயிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இதை கேள்விப்பட்ட சுவாமி நாதன் 'அந்த பெண்ணை அனுமதிக்காத கோயிலில் நானும் நுழைய மாட்டேன்' என்று கூறிவிட்டார். "மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லை; கடவுள் பார்வையில் அனைவரும் சமம்" என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் அந்த தலித் பெண் கோயிலில் நுழைய அனுமதிக்கப்பட்டார். அந்த தலித் பெண் தான் பின்னர் அந்த பகுதியில் கவுன்சிலர் ஆனார் என்பது தனிக்கதை.

இதையும் படியுங்கள்:
இன்றைய கலிபோர்னியா தான் பாதாள உலகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?கதையல்ல நிஜம்!
எம்.எஸ்.சுவாமிநாதன் | MS Swaminathan

2023 ம் ஆண்டு செப்டம்பர் 28 தேதி சென்னையில் காலமானார். இவரது சாதனையை அங்கீகரித்து 33 தேசிய, 32 சர்வதேச விருதுகள், 84 கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய வேளாண் துறையின் மறுமலர்ச்சி நாயகனின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்வதன் மூலம், தேசப்பற்று, விடாமுயற்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான உத்வேகத்தை உங்கள் சொந்த வாழ்க்கையிலும் தொழிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய தெளிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com