

புத்தாண்டின் ஆரவாரமான கொண்டாட்டங்களுக்குப் பெயர்போன நெதர்லாந்து நாட்டில், இனி பொதுமக்கள் பட்டாசு வெடிக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது! நெதர்லாந்தின் இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் உள்ள முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்!
உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலே பட்டாசு மற்றும் வானில் வர்ணஜாலம் காட்டும் வாண வேடிக்கைகளும், தெருக்களில் அலங்கார வண்ண விளக்குகளும்தான் நினைவுக்கு வரும். அதற்கு நெதர்லாந்தும் விதி விலக்கு அல்ல.
ஆனால், பல ஆண்டுகளாக நெதர்லாந்து நாட்டின் புத்தாண்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தப் பட்டாசு வெடிக்கும் வழக்கத்துக்கு இந்த ஆண்டிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை 2026 ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அதனபடி, பொதுமக்கள் பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வாங்குவது, வைத்திருப்பது, வெடிப்பது ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மத்தாப்பு போன்ற சிறிய ரகப் பட்டாசுகளுக்கு அனுமதி உண்டு. தொழில்முறை நிறுவனங்கள் உரிய அனுமதியுடன் பட்டாசு நிகழ்ச்சிகளை நடத்தலாம். அதேபோல், குறிப்பிட்ட உள்ளூர் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் நகராட்சி அனுமதியுடன் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
ஏன் இந்தத் திடீர் மாற்றம்?
இந்தத் தடை திடீரென்று உருவான முடிவு அல்ல. பல ஆண்டுகளாக பட்டாசுகளால் ஏற்படும் காயங்கள், தீ விபத்துகள், சொத்து சேதங்கள், காற்று மாசுபாடு மற்றும் பொதுமக்களுக்கும் அவசர சேவை ஊழியர்களுக்கும் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விவாதம் நடைபெற்று வந்தது.
2025–26 புத்தாண்டு இரவில் மட்டும் 1,239 பேர் பட்டாசு தொடர்பான காயங்களுக்காக மருத்துவ உதவி பெற்றனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஏழு சதவீதம் அதிகம். காயமடைந்தவர்களில் 39% பேர் பதினாறு வயதுக்குக் குறைவானவர்கள். மேலும், காயமடைந்தவர்களில் சுமார் பாதி பேர் பட்டாசுகளை தாங்களே வெடித்தவர்கள் அல்ல; அருகில் இருந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அவசர சேவை ஊழியர்களின் பாதுகாப்பு:
பட்டாசு விவகாரம் பொதுமக்களின் காயங்களுடன் மட்டும் முடிவதில்லை. புத்தாண்டு இரவில் போலீஸார், தீயணைப்புப் படையினர், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் போன்ற அவசர சேவை ஊழியர்கள் மீது பட்டாசுகள் வீசப்படுவது, அவர்களை நோக்கி வெடிக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நீண்ட காலமாக கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
2026 புத்தாண்டு காலத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட அவசர சேவை ஊழியர்கள் வன்முறையை எதிர்கொண்டதாக அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வாகனங்கள், குப்பைத்தொட்டிகள் மற்றும் பிற சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
இதனால் புதிய சட்டத்தின் நோக்கம் வெறுமனே பட்டாசுக் காயங்களை குறைப்பது அல்ல. புத்தாண்டு இரவை பாதுகாப்பானதாகவும், கட்டுப்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதும் முக்கிய நோக்கமாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மக்களின் ஆதரவு:
பட்டாசுத் தடைக்கு சமூகத்தில் ஆதரவு அதிகரித்து வந்ததாக அரசு குறிப்பிடுகிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, கருத்துக்கணிப்புகளில் சுமார் 60 சதவீத மக்கள் நுகர்வோர் பட்டாசுத் தடையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக புத்தாண்டு இரவில் பட்டாசு வெடிப்பதை ஒரு பாரம்பரியமாகக் கருதும் மக்கள் உள்ளனர். பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் அந்தத் தொழிலைச் சார்ந்தவர்களுக்கு இது பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால்தான் அரசு பட்டாசு விற்பனையாளர்களுக்கு ஏற்பட்ட விற்பனை இழப்புக்காக நஷ்டஈடு வழங்கும் திட்டத்தையும் உருவாக்கி உள்ளது.
“பட்டாசு இருக்கிறது… என்ன செய்வது?”
புதிய சட்டம் அமலுக்கு வந்தபோது பல வீடுகளில் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் இருந்தன. அவற்றை வீட்டிலேயே வைத்திருப்பது ஆபத்து. சாதாரண வீட்டு குப்பையுடன் சேர்த்து போடுவதும் பாதுகாப்பானது அல்ல. இதற்கும் அரசு ஒரு தீர்வு கண்டது.
நெதர்லாந்து அரசு , “உங்களிடம் உள்ள பட்டாசுகளை ஒப்படையுங்கள்” என்ற தேசிய பிரசாரத்தை 2026 ஆகஸ்ட் 17 அன்று தொடங்கியது. அதன்படி, மக்கள் தங்களிடம் இருக்கும் பட்டாசுகளை இலவசமாக, பெயர் குறிப்பிடாமல், அபராதம் இல்லாமல் ஒப்படைக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது
பட்டாசுகளை சேகரிக்க செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 9 வரை நாடு முழுவதும் வெவ்வேறு நகரங்களில் தற்காலிக பட்டாசு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், “பட்டாசு ஒப்படைப்பு பேருந்து” என்ற பெயரில் வலம் வரும் பஸ்கள் ஆங்காங்கே நின்று பொதுமக்கள் ஒப்படைக்கும் பட்டாசுகளை பெற்றுக் கொள்கின்றன.
நெதர்லாந்தின் பட்டாசுத் தடையை முழுமையாக செயல்படுத்துவதற்காக எல்லைப் பகுதிகளில் போலீஸ் கடுமையான சோதனைகளை மேற்கொள்கின்றது. சுங்கத்துறையும் கண்காணிப்பில் ஈடுபடுகிறது.
பட்டாசு இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள், எல்லைப் பகுதிகள், துறைமுகங்கள், சாலைகள் மற்றும் பார்சல் டெலிவரிகள் வழியாக வரும் பொருட்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இணையத்தின் மூலம் சட்டவிரோத பட்டாசு விற்பனை செய்யப்படுவதையும் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்
இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்?
நெதர்லாந்தின் புதிய சட்டம் புத்தாண்டை முழுமையாக “பட்டாசு இல்லாத இரவு” ஆக்கவில்லை. சிறிய ரகப் பட்டாசுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன. தொழில்முறை நிறுவனங்கள் அனுமதியுடன் fireworks shows நடத்தலாம். மேலும், உள்ளூர் தொடர்புடைய அமைப்புகள் நகராட்சியின் சிறப்பு அனுமதியைப் பெற்று பட்டாசு நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
ஆகவே, எதிர்கால புத்தாண்டு கொண்டாட்டம் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தை எடுக்கலாம்: தனிநபர்கள் தங்கள் வீடுகளின் முன் பட்டாசுகளை வெடிப்பதற்குப் பதிலாக, நகராட்சிகள் அல்லது தொழில்முறை அமைப்புகள் ஏற்பாடு செய்யும் குறிப்பிட்ட பட்டாசு வானணவேடிக்கைகளை மக்கள் பார்ப்பது போன்ற முறை உருவாகலாம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாசகர்கள் சர்வதேச அளவிலான முக்கிய சட்ட மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.