
மகாகவியின் வாழ்க்கையில் சில துளிகள் இதோ:
அமுதன் – அசாதாரணமானவர் பாரதியார்!
மகாகவி பாரதியாரை ‘அசாதாரணமானவர்’ என்று குறிப்பிடுகிறார் அவருடன் புதுவையில் நெருங்கிப் பழகிய டி. ஆராவமுதன் என்னும் அமுதன். அரவிந்தரின் சீடராகி அரவிந்த ஆசிரம மானேஜராக விளங்கியவர். மகாகவி பாரதியார் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களைத் தந்தவர் இவர்.
அவர் குறிப்பிடுவது இது:
“பாரதி அசாதாரணமானவர் – ஒரு விதத்தில் அல்ல. பல விதத்தில். வானுலகிலிருந்து கீழிறங்கி மண்ணுலகில் நம்முடன் நடமாடிய தேவன். ஆகவே அசாதாரணமானவன்.
வான் போல் கட்டுக்கடங்காத, பரந்த உள்ளம் படைத்திருந்தவர்; கனிந்த நெஞ்சம்; ஒளி வீசிய தெளிவாகிய அறிவு: உயிரில் எப்போதும் கொழுந்து விட்டெரிந்த தீ. அடிக்கடி பார்ப்பதற்கரியதாகிய அசாதாரணமான பெரியார்.
பாரதி தமிழின் உயிருக்கு உயிராகியவர். தமிழ் உயிர் திரண்டு உருண்டு உருவாகியபோது, பாரதி ஆயிற்று. ஆயினும், தமிழனின் இருள் கட்டுகளுக்கு விலகி நின்றவர் அவர். தமிழகத்தின் பழமையால் கட்டுப்படாது நின்று, தமிழின் பழமைக்கு மேன்மை தந்தவர் அவர். தமிழின் புதுமைக்கு சிசு.
தமிழ்நாட்டின் குரு – ராஜாஜி!
பாரதியாரை நன்கு அறிந்த ராஜாஜி கூறுவது இது:
தமிழ்நாட்டுக்குத் தனிக் கவியாகவும் குருவாகவும் அவதரித்த பாரதியார் நினைவு நாள். ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் அவரை நினைத்துத் தொழுவோம்.
தெய்வாதீனமாக நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய காலத்தில் ஓர் அமரகவி அவதரித்தார். அவர் தேசபக்தியும் தெய்வபக்தியும் இரண்டும் பெற்றவராக அமைந்தார். அவர் பாடிய பாடல்கள் தமிழருக்கு அழையாத செல்வமாயிற்று.
பாரதியார் பாடியுள்ள பராசக்தி நடத்திய நிகழ்ச்சி – கல்கி!
பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் நடந்த பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.
பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி கல்கி (திரு ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.
ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட, கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.
அதைப் பற்றி கல்கி இப்படி கூறுகிறார்:
“என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத சக்தி ஒன்று இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தியல்ல! ஏதோ ஒரு ஒழுங்கின்படி, ஒரு நியதியின் படி, இந்த உலகத்தையும் இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்தி வருகிறது என்றும் நான் நம்புகிறேன்.
அந்த சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோந்நதமான நிலைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்.
அந்த மகாசக்தியின் காரணமாகத்தான் எட்டயபுரத்தில் நாம் கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படி மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அவ்வளவு மகத்தான ஒரு வைபவம் நடந்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை.
கவிதை ரஸாயனம் – கவிஞர் திருலோக சீதாராம்:
பாரதியாரின் நூல்கள் தமிழ் மக்களின் பொது உடைமை ஆக வேண்டும் என்பதற்காகக் பெருமுயற்சி எடுத்தவர் கவிஞர் திருலோக சீதாராம். வாழ்நாள் முழுவதும் பாரதியைப் பரப்பும் பணியை அவர் செய்து வந்தார். அவர் பாரதியின் பாடல்களைப் பற்றிக் கூறுவது இது:
கள்ளையும் தீயையும் சேர்த்து
காற்றையும் வானவெளியையும் சேர்த்து
தீஞ்சுவைக் கவிதை இயற்றிய தமிழ் கவிஞர் மரபில் பாரதியின் ஸ்தானம் எவ்வளவு மாண்புடையது! அந்த மாண்பைப் போற்றி மகிழும் ரஸத்தேர்ச்சி நமக்கு இருந்தால் அதுவே போதும்!
காந்திஜியும் பாரதியாரும்
பிரபல எழுத்தாளரான வ.ரா. தமிழில் சாதித்தது அதிகம்.
அதில் பாரதியைப் பற்றி சிந்தனை செய்து அவர் செயலாற்றியதே முக்கியமானதாக அமைந்தது.
1919ம் வருடம், பிப்ரவரி மாதம் சென்னை வந்த மகாத்மா காந்திஜி ராஜாஜி குடியிருந்த கதீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் வந்து தங்கினார்.
அங்கு யாரையும் உள்ளே விடக் கூடாது என்று வ.ரா.விடம் சொல்லப்பட்டது. அவர் வாயிலில் காவல் காத்தார்.
பிறகு நடந்ததை வ.ரா. இப்படி எழுதுகிறார்:
“நான் காவல் புரிந்த லட்சணத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்!” என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். என் காவல் கட்டுக்குலைந்து போய் விட்டது.
உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:
பாரதியார்: மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?
காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?
மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.
காந்தி: அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?
பாரதியார்: முடியாது! நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.
பாரதியார் போய் விட்டார். நானும் வாயில் படிக்குப் போய்விட்டேன்.
பாரதியார் வெளியே போனதும், "இவர் யார்?" என்று காந்தி கேட்டார்.
தாம் ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.
காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.
ராஜாஜி தான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்று சொன்னார்.
அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரம்மாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.
எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.
அரவிந்தரும் பாரதியாரும்
அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். பாரதியார் அவரை வரவேற்றார்.
அன்றிலிருந்து ஒரு அற்புதமான நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி, அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, பாரதியார் அவரை தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது என்று ஏராளமான நற் பணிகள் நடைபெற ஆரம்பித்தன.
வருடங்கள் ஓடின. புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.
அந்த நாளைப் பற்றி சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:
“கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.
ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள். நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்.”
பாரதியின் புதுவை வாசம் இப்படி உருக்கமுடன் கண்ணீருடன் முடிகிறது.
ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகா யோகி அரவிந்தரும் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்த தமிழ்க் கவிஞர் பாரதியாரும் பிரிந்த போது இருவர் கண்களிலும் பிரிவினால் அரும்பியது கண்ணீர் என்றால் அது புனித நீர் அல்லவா!
கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்றுவிட்டது!
பாரதியாரின் வாழ்க்கைச் சரித்திரம் அபூர்வமான ஒரு புனித வரலாறு.
சில துளிகளை மட்டுமே மேலே கண்டோம். அமிர்தக் கடலில் ஒரு சொட்டு என்றாலும் அது அமிர்தம் தானே! தைரியமாக அந்தக் கடலில் இறங்கி அனைத்தையும் குடிக்கலாம்! பயப்படவே வேண்டாம். ஏனெனில் அது இறவாமையைத் தரும் அமிர்தக் கடல் அல்லவா?!