சிறுகதை; பாராட்டு விழா

Short story in tamil
ஓவியம்; மருது
Updated on

-எஸ். சங்கரநாராயணன்

தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கும் முயற்சியில் லண்டன் சென்றிருந்த என் மைத்துனர், அங்கிருந்து எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். மதுரையிலுள்ள கல்லூரியொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள டாக்டர் ராம்சென்னுக்கு, அவர் ஆங்கில மொழியில் எழுதியுள்ள "உலகில் பசியை ஒழிப்போம்" என்ற நூலின் சிறப்பைப் பாராட்டி ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் பொருளாதாரப் பேராசிரியர்கள் பெரிதும் புகழ்வதாகவும், விரைவில் அவரை அங்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி இந்தியாவில் யாருக்கும் இதுவரை தெரியாதெனவும் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் படித்து முடிக்கும்போது, என் நண்பர் மணி வந்துசேர்ந்தார். அவரிடம் டாக்டர் ராம்சென் பற்றிய விவரத்தைத் தெரிவித்துக் கடிதத்தையும் காட்டினேன். "ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் பாராட்டுவதற்குள், நாம் நம் ஊரிலிருக்கும் டாக்டரை, நமது எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் பாராட்டிப் பரிசளிக்கலாமே!" என்று என் மனத்திலிருந்ததைப் பிடித்தாற்போலக் கேட்டார் மணி.

அவர் பணியாற்றிய கல்லூரிக்குக் கிளம்பினோம்.

அங்கிருந்த பணியாளிடம், "டாக்டர் ராம்சென் இங்கதானே பணியாற்றினார்...? அவரை நாங்க பார்க்கணும். அவர் இப்போ எங்கே இருக்கார்? தெரியுமா?"

"ஓ!... புரபஸர் ராமச்சந்திரனையா...? அவர் பணி ஓய்வுபெற்று ரொம்பகாலமாச்சு. இப்ப அவர் என்ன பண்றார்? எங்கிருக்கார்னு சரியாத்தெரியலை. தெற்கு மாசிவீதி-கீழமாசி வீதிச் சந்திப்புக்குப் பக்கத்துல, ஒரு பிள்ளையார்கோவில் இருக்கு. அதுக்குப் பக்கத்திலுள்ள சந்துல ஒரு வீட்லதான் இருந்தார். அங்க போயிக் கேட்டாச் சொல்லுவாங்க" என்றார்.

"அவரைப் பற்றிய விவரங்கள் சில தெரியணும். வேற யாரிடம் கேட்டாத் தெரியும்?" இப்ப இருக்கிற புரபசரிடம் கேட்டாத் தெரியுமா?"

"இப்ப...இங்க... சாரங்கபாணின்னு ஒருத்தர், எக்கனாமிக்ஸ் புரொபசராயிருக்கார். இவர் ராம்சென்ட்ட ஜூனியரா இருந்தவர். கேட்டாத் தெரியும்" என்று கூறி, அவர் இருக்கும் அறையை நோக்கிக் கைகாட்டினார்.

அவர் பெயர் ராமச்சந்திரன் என்பதும், அதுதான் 'ராம் சென்'னாகச் சுருங்கியிருக்கிறதென்றும் தெரிந்துகொண்டோம்.

பொருளாதாரப் பேராசிரியரின் திறந்திருந்த அறைக்குள் தயங்கியபடி நுழைந்தோம். சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க-வாட்டசாட்டமான ஒருவர் சூட், கோட்டணிந்து, கம்பீரமாக அமர்ந்திருந்தார். எதையோ படித்துக்கொண்டிருந்த அவர், எங்கள் வருகையை அறிந்து, "யாரது?... என்ன வேணும்?" என்றார்.

"உங்களுக்குமுன் இங்க பேராசிரியராயிருந்த மிஸ்டர் ராமச்சந்திரன் சாரைப்பற்றித் தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்!" என்றேன்.

"ஓ! என்னோட சீனியரை பத்திக் கேக்கறீங்களா? எதுக்காக அவரைப் பத்திக் கேக்கறீங்க? என்ன விசேஷம்?"

"அடுத்த மாசம், எழுத்தாளர் சங்க ஆண்டு விழா, நகரில் நடத்தவிருக்கோம்! அது கலந்துக்கும்படி டாக்டர் சாரைக் கேட்கலாமின்னு நெனைக்கிறோம். அதற்காகவே வந்தோம்!" என்றார் மணி.

"அப்படியா? அதுல நான் வந்து என்ன செய்யப்போறேன். கூட்டங்கள்ல கலந்துக்கிறதோ பேசறதோ எனக்குப் பழக்கமில்லை!" என்று, நாங்கள் அவரையே அழைக்க வந்ததாக நினைத்துப் பேசினார்.

இதையும் படியுங்கள்:
'Hello' வந்த கதை
Short story in tamil

''நாங்க உங்ககிட்ட வந்தது, டாக்டர் ராமச்சந்திரன் சாரைப் பத்திய சில விவரம் தெரிஞ்சுக்கலாம்னுதான். அவர் பல நூல்கள் எழுதியிருக்கிறதாகவும் அவருடைய கட்டுரைகள் பல மேல்நாட்டு ஜர்னல்களில் வெளியாகிப் பேரும்புகழும் அடைந்திருப்பதாகவும் கேள்விப்பட்டோம். எனவேதான் அவரைப்பற்றிச் சில விவரங்களை அவரது புத்தகங்களையும் வெளியான கட்டுரைகளைப்பற்றியும் உங்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னுதான் வந்தோம்" என்று உடைத்துப் பேசினார் மணி.

தன்னையே அழைக்க வந்திருப்பதாக நினைத்துப் பெருமைப்பட்டுக் காலரை இழுத்துவிட்டுக்கொண்ட புரபசரைத் தலையில் குட்டியதுபோல இருந்தது மணியின் பேச்சு

அதன்பிறகே தன்னிலையடைந்தார் புரபசர். "அவரை அழைச்சு... என்ன செய்யப்போறீங்க? அவர் இங்கே எனக்கு முன்னால் பேராசிரியராக இருந்தவர்தான். அவரைப்பத்திப் பெருமையாச் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை! கட்டுரைகள் இங்கிலீஷ் ஜர்னல்கள்லே வந்ததும் சில புக்ஸ் வெளிவந்திருப்பதும் உண்மைதான். ஆனா, அதெல்லாம் அவருடைய தில்லைங்கிறதை நீங்க தெரிஞ்சுக்கணும். அவருடைய ஜூனியராயிருந்த நான்தான் அதெல்லாம் எழுதிக்கொடுத்து, அவர் பேர்ல வெளியாகியிருக்கு... ஏதோ படிச்சுப் பாஸ் பண்ணிப் பட்டமெல்லாம் வாங்கியிருக்காரே தவிர... விஷயம் ஒண்ணுமில்லை. அவர் ஒரு மாதிரியான ஆளு. 'லூஸ் டைப்'பான ஆசாமி. அப்படிப்பட்டவரைத் தேடி நீங்க வந்ததாச் சொல்றது ஆச்சரியமா இருக்கு!'

தனது சீனியராக இருந்த ஒரு பேராசிரியரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதும், அவரிடம் திறமை, சாமார்த்தியம் எதுவுமில்லை என்று பேசியதுமல்லாமல் அவரையே ஒரு "லூஸ் டைப்" எனப் பழித்துச்சொன்னதும் மணிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எனவே, நைசாக அங்கிருந்து நழுவி வெளியே வந்தோம்.

நகரப் பேருந்தில் ஏறி விளக்குத்தூண் நிறுத்தத்தில் இறங்கி - பிள்ளையார்கோவிலை நோக்கி நடந்தோம். அங்கிருந்த வெற்றிலை - பாக்குக் கடைக்காரரை அணுகி, டாக்டர் ராமச்சந்திரன் வீடு எங்கிருக்கிறதென விசாரித்தோம்.

''நீங்க யாரு? என்ன ஜோலியா - அவரைப் பார்க்க வந்திருக்கீங்க?" -

என்னைவிட, மணிக்குத்தான் அதிகக் கோபம் வந்துவிட்டது. "நாங்க எங்கிருந்து வந்தா என்ன? எதுக்குக் கேட்டால் உமக்கென்ன? தெரிஞ்சாச் சொல்லும்! விருப்பமில்லேன்னா விட்டுடறோம்" என்று வெடுக்கெனக் கூறினார்.

''அட, நீங்க என்னங்க!... ரொம்பக் கோவிச்சுக்கிறீங்க! எதுக்குக் கேக்குறேன்னா... அந்த ஆளு ஒரு மாதிரி 'லூஸ் டைப்'புங்க. அவரைத் தேடி யாரும் வர்றதில்லீங்க. யாரோடவும் பேச மாட்டாருங்க! எங்கேயாச்சும் போவாரு... வருவாரு... அவ்வளவுதான்! பெரும்பாலும் வீட்லதான் இருப்பாருங்க! அதோ தெரியுது பாருங்க, ஒரு சந்து... அதுல நுழைஞ்சுபோனா வலது பக்கமா நீலவர்ணம் பூசின ரெண்டுமாடி வீடு ஒண்ணு இருக்கும். அதுக்கு அடுத்த வீடுதான் அவரோட வீடு.'

இதையும் படியுங்கள்:
ரூபாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
Short story in tamil

"அப்படியா? ரொம்ப நன்றி!" என்று கூறிக் கடைக்காரரிடமிருந்து விடுபட்டு, குறுகலான சந்துவழியே நடந்தோம். அழகிய மதுரை மாநகரின், திருமிகுந்த தெற்கு மாசி வீதிக்கே அந்தச் சந்து ஒரு திருஷ்டி பரிகாரம்போல் இருந்தது. வீட்டோரங்களில் சாக்கடை நீர், சரியில்லாத வாய்க்கால்களில் வழிந்தோடி நடக்கவே சங்கடமாக இருந்தது. அதோடு, சிறுவர் சிறுமியர் வேறு காலைக் கடன்களை, அங்கேயே கழித்து, அசுத்தப்படுத்தியிருந்தனர். இரண்டொரு தினங்களுக்கு முன் பெய்த மழைநீர் வேறு, குண்டுங்குழியுமான இடங்களில் தேங்கி, கொசுக்கள் மொய்த்தபடி இருந்தன. வெகு ஜாக்கிரதையுடன் வேட்டியைத் தூக்கிப் பிடித்தபடியே நடந்தோம்.

கூடகோபுரத்தை அடுத்திருக்கும் குச்சுவீடுபோல, நீலவர்ணம் பூசிய அழகிய மாடிவீட்டின் அருகே பழங்காலக் குகை போலிருந்த அவர் வீட்டைக் கண்டுபிடித்தோம். உலகெலாம் புகழ்ஒளி பரவிப் பிரகாசிக்கும் பொருளாதாரமேதையான அவர், காற்றுக்கூட நுழையமுடியாத குகைபோன்ற இந்த வீட்டிலா வசிக்கிறார்? நினைத்துப்பார்க்க சங்கடமாக இருந்தது எனக்கு.

பூட்டியிருந்த வீட்டினுள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தோம். இருண்டுகிடந்ததே தவிர, யாரும் உள்ளே இருப்பதுபோலத் தெரியவில்லை. என்ன செய்வது? யாரிடம் கேட்கலாம்? என்று அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, நீலவர்ணமிட்ட வீட்டிலிருந்து கதவைத் திறந்து ஒருவர் எட்டிப்பார்த்தார். நாங்கள் நிற்பதைக்கண்டு திகைத்தவர், உள்ளே சென்று கதவை மூடிக்கொள்வாரோ எனப் பயந்து ''சார்!'' என்று அழைத்தபடியே அவரிடம் அணுகினோம்:

"டாக்டர் ராமச்சந்திரன் வீடு இதுதானே...? பூட்டி இருக்குதே! எங்கே போயிருப்பார்?" என்று விசாரித்தேன்.

"இது அவர் வீடுதான்! எங்க போயிருப்பார்னு தெரியாது!"

"அவரோட வேற யாருமில்லையா?"

"அவர் மட்டுந்தான் தனியா இருக்கார். கூடயாருமில்லை. அவர் சம்சாரம் காலமாகி ரெண்டுவருசமாச்சு; மக ஒருத்தி திருமணமாகித் திருமங்கலத்தில், கணவரோட இருக்கா."

"மக வீட்டுக்குப் போயிருப்பாரோ...? உங்ககிட்ட எதுவும் சொல்றதில்லையா..."

"இவரு, ஒரு மாதிரியான ஆளுங்க; 'லூஸ் டைப்'. யாரோடயும் அதிகம் பேசமாட்டார். எங்களிடம்கூட எதுவும் பேசவோ, பழகவோமாட்டார். மக வீட்டுக்கெல்லாம் போகமாட்டார். ரிட்டயரானப்புறம்... கிடைக்கிற பென்சனை வச்சுக்கிட்டு கஷ்ட ஜீவனம் பண்றாரே தவிர, மகளிடம் போறதில்லை. இந்த வீட்டை யாருக்காவது விலைக்குக் கொடுத்துட்டு, மக வீட்ல போயி மகராசனா இருக்கலாம். அவர் மககூட அப்படி நெனச்சு, என்ன வீட்ட வாங்கிக்கச்சொன்னா. ஆனா, இந்த ஆளு அதுக்கெல்லாம் ஒத்துவரலை. இங்கேயே கெடந்து அல்லல்படறாரு."

டாக்டர் வீட்டை வாங்க இவர் எண்ணியது நடக்கவில்லைபோலும். அந்த ஏமாற்றம் கோபமாக அவர் குரலில் எதிரொலித்தது.

"தனியா இங்க இருந்தா... சாப்பிட எங்க போவார்... வருவார்?"

"கீழ மாசிவீதியில... நாடார்மேன்ஷனுக்கு எதிர்லே 'நடராச விலாஸ் ஹோட்டல்'னு இருக்கு. அங்கதான் போயிச் சாப்பிட்டு வருவார்."

ஹோட்டலைக் கண்டுபிடிக்க அதிகச் சிரமம் ஏற்படவில்லை. கல்லாப்பெட்டியருகே திடகாத்திரமான ஒருவர், சட்டை போடாமல், நெற்றியிலும், தோள்பட்டை, வயிறு, முதுகுப்புறம் போன்ற இடங்களில் மூன்று விரல் பட்டையாகத் தீருநீறு பூசிக் களிப்புடன் அமர்ந்திருந்தார். அவர்தான் கடை உரிமையாளராக இருக்கும் என்றெண்ணி, அவரிடம் பேசத்தொடங்கினோம்.

"டாக்டர் ராமச்சந்திரன், ரிட்டையரான கல்லூரிப் பேராசிரியர் தினமும் இங்கேதான் வந்து சாப்பிடுவார்னு கேள்விப்பட்டோம். அவரைப் பார்க்கலாம்னு வீட்டுக்குப் போய்வந்தோம். வீட்ல இல்லை. பூட்டியிருக்கு. இங்கே சாப்பிட வந்திருக்கலாம்னு நெனைச்சு வந்தோம்!" என்றார் மணி அமைதியாக.

இதையும் படியுங்கள்:
சிறப்பு கவிதை - பேரின்ப வாழ்வை பூமியில் விரிப்போம்!
Short story in tamil

"அவர் சம்சாரம் காலமானபெறகு இங்கதான் ரொம்ப நாளாச் சாப்பிட்டு வந்தாரு.. இப்பச் சில நாளா இங்க வரலை."

"மக வீட்டுக்குப் போயிட்டாரா? இங்க சாப்பிடலேன்னா, வேற எங்க போவார்?" என்றேன்.

"மக வீட்டுக்கெல்லாம் போயி நிக்கமாட்டாருங்க. கொஞ்சநாளா உடம்பு சரியில்லாம்... இங்க சாப்பிட வரவே கஷ்டப்பட்டாருங்க. நேத்துலருந்து இங்க வரலீங்க. வீட்லதான் படுத்திருக்காரோ, ஒருவேளை மக வந்து கூட்டிட்டுப் போயிருப்பாரோ தெரியலீங்க! வீட்டு கதவு வெளியில பூட்டு எதுவுந் தெரியுதா... இல்லேன்னா, வீட்டுக்குள்ளாறவே இருக்கலாமுங்க" என்றார்.

எங்களுக்கும் அது சரியெனத் தோன்றியது. எனவே, போகுமுன் மீண்டும் ஒருமுறை அவரது வீடு சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டோம்.

மறுபடியும் அவர் வீட்டைச் சமீபிக்கும்போது மணி நாலரை ஆகியிருந்தது. அந்த வீட்டுக்கு முன்பு ஆட்கள் பலர் கூடியிருப்பதும் தெரிந்தது. காக்கி உடையணிந்த காவலர்கள் இருவரும் அவர்களுடன் அங்கு நிற்பது கண்டு திகைத்துப்போனோம்.

அருகில் சென்று விசாரித்தபோது, டாக்டர் ராமச்சந்திரன் வீட்டு மாடியிலேயே இறந்துகிடப்பதாகவும், சற்று முன்புதான் பக்கத்து

வீட்டுக்காரர் மாடியிலிருந்து துர்நாற்றம் அடிப்பதைக்கண்டு, காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததாகவும், காவலர் வந்து வீட்டுக்கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பார்த்ததில் அவர் இறந்துகிடப்பது தெரிய வந்ததாகவும் கூறினார்.

டாக்டர் ராமச்சந்திரன் இறந்துகிடப்பதாக அறிந்ததும் திகைத்துப்போனோம். உடல் நலமில்லாதிருந்த அவர், நடந்துவந்து சாப்பிட முடியாமலும், கவனிக்க ஆளில்லாமலும் பட்டினி கிடந்து வாடி வதங்கிச் செத்திருக்கிறார் என்பது தெளிவாகப் புரிந்தது.

உலகத்தின் வறுமைப் பிணியைப் போக்க வழிமுறைகளை ஆராய்ந்து, புத்தகமாக எழுதிய பொருளாதார மேதை, தன் வயிற்றுப் பசி தீர்க்கும் வழிவகை செய்துகொள்ள இயலாமல் பட்டினி கிடந்து, பரிதாபமாகச் செத்துக்கிடந்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களால் பாராட்டிப் பரிசு பெறவிருந்தவர், உடன் பணியாற்றியவர்களால் உதாசீனம் செய்யப்பட்டு, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களால் "லூஸ்" என்ற பட்டம் சூட்டப்பட்டு, இன்று நாதியற்ற பிணமாகக் கிடக்கிறார்! இது அவர் தலைஎழுத்தா? அல்லது நம் நாட்டில் பிறந்ததால் ஏற்பட்ட சாபமா? புரியவில்லை.

அவரைக்கண்டு பேசி, நடைபெறவிருக்கும் எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவில் அவரைக் கலந்துகொள்ளச் செய்து பாராட்டிப் பரிசளிக்க விரும்பிய நானும் நண்பர் மணியும் பெருமுயற்சி செய்து, திருமங்கலத்திலிருந்த அவர் மகளுக்குத் தகவல் தந்து, வரவழைத்து, இறுதிக்கடமைகளை உடன்இருந்து முடித்தோம். பாராட்டு விழாவுக்கு அவரை அழைக்க வந்த நாங்கள், அவரது இறுதி ஊர்வலத்தில்தான் கலந்துகொண்டோம்.

பின்குறிப்பு:-

கல்கி 22.9.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com