

-யோகி
மணி பார்த்தாள் சித்ரா. எட்டே முக்கால். பஸ் ஸ்டாப்பில் பயங்கர கூட்டம். எரிச்சலாய் இருந்தது. வயிறு பசித்தது. மதியம் கொஞ்சமாய்ப் பழைய சோறு கொண்டுவந்து சாப்பிட்டது.
யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதுபோல் தோன்ற திரும்பினாள் சித்ரா. சபாரி அணிந்து இருந்த ஓர் இளைஞன், அருகே பணக்கார தோரணையுடன் ஒரு பெண்மணி. அந்த சபாரி இளைஞன்தான் இவளைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கே? காலேஜில் கூட படித்தவனா!
"ஹலோ." என்று அவன் கையசைத்தான். அவன் நின்று இருந்த இடத்தில் கூட்டம் இல்லை. அதனால் அவனை நோக்கி நடந்தாள். கண்களைச் சுருக்கியவாறு யார் இவன் என்று யோசித்தாள். ''ஹலோ சித்ரா. என்னைத் தெரியலையா? நா சுந்தர்!" என்று சிரித்தான். ஞாபகம் வந்துவிட்டது. காலேஜில் ஒன்றாய்ப் படித்தவன். இந்த ஐந்தாறு வருஷத்தில் ஒருவன் தோற்றம் இந்தளவு மாறுமா? தலையில் பாதிமுடி கொட்டி.. அதற்கு ஈடாக அடர்த்தியாய்த் தாடி வளர்த்து இருந்தான். நிறைய புஷ்டியாய் இருந்தான். அடையாளம் கண்டு கொண்டபின் சிரித்தாள்.
"சுந்தரா!"
"ஆமா!" என்றவன் பக்கத்தில் இருந்த பெண்ணைக் காட்டி, "இது என் ஒய்ப் ராதிகா. இது என் காலேஜிலகூட படிச்ச பெண் சித்ரா!" என்று அறிமுகப்படுத்தி வைத்தான். அந்தப் பெண்மணியும் புஷ்டியாய் இருந்தாள். விரல் அகலத்தில் கழுத்தில் இரண்டு கனத்த செயின்கள் அணிந்து இருந்தாள். மணிக்கட்டை வளையல்கள் மறைத்து இருந்தன. பட்டுச்சேலை அணிந்து இருந்தாள். லிப்ஸ்டிக் போட்டு இருந்தாள்.
தன்னைப் பார்த்துக்கொண்டாள் சித்ரா. சுமாரான சேலையும், சாயம் போன ரவிக்கையும், காதில் கவரிங் தோடும், கழுத்தில் மஞ்சள் கயிறும். “அப்படியே இருக்கீங்க' என்றான் சுந்தர்.
"அதான் டக்கென்று அடையாளம் கண்டுபிடிச்சிங்க. உங்களைப் பார்த்ததும் என்னால் அடையாளம் கண்டுக்க முடியல. ஆறு வருஷம் இருக்குமா?"
"சரியா ஏழு வருஷம். தொண்ணூறு முடிச்சோம்."
"அதற்குள் உங்க தோற்றத்தில் எத்தனை மாற்றம்" என்றாள் சித்ரா.
"எங்க வேலைக்குப் போயிட்டு வீட்டுக்குப் போறீங்களா?''
"ம்..."
"எங்க வேலை பார்க்கறீங்க?'
"பாரடைஸ் ஜவுளி ஷோரூம்ல."
"ஜவுளிக் கடையிலா" உதட்டைப் பிதுக்கினான். "க்ராஜுவேட் நீங்க. வேற வேலை கிடைக்கலயா?"
''ம்... இப்ப ஒரு ஆறு மாசமாத்தான வேலைக்குப் போறேன். சூழ்நிலை. பெரிய வேலைன்னா அனுபவம் வேணுமே. ஆறு வருஷமா வீட்டுல சும்மா இருந்தேன். என்ன சேலரி கிடைக்கும். எந்த அனுபவம் இருக்கும்?"
"குழந்தைங்க இருக்கா?''
"ரெண்டு" என்று சிரித்தான். தோளை உலுக்கிக்கொண்டான். "எங்களுக்கு மேரேஜாகி ரெண்டரை வருஷம்தான் ஆறது. இப்ப ப்ரக்னெண்டா இருக்கா.''
அவன் மனைவியைப் பார்த்தாள் சித்ரா. எங்கேயோ பார்த்துக்கொண்டு இருந்தாள். இவர்களின் உரையாடல்களில் பிரியம் இல்லாதவள்போல்... நீங்க எங்க இந்தப் பக்கம்?"
"ஒரு மேரேஜ் ரிசப்ஷன். வந்தோம்."
"பஸ் வர்ற மாதிரி தெரியல. ஆட்டோல போவோம்" என்றாள் அவன் மனைவி. பேசிட்டு இருக்கேன்ல. கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லாம கூப்பிடுறே' என்றான் சுள்ளென்று.
"எவளாவது ஒருத்தி பேசக் கிடைச்சா போதுமே. ஈன்னு பல்லைக் காட்டுவீங்க" என்றாள். சித்ராவுக்கு சுரீர் என்றது. இந்தப் பக்கம் திரும்பிக்கொண்டாள். மேற்கொண்டு பேசுவதா வேண்டாமா என்று தெரியவில்லை. அதனால் மெளனமாய் இருந்தாள். அப்புறம். நம்ம ப்ரண்ட்ஸ்களை எல்லாம் பார்ப்பீங்களா" என்று ஆரம்பித்தான்.
'உங்க மிஸஸ்க்கு லேட்டாயிடுச்சு. முணுமுணுக்கிறாங்க. கிளம்புங்க."
"பஸ் வரணும்லயா..."
ஒரு பஸ் வந்தது. நிற்காமல் சென்றது.
"கூடப் படிச்சவங்க யாரையும் பார்க்கிறது கிடையாது. பார்க்கக்கூடிய வாய்ப்பும் இல்ல. வேலையே சரியா இருக்கு. நீங்க யாரையும் பார்ப்பீங்களா?"
"பார்ப்பதுண்டு. என்னவோ தெரியல. பலர் முகம் கொடுத்துப் பேசுறது கிடையாது. சிலர்தான் பழைய சினேகத்துடன் பேசுவாங்க. சிலர் அடையாளம் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி போவாங்க. ஆண்களே இப்படின்னா பொண்ணுகளைப் பற்றிக் கேட்கவே வேணாம். கண்டுக்கமாட்டாங்க. ஏன்னு தெரியல."
சித்ரா சிரித்தாள். "நீங்க இன்னிக்கு ரிச்சா இருக்கீங்க. நம்மோடு படிச்ச எல்லோரும் உங்களை மாதிரி சக்சஸ் ஆன ஆசாமிகளாகவோ, ரிச்சாகவோ இருக்கமுடியாது. சிலர் இன்னும் நல்ல வேலையைத் தேடிட்டு இருக்கலாம். வாழ்க்கையோட பலர் போராடிக்கொண்டு இருக்கலாம். பலருக்குத் தாழ்வு மனப்பான்மைகூட ஏற்பட்டு இருக்கலாம். இதன்பொருட்டு நம்மைவிட மோசமாப் படிச்சவன் எல்லாம் லைப்ல சக்சஸ் ஆகி எங்கேயோ போகும்போது, நாம கஷ்டப் படுறோமேன்னு. எனக்குக்கூட அந்த ப்லீங் உண்டு!" வருத்தமான குரலில் சித்ரா சொன்னாள்.
"உண்மைதான். நா படிச்சு முடிச்சதும் - ஒரு மெடிக்கல் கம்பெனில ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். மூணாவது வருஷம் வெளிய வந்து டீலரானேன். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தேன். இந்த அஞ்சு வருஷத்துல மேல போயிட்டேன். இப்ப என்கிட்ட பத்துப் பேர் வேலை பார்க்கிறாங்க. ஒரு ப்ளாட் வாங்கிட்டேன். ஒரு பைக் இருக்கு. வீட்டுக்குத் தேவையான எல்லா ஆடம்பரப் பொருளும் இருக்கு. டூரிஸ்ட் வேன் ஒண்ணு வாங்கி வாடகைக்கு விடலாம்னு இருக்கேன். நீங்க சொன்ன மாதிரி பலரும் - இன்னும் அடிப்படைத் தேவைகளையே நிவர்த்தி பண்ணிக்க இயலாமதான் வாழறாங்க."
"அப்படி இருக்கும்போது உங்களைத் தெரிஞ்சாக்கூட கண்டும் காணாம போயிடுவாங்க. ஒருவேளை வெற்றி பெறுபவர்கள் மட்டும் உங்களைச் சந்திப்பாங்க. காலேஜ் நட்பை அவங்க மட்டும் புதுப்பிப்பாங்க. நா மிடில் கிளாஸ்க்கும் கீழ். வசதி குறைவான பேமிலி. கல்யாணம் பண்ணினாலும் அதே நிலைமைதான் நீடிக்குது. கணவன் வேன் டிரைவர். ஒரு ஆக்ஸிடெண்ட்ல மாட்டிட்டு பிழைச்சதே பெரிய விஷயம். கால்ல அடி. வேலைக்குப் போகமுடியல. சும்மா இருக்க முடியுமா நானும். நா வேலைக்குப் போயே ஆகணும். நல்ல சம்பளத்துடன் கூடிய பெரிய கம்பெனி வேலையா கிடைக்கும். கிடைக்கிற வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.'
"கஷ்டம்தான்.''
"வாங்க நேரமாயிட்டு இருக்கு. ஆட்டோல போகலாம்" என்றாள் அவன் மனைவி. சேலையை எடுத்துக் கழுத்தைப் போர்த்திக்கொண்டாள். பலருக்கும் அவளது நகை உறுத்தலாய் இருந்து இருக்கவேண்டும். உற்றுப் பார்த்தனர்.
"இன்னிக்குன்னு பார்த்து நீங்க பைக் எடுத்துட்டு வரல" என்று கடிந்துகொண்டாள். சித்ரா திரும்ப அவளைப் பார்த்தாள். நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதுபோல் இருந்தாள். வாழ்க்கை இவளுக்கு வெகு சந்தோஷமாய் இருக்கக்கூடும். நல்ல கணவன். சுந்தர் காலேஜில் படிக்கும்போதே நல்ல பையன்தான். எந்த வம்புக்கும் போகமாட்டான். ஆனால் சுமாராய்த்தான் படிப்பான். அதனால் என்ன... படிப்புக்கும் அவனுக்கு பின்னாளில் அமையப் போகும் வாய்ப்புக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஒருவன் வாழ்க்கையில் வெற்றிபெற பெரிய படிப்புத் தேவை இல்லை. புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் இருந்தால் போதுமோ என்று தோன்றியது.
இதில் பெண்களின் பாடுதான் கஷ்டம் அவள் எத்தனை சாமர்த்தியமானவளாய் இருந்தாலும் சரி. படித்தவளாய் இருந்தாலும் சரி புகுந்த வீடு எப்படி உள்ளதோ அவ்வாறுதான் அவள் வாழ்க்கை தீர்மானிக்கப் படுகிறது. காலேஜில் நான் நல்ல படிப்பாளிதான். என் வாழ்க்கை இன்று மெச்சும்படியாகவா உள்ளது. படித்த படிப்பை அப்போதே பயன்படுத்திக் கொள்ளாததுதான் காரணமா?
கணவன் வேன் டிரைவர். குடிப்பழக்கம் இருந்தால் என்னாகும். சொன்னால் கேட்பது கிடையாது. கடைசியில் விபத்தில் சிக்கிக்கொண்டு... வீட்டில் சுமமா இருக்கிறான் வீட்டின் பக்கத்தில் லாட்டரி சீட்டுக் கடை ஒன்று ப்ளாட்பாரத்தில் வைத்து நடத்துகிறான். அவன் செலவுக்கு மட்டும் சம்பாதித்துக்கொள்கிறான். ரெண்டு குழந்தைகள். கஷ்டத்தோடு போராட வேண்டி உள்ளது.
"ஏங்க கிளம்புங்க. பத்து மணிக்கு டீ.வில உலக அழகிப் போட்டி ஒளிபரப்புறாங்க. பார்க்கணும்." அவசரப்பட்டாள் சுந்தரின் மனைவி.
சுந்தர் சிரித்தான். "சரி பார்ப்போம் சித்ரா..." ஆட்டோவை அழைத்தான். ஐம்பது ரூபாய் கேட்டான் ஆட்டோ டிரைவர் முப்பது ரூபாய்க்கு வாப்பா"
"சும்மா இருங்க. நாற்பது ரூபாய் வாங்கிக்கோப்பா" என்று அவன் மனைவி ஆட்டோவில் ஏறினாள். இவள் பக்கம் கையசைத்தான். ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். "எந்தப் பக்கம் போறீங்க சித்ரா. வழில வேணும்னா இறக்கி விட்டுடுறோம்" என்று கேட்கவில்லை. அவனுக்கென்ன தான் சம்பாதிப்பதை, தன்னிடம் பத்துப் பேர் வேலை பார்ப்பதை, ப்ளாட் வாங்கியதை, பைக் இருப்பதை, தன் மனைவிக்கு நகை செய்ததை, ஜம்பம் அடித்துக்கொள்ள ஒருவா தேவை. இன்று நான் கிடைத்தேன். அதுவும் சினேகித ஜம்பம் அடிச்சு சொல்லித் தரவா வேண்டும். போய்விட்டான்.
ஒரு வழியாய் ஒன்பதே முக்காலுக்கு வந்த பஸ்ஸில் கூட்டத்தில் நசுங்கி ஏறினாள். தன் ஸ்டாப்பில் இறங்கியபோது சித்ரா மணி பார்த்தாள். பத்து முப்பத்தி ஐந்து என்றபோதும் பத்து மணிக்குள்ளாக வீட்டிற்கு போய்விடுவாள். இன்று கூட்டம் காரணமாய்த் தாமதம். நடந்தாள். இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி கஷ்டப்பட வேண்டுமோ. மாசம் ஏழு நூறு ரூபாய் சம்பளத்துக்குக் காலை எட்டரை மணிக்குக் கிளம்பி, இரவு திரும்பப் பத்து மணிக்கு மேலாகி விடுகிறது. என்றைக்கு விடியல் ஏற்படுமோ!
வீட்டில் கால் வைத்ததுதான் தாமதம்" ஒரு அட்டையை எறிந்தான் சித்ராவில் கணவன். "மணியைப் பாருடி, திமிரா ஊரைச் சுத்திட்டு வர்றியா?" என்று கேட்டான். அவனால் சட்டென்று எழுந்து நடக்க முடியாது. முன்பெல்லாம் அடிப்பான். ஆக்ஸிடெண்ட் ஆனபிறகு வேகமாய் நடக்க முடியாது, சித்ரா பேசாமல் இருந்தால் "என்னடி கேட்டுட்டு இருக்கேன் பேசாம இருக்கே. சம்பாதிக்கிற கொழுப்பா? எவன்கூடவும் சுத்திட்டு வர்றியா?" என்று கேட்டான்.
"ஆமா, சுத்திட்டுத்தான் வர்றேன். என்ன பண்ணனுங்கிறே..." என்று வெடித்தாள். ஏனோ அவள் மனக்கண்ணில் சுந்தரின் மனைவியும் அவளது ஆடம்பரமும் தோன்றி மறைந்தது.
-கல்கி 26.04.1998