சிறுகதை - தனி ஒருவனுக்கு டிஃபனில்லையெனில்...

ஓவியம்; மருது
ஓவியம்; மருது
Updated on

-திருவையாறு பாலுசாமி

சௌந்திரராஜன் காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போது பர்சோனல் டிபார்ட்மென்டிலிருந்து அந்த வெள்ளைத்தாள் வந்தது. கம்ப்யூட்டர் எழுத்துக்களில்... தூய ஆங்கிலத்தில்.....

"கடந்த மூன்று நாட்களாக நம் நிறுவன சிற்றுண்டி சாலைக்கருகே உள்ள இரண்டு கம்பங்களிலும் மின் விளக்கு எரியவில்லை. இது இரவு நேர ஷிஃப்டில் வேலை செய்பவர்களை பாதிக்கிறது. எனவே, உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்..."

'மிக அவசரம்' என எழுதிக் கீழே கையெழுத்திட்டிருந்தார் எம்.டி.

பல்பு போட்டு நெடுநாட்களாகி விட்டது. எனவே ஃப்யூஸ் ஆகியிருக்கலாம் என எண்ணிக் கொண்டார் சௌந்திரராஜன்.

அது கான்கிரீட்டில் விதவிதமான டிசைன்களில் 'டைல்ஸ்' தயாரிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம். அனைத்துமே அயல்நாட்டு ஏற்றுமதி. ஒரு ஷிஃப்டிலேயே கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் பணியாற்றினார்கள். இதில் நூறு பேருக்கு மேல் நிரந்தர ஊழியர்கள். சௌந்திரராஜன் எலெக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட் டெபுடி மானேஜர். மானேஜர் பதவிக்கான பதவி உயர்வு கண்ணில் பூச்சி காட்டிக்கொண்டிருந்தது.

சௌந்திரராஜன் அவசரம் அவசரமாக மாதவனைக் கூப்பிட்டார்.

"மாதவன் லீவ் சார் இன்னிக்கி...''

"பபூதி?"

''ஆன் டியூட்டி! டவுன் வரை போயிருக்கார்..."

தான் மட்டும்தான் அன்று எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என்பது அப்போதுதான் உறைத்தது. இருந்தாலும் பயமில்லை. இருபத்து மூன்று வருட அனுபவம் கையிலிருக்கிறது.

நாகராஜனைக் கூப்பிட்டார்.

"இன்னிக்கி சூபர்வைசர் ரெண்டு பேருமே வரலை.... கேண்டீனுக்குப் பக்கத்தில ரெண்டு போஸ்ட்ல லைட் எரியலையாம். ஸ்டோர்ல போய் பல்பு வாங்கிக்க... மத்தியானத்துக்குள்ள போட்டுட்டு வந்துரு.... எம். டி. அர்ஜெண்டுன்னு சொல்லியிருக்கார்...."

"யாருக்கு அர்ஜெண்டுன்னா என்ன? என்ன செய்யணும்னு சொல்லுங்க!" என்றான் நாகராஜ்.

"இங்க பாருப்பா! நீயோ பர்மனென்ட் வொர்க்கர்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வொர்க் பண்ணினா 'இன்கிரிமென்ட்', 'இன்சென்டிவ்' அப்படி இப்படின்னு நாலு காசு பார்க்கலாம். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா....”

"இத பாருங்க சார்! இப்ப என்ன பண்ணனும்! அத மட்டும் சொல்லுங்க."

"ரெண்டு போஸ்ட்லயும் பல்பு போடணும்... "

"முடியாது" என்றான் அழுத்தமாய்.

"என்னது?"

''முடியாது" என்றான், மறுபடி.

"என் ஒரு ஆளால் முடியற காரியமில்ல.... இன்னும் ரெண்டு ஆள் வேணும்...''

"ரெண்டு பல்பு போட மூணு ஆளா....''

''ஆமா! வேணும்தான். ஏணி யார் பிடிக்கறது... பல்பு யார் வெச்சுக்கறது..."

சௌந்திரராஜனுக்கு இவன் இடக்கு மடக்காகப் பேசுவது ஏனென்று தெரியும். யூனியன் லீடர் இவன் மாமன். அக்கா புருஷன். அந்தத் துணிச்சல்.

''சரி! கூப்டுக்க போ!" என்றார் சாந்தமாய்.

கொஞ்ச தூரம் சென்றவன் திரும்ப வந்தான். ''ஏணி?" என்றான் ஒற்றையாய்.

"கோடௌன்ல இருக்கும். எடுத்துக்கப்பா... "

"சரி! யார் தூக்கிட்டுப் போறது கேண்டீன் வரை....

"அதான் ரெண்டு ஆள் கூப்டுக்கச் சொன்னனே?''

"அவங்களும் என்ன மாதிரி பெர்மனென்ட் ஆனவங்கதான். தூக்க மாட்டாங்க..."

''சரி! என்ன செய்யலாம்..?''

"என்னக் கேட்டா எப்படி... யாராவது கேஷுவல் வைங்க...."

"என்ன பேசற நீ. வர்ற முப்பதுக்குள்ள எக்ஸ்போர்ட் போயாகணும்.. எல்லா கேஷுவல்ஸும் புரொடக்ஷன்ல இருக்காங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நீங்களே தூக்கக் கூடாதா...."

ஒன்றும் பேசாமல் நடந்தவன், "பல்பு போடணும்னா ஏணி அனுப்பி வைங்க...'' என்றான். போய்விட்டான்.

சௌந்திரராஜன் யோசித்தார்.

நாகராஜும் மற்ற இருவரும் பல்பு போட வேண்டிய கம்பங்களைப் பார்வையிட்டனர். பின் மெல்ல அருகே உள்ள மாமரத்தடியில் அமர்ந்தனர். நாகராஜ் பாக்கெட்டிலிருந்து பீடியை உருவினான். பற்றவைத்து ஆழமாய் இழுத்துப் புகை விட்டான்.

"இன்னிய பொழுது மாமரத்தடிதான் நமக்கு... கிழம் எங்க ஏணி அனுப்பப் போவுது....'' என்றான். மற்ற இருவரும் சிரித்தனர்.

அரைமணி மெல்ல ஊர்ந்தது. பதினொன்றரை ஆகிவிட்டது. மாமரக்காற்று, சில்லென்று கண்களை மூடியது. நாகராஜ் மெல்ல மாமரவேரில் சாய்ந்தான்.

"நாகராஜ்! அங்க பாரு!'' கூவினான் ஒருவன்.

சௌந்திரராஜன் வந்து கொண்டிருந்தார். தோளில் ஏணி. இருபத்து மூன்று வருட அனுபவம் ஏணி தூக்கிக்கொண்டு மூச்சிரைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

பார்க்காதது மாதிரி திரும்பிக்கொண்டிருந்த நாகராஜ், அவர் அருகில் வந்தவுடன் ஓடிப்போய் “அடடா! என்ன சார் இது. நீங்க போயி இதெல்லாம் தூக்கிட்டு.. இப்படித் தெரிஞ்சிருந்தா நாங்களே தூக்கிக்கிட்டு வந்துருப்பமே..." என்றான்.

''சரி! அத விடு... பல்பு இருக்கில்ல....?" என்றார்.

"ஆமாம்! பல்பு..." என்று அப்போதுதான் நினைவு கூர்ந்தான் ஒருவன்.

"அடடா!" என்ற நாகராஜ், "நாங்க வாங்கிக்கிறோம் . சார் ஸ்டோர்ல!" என்றான்"என்னப்பா வேலை செய்றீங்க! சீக்கிரம் முடிங்க..." என்று கிளம்பியவரிடம், "என்ன இருந்தாலும் நீங்க ஏணியெல்லாம் தூக்கிட்டு வந்திருக்கக் கூடாது சார்...." என்றான் நாகராஜ், துக்கமாக.

அவரும் போகிறபோக்கில், "என்ன பண்றது. என் தலையெழுத்து..." என்றார்.

இதையும் படியுங்கள்:
காலத்தை துள்ளியமாகக் காட்டும் அதிசயக் கல் எங்குள்ளது தெரியுமா?
ஓவியம்; மருது

ணி பன்னிரெண்டு.

''சுந்தரம்! நான் போய் ஸ்டோர்ல பல்பு வாங்கிட்டு வர்றேன்.... இருங்க...." என்ற நாகராஜ் ஸ்டோருக்குச் சென்று, "பல் ரெண்டு வேணுமே?" என்றான்.

"எதுக்கு?"

"கேண்டீன் பக்கத்துல..." என்று கதையைச் சொன்னான்.

"இந்தா இஷ்யூ டிக்கெட்... இதை ஃபில்லப் பண்ணி 'வொர்க்ஸ் மானேஜர்’கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வா தரேன்..."

"போச்சுடா!"

'இரண்டு பல்பு' என்று எழுதிக்கொண்டு 'வொர்க்ஸ் 'மானேஜரிடம் போனான்.

"கான்ஃபரன்ஸ் ஹால்ல இருக்கார்,  சைனாலேர்ந்து வந்திருக்காங்க. மீட்டிங் நடந்திட்டிருக்குது. ஒரு மணிக்கு வா!" என்றான் பி.ஏ.

ஓரமாய் நாற்காலியில் உட்கார்ந்தான். காத்திருந்தான்.

ணி ஒன்று.

வயிறு பசித்தது. மாமரத்தடிக்கு நடந்தான். மற்ற இருவரும் 'முதல் நாள் செகண்ட் ஷோ' பற்றிக் காரசாரமாய் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

"வாங்க சாப்பிட்டு வந்துறலாம். அவர் மீட்டிங்ல இருக்கார். சாப்டுட்டுக் கையெழுத்து வாங்கிடலாம்...."

கேண்டீன் நோக்கி நடந்தான்.

''என்னப்பா ஆச்சு?" என்றார் சௌந்திரராஜன்.

"இஷ்யூ டிக்கெட் போடலை இன்னும். 'வொர்க்ஸ் மானேஜர்' மீட்டிங்ல இருக்கார். கையெழுத்து வாங்கணும்....." என்றான். பின், "போட்றலாம் சார்! கவலைப் படாதீங்க!" என்றான்.

சாப்பிட்டு விட்டு வொர்க்ஸ் மானேஜரிடம் போனான். அவர் 'இஷ்யூ டிக்கெட்' டில் சில எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டுக் கையெழுத்துப் போட்டார்.

வரும் வழியில் சின்னையனைப் பார்த்தான்.

''மீட்டிங் இருக்கு மாமு ஒண்ணரைக்கு. யூனியன் விஷயமாச் சில முக்கியமான விஷயம் பேசணும்... அங்க இங்க சுத்தாம வந்து சேரு...." என்றான் சின்னையன்.

மாமரத்தடி.

"யூனியன் மீட்டிங்காம். போயிட்டு வந்துறலாம். வாங்க... அரை மணியில முடிஞ்சுடும்....."

"பல்பு போட்டுட்டுப் போயிறலாமே?..."

"அட வாங்கப்பா....."

"அவரு கேட்டா என்ன சொல்றது?"

''எல்லாம் நாஞ் சொல்லிக்கறேன்...''

மீட்டிங் காரசாரமாக இருந்தது. எல்லோரும் வலியுறுத்திக் கொஞ்சமும், சுட்டிக்காட்டிக் கொஞ்சமும் பேசி, வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி விடைபெற்றபோது நாகராஜுக்கு பல்பு ஞாபகம் வந்தது.

அவசரமாய் மாமரத்தடி போய் ஆரம்ப கட்ட முயற்சிகளைச் செய்தனர். நாகராஜ் பல்பு வாங்கிய கவரை பிரித்தான்.

"என்ன பஜ்ஜி வாசனை மாதிரி தெரியுது?" என்றான்.

''மணியாச்சா?" வாட்சைப் பார்த்தான்.

"அய்யய்யோ! மூணரை....."

"நீங்க ரெண்டு பேருமாப் போட்டுக்கிட்டிருங்க... நான் போய் ரெண்டு பஜ்ஜிய தின்னுட்டு வந்துர்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க... வந்துர்றேன் அஞ்சு நிமிஷத்துல... "

இதையும் படியுங்கள்:
உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?
ஓவியம்; மருது

கேண்டீனில் கூட்டமில்லை. களைப்பாய் பெஞ்சில் உட்கார்ந்தான்.

“பஜ்ஜி குடுப்பா...."

"தீர்ந்து போச்சு!" என்றான் ஒருவன், உள்ளிருந்து.

"தீர்ந்து போச்சா? மணி மூணரைதானே ஆகுது..."

"இன்னிக்கி திடீர்னு கான்ஃபரன்ஸ் அரேஞ்ஜ் பண்ணதால பத்தாம போயிருச்சி...." என்றான் கோபால். கேண்டீன் சூபர்வைசர்.

''கான்ஃபரன்ஸுன்னா எங்களுக்கு பஜ்ஜி கிடையாதா? இத மாதிரி டெய்லி மீட்டிங் போடுவாங்க... நாங்க வயிறு காயணுமா? இப்ப என்ன பண்ணுவீங்களோ தெரியாது... எனக்கு டிஃபன் வேணும்.... "

''கொஞ்சம் புரிஞ்சு பேசு நாகராஜ். நாங்க என்ன பண்ணமுடியும்....சில சமயம் அப்படி இப்படித்தான் இருக்கும்!"

"முதல்ல 'அக்ரிமெண்ட்' தெரியுமா உங்களுக்கு? ரெண்டு பஜ்ஜி ஒரு டீ குடுத்தே ஆகணும். இதக்கூட குடுக்காம நாள் பூரா உழைக்கிற தொழிலாளி வயித்துலே அடிக்காதீங்க.... அது நல்லதில்ல...."

"நீங்க உழைச்சதத்தான் இங்கிருந்து பாத்தமே காலையிலிருந்து...." என்றான் கோபால் முணுமுணுப்பாக.

"என்னது... அதக் கேட்க நீ யாரு? எங்களைக் கேட்க ஆளிருக்கு... உங்க வேலையைப் பாருங்க நீங்க...."

“அதத்தான் பாத்துக்கிட்டிருக்கோம்... நீங்க போங்க வெளியே..." என்றான் நக்கலாய்.

நாகராஜுக்கு எங்கேயோ ரத்தம் கொதித்தது. தடாலென்று கீழே இறங்கினான்.

“யாரைப் பாத்து வெளியே போடான்னே....."

"உன்னப் பாத்துத்தான்டா..." என்றான் கோபால், கோபமாய்.

"டேய்!...." என்று பாய்ந்த நாகராஜனை அவன் சகாக்கள் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு போய்.... ‘அவனைப் பார்க்கிற விதத்தில பார்த்துக்கலாம், விடு....'  என்று சமாதானப்படுத்தினர்.

தன்பின் எல்லாம் வாயுவேகம். நாகராஜ் யூனியன் லீடரைப் பார்த்து விஷயம் சொல்ல உடனே யூனியன் கூடியது. "இத விடக்கூடாது தலைவா...."

'பர்சோனல்' மானேஜர் வரவழைக்கப்பட்டார். கோபாலை நிறுத்திக் கேள்விகள் கேட்டனர்.

பின், "மன்னிப்புக் கேட்கணும்..?” என்றனர்.

"எதுக்கு?" என்றான் கோபால்.

''டிஃபன் குடுக்காதது ஒண்ணு. நாகராஜனைத் திட்டினது ஒண்ணு..."

''நான் திட்டினேனா?"

"ஆமாம்!" என்றான் நாகராஜ். "இதோ எல்லாரும் சாட்சி...."

"முடியாது...." என்றான் கோபால். மானேஜர் கோபாலைப் பார்த்தார். நடந்ததை விவரித்தான்.

''இந்த மாதிரி அசிங்கத்துக்கெல்லாம் நான் மன்னிப்புக் கேட்க முடியாது..."

மானேஜர் சமாதானப்படுத்தினார். 'மன்னிப்பு' என்ற வார்த்தையிலேயே ஜென்ம சாபல்யம் பெறுபவர்கள்போல் காத்திருந்தனர். வாதாடினர். கோபாலைப் பற்றி மானேஜருக்கு ஓரளவு தெரியும்.

இதையும் படியுங்கள்:
தமிழகக் கோவில்களும் அதிசயங்களும்!
ஓவியம்; மருது

"கேட்கலேன்னா நடக்கறதே வேற...."

மானேஜர் முகத்தில் கோபம் தெரிந்தது. "என்ன பண்ணுவீங்க....?"

"ஸ்டிரைக்....!"

''பண்ணிக்கோ!" என்றார் வெறுத்துப்போய். எழுந்து போய் விட்டார் .

நாலரை மணிக்கெல்லாம் எம்.டிக்கு யூனியனிலிருந்து எழுதினர். "கம்பெனிக்காக உழைக்கும் ஒரு தொழிலாளிக்கு வயிற்றுச் சோறு மறுத்த நிர்வாகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சம்பந்தப் பட்டவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லது நிர்வாகம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையேல் வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை...."

எம் .டி அவசரமாக, ''நாளைக்குப் பேச்சு வார்த்தை... " என்றார்.

பேச்சுவார்த்தை முடியும் வரை தொழிலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என யூனியன் அறிவித்தது. இரவோடிரவாக பழைய பேனர், தட்டிகள் தூசி தட்டப்பட்டு ஊதா கலரில் புதுசாக எழுதத் தொடங்கினர். எல்லோரும் மறுநாளுக்காகக் காத்திருக்க -

மாமரத்தின் நிழலில், சிலுசிலுவெனக் காற்றிலே, அதன் வேர் ஓரமாய் எதைப் பற்றியும் கவலையில்லாமல் அந்த இரண்டு பல்புகளும் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தன.

பின்குறிப்பு:-

கல்கி12  ஜூலை  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

logo
Kalki Online
kalkionline.com