தீபாவளி சிறப்பு கவிதை - இந்நாள்போல் இன்பம் எந்நாளும் பெருகிடட்டும்!

தீபாவளி சிறப்பு கவிதை: தீபாவளி புராணக் கதைகளும் மழைக் காலக் கொண்டாட்டங்களும்
தீபாவளி | Deepavali celebration
தீபாவளி | Deepavali celebrationImage credit: Chatgpt
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

இந்நாள்போல் இன்பம் எந்நாளும் பெருகிடட்டும்!

என்னதான் நடந்தாலும் எப்படித்தான் இருந்தாலும் 

இடியுடன் மழையதுவும் எங்கணுமே பெய்தாலும்

உலகெங்கும் போர்முரசம் உரக்கவே ஒலித்தாலும் 

அங்குமிங்கும் எங்கணுமே அணுக்குண்டுகள் பறந்தாலும் 

கையிலே காசெதுவும் கணிசமாய் இல்லாதிருந்தாலும் 

கடன்ஒடனை வாங்கியேனும் களிப்பாகத் தீபாவளியை

ஊர்மெச்சக் கொண்டாடும் உன்னதத்தை இங்குதான் 

கண்டே மகிழ்ந்திடலாம்! கனவினிலும் லயித்திடலாம்!

மகாவிஷ்ணுவின் மகத்தான எட்டாவது அவதாரத்தில் 

ஶ்ரீகிருஷ்ணராய் உருவெடுத்த துவாபர யுகத்தில் 

வராக அவதாரத்திற்கும் பூமி தேவிக்கும் 

மகவாய்ப் பிறப்பெடுத்தான் மதிகொண்ட நரகாசுரன்!

தாயின்கரம் விடுத்துத் தரணியிலே வேறொருவரால் 

தன்முடிவு நேராத தகைவான பெரும்வரத்தை

பெற்ற அவனுந்தான் பேராட்டம் போட்டுவந்தான்!

எந்தத் தாய்க்குத்தான் எத்தனைதான்கொடிதாக 

வயிற்றினுள்ளே வளர்ந்தமகன் வஞ்சனைகள் செய்தாலும் 

ஆவி பிரித்தெடுக்கும் அவலத்திற்கு மனம்போகும்?

புராணப் பாத்திரங்கள் புதிராக இருந்தாலும் 

புத்துலகம் கண்டிராத புதுப்புது வரங்களையும் 

உலக மக்களுக்கு உதாரணங்களாய்க் காட்டிநிற்கும் 

பெருமைகளை நாமென்றும் பிறழாது நேசிப்போம்!

அவதாரப் புருஷனவன் அக்கிரமங்களைக் கட்டவிழ்க்க

அனைவருமே மனதளவில் அமைதியை இழந்து நின்றார்!

ராதாகிருஷ்ணனோ நல்வேளை தான் பார்த்து

போரைத் தொடுத்திடவும் புல்லனை அழித்திடவும் 

தக்க திட்டத்தைத் தன்மையாய் வடிவமைத்தார்!

பூமிதேவியின் புனித அவதாரமான சத்யபாமாவைத் 

தன் தேரின் ஓட்டியாய் ஆக்கியே அவரும் 

அரிதான போர்க்களத்தில் அடலேறாய் உட்புகுந்தார்!

உச்சக்கட்டப் போரின்போது உபாயம் ஒன்றினையே

அவரும் கையாள அதனையறியாத தேரோட்டி

சற்றே திகைத்தாலும் தருணத்தில் உஷாராகி 

கண்ணன் நினைத்ததையே கச்சிதமாய்ச் செய்திட்டார்!

நரகாசுரனும் நன்றாகவே யுத்தம் செய்ய

பாண்டவரின் மைத்துனரோ பதமாய் மயங்கியதுபோல் 

தேரினுள்ளே திடமாய்ச்சரிய திகைத்த சத்யபாமா

சிறிதும் அச்சமின்றி வில்லெடுத்து எதிரியின்மேல் 

விரைந்தே அம்பெய்த வீழ்ந்தான் நரகாசுரன் 

விதியின் பெருவலியால் பேருயிரைத் தானிழந்தான்!

இதையும் படியுங்கள்:
தீபாவளி பலகாரங்களை இஷ்டம் போல சாப்பிடுங்க... இந்த ஒரு ஸ்பூன் லேகியம் போதும்!
தீபாவளி | Deepavali celebration

அப்பப்பா! துஷ்டர்களைஅழித்தே தொல்லுலகைக் காப்பாற்ற

கண்ணன் கையாண்ட கழிவிரக்க நிகழ்வுகளைக் 

கணக்கெடுத்துப் பார்க்கக் கணினியும் போதாதோ!

இறுதி நெருங்கிட்டால் எப்பேர்ப்பட்ட கொடியவனும் 

இதயம் வருந்துவதும் செய்த தவற்றையெல்லாம் 

சீர்தூக்கிப் பார்த்ததற்கு பரிகாரம் தேடுவதும் 

பாரினிலே என்றைக்கும் தொடரும் நிகழ்வாகும்

தொடர்ந்தே அதனையும் நரகாசுரனும் செய்தான்!

மரணத்தை நெருங்கியதும் மனம்வெதும்பி நரகாசுரனும் 

தன்னிறப்பைத் தரணிவாழ் தகைசான்ற மக்களனைவரும் 

பண்டிகையாய்க் கொண்டாடி பட்சணங்கள் பலசெய்து

எண்ணைக் குளியல்செய்து எழிலான புத்தாடை உடுத்தி

தீபங்கள் பலவேற்றித் திகட்டாத திருநாளாய்க் 

கொண்டாடி மகிழவென்று குறிப்பான வரம் கேட்டான்!

இறப்பினிலே எப்போதும் இதயங்கள் லேசாகி

வெறுப்பை மறந்து வெறுத்திட்டோரை மன்னித்து 

அவர்கிடக்கை தன்னை அப்படியே ஏற்பதே

இவ்வுலகம் கண்டுவரும் இனிதான வரலாறு!

நரகாசுரனின் வேண்டுதல் நல்லவரமாய் நமக்கும் 

அமைந்தே போனது! ஆறுதலாய் நின்றது!

ஐப்பசி மாத அடைமழைக் காலத்தில் 

கசக்கப்பட்ட ஆடைகளும் கடிதினிலே காயாது!

கதிரவனும் மேகங்களும் கண்ணாமூச்சி ஆடும் 

இனிதான நேரமிது! இடையிடையே பெருமழையும் 

காற்றின் துணையுடனே கடுகிவரும் காலமிது!

தூவானங்கூட சிலநேரம் துவட்டத் துணியின்றி

ஈரமாய் அனைத்தையும் எளிதாக ஆக்கிவிடும்!

புதிய ஆடைகளின் புனிதமான பயன்களையே 

நன்கறியும் நேரமிது! நயமான ஆடைகளால் 

மார்கழிக் குளிரினையும் மகிழ்ந்தோட வைத்திடலாம்!

ஆள்பாதி ஆடைதான் அடுத்த பாதி 

அன்றுமுதல் இன்றுவரை இதுதான் நீதி

என்பதையும் நாமும் இறுக்க வேண்டும் மனத்தில்!

வகையான வாணங்கள் வான்வெளியில் வெடிக்கையிலே

சூழ்ந்திருக்கும் மேகங்கள் சுயமான கௌரவத்துடன் 

அகன்றே போவதற்கும் அமைதியாய் வாய்ப்புண்டு!

‘இன்றுபோய் நாளை வா!’ என்ற கூற்றைப்போல் 

இப்பொழுது போய் பிறகு வா!’என்றே மேகங்களை

வெடித்துச் சிதறும் வெடிகள் அனுப்பி வைக்கும்!

இதையும் படியுங்கள்:
தீபாவளி சமையல் டென்ஷனா? கவலை விடுங்க, இந்த எளிய வழிகள் உங்களுக்காக!
தீபாவளி | Deepavali celebration

மழையுங் குளிரும் மண்ணுலகை வியாபிக்க

உடம்பில் சூடேற்றி உன்னத வாழ்வுபெற

பலகாரங்கள் நமக்குப் பலவாறாய் உதவிசெய்யும்!

இவற்றையெல்லாம் அறிந்தே இனிதான நம் முன்னோர்கள்

பண்டிகைகள் கொண்டாடும் பழக்கத்தைத் தோற்றுவித்தார்!

அதனைப் பின்பற்றி அமைதியாய் நாமுந்தான் 

கொண்டாடி மகிழ்ந்திடுவோம்! குறைவற்ற வாழ்வுபெற!

எண்ணைக் குளியலிட்டு எழிலாய் உடையுடுத்தி

படையாய் நின்றிலங்கும் பலகார வகைகளையே

ஒருகை பார்த்துவிட்டு உறவுகளுடனே சேர்ந்து

பட்டாசு வெடித்திடுவோம்!பகையை மறந்திடுவோம்!

இந்நாள் போல் இன்பம் எந்நாளும் பெருகிடட்டும்!