கவிதைகள்: அனைவரும் கைகூப்பிடுவோம்!

மழையின் அவசியத்தையும், காதலின் அழகிய பரிமாணங்களையும் விவரிக்கும் கவிதைத் தொகுப்பு
கவிதை | The grandfather and his granddaughter worship the rain.
கவிதை | The grandfather and his granddaughter worship the rain.Image credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

1. அனைவரும் கைகூப்பிடுவோம்!

மனிதகுலம் மட்டுமல்ல

மகிழ்வான உயிரினங்கள்

அனைத்துமே உயிர்வாழ

அடிநாதம் மழையேதான்!

மாதம் மும்மாரி

மறக்காமலது பெய்திட்டால்

மண்ணுலக உயிர்களெல்லாம்

மதிப்பாக முன்னேறும்!

பயிரை வளர்த்திடவும்

பாங்காக வாழ்ந்திடவும்

குடிக்கவும் குளிக்கவுமே

கொடும்பஞ்சம் நீருக்கே!

‘ஏசிக்குக் கரண்டில்லை!’

என்றபடி வியர்வையிலே

மறியலுக்குப் போகும்

மனம்மாறும் மாரியினால்!

நாகரீகங்கள் உலகில்

நன்றாய்க் கிளர்ந்தெழவே

மழைதானே உயிர்நாடி

மறக்காதே பூவுலகம்!

அளவாக அதுபெய்து

அகிலத்தைக் காத்திட்டால்

அமைதியே குடிகொள்ளும்

அன்பெங்கும் கோலோச்சும்!

பலநாள் தவஞ்செய்து

பற்பல பூஜைபோட்டு…

மழையைத் தருவிப்பதே

மகத்தான சாதனையாச்சு!

இரண்டுநாள் பெய்ததுமே

எல்லா ஊடகமும்…

சிரமம் சிரமமென்றே

சிலாகிக்கும் செய்திகளால்!

பருவத்தில் பெய்திடவும்…

பருவப் பெண்ணைப்போல்

நாணிக் கோணியது

நன்றாகப் பெய்வதில்லை!

இருநாள் மாரியையே

இந்நகரம் தாங்காதென்றால்…

குறைகள் நம்மிடந்தானே!

குறைசொல்லி மழையையுமே

நிந்திப்பதை நாமும்

நிறுத்திடலே முறையாகும்!

பெய்கின்ற போததனை

பெருமை மிகப்படுத்தி…

அதிகமாய்ப் பெற்றிடவே

அனைவரும் முயலவேண்டும்!

ஐப்பசி பிறந்திட்டால்

அதிகாலை வேளையிலே

ஆறுகளில் முழுக்கினையே

அகிலத்தார் நிறைவேற்றிடுவர்!

சுழித்தோடும் நீரால்தான்

சுகவாழ்வு என்றைக்கும்!

நீரில்லை என்றாலே

நிம்மதி பறிபோகும்!

நீர்ச்சத்து குறைந்திட்டால்

நீளுடம்பும் அவதியுறும்!

மாரி பொய்த்தாலோ

மரங்களும் பட்டையிடும்!

பூவுலகின் பசுமையெல்லாம்

பொசுங்கி நிறம்மாறும்!

மாரியைப் போற்றிடுவோம்!

மகிழ்ந்ததனை வரவேற்போம்!

பாரியைப் போலதுவும்

பலமுல்லை பலனடைய…

அளவாய்ப் பெய்திடவே

அதனிடத்தில் வேண்டிடுவோம்!

இரண்டு நாளில்லை…

இருபதுநாள் பெய்தாலும்

பொறுமையுடன் அதனை

போற்றி ஏற்றிடுவோம்!

வருணபகவானை வாருணிதேவியுடன்

சேர்த்தே அழைத்திடுவோம்!

தேசத்தைக் காத்திடவே

அருளிட வேண்டுமென்று

அனைவரும் கைகூப்பிடுவோம்!

****************************

2. காதலே மூச்சு!

கவிதை | Couple
கவிதை | CoupleImage credit: Gemini AI

இன்றுதான் கண்டேன்!

அடிக்கடி நாமிருவரும்

அங்காளம்மன் கோயிலில் 

அம்பாளைத் தரிசித்திருந்தாலும்…

அவளின் மூக்கிலுள்ள மூக்குத்தியை…

இன்றுதான் கண்டேன்!

ஏனெனில் நீ இன்று 

கோயிலுக்கு வரவில்லை!

          ******

இன்னொரு முறை வருவாயா?

இன்னொரு முறை நீ

என் தோட்டத்திற்கு வருகிறாயா?

என் தோட்டத்து ரோஜாமலர்கள்…

உன் மல்லிகைப்பூ முகத்தைப் 

பார்க்க ஆசைப்படுகிறேன்!

             ******

கண்ணில்லாக் காதல்!

அண்ணலும் நோக்கவில்லை!

அவளும் பார்க்கவில்லை!

ப்ரெய்லி படிக்கையிலே 

பிறந்தது நற்காதல்!

            ******

இதையும் படியுங்கள்:
கவிதைகள்: பார்வை..!
கவிதை | The grandfather and his granddaughter worship the rain.

உன் அன்புக்காக!

உயிரே!

உன் அன்புக்காக…

ஆற்று மணலையும் 

அமைதியாக எண்ணி முடிப்பேன்!

கூட்டுத் தேனீக்களையும் 

கூட்டி விடை சொல்வேன்!

            *****

 நினைவு!

காற்றில் மிதந்திடவும்…

கனவுகளில் லயித்திடவும்…

சாற்றில் வாழ்ந்திடவும்…

சங்கடங்கள் போக்கிடவும்…

ஆதாரமெல்லாம்… அன்பே

உன் நினைவொன்றே!

            ******

பிறவி!

பிறவிகள் பலவென்று 

வேதங்கள் எடுத்துரைக்கும்!

உண்மைதான் அதுவென்று 

உணர்த்தியதும் நீதானே!

பாவை உன்னைக் கண்டதுந்தான் 

பாரினிலே புதுப்பிறவி 

எடுத்தே நானும் 

இயங்குகிறேன் மகிழ்வுடனே!

          ******

சமத்துவம்!

சாதி சமயங்களை… 

சதிராடும் வேற்றுமைகளை…

இடுப்பொடித்துப் போடும் 

இனிதான காதலே!

உலகை வாழ்விக்கும் 

உயிரோட்டம் நீதானே!

          ******

இதையும் படியுங்கள்:
முத்தான மூன்று கவிதைகள்...!
கவிதை | The grandfather and his granddaughter worship the rain.

நானும்…நீயும்!

மழையில் நீ நனைகையில்…

குடை நான்!

அலைக்கூந்தலைத் துவட்டுகையில்…

டவல் நான்!

அருவியில் நீ குளிக்கையில்…

நீர் நான்!

உன் தேவைக்கேற்றபடி 

திரிவேன் நான்!

       ******

குறிஞ்சி மலர்!

மாமாங்கத்துக்கு(12)ஒரு முறை 

மலரும் குறிஞ்சியாய்…

அபூர்வமானவளாய் நீ இருப்பதில் 

ஆனந்தமே!

ஆனாலும் நாம் சந்திக்க…

அபூர்வம் காட்டாதே எனதன்பே!

அதனைத் தாங்கிடும் சக்தி…

சத்தியமாய் எனக்கில்லை!

            ******

முள் நான்!

அன்பே!

க்ளாக்கின் விநாடி முள் நான்!

நிமிட முள்ளாகிய உன்னை…

ஒரே ஒரு விநாடி தழுவுவதற்காக…

ஐம்பத்தொன்பது வினாடிகள் 

வட்டமடிக்கிறேன்!

        ******