

டாக்டர் ரெங்காச்சாரிக்கு போன் போட்டான் ரமேஷ்... அவர் எடுக்கவில்லை.. எப்பவும் எடுக்க மாட்டார் என்பது தெரியும்.
அவர் மகள் மாலதி நம்பருக்குப் போட்டான்.
“ரமேஷா..? அப்பா இருக்கார்.. லேபில் தான்…. வாயேன்”
“நீ எப்போ கனடாவில் இருந்து வந்தே..?”
“ஒரு வாரமாச்சு, வா நேரில் பேசிக்கலாம்,” என்றாள் ப்ரொபசரின் மகள் மாலதி. ரமேஷ் ரெங்காச்சாரியின் மாணவன்.
ரமேஷ் டாக்டர் வீட்டுக்கு வந்ததும், அவனை ஜன்னல் வழியே பார்த்து கதவைத் திறந்தாள் மாலதி.
“போய் முடிஞ்சால் அவரைப் பார்.. என்னால் உள்ளே நுழைய முடியலே.”
என்ன இப்படிச் சொல்றாள் இவள்?
லேப் கதவு சாத்தி இருந்தது.. தட்டினான்.
“டாக்டர்.. ரமேஷ் வந்திருக்கேன்.”
“உள்ளே வா.. திறந்து தான் இருக்கு.”
கதவை முழுவதும் திறக்க முடியவில்லை.. ஏதோ பெரிதாக பெட்டி போல ஒன்று வாசலை அடைத்துக் கொண்டு இருந்தது.
கதவைத் திறந்து இடுக்கில் மெல்ல உடம்பை ஒடுக்கி நுழைந்து,
“குட் ஈவினிங் டாக்டர்” என்றான்.
அவர் அவனைக் கவனிக்காமல் “அந்த ஸ்பேனரைக் கொஞ்சம் எடு,” என்றார்.
கையில் தந்து “என்ன டாக்டர் இது ஏதோ பாங்க் வாசலில் இருக்கும் பெரிய டீசல் ஜெனெரேட்டர் மாதிரி லேபுக்குள்... உள்ளே வரக் கூட முடியாதபடி அடைச்சு இருக்கே... எதுவும் ரகசிய ப்ராஜெக்டா?”
சில ஒயர்களை முடுக்கியபடி பேசினார் டாக்டர் ரெங்காச்சாரி.
“ரமேஷ் இதைப்பத்தி யாரிடமும் சொல்லிடாதே.. அடுத்த வாரம் பிரஸ் மீட்டில் அறிமுகப்படுத்தும் வரை லீக் ஆகக் கூடாது இந்த மெஷின் பற்றி.”
“டாக்டர் எதுவும் ரெடிமேட் வீடா இது. ரொம்ப சின்னதா பெட்டி மாதிரி இருக்கே?”
“இல்லே மல்ட்டி பர்ப்பஸ் ஏ.டி.எம்..”
அவன் பார்த்த விதத்தைப் பார்த்து ஒரு சிறிய கார்டைக் கொடுத்து, “இதை ஏ.டி.எம்மில் பணம் எடுப்பது போல எடு... சீக்ரட் பின் நம்பர் 1111”
கார்டை ஸ்லாட்டில் செருகி நம்பர் அடித்ததும் ஸ்கிரீனில் விவரங்கள் தெரிந்தன. ஒரு லேடி வாய்ஸ் பேசியது.
"பணம் எடுக்க வேண்டுமா..? அல்லது பொருட்கள் வேண்டுமா?”
“பொருள் என டிஸ்பிளே இருக்கு இல்லியா அதைத் தொடு.”
தொட்டான்.
டிஸ்பிளே மாறியது.. ”உங்களுக்கு என்ன பொருள் என்பதைத் தொடவும்.”
மளிகை சாமான்கள், பால், முட்டை, காபிதூள், டீ தூள், சோப், வாஷிங் மெஷின் லிக்விட், ஷாம்பூ... லிஸ்ட் பெரிசாக நீண்டது.
“இது தான் மல்ட்டி பர்ப்பஸ் ஏ.டி.எம்… இதில் பணமும் எடுக்கலாம்.. பொருட்களும் கேட்டது வரும்.. உனக்கு வேணுங்கிறதைக் கேள்..”
“அம்மா முட்டை நாலு வாங்கி வரச் சொன்னாங்க.”
“செலக்ட் பண்ணி ஓகே கொடு ரமேஷ்.”
'முட்டை' என்று டிஸ்பிளேயில் செலெக்ட் பண்ணியதும்,
“எத்தனை?“ என்று கேட்டது. 2 என்று டைப் செய்தான்.
முதலில் 2 வரவழைப்போம்.
உள்ளே மெஷினுக்குள் விர்….கிர்….ஷ்க்… விஷ்க் என சத்தம். ஒரு சிறிய கதவு திறந்து ஒன்றொன் பின் ஒன்றாக இரு முட்டைகள் ஒரு பள்ளம் போன்ற இடத்தில் உருண்டு நின்றன.
“டாக்டர் பிரில்லியண்ட்.. சூப்பர்.”
டாக்டர் சொன்னார்.. ”யெஸ் இது தான் என் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. மக்கள் இனி ஏ.டி.எம்மில் பணம் எடுத்து கடைக்குப் போய் சாமான்கள் வாங்க வேண்டாம்.. எதுவாக இருந்தாலும் மெஷின் தரும்.. அதன் விலையை பாங்க் அக்கவுண்ட்டில் கழித்து விடும்.”
“பிரமாதம் டாக்டர். இதுக்கு சாமான்கள் எப்படி உள்ளே வைப்பீங்க?”
“உள்ளே வைப்பது எல்லாம் கிடையாது. உனக்கு டெமோவுக்காக கொஞ்சம் வச்சிருக்கேன். மற்றபடி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் அல்லது மாலுடன் ஒரு ட்யூப் மூலம் கனெக்ஷன் தரப்படும்.. அந்த மாலில் அல்லது கடையில் ட்ரோன்கள் தேவைப்பட்டதை ரேக்கில் இருந்து எடுத்து குழாய்க்குள் போடும். மெஷின் டெலிவரி செய்யும். அமேஸான் ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஆட்களா தேடி பேக் செய்யறாங்க… ட்ரோன்கள், ரோபோக்கள் தேடி எடுத்து தானே பேக் செய்யுது.. மைல் கணக்கில் அல்லவா அந்த குடவுன் இருக்கும்.”
“அற்புதம் டாக்டர்.”
“அது மட்டுமில்லே… மருந்துகளும் ஃபார்மஸி அட்டாச் மெண்ட் ஆகி வரும். காய்கறி, பழங்கள், கேக், பன், பிரெட், பட்டர், ஜாம்... எல்லாம் வரும்.”
“சூப்பர் டாக்டர்.”
அப்போது திடீர் என அந்த மெஷினில் இருந்து அனல் வீசியது.
டாக்டர் அதை உணர்ந்தார்.. கூலிங் மெனுவில் டெம்ப்பரேச்சர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்… அட்ஜஸ்ட் ஆகவில்லை.. கொதித்தது.
“டாக்டர் இன்னும் இரண்டு முட்டை வேணும்.. மெனு போடவா”
“போட்டுப் பார்.”
இரண்டு முட்டை ஒரு கோக்கோ கோலா ஆர்டர் போட்டான்.
மெஷின் மறுபடி ஓடியது… முட்டை வரும் கதவு மெல்ல திறந்தது.
ஆனால் வெளியே வந்தது முட்டை இல்லை.. வெப்பத்தில் பொரிந்து இரண்டு கோழிக்குஞ்சுகள் "கீச்.. கீச்.." என கத்தியபடி...
பக்கத்தில் சிறிய கதவு திறந்து வெளியே ஒரு கோக் பாட்டில் தலையைக் காட்டியது… அதை எடுத்தான் ரமேஷ்.. ஐஸ் கோல்டாக இருக்கும் என நினைத்தால் வென்னீர் மாதிரி கொதித்தது.
“கூலிங் சிஸ்டத்தில் ஏதோ கோளாறு,” எனச்சொல்லிவிட்டு சரி செய்வதில் முனைந்தார் டாக்டர்.
“அப்புறமா வர்றேன் டாக்டர்.”
அவர் அதைக் காதில் வாங்கிய மாதிரி தெரியவில்லை.
கதவு இடுக்கு வழியே இரண்டு கோழிக்குஞ்சுகளும் இவன் பின்னால் ஓடி வர, மாலதி கேட்டாள்..
“உள்ளே அப்பா என்ன கோழிப்பண்ணை வைக்க எதுவும் ஆராய்ச்சி பண்றாரா.. நூறு முட்டைகளை ஒருத்தன் நேத்து இறக்கி வச்சிட்டுப் போனான்.”
“பண்ணை உருவாக ஆரம்பிச்சிட்டுது மாலதி.. அப்புறமா வர்றேன்” எனச் சொல்லிவிட்டு தன் டூவீலரை ஸ்டார்ட் செய்தான் ரமேஷ், இரண்டு முட்டைகளை தன் சட்டைப்பைக்குள் போட்டபடி!