சிறுகதை: அச்சத்தின் நிறம் கறுப்பா?

மூடநம்பிக்கை எப்படி உங்கள் நிம்மதியை சிதைக்கிறது? என எதார்த்தத்தை உணர்த்தும் ஒரு பதிவு.
தமிழ் கதை |A woman is frightened in the middle of the night.
தமிழ் கதை |A woman is frightened in the middle of the night.Image credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

நடு நிசியின் அமைதியை குலைத்தது அந்த அழுகுரல். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராதா திடுக்கிட்டு விழித்தாள். யாரோ மிகுந்த சோகத்தில் பெருங்குரலெடுத்து அழுவது போல் இருந்தது. சற்று நேரம் உற்றுக் கேட்டதில் அது ஒரு நாயின் ஊளைச் சத்தம் எனப் புரிந்து, "கடவுளே அர்த்த ராத்திரியில் நாய் ஊளையிட்டால் அந்த தெருவில் யார் வீட்டிலாவது ஏதாவது கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்களே. நாயோட கண்களுக்குத் தான் எமன் வருவது தெரியுமாமே" ராதாவின் மனம் பயத்தில் சிலிர்த்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவளை கறுத்த இரவு மேலும் பயமுறுத்தியது.

"நேற்று அம்மாவோட பேசும் போது இரண்டு நாளா காய்ச்சல் மாதிரி கதகதப்பா இருக்குதுன்னு சொன்னாங்க, ஒரு வேளை அம்மாவுக்கு டெங்கு காய்ச்சல் மாதிரி ஏதாவது, அதற்கு மேல் அவளால் சிந்திக்கவே முடிய வில்லை.

"சே... இங்க தானே நாய் ஊளையிடுது. அதனால் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது என நினைத்தவள்"அப்படின்னா நம்ம தெருவில யாருக்காவது ஏதாவது ஆகுமா? மனம் ஒவ்வொரு வீடாக தத்தி தத்தி வந்ததில், கோடி வீட்டு காமாட்சி பாட்டி ரொம்ப நாளா உடம்பு முடியாம இருக்காங்க, அவங்க மருமகளும் ஒரு வருஷமா கஷ்டப்படறாங்க. ஆனா பாட்டி ரொம்ப நல்லவங்க. அட கடவுளே..! நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன். நம்ம வீட்டில் நல்லதே நடக்கணும். ஆனா மத்தவங்க வீட்டில வேற மாதிரி நடந்தா பரவாயில்லையா? ராதாவின் மனம் அவளை இடித்துரைத்தது.

அதன் பிறகு அவளுக்கு உறக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த கணவனையும் குழந்தைகளையும் பார்த்தாள். கடவுளே யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வாழ்க்கை எட்டிப் பார்க்கும் தூரம்தான்!
தமிழ் கதை |A woman is frightened in the middle of the night.

தொண்டைக்குள் பயம் உருண்டு பந்தாக அடைத்தது. திரும்பவும் அவள் மனம் பயத்தில் பதறித் துடித்தது.

காலையில் மனக் கலக்கத்துடனேயே ராதா அனைத்து வேலைகளையும் செய்தாள். அவள் கணவன் சந்திரன் "ஏன் இராத்திரி சரியா தூங்கலையா கண் எல்லாம் சிவந்து இருக்கு. பக்கத்து வீட்டு மாமி கிண்டல் செய்ய போறாங்க" என்று கூறி சிரித்தபடியே ஆபீஸுக்கு கிளம்பினான்.

ராதாவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பக்கத்து காம்பவுண்டை எட்டிப் பார்த்தாள். மாமி இவள் தலை தெரிந்ததும் "ராதா நேத்து ராத்திரி நீ கேட்டயோ நம்ம தெருவில இருக்குமே கருப்பு நாய் ஒண்ணு ஊளையிட்டது பாரு யாரோ அழற மாதிரியே இருந்தது. துரத்தி விடணும் சனியனை" என்றார் எரிச்சலுடன்.

"ஐயோ நான் தூங்கவேயில்லை மாமி.. இன்னும் பயம்மாவே இருக்கு யார் வீட்டிலயாவது" என்று ராதா முடிப்பதற்குள், "ஆமா ஆமா அப்படித்தான் சொல்லுவா. ஆனா இது கலிகாலம். தினம் ஒரு சேதி கேட்கறோம் நியூஸுல. இதுக்கு எல்லாம் பயப்படாதே" என்ற மாமி அடுத்த விஷயத்திற்கு தாவினார். மாமியுடன் பேசியதில் ராதாவின் பயம் சற்று தெளிந்தது.

இரவு சரியாக தூங்காததால் மதிய உணவு உட்கொண்டதும் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ராதாவுக்கு கண்கள் அசத்தியன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புது உறவு!
தமிழ் கதை |A woman is frightened in the middle of the night.

தன் கணவன், குழந்தைகளுடன், ராதா பஸ்ஸில் அவள் அம்மாவின் ஊருக்கு செல்ல பயணிக்கிறாள். எதிரில் வந்த லாரியுடன் அவர்களின் பஸ் நேருக்கு நேர் டமால் என்ற சத்தத்துடன் மோத "ஐயோ.." என விதிர்த்து எழுந்தவளின் கையில் இருந்த டிவி ரிமோட் கீழே விழுந்தது. முகமெல்லாம் வேர்த்து "அடக்கடவுளே இது கனவா..!" என அரற்றினாள் ராதா.

அவள் வாய் தன்னிச்சையாக கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுத்தது. எப்போது இந்த பயம் என்னை விட்டு போகும். டிவியை அணைத்து விட்டு சற்று நேரம் பூஜை அறையில் அமர்ந்திருந்தாள். அதன் பின் சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள், "மணி நாலாயிடுச்சே ஸ்கூல் பஸ் வந்துடுமே இப்ப கிளம்பினா தான் சரியாக இருக்கும்" என தனக்குள் கூறிக் கொண்டவள் ஆடைகளை திருத்திக் கொண்டு வீட்டைப் பூட்டினாள்.

தமிழ் கதை | Crying woman on rainy urban street
தமிழ் கதை | Crying woman on rainy urban streetImage credit: AI Image

ராதாவின் வீட்டுக்கு சற்று தூரத்தில் உள்ள மெயின் ரோட்டில் தான் ஸ்கூல் பஸ் நிற்கும். வீட்டுக்கு வர பிள்ளைகள் மெயின் ரோட்டை கடந்து வர வேண்டும் என்பதால் தினமும் ராதாவே போய் அழைத்து வருவாள். பரபரப்பான சாலையை கடந்த ராதா ஸ்கூல் பஸ் வர சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த பேக்கரியில் பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்க நுழைந்தாள்.

திடீரென சாலையில் கீறீச் என கார் ஒன்று பிரேக் அடித்து நிற்பதைப் பார்த்தாள். சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நின்றன. "யாருக்கு அடிபட்டதோ தெரியலையே என பதைத்துத் திரும்பியவளின் மனம்.. "நாய் ஊளையிட்டது இதற்குத்தானா, கடவுளே நம்ம தெருக்காரங்களா இருக்கக் கூடாது" என புலம்பியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?
தமிழ் கதை |A woman is frightened in the middle of the night.

ஆனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து பின் வேகமெடுத்துச் சென்றன. புரியாமல் கடையிலிருந்து வெளி வந்தவளிடம் அங்கு நின்றிருந்த ஒருவர் "நாய் தாம்மா முனிசிபாலிடிக்கு போன் செய்தா எடுத்து எறிஞ்சிடுவாங்க" என்றார் போகிற போக்கில். சாலையில் அந்த கருப்பு நாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. மூடநம்பிக்கையால் முதல் நாள் இரவிலிருந்து அச்சத்தில் தவித்த ராதாவின் மனம் இப்போது பரிதாபத்தில் "அடப்பாவமே" என அங்கலாய்த்தது.

logo
Kalki Online
kalkionline.com