

1. தலை தப்பியது விதூஷகன் புண்ணியம்:
விதூஷகனாக இருப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. எப்போதும் மூளையை தீட்டிய நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுக்கும் இதுக்கும் விளக்கம் கேப்பாங்க ஆணவம் பிடித்த அரசர்கள். பதில் தந்தா பரிசு; முழித்தால் முதுகு உரிப்பு. அரசர்களின் ஆத்திரங்களிலிருந்து விதூஷகர்கள் தங்களை மட்டுமல்லாது மற்ற அப்பாவிகளையும் அறிவு சாதுர்யத்தால் காப்பாற்றி உள்ளனர்.
அந்த வகையில் அக்பர் அரசவையில் விதூஷகராய் இருந்த பீர்பால் அக்பர் கண்ட ஒரு கனவுக்கு பலன் சொன்ன ஒருவரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினார். அந்த கதை தான் இது:
ஒரு முறை அக்பருக்கு தனது ஒரு பல்லை தவிர மற்ற எல்லா பற்களும் உதிர்ந்து போவது போல கனவு வந்தது. என்ன ஒரு அசுபமான சொப்பனம். ஆடிப்போனார் அக்பர். அன்று அரசவையில் தன் ஆஸ்தான அஸ்டரொலஜரை வர வழித்து தான் கண்ட கனவின் பலனை சொல்லுமாறு கேட்டார். அந்த ஜோசியர் உள்ளதை உள்ளபடியே சொல்கிறோம் என்ற கர்வத்தில் "அரசே இந்த கனவு மிகவும் மோசமானது. இதன் அர்த்தம் உங்கள் உறவினர்கள் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்பதுதான்," என்றார்.
அக்பருக்கு ஆத்திரம் தலைக்கேரி இவனை நாளை காலையே சிரச்சேதம் செய்யுங்கள் என்று உத்தரவு போட்டார். ஜோசியர் நடுங்கி போய்விட்டார். அப்போது பீர்பால் தலையிட்டு ஒரு விளக்கத்தை கூறி காப்பாற்றினார்.
அவர் அளித்த விளக்கம் இதுதான்.
"அரசே ஜோசியர் உண்மையில் சொல்ல வந்தது இதுதான். உங்கள் கனவில் ஒரு பல்லை தவிர மற்ற எல்லா பற்களும் விழுவதாக வந்ததல்லவா? அதன் அர்த்தம் உங்களுடைய ஆயுசு மிகவும் கெட்டி. உங்கள் உறவினர்கள் எல்லோரும் போன பின் தான் நீங்கள் போவீர்கள்" என்று போட்டார் ஒரு போடு.
சிரச்சேத தண்டனை ரத்தானது. ஜோசியர் பீர்பாலுக்கு கண்ணீர் ததும்ப நன்றி சொன்னார்.
சில சமயம் உண்மையை உள்ளபடி சொல்வதே நமக்கு உலையாய் முடிந்து விடும். உண்மைக்கும் உருட்டலும் ஜோடனையம் தேவை.
- எம் ஆர் ஆனந்த்
*******
2. ஆளுக்கொரு தூக்குமரம்:
அக்பர் மன்னரின் மகள் திருமண வாழ்வு இவ்வளவு சிறப்பாக இல்லை. அமைதியற்ற வாழ்வை வாழ்ந்த அவள் அடிக்கடி தந்தையிடம் கண்ணீருடன் நிற்பாள். அரசகுமாரனாக இருந்தும் மாப்பிள்ளை பெண்ணை நன்றாக வைத்துக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் மன்னருக்கு இருந்தது.
கோபம் கொண்ட அவர் யாரிடமும் சொல்லாமல் தன் மருமகனை கைது செய்ய படைவீரர்களை அனுப்பினார். பீர்பாலுக்கு சொல்லாமல் இருந்ததில் அவருக்கு வருத்தம். சக்கரவர்த்தி ஆத்திரப்பட்டு இப்படிச் செய்து விட்டாரே என வருத்தப்பட்டார்
இந்நிலையில் மன்னர் பீர்பாலை இரவு அவசரமாக அழைத்தார். "நாளை சூரிய உதயத்திற்கு முன்னால் என் மாப்பிள்ளையை தூக்கில் இட வேண்டும். இவனைப் போல் மாப்பிள்ளைகள் இருந்தால்தானே என்பதைப் போன்றவர்களுக்கு தொல்லை தருவார்கள். யார் வீட்டிலும் இனி மாப்பிள்ளைகள் இருக்கக்கூடாது. எல்லா மாப்பிள்ளைகளையும் தூக்கில் இட வேண்டும்," என்று கூறினார்.
அதிர்ச்சி அடைந்த பீர்பால் அவர் சொன்ன வண்ணம் நிறைவேற்றலாம் என்று வீட்டுக்கு சென்றுவிட்டார். விடியற்காலையில் பீர்பால் மன்னனைக் காணச் சென்றார். அவரிடம் "மன்னரே தூக்கு மரங்களை நான் தயார் செய்து விட்டேன். நீங்கள் வந்து பார்வையிட வேண்டும்" என்றார்.
தூக்கு மரங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒன்று தங்கத்தாலும் மற்றொன்று வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தது. இதை கவனித்த மன்னர் "இங்கு தங்கம் மற்றும் வெள்ளி தூக்குமரம் வித்யாசமாக வைத்துள்ளீர்கள்... ஏன்?" என கேட்டார் மன்னர்.
உடனே பீர்பால் "நீங்கள் கேட்டது சரிதான். தங்கத்தாலான தூக்குமரம் உங்களுக்கு. வெள்ளியால் ஆன தூக்குமரம் எனக்கு. தாங்களும் ஒரு மாப்பிள்ளை தான். அதேபோல் நானும் ஒரு மாப்பிள்ளைதான். எனவே நாமும் தண்டனை அனுபவிக்க வேண்டும்," என்றார்.
அளவுக்கு அதிகமான கோபத்துடன் இருந்த மன்னன் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் பீர்பால் "மன்னரே தங்கள் மருமகன் தவறு செய்ததற்காக நாட்டிலுள்ள அனைத்து மருமகன்களுக்குத் தண்டனை கொடுப்பது எவ்விதம் நியாயம் ஆகும்? அவர் தவறு செய்திருந்தால் அவருடன் நல்லமுறையில் பேசி தீர்வு காண்பதே சரியாகும். இப்போதே தங்கள் மாப்பிள்ளையை விடுதலை செய்யுங்கள். இருவரிடமும் பேசுங்கள். இதுபோன்று அவசர ஆணைகளை இனி பிறப்பிக்க வேண்டாம்," என்று கூறினார். தான் கூறியதைக் போல் அக்பரின் மகள் மருமகன் இருவரிடமும் பேசி சமாதானம் செய்தார்.
அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்த தன்னை மாற்றி சமயோசிதமாக நடந்து தக்க நேரத்தில் அறிவுரை கூறிய பீர்பாலை போற்றி பாராட்டினார் அக்பர்.
- இந்திரா கோபாலன்