

கதை 1: உபயம்…!
பொண்ணு பார்க்கப்போன மொக்கச்சாமி நிலையாகிவிட்டது; ரயிலுக்குள் விண்டோ சீட்டில் உட்கார்ந்திருந்த அவர்கள் நிலையும்.
"விண்டோ சீட்டா இருந்து என்ன பிரயோஜனம்?"
மாயண்ணே வந்திருக்காக! மாப்பிள்ள மொக்கச்சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக!… ‘வாம்மா.. மின்ன(ல்)ள்னு’ சொல்ல, சரக்குனு ஓடி மறையற பொண்ணாட்டம் கடந்தது மறைந்தன வழிநெடுக மஞ்சள் ஸ்டேஷன் போர்டுகள்!.
"மாப்பிள்ளை, நீ பார்த்தயாடா?…" ஒருத்தருக்கொருத்தர் கேட்க,
ரயில்ல இருந்த ஒருத்தர் கூட என்ன ஸ்டேஷன்னு பார்த்தேன்னு சொல்ல முடியாத வேகத்தில் ஒவ்வொரு ஸ்டேஷனும் ஓடி மறைந்தது..
பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட இந்த ஸ்டேஷனுக்கு அடுத்து எறங்குங்கன்னு போன்ல சொன்னாங்க…! இறங்க வேண்டிய ஸ்டேஷன் ஞாபகம் இருக்கு! ஓடி மறையற ஸ்டேஷன் தான் என்னன்னு ஒண்ணு கூட புரியலை.!
அதற்குள் அழைத்துப் போக வந்தவர் அஞ்சாறு தடவை போன் பண்ணீட்டார்.. "எங்கவந்திருக்கீங்க? எங்க வந்திருக்கீங்க?"ன்னு கேட்டு.
தெரியலைனு சொல்ல முடியலை…! ‘ஸ்டேஷன் பேர்’ தெரியலைனு சொல்றதை படிக்கத் தெரியலைனு நெனைச்சுட்டா? யாரோ பூசிய ‘தார்பூச்சூ’ ஹிந்தியையும், இங்கிலீசையும் மட்டுமல்ல.. அந்த மாப்பிள்ளையின் எதிர்காலத்தையும் கரியாக்கித் தகர்த்துவிட்டது!
****
கதை 2: எதோ நம்மால முடிஞ்சது…!:
ரயிலில் அந்த நிறுத்தத்தில் ஏறின ஒரு குடும்பத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ரெண்டு, மூன்று வயதிருக்கக் கூடிய குழந்தைகளுடன் சிரமப்பட்டு ஏறி எதிரே இடம் பிடித்து அமர்ந்தாள். ரொம்ப எளிய குடும்பம் என்பது பார்க்கையிலேயே தெரிந்தது.
ஒரு நிறுத்தத்தில் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் டப்பாவில் அறுத்துப் போட்டுக் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்து எதுவும் அடிக்காத இயற்கையாய் விளைவித்துப் பழுத்த பப்பாளித் துண்டுகளை சாப்பிடலாம் என்று நான் மூடியை திறக்க…
முன் வரிசையில் இருந்த குழந்தைகளின் முகத்தில் ஒருவித ஏக்கம் தெரிந்தது. ‘சரி எதோ நம்மால் ஆனது!’ ரெண்டு துண்டு கொடுப்போம். எதிரிலிருப்பவர் பார்க்கச் சாப்பிடுவது நாகரீகமில்லையே என்று நினைத்து ஆளுக்கு ரெண்டு துண்டு கொடுக்க...
படக்குனு வாங்கும் கைகளைத் தட்டிவிட்டு, குழந்தைகளின் அம்மா குமுறினாள், "ஏய்! எத்தனை தடவை சொல்லீருக்கேன். பஸ்ல டிரெயினிலெல்லாம் கண்டவங்க குடுக்கறதை வாங்கக் கூடாதுன்னு?" சொல்லி, அவற்றின் முதுகில் ரெண்டு போட்டாள்.
குழந்தைகள் கண்களில் ஒருவித மிரட்சி. எனக்கோ ஒருவித அதிர்ச்சி! ‘எதோ நம்மாலானது!’ன்னு கொடுக்கப்போய்.. சும்மா இருந்த குழந்தைகள் முதுகில் அல்லவா அடி விழுந்தது. குழந்தைகளுக்கு வலித்ததோ என்னவோ… எனக்கு மனதை வலித்தது!.
****
கதை 3: “கேக்குதா?"
சிரித்துக் கொண்டே இருந்த சிதம்பரத்தை லோகு கேட்டான்.
“ஏண்டா சிதம்பரம் எதுக்கு இப்படி பயித்தியக்காரனாட்டம் சிரிச்சுக்கிட்டே இருக்கே? நட்டு கிட்டு எதாவது கழண்டு போச்சா?"
"ஓ அதுவா? கொஞ்சம் அங்கே பாரு கண்ணா?" என்றான் பாட்ஷாப்பட ரஜினியாட்டம்.
பார்த்தால்…
ஒருத்தன் செல்போனை வாயருகே கிடைமட்டத்தில் வைத்துக் கொண்டு, “கேக்குதா? கேக்குதா"ன்னு கேட்டுக் கொண்டே போய்க் கொண்டிருந்தான்..!
"அதுக்கென்ன?" என்றான் லோகு
"அந்தக் காலத்துல, நாங்க செஞ்ச தீப்பெட்டி போன்ல கூட யார்ட்டயும் கேக்குதான்னு கேட்டதில்லை..! அதூம் வாயருகே போனை வைத்துக் கொண்டு! கேக்கும்கற நம்பிக்கை இருந்தது எங்களுக்கு! ஆனா, இப்ப என்னடா ‘ஏஐ’ தொழில் நுட்பங்கறீங்க.. அதுங்கறீங்க! இதுங்கறீங்க! இப்படி நம்பிக்கை இல்லாம இருக்கறீங்களே?! வாயருகே கிடைமட்டத்தில் வச்சாத்தான்னா..? அது என்னடா செல் போன்?! அதுக்கு எங்க நூல் போனே எவ்வள்வோ தேவலை போலிருக்கே!" என்றான்.
அங்கே அமைதி நிலவியது!