

சரியாக காலை 9 மணிக்கு என் வீட்டில் ஒருவர் வந்து நின்றார்.
"நீங்கள் சாம்ராஜ் தானே? ஓய்வு பெற்ற நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் சூப்பர்வைசர். நான் சொல்வது கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்?
மேலும் சொல்கிறேன் நான் உங்கள் நண்பன் ஆண்டனி.
நாம ரெண்டு பேரும் டான் போஸ்கோ ஸ்கூல்ல கேகே நகரில் ஒன்றாக படிச்சோம். நாம 5, 6, 7 என 3 வருடம் படித்த பிறகு நான் சூலமேட்டுக்கு இடமாறிட்டேன். அதற்குப் பிறகு சுமார் 60 வருடங்கள் கழித்து இப்பதான் சந்திக்கிறேன்.
உங்க பிறந்தநாள் 5. 2.1962. உங்க கல்யாணம் மதுரையில் நடந்துச்சு... கல்யாண நாள் எனக்கு கரெக்டா தெரியும் 19. 9. 1989."
கையில் சூட்கேஸ் உடனும், முகத்தில் எந்த விதமான பதட்டமும் இல்லாமல் என்னைப் பற்றி தகவலை பரிமாறிக்கொண்ட அந்த நபரை என்னால் யூகிக்க முடியவில்லை.
"அதற்குள் என் மனைவி தெருவாசலில் வந்து உங்களை இவ்வளவு தூரம் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்... அவரை தெருவில் வைத்து பேசுவது நியாயம் இல்லை. உள்ளே வர சொல்லுங்கள்," என்றாள்.
தமிழச்சி மரபை தமிழர் காப்பது தான் தமிழ் பண்பாடு....
அவ்வாறே, வணங்கி, "வாருங்கள்! நண்பரே1" என்றேன்.
அவர் ஆசுவாசமாக, எங்கள் வீட்டு ஹாலில் உட்கார்ந்து கொண்டு, காலை என்பதால், நாங்கள் அன்புடன் அளித்த கும்பகோணம் டிகிரி காப்பியையும் பருகி பேச ஆரம்பித்தார்...
"என் பெயர் ஆண்டனி என்கிற ஆண்டனி ராஜ். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்; இருவரும் கல்யாணம் ஆகி இப்போது சென்னையில் தனி வீடு கட்டிக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தர் எனக்கு எந்த குறைபாடுகளையும் வைக்கவில்லை...."
என்னுடைய மைண்ட் வாய்ஸ் வேறு வகையாக பேச ஆரம்பித்தது...
சென்னையிலேயே இரண்டு மகள்கள் இருக்கும்போது ஏன் என் வீடு தேடி வர வேண்டும் ?
இருவரும், "முதலில் குளித்துவிட்டு இளைப்பாரி சாப்பிடும்போது மற்றவற்றையெல்லாம் ஆசுவாசமாக பேசிக் கொள்ளலாம்" என்று சேர்ந்து சொன்னோம்.
அருமையான சிக்கன் 65, ஆட்டுக்கறி சூப், ஐஸ்கிரீம் உடன் என் மனைவி காலை உணவை அன்பாக பரிமாறி, வந்த விருந்தாளிக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தினாள்....
"இப்படியான உணவை நான் சாப்பிட்டு சுமார் 10 வருடங்கள் ஆகிறது," என்று சொன்னபோது என் மனைவி என்னை பார்த்து ஒரு ஏளனப் பார்வை பார்த்தது என்னால் மறக்கவே முடியவில்லை.
இப்படித்தான் நாம் பலமுறை நம்முடைய கையாலாகாத தனத்தை வரும் விருந்தாளிக்கு விட்டுவிட்டு அபத்தமாக காட்சியளிக்கிறோம். எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டேன்.
நண்பர் பேசும்போது "நான் காஷ்மீரில் படிக்கத் தொடங்கினேன்: என்னுடைய அப்பா ஒரு ஆர்மியில் ஒரு lieutenant general.
பிறகு என்னுடைய ஆர்வம் காரணமாக கோயம்புத்தூர் அக்ரிகல்சுரல் காலேஜில் சேர்ந்து பட்டம் பெற்றேன்.
பிறகு தரமணி சுவாமிநாதன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் விஞ்ஞானியாக பணியாற்றி அவருடைய கனவு திட்டமான 'பசுமை இந்தியா' படைப்பதற்கு உறுதுணையாக இருந்து பல நாடுகளுக்கு பயணப்பட்டு இப்பொழுது எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சாம்ராஜ், கடவுள் எனக்கு ஒரே ஒரு குறையை வைத்து விட்டார்..."
"என்ன நண்பரே?"
"என் மனைவி 50 வயது இருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்து விட்டாள். அந்த சோகத்தில் இருந்து மீளவே எனக்கு ஐந்து வருடங்கள் ஆனது.
எப்படியோ என் பிள்ளைகள் இருவரையும் நன்றாக படிக்க வைத்து கல்யாணமும் செய்து விட்டேன். மேலும், சாம்ராஜ் நான் நன்றாக prayer mass conduct செய்வேன்," என்று சொன்னார்.
உங்கள் வீட்டில் நான் இதை மேற்கொள்ள போகிறேன். இவ்வாறு சொன்னதும் என் மனைவிக்கு தலை சுற்றியது. அவளுடைய மைண்ட் வாய்ஸ்யை என்னால் கேட்க முடிந்தது.
"நண்பர் என்று சொல்கிறார்; எவ்வளவு நாள் இருக்கப் போகிறார் என்று சொல்லவில்லை; அதற்குள் பல புரோக்ராம்களை போட்டுக் கொண்டே போகிறாரே!
நாமும் தான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்.
அவர்களுடைய தயவில் நாம் வாழாவிட்டாலும் நம்முடைய பென்ஷன், நம்முடைய மெடிக்கல் எக்ஸ்பன்சஸ் மற்றும் இதர செலவுகளுக்கு சரியாக இருக்கிறது.
இப்படி திடீர் செலவு வந்தால் நம் பட்ஜெட்டில் பலவற்றை இழக்க நேரிடும்" என்று முணு முணுத்தாள்.
என்னதான் இருந்தாலும் பார்ப்பதற்கு நேர்மையாகவும், பழகுவதற்கு இனிமையாகவும் இருக்கிறார்...
"அவர் நம்முடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு தானே வீட்டில் ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்," என்று நான் என் மனைவியை சமாதானப்படுத்தினேன்.
"போதும்.. போதும்.. உங்களுடைய சமத்துத்தனம்! அவரை சீக்கிரம் கவனித்து அனுப்புவதற்கு வழியை பாருங்கள்!" என்று அவர் படுத்துக்கொண்டதும் என்னிடம் கூறியது எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
கடந்த மூன்று தினங்களாக அவருடைய கூட்டுப் பிரார்த்தனையில் எங்களுடைய மனம் லயித்துத்தான் போனது.
என் மனைவியும் எந்த குறையும் இல்லாமல் தினமும் மட்டன், பிரைடு ரைஸ் என்று அசத்திக் கொண்டுதான் இருந்தாள்.
இன்னும் ஒரு நாள் அவருடைய தங்குதல் அதிகமானால் அது நம்முடைய வருமானத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை நானும் உணராமல் இல்லை.
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு...'
திருவள்ளுவர் எனக்கு அடிக்கடி பாடம் எடுத்துக் கொண்டு தான் இருந்தார்.
திடீரென்று நான்காவது நாள் தன் சூட்கேஸை மூடி தன்னுடைய கிளம்புதல் அறிகுறியை தென்படுத்தினார்.
அது எங்களுக்கு ஒரு சங்கடமாகத்தான் இருந்தது.
திடீரென்று ஒரு கவரை எடுத்து, 'கர்த்தர் கருணையால் உங்கள் வாழ்க்கையில் எல்லா வகையான அமைதியும் கிட்டட்டும்' என்று எழுதி அதில் ஒரு செக்கை எடுத்து வைத்ததை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.
காலையில் அமைதியாக எங்களிடம் இருந்து விடைபெறும் போது மீண்டும் ஒரு பிரார்த்தனை செய்து "இப்படியான ஒரு குடும்பத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும் அக்கறையும் என் மனைவி இறந்தவுடன் எனக்கு கிடைக்கவில்லை; அது கர்த்தரால் இன்று நிறைவேறியது. நன்றி." என்று கூறி தன் வீட்டு விலாசத்தையும் அறிவித்துவிட்டு அவசியம் கோயம்புத்தூர் வரும்படி சொல்லிவிட்டு சென்றார்.அவர் சென்று கொண்டிருந்த பாதையை இருவருமாக பார்த்துக் கொண்டே இருந்தோம்.
எங்கள் மனதில் கவரும், அதில் உள்ள செக்கும் அடிக்கடி வராமல் இல்லை! அதில் ரூபாய் பத்தாயிரம் என்று இருந்ததைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைவதை விட மிகவும் குன்றித்தான் போனது.
இப்படிப்பட்ட உன்னதமான ஆத்மாவை தவறாக நினைத்து விட்டோமே என்று?!
என்ன செய்வது; மனம் எனும் பேயை அடக்கி ஆள்வது என்பது யாராலும் முடியாது என்பது ஒரு யதார்த்தமான உண்மை தானே!!
நண்பருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்.
பணம் மனிதனை பாடாய்தான் படுத்துகிறது.
எங்களிடம் குற்றமில்லை என்று தோன்றினாலும் ஏதோ ஒரு குற்றம் எங்களை குருகுருக்கத்தான் செய்கிறது.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னை சொல்லி குற்றமில்லை; இது ஏழ்மை செய்த குற்றமடி; இது ஏழ்மை செய்த குற்றமடி...