

நண்பர்கள் மூவர் பார்க்கில் நடைப் பயணம் போனபோது ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமி, அவர் மனைவி தினம் போனில் பாம்பு பிடிக்கும் வீடியோ தேடித் தேடிப் பார்க்கிறாள் என்றார்.
"பிடிப்பவர்கள், நீட்ட கம்பி ஒன்றைப் பிடித்து, - அதன் முனை U போல் வளைந்து இருக்கும்... அதை பாம்பின் நடு உடலைத் தூக்கி வாலைப் பிடித்து படம் எடுத்து இருக்கும் தலைப் பகுதியை ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜார் வாயில் தள்ளி மூடி விடுவதைப் பார்த்து இது ரொம்ப சுலப வழின்னு சொல்றாள் சார்.." என்றார்.
நண்பர் நாகமுத்து, "பார்க்க சுலபமாய்த் தோன்றும்... அதற்கு நல்ல பயிற்சி வேண்டும்... பாம்பு மிக வேகமாகத் தலையைத் திருப்பி பொட்டென்று போட்டு விடும். பல வருடங்கள் பயிற்சி உள்ள கடலூர் வீரரே கடி பட்டு இருக்கார்... அவரைக் காப்பாற்ற முடியலே... பாட்டில் வாயில் அதை நுழைத்த போது போட்டுடிச்சி..."
கர்னல் கந்தசாமி (ஓய்வு பெற்ற பிரெஞ்ச் ஆர்மி) சொன்னார்...
"ஆப்பிரிக்காவில் அமைதிப் படையில் பணியாற்றிய போது கலகத் தலைவனைப் பிடிக்கப் போனார்... அவன் தற்காப்புக்காக அவன் தங்கியிருந்த கூடாரத்தைச் சுற்றி அங்கங்கே குழி வெட்டி விஷப் பாம்புகளைப் போட்டு வைத்திருந்தான்," என்று விவரங்களை விளக்கிச் சொன்னார். மேலும் தொடர்ந்தார்...
"கலகத் தலைவன் தங்கி இருந்த கூடாரத்தை கர்னல் மற்றும் வீரர்கள் பைனாக்குலர் வழியே பார்த்தார்கள்.
கலகத் தலைவன் ஒரு எட்டு அடி நீள நல்ல பாம்பைக் கழுத்தில் சுற்றிய படி வெளியே வந்தான். ஏதோ மஃப்ளர் சுற்றிய மாதிரி.
படம் எடுத்த அதன் வாய்க்குள் ஒரு டிரம் மூடியைத் திறந்து ஒரு குட்டித் தவளையை எடுத்து ஊட்டி விட்டான்.
அது தவளையை விழுங்கி விட்டு இவன் கன்னத்தில் பிளவு பட்ட நாக்கால் அன்புடன் தடவிக் கொடுத்தது.
இவன் ஒரு குழியில் அதைப் போட்டு, "பார்த்துக் கொள். யாரும் எதிரிகள் வந்தால் போட்டு விடு," என்றான். அது மகிழ்ச்சியுடன் தலையாட்டியது.
மற்றொரு குழியில் இருந்து ஒரு கட்டு விரியனைத் தூக்கி வேறொரு டிரம் மூடியைத் திறந்து ஒரு சுண்டெலியைப் பிடித்து ஊட்டி விட்டான்..
ஒரு ராஜ நாகம் அவன் காலடியில் கிடந்தது. தலையை விருட்டெனத் தூக்க, அவன் கழுத்து உயரம் நேராய் நின்றது. அவன் அதன் தலையைத் தடவியபடி தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு குட்டி பாம்பைப் பிடித்து ஊட்டினான். ராஜ நாகம் சாப்பாடு இன்னொரு பாம்பு தான்."
கர்னல் இதையெல்லாம் விவரித்துச் சொல்ல, குப்புசாமியும், நாகமுத்துவும் தங்கள் கால்களைத் தூக்கி பெஞ்சில் வைத்துக் கொண்டு.
"கர்னல் எங்க காலடியில் பாம்புகள் ஊறுகிற மாதிரி ஃபீலிங் இருக்கு ... தலைவன் உடம்பெல்லாம் விஷம்.. விஷமக்காரன் அவன்," என்றனர்.
கர்னல் கந்தசாமி தொடர்ந்து விவரித்தார்.
"அது மட்டுமா சார். மரக்கிளைகளில் கூடை கூடையா நட்டுவாக்கிளி, கருந்தேள்கள் கட்டி வச்சிருந்தான்....எதிரிகள் வந்தால் ஒரு கயிறை இழுத்தால் போதும்... பூ கொட்டற மாதிரி தலையில் விழும். அப்புறம் இது போல் பல கூடைகளில் பூரான்கள், விஷச் சிலந்திகள் ஸ்டாக் வச்சிருந்தான்."
"ஓஹோ... அப்போ இதுங்களுக்கு தீனி போடறதே அவனுக்கு பெரிய வேலை ஆச்சே," என்றார் குப்புசாமி.
கர்னல் கதை தொடர்ந்தது...
கர்னல் தன் சகாக்களுடன் திட்டம் தீட்டினார்... ராத்திரியில் அவன் படுக்கையில் காவலுக்கு சுற்றி நல்ல பாம்புகள் தான் கிடக்கு...
மெத்தையிலும் ஒரு மலைப் பாம்பு மேல் தான் தலை வச்சு தூங்கறான் என்பதை ஜன்னல் இடுக்கு வழியாய்ப் பார்த்தார்.
ஆப்பிரிக்காவில் கிராமத்துக் காடுகளில் விஷப் பாம்புகள் நடமாட்டம் அதிகம் என்பதால். வீட்டுக்கு வீடு கீரிப் பிள்ளைகள் வளர்த்தார்கள்..
'கீரிப் பிள்ளையின் யூரின் பாம்புகளுக்கு அலர்ஜி... ஓடி விடும் அந்த வாடைக்கு' என கிராமப் பஞ்சாயத்து சொன்னான்.
அதன் படி ஒவ்வொரு சோல்ஜர் இடுப்பிலும் ஒரு லிட்டர் பாட்டிலில் நிரப்பி எடுத்துக் கொண்டு முன்னேறினர். இதைத் தீர்த்தம் மாதிரி அங்கங்கே கர்னல் தெளித்தார்... பாம்புகள் மிரண்டு வெளியேறிவிட்டன.
ஒரு பெட்ரோல் பாம் மூடியைத் திறந்து பெட்ரோலுடன் கீரியின் திரவத்தைக் கலந்து திரியைப் பற்ற வைத்து கூடாரத்து மேல் வீசினார் கர்னல்.
அது வெடிக்க, கீரி திரவ வாடை கூடாரத்தில் வீச, தலைவன் துணைக்கு இருந்த பாம்புகள் ஓடி விட்டன..
ஒரு ராஜ நாகம் மட்டும் அவன் தலையில் சுற்றிக் கொண்டு ஹெல்மெட் போல் காத்தது.
கர்னல் பாட்டிலைத் திறந்து செண்ட் அடிப்பது போல் தன் டிரஸ் மீது தெளித்துக் கொண்டு தலைவனைப் பிடிக்க நெருங்கினார்.
கர்னல் வியர்வையுடன் திரவ வாசனையும் சேர்ந்த ஒரு காம்பினேஷன் மணத்தில், ராஜ நாகம் தலைவன் இருவரும் மயங்கி விழுந்தார்கள்.
கைகளை முதுகுப்பக்கம் வைத்து விலங்கிட்டார் கர்னல்.
"மயங்கிக் கிடந்த ராஜ நாகத்தை இதோ இந்தக் காலால் தூக்கி வீசினேன்... அது ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்தது," என்றார் கர்னல்.
"கர்னல் எப்படி இந்த விஷ ஜந்துக்களுடன் போராடி வெற்றி அடைஞ்சீங்க? கேட்கவே மெய் சிலிர்க்குது..." என்றார் குப்பு.
"மீதியைக் கேளுங்க..."
"தலைவன் இரண்டு பெரிய கொமேடோ பல்லி உடும்பு மாதிரி வளர்த்திருக்கான்... அதுங்க எங்களைக் கண்காணிச்சுக்கிட்டே இருந்து இருக்கு...
அவனை ஜீப்பில் ஏற்றும் போது இரண்டும் ஜீப் அடியில் இருந்து பாய்ந்து அவன் கை விலங்கைப் பல்லால் கடிச்சு உடைச்சிட்டுது... ஒன்னொரு உடும்பு கொமேடோ மேல் ஏறி தப்பி விட்டான்..
நான் சுட்டதில் ஒரு கொமோடோ மயங்கிட்டுது.. அதன் பல் இரண்டைப் பிடுங்கி கழுத்தில் செயினில் மாட்டி இருக்கேன்... இதோ பாருங்க"ன்னு கர்னல் காட்டினார்.
அது திருவிழா கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் புலிப் பல் போல் தோன்றினாலும் நண்பர்கள், "பலே கர்னல்... பிரமாதம் போங்க..." எனப் பாராட்டு தெரிவித்தனர்.