

"கும்மு. நம்ம கல்யாணம் நடக்கறத பத்தி நினைச்சா எனக்கு பயமா இருக்கு" என்றாள் மாலதி
"மாலு. அப்படி என்ன பயம்? உன் அண்ணன் கோகுல கிருஷ்ணனுக்கு தான் நம்ம கல்யாணத்த பத்தி நேத்திக்கே சொல்லிட்டியே" என்றான் குமார்.
"அதுல ஒரு பெரிய பிரச்சனை இருக்கு. கோகுல கிருஷ்ணன் நம்ம ஊரிலேயே இருக்கிற பெரிய தாதா பேக்கரி பக்கிரியோட ரெண்டு கன்னத்துலயும் அறை விட்டா தான் நம்ம கல்யாணம்னு சொல்லிட்டான்" என்றாள் மாலதி.
"என்ன ஒரு வில்லத்தனம். பேக்கரி பக்கிரியோட பேக்கரிய சுத்தி அவனோட பேக்கரி கடையில வேலை பார்க்கிற பர்முடாஸ் பாய்ஸ் முண்டா பனியனும் பர்மொடாஸூமா திரிவாங்க. அவங்க முகம் எப்பொழுதுமே பேக்கரி கடை கிச்சன் அடுப்பு மாதிரி சூடா இருக்கும். அன்னைக்கு கடைக்கு வந்த ஒருத்தன் பேக்கரி கடை பக்கிரிய நேரா பாத்து பேசாம கழுத்த கோணல் மாணலா வச்சு பேசி இருக்கான். கோபத்துல பக்கிரி கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்டிருக்கான்," என்றான் குமார்.
"அய்யய்யோ. அப்பறம் என்ன ஆச்சு?" என்றாள் மாலதி.
"அப்பதான் தெரிஞ்சிருச்சு வந்தவனுக்கு கழுத்து சுளுக்குன்னு. ஆனா பேக்கரி பக்கிரி விட்ட அறையில் அவனுக்கு கழுத்து சுளுக்கு சரியா போச்சு. அறை விட்டதுக்கு பக்கிரிக்கு நன்றி சொல்லி ரஸ்க் 1 கிலோ வாங்கிட்டு போயிட்டான். அப்படிப்பட்ட கோவக்காரன் பேக்கரி பக்கிரிய என்னால எப்படி அறை விட முடியும். உன்னோட அண்ணன் அண்ணியை பொண்ண பாத்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு கல்யாணம் கட்டிக்கிட்டான். எனக்கு மாத்திரம் இப்படி போட்டி வக்கறான். நம்ம கல்யாணத்துக்கு தேவையில்லாம பிரச்சனை பண்றான்" என்றான் குமார்.
"நான் அவன்கிட்ட சொன்னேன். எதுக்கு இந்த தேவையில்லாத விஷப் பரிட்சைன்னு. அந்த காலத்துல தைரியத்தை காமிக்க காளையை அடக்குவாங்க. என்ன கல்யாணம் பண்ணிக்க பேக்கரி பக்கிரி கிட்ட உன்னோட தைரியத்த காமிக்க சொல்றான். இத மட்டும் நீ பண்ணிட்டேன்னா நம்ம கல்யாணத்தை அவனே முன்ன இருந்தே நடத்தி வைக்கிறேங்கறான்," என்றாள் மாலதி.
"உங்க அப்பா நவநீதகிருஷ்ணன் என்ன சொல்றாரு?" என்றான் குமார்.
"எங்க அப்பாவுக்கு நம்ம லவ்வுல இஷ்டம் இல்ல. அண்ணனோட கூட்டு சேர்ந்து கிட்டு பேக்கரி பக்கிரியை அறை விட சொல்றாரு" என்றாள் மாலதி.
"அடப்பாவிகளா! மொத்த குடும்பமும் சேர்ந்து ஒரு தாதாவோட என்னை மோத விடுறீங்க. தாதா தூங்கப்போனால் கூட ரூம சுத்தி பத்து பேர் தூங்குறாங்க. தாதா ரெஸ்ட் ரூம் போனா அஞ்சு பேர் காவல் காக்கறாங்க. அவங்கள தாண்டி என்னால எப்படி தாதா கன்னத்துல அற விட முடியும். இது என்ன சினிமாவா? அவன நெருங்கறதே சிந்துபாத் கதை மாதிரி ஏழு கடல் ஏழு மலை தாண்ட வேண்டியிருக்கு," என்றான் குமார்.
"வேற தாதாவ வெச்சு அடிச்சா பரவாயில்லையா? அடி விழணும் அவ்வளவு தானே?" என்றான் குமார்.
"பேக்கரி பக்கிரிய கண்டு ஊரே நடுங்குது. வேற தாதா வெச்சு சாமர்த்தியமிருந்தா அடிச்சுக்கோன்னு சொல்லறான். வர திங்க கிழமை காலைல 12 மணிக்குள்ள அவன நீ அடிச்சுருக்கணும்னு சொல்றான். தாதாவை அடிச்சிட்டேன்னு நீ சொல்ற அந்த ஒரு வார்த்தைக்காக அடுத்த வாரம் காத்துகிட்டு இருப்பேன் குமார்" என்றாள் மாலதி.
"அவன் பேக்கரி பக்கிரி இல்ல. போக்கிரி பக்கிரி. இருந்தாலும் எப்படியாவது இத செஞ்சு, உன்ன நான் கல்யாணம் பண்ணிப்பேன். கவலைப்படாத," என்றான் குமார்.
அடுத்த இரண்டு நாட்கள் குமார் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விட்டு சென்னையில் தாதாக்களின் பட்டியலைத் தேடினான். முதலில், வீட்டின் அருகில் இருந்த ஒரு தாதாவை அவன் அணுகினான். அவன் குமாரை தனது வீட்டிற்கு வர சொன்னான்.
அந்த தாதா அவனது பகுதியில் அவ்வப்போது தென்பட்டாலும், அவனது வீடு சில பல சந்து பொந்துகளைத் தாண்டி, ஒரு வர்ணம் பூசாத பழைய அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்தது. குமார் அதிகாலை வேளையில் தாதாவை சந்திக்க தாதா வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினான். தாதாவின் மனைவி தூக்கக் கலக்க முகத்துடன் நைட்டியுடன் பல் தேய்த்தபடி கதவைத் திறந்தாள்.
"ஙேங் ஙாரு? ஙாற பாங்ஙஙும்?" என்றாள் நைட்டி பெண்மணி.
"மேடம். பல்லுல இருக்குற பேஸ்ட துப்பிட்டு பேசுங்க. எனக்கு புரிய மாட்டேங்குத," என்றான் குமார்.
நுரை தள்ளிய பற்பசையை வாஷ்பேஸினில் துப்பி விட்டு, புன்சிரிப்போடு பற்பசை விளம்பரம் போல் சிரித்தாள்.
"நீங்க யாரு? யாரை பாக்கணும்? ஏதாவது கட்டப் பஞ்சாயத்து வேலயா?" என்றாள் நைட்டி பெண்மணி.
"நம்ம ஏரியா நாட்டாமை உங்க புருஷன். ஒரு சின்ன உதவி பண்ணனும். உங்க புருசன் இன்னிக்கு வர சொன்னாரு" என்றான் குமார்.
"மாமோய். மாமோய். உங்கள தேடிகிட்டு ஒரு தம்பி வந்திருக்கு. எழுந்திருங்க. சூடா டீ போடறேன்," என்றாள் நைட்டி பெண்மணி.
அழுக்கு லுங்கியுடனும், அழுக்கு முகத்துடனும், பல்தேய்க்காத அழுக்கு பல்லுடனும் உள்ளிருந்து டங்குவார் தங்கம் வந்தான்.
குமார் விஷயத்தை டங்குவார் தங்கமிடம் கூற, டங்குவார் தங்கத்தின் அங்கமெல்லாம் ஒரு நடு நடுங்கியது.
"தம்பி. நீ மோதற ஆளு மல. நான் ஏதோ ஓரமா இங்க கட்டப்பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருக்கேன். ஆனா பேக்கரி பக்கிரி ஆசியா, அமெரிக்கா, அண்டார்டிகான்னு கண்டம் விட்டு கண்டம் தாவி கட்டப்பஞ்சாயத்து பண்றவன். தம்பி அவனுடன் நீ மோதறது உனக்கு பெரிய கண்டம். பேசாம பொண்ணோட அண்ணன் கை கால்ல விழுந்தாவது கண்ணாலம் பண்ற வழிய பாரு," என்றான் டங்குவார் தங்கம்.
"டங்குவார் தங்கம். உங்களுக்கு தங்கமான மனசு. அடிக்க கூட வேண்டாம், செல்லமா கன்னத்துல தட்டினா கூட என்னோட கல்யாணம் நடந்துடும்."
"தம்பி. இது சரிப்பட்டு வராது.
எவனும் நம்ம ஊர்ல பேக்கரி பக்கிரிய எதிர்க்க துணிய மாட்டாங்க. நீ ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம்னு வேற ஆளுங்களப் பாரு."
என்ன செய்வது என்று குமார் யோசித்த பொழுது, தனது நண்பன் ஐடியா மணியின் ஞாபகம் வந்தது. ஐடியா மணி எந்த ஒரு பிரச்னைக்கும் அருமையாக ஐடியா கொடுப்பான். ஐடியா மணிக்கு அழைத்து விஷயத்தை சொல்லி தனது பிரச்னையைக் கூறினான். ஐடியா மணி ஒரு நாள் நேரம் கேட்டான்.
அடுத்த நாள் எல்லாம் தயாராகி விட்டதாக ஐடியா மணியிடமிருந்து அழைப்பு வந்தது. குமார் எப்படி என கேட்டபோது, உனக்கே தெரியவரும் என்றான் ஐடியா மணி. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பேக்கரி பக்கிரியின் பேக்கரி அலுவலகத்திற்கு குமார், மாலதி, அவளது அண்ணன், அப்பா சகிதமாக வரச் சொன்னான் ஐடியா மணி. அவர்கள் அலுவலகத்தில் ஆஜாராகிய போது, ஐடியா மணி ஏற்கனவே அங்கு காத்திருந்தான். பேக்கரி கடையில் இருந்த, முன்அலுவலகத்தில் பெஞ்சு பலகையில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். பெரும் கூட்டம் அங்கு குழுமி இருந்தது. பர்மோடாஸ் கூட்டம் அனைவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.
அரசியல்வாதிகள், பிரமுகர்கள் என பல்வேறு கூட்டம் இருக்க, என்ன நடக்கப் போகிறதோ என்று குமார் ஐடியா மணியை கேள்வியுடன் பார்த்தான்.
"ஸ்... கவலப்படாத. எல்லாம் தயாராக இருக்கு" என்றான் ஐடியாமணி.
10 மணிக்கு இவர்களது குழு உள்ளே அழைக்கப்பட, ஐடியா மணி பேக்கரி பக்கிரியிடம் அடுத்த வாரம் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு பேக்கரி ஆர்டர் செய்ய வேண்டும் என்று கூறினான். பேக்கரி பக்கிரி அதற்கான விஷயங்களை குறிப்பிடுத்துக் கொண்டிருந்த பொழுது, ஐடியா மணி வாசலை நோக்கினான். ஒரு வாண்டு வேகமாக ஓடி வந்து , பேக்கரி பக்கிரியின் மேஜையின் மீது அமர்ந்து, பேக்கரி பக்கிரியின் இரண்டு கன்னங்களிலும் அறை விட்டது. பேக்கரி பக்கிரியின் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது.
"கண்கலங்குது. பாருங்க சார். என்னோட பேரன் எவ்வளவு பாசமா இருக்கான். சரி. என்ன ஃபங்ஷனுக்கு கேக் வேணும்?" என்றான் பேக்கரி பக்கிரி.
"இதோ இவங்க ரெண்டு பேரோட நிச்சயதார்த்தம். குமார், மாலதி" என்றான் ஐடியாமணி.
குமாரும் மாலதியும் ஐடியா மணியை நன்றியுடன் பார்த்த பொழுது, அண்ணன் கோகுல கிருஷ்ணனும் அப்பா நவநீதகிருஷ்ணனும் அதிர்ச்சியுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.