சிறுகதை: அல்லா அருள்; நல்லா நடக்கும்!

எதிர்பாராத மனித நேயமும் இறைவனின் அற்புதமும் இணைந்த நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | couple with happy face
சிறுகதை | couple with happy faceAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

அயல்நாடுகளுக்கு ஆயத்த ஆடை அனுப்பும் நகரின் பிரபல நிறுவனத்தில், இருபது வருடங்களாக பணி புரியும், ஹாஜி அப்துல் வகாப், அலுவலகம் நுழைந்து பயோ மெட்ரிக்கில் விரலால் வருகையை பதிவு செய்து விட்டு தன் அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தவர், மறக்காமல் கையிலிருந்த, பையை, மேஜை டிராயரில் வைத்துப் பூட்டினார். மொபைல் அழைக்கவே, உயிர்ப்பித்தார்.

எதிர் முனையில், நண்பர் சதாசிவம். அவர் மகனுக்கு வங்கியில் வேலை கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சில நிமிட உரையாடலுக்கு பின், பேக்கிங் செக்சனை பார்வையிட எழும்பியவர், பார்வையில் மேஜை மேலிருந்த சாவி படவே கையில் எடுத்து மறக்காமல் பத்திரமாக சட்டைப் பையில் போட்டுக்கொண்டார். பின்னே, பையில் ஒரு லட்சம் ரூபாய் அல்லவா இருக்கிறது! மனைவி ஆபிதாவின் விருப்பப்படி, இந்த வருடம் ஹஜ் யாத்திரை செல்வதற்கு கிடைத்த பணம்.

ஐந்து வருடங்களுக்கு முன், புனிதப் பயணம் செல்ல இருவரும் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அப்துல் வகாப்பின் அன்னை ஹாஜிரா பேகம் வருடாந்திர பரிசோதனைக்காக கண் மருத்துவமனை செல்ல, 'இரு கண்களிலும் சதை வளர்ந்துள்ளது.

உடனே ஆபரேசன் செய்ய வேண்டும்' என டாக்டர் கூறி விட்டார். அடுத்தடுத்து இரண்டிலும் ஆபரேசன் செய்ய வேண்டியதாகி விட்டது. மருந்து மாத்திரை செலவு என பணத்தட்டுப்பாடுடன் மாமியாரின் கண்களுக்கு மருந்து விட்டு கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து கொண்டதால், ஆபிதாவின் பயணம் தடைப்பட்டு விட்டது.

ஆபிதா ரொம்பவே வருத்தப் பட்டாள். அவ்வப்போது, கணவரிடம், புலம்பவும் செய்வாள். அவர் தான், "ஆபிதா நீ உன் கடமையை தானே செய்தாய். இதுவும் அல்லாவுக்கு நீ காட்டும் நன்றிக்கு ஒப்பானது. பயணத்திற்காக ஆபரேஷனைத் தள்ளிப் போட்டால் பார்வை மங்கி விடும் வாய்ப்புகள் அதிகம் என டாக்டர் எச்சரித்து விட்டார். நீயும் பொறுப்பாக வேளை தவறாமல் மருந்து ஊற்றியதால் பார்வை தெளிவாக இருப்பதாக சொந்தக் காரங்ககிட்ட சொல்லி அம்மா உன்னைப் பாராட்டுறாங்க. அல்லா அருளால் விரைவில் வாய்ப்பு கிடைக்கும்," என்று கூறி தேற்றுவார். ஆனாலும், ஆபிதா சமாதானமாகவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாலும் அறிந்த நாரதர்!
சிறுகதை | couple with happy face

இந்த வருடம், அல்லாவின் அருளால் எல்லாம் கூடி வந்தது. ஆபிதாவின் சித்தி மகன் அப்ராஸ் ஹஜ் யாத்திரை செல்வதாகவும், ஆபிதா அக்காவை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் அனுமதி கேட்டான்.

முதலில் தயங்கினாலும், அப்துல் சம்மதிக்க, பயணம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் பணத்தேவை பின் வாங்க வைத்தது. இறைவன் மேல் உள்ள நம்பிக்கையில் எப்படியும் புரட்டி விடலாம் என்று முயற்சியில் இறங்கினார். மொத்தம் மூன்று லட்சம் தேவைப்பட்டது.

வங்கியில் போட்டிருந்த பிக்ஸட் டெபாசிட் முடிந்தது வசதியாகி விட்டது. இரண்டு லட்சம் உறுதி. மீதமுள்ள ஒரு லட்சத்திற்கு, பல இடங்களில் முயற்சி செய்தார். ஊஹூம்... எல்லா இடங்களிலும் பொருளாதார நெருக்கடியால் உதவ முடியாத நிலை. பால்ய சிநேகிதன், மீன் மார்க்கெட் அந்தோணி, தன் மாமனாரிடம் கடனாக வாங்கிக் கொடுத்திருந்தான். ஹஜ் யாத்திரைக்கு என்றவுடன் வட்டி வேண்டாம் எனக் கூறி விட்டார் அந்த பெரிய மனசுக்கு சொந்தக்காரர். அந்த பணத்தை தான் மேஜை டிராயரில் பத்திரப்படுத்தினார். பணம் கிடைத்ததில் திருப்தியாகி பணியை ஆரம்பிக்கும் வேளை, மீண்டும் செல்போன் ஒலித்தது. இம்முறை அழைத்தது தோழர் பரமசிவம். "அப்துல்... என் மனைவிக்கு ஹார்ட் அட்டாக். எமர்ஜென்ஸி வார்டில் இருக்கிறாள். நாளை காலைக்குள் ஆபரேசன் பண்ணணுமாம். உடனே ஒரு லட்சம் ரூபாய் கட்ட சொல்கிறார்கள். தயவு செய்து ஏற்பாடு பண்ணமுடியுமா?" குரல் கம்ம, கெஞ்சினார்.

"எந்த ஆஸ்பத்திரி சொல்லுங்க பரமசிவம். பணத்துடன் வருகிறேன்," என்று கேட்க, ஆதிரா மருத்துவமனை என்று பதில் வர, போனை கட் செய்தார். மதியம், லீவு போட்டு விட்டு, மருத்துவ மனை சென்று, கூடவே இருந்து, தோழரின் கஷ்டத்தில் கை கொடுத்தார்.

சிறுகதை | couple with happy face
சிறுகதை | couple with happy faceAI Image

மாலை, மனைவியை எப்படி சமாளிப்பது எனப் பலவாறு யோசித்து, குழம்பியவாறு வீட்டினுள் நுழைந்தார். ஹாலில், வானொலியில் பண்பலையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மதியம் சாப்பிடாதது பசிக்க ஆரம்பித்திருந்தது. ஆயாசமாய் ஷோபாவில் விழுந்தார், ஹாஜி அப்துல் வகாப். சூடாக, ஒரு கப் டீ போட்டுத் தரும்படி கேட்க நினைத்து எழுந்தவரிடம், "இந்தாங்க, இன்னிக்கு மதியம் தபாலில் வந்தது," என்று சொல்லி கவரை நீட்டினாள் மனைவி ஆபிதா. சோர்வுடன் பிரித்து அதிலிருந்த பேப்பரை வாசித்தவர், கண்களில் மகிழ்ச்சி மின்ன, "அல்லா அருளால் இந்த முறை உன்னுடைய ஹஜ் பயணம் நிறைவேறும்," என்றார்.

"எப்படிங்க... பணம் கிடைத்து விட்டதா?" கண்களில் ஆர்வம் மின்ன வினவினாள்.

மனைவிக்கு , அவர் சொன்ன விஷயம் இது தான். போன மாசம் பணி முடிந்து இல்லம் திரும்பும் போது, மழை பெய்ய, மரநிழலில் ஒதுங்கினார். இள வயது தம்பதியர் ஆவி பறக்கும் டீயை ருசித்துக் கொண்டிருந்தனர். மழை நின்று கிளம்பும் போது, எதிர் சுவரில் பார்த்த போஸ்டர் கவனத்தை ஈர்த்தது. நகரின் பிரபல கார் கம்பெனி ஒரு போட்டியை அறிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: லாட்டரி அடிச்சுடுச்சு… ஆனா…?
சிறுகதை | couple with happy face

'சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, எங்கள் நிறுவனத்தின் வித்தியாசமான போட்டி இது தான். வருங்கால சந்ததியினருக்கு மெசேஜ் சொல்லும் வண்ணம் ஸ்லோகனை கீழேயுள்ள வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்க. தேர்வாகும் மெசேஜை அனுப்பியவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசளிக்கப்படும்.'

உடனே, ஸ்பார்க் வெட்ட, "மரம் வளர்ப்போம் . மழையில் நனையாமல் டீ குடிப்போம்." டைப் பண்ணி அனுப்பி விட்டு மறந்தே விட்டார். அது தான் பரிசுக்குரியதாக தேர்வாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி மாலை, நடக்க இருக்கும் விழாவில் பரிசு தொகையை நேரில் வந்து பெற்றுக்கொள்ளும்படி டைப் பண்ணியிருந்தது. லெட்டரை மனைவியிடம் நீட்டும் சமயம், வானொலியில், "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" பாடல் மிதந்து வர, 'நல்லா நடக்கும்' என ஆபிதா கூற, மகிழ்ச்சி இரட்டிப்பானது அங்கு.

logo
Kalki Online
kalkionline.com