

வீட்டுக்கு வந்ததும் மணியன் ஸாருக்கு ஒரே அதிர்ச்சி.
வாசலில் குழந்தைகள் பிஸியாய் விளையாடிக்கொண்டிருந்தன. மகள் நீலா மட்டும் விளையாடாமல் ஓரத்தில் சுவரில் சாய்ந்து நின்று பார்த்துக்கொண்டு நின்றாள்.
“அதிசயமா இருக்கு. நீ மும்மரமாய் விளையாடுவியே...? இப்ப ஏன் சும்மா நிக்கறே?” கவலையாய் கேட்டார்
“என்னைச் சேர்த்துக்கமாட்டாங்களாம்...” குரலில் சோகம் வழிந்தது
“ஏன்?”
“நான் டியூஷனுக்குப் போகலையாம்...”
“போகலைனா என்ன? சம்மந்தமில்லாத பேசறே. உண்மையைச்சொல்” மிரட்டினார்.
“இதுதான் உண்மை”
“யாரையாவது அடிச்சியா?”
“இல்லை.”
“பின்னே? யார் சேர்த்துக்க மாட்டேன்னா?” கோபமாய் கேட்டார்.
ரெண்டு குழந்தைகளைக் கை நீட்டினாள் நிலா.
இரண்டு குழந்தைகளும் விளையாடுவதை நிறுத்தி மணியன் ஸாரை சீரியஸ்ஸா பார்த்தனர்.
“குழந்தைகளா இங்கே வாங்க...” அன்பாய் கூப்பிட்டார்
குழந்தைகள் பயந்தபடி வந்தனர்.
“உங்க பேர் என்ன?”
“மாலா, சரோஜா” என்றனர்.
“நீங்க ஏன் நீலாவைச் சேர்த்துக்க மாட்டேங்கறீங்க?” செல்லமாய்க் கேட்டார்.
“நீலா டியூஷனுக்குப் போகலை. அதனால்தான் சேர்த்துக்கலை.”
“டியூஷனுக்குப் போகலைனா என்ன?”
“எங்க வீட்டிலே. நீலா நல்லவ இல்லை. கெட்டவள்னு சொன்னாங்க...”
“யார் சொன்னது?”
“எங்க வீட்டிலே. அவ டீயூஷனுக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. நீலா கெட்டவளாம்.”
“அப்படியெல்லாமில்லை. அவளும் நல்லவதான் சேர்த்துக்க...” பொறுமையாய் சொன்னார்.
“மாட்டோம். விளையாட்டைக் கலைச்சுடுவோம்” என்று எல்லா குழந்தைகளும் ஓட, எரிச்சலாய் வந்தது மணியன் ஸாருக்கு.
நீலாவைப் பார்த்தார். லேசாக அழுதாள்.a girl child with sad
“அழாதே. நான் இருக்கேன்.” என்று சொல்லி தேற்றினார். நீலா ஓரளவுக்குச் சமாதானமானாள். வேகமாய் கோபத்துடன் வீட்டுக்குச் சென்றார்.
“அமுதா அமுதா...” என்று கத்தியபடி உள்ளே சென்று நடுஹாலில் நின்றார்.
“ஏங்க கத்தறீங்க?” என்று சமையலறையிலிருந்து வந்தவள் நீலாவைப் பார்த்ததும் மனதில் பயம், “வாங்க ஏன் சத்தம் போடறீங்க?” அமுதாவுக்கு ஓரளவு என்ன காரணம்னு புரிந்தது.
“நீலா எத்தனை நாளாய் டியூஷன் போகலை?” குரலில் கோபம் கொப்பளமாய் தெளித்தது.
“ஏன்? நாலு நாளாய் போகலை” பயம் குரலை ஆட்டியது.
“எதனாலே?”
“உடம்பு சரியில்லை...”
“பொய்” பேசி முடிக்குமுன் உறுமல்.
“ஆமாங்க.”
“புளுகூனி. அவளை டியூஷனுக்கு வரவேண்டாம்னு சொல்லிவிட்டார்.”
“அப்படியா?”
“தெரியாத மாதிரி கேட்கறே. எட்டாம் க்ளாஸ் படிக்கற உன் பெண் டியூஷன் சக மாணவனோட ஓட்டல், சினிமானு போயிருக்கா. சினிமா பாத்துட்டு வழி தெரியாமல் நடுரோடில் நின்றிருக்கா போலீஸ் வந்து ரெண்டு பேரையும் பத்திரமா வீட்டிலே கொண்டு விட்டிருக்காங்க. நீ என்னிடம்சொல்லலை. மறைச்சுட்டே.”
“இல்லைங்கலை... நீங்க கோபப்பட்டு அடிப்பீங்க.”
“தெரியுதுல்லே. இதுக்குத்தான் குழந்தையை முன்னாலே வைச்சுக்கிட்டு கண்டபடி பேசக்கூடாது, டிவியில் கண்ட சீரியலை பாக்கக்கூடாதுங்கறது. சின்ன குழந்தைகள் நீலாவை கெட்ட பெண்னென்று கூட விளையாட சேத்துக்கலை. நீலா என்னமோ ஏதோனு பயந்துபோய் கிடக்கா. புரியதா? டியூஷனுக்கு போகலைனுகூட என்னிடம் நீ சொல்லலை. என்னமா கெடுக்கறே பெண்ணை” படபடவென பேசினார்.
தலை குனிந்து நின்றாள் அமுதா.
“வா டியூஷன் டீச்சரிடம் போய் விசாரிப்போம்.”
“நான் வரலை. எனக்கு அவமானமாயிருக்கு..” அமுதா வர மறுத்தாள்.
பைக்கில் வேகமாய் டியூஷன் டீச்சர் கவிதாவின் வீட்டுக்குச் சென்றார்.
கவிதா “யார் நீங்க?” என்று கேட்க, “நான் நீலாவின் அப்பா” என்றார்.
“ஓ!! உங்க பெண் செஞ்ச வேலையைப் பாத்தீங்களா?” கேள்வியில் தீப்பொறி.
“மேடம் அதுக்கு தப்பு எது.... ரைட் எதுனு தெரியாத வயது. நாமதான் சொல்லித்தரணும். டீச்சர்னா கத்துக்கொடுக்கறவர்னு அர்த்தம். பாடம் மட்டுமல்ல... பழக்கமும்கூட...
நீலாவை நீங்க டியூஷனுக்கு வராதேனு எல்லார் முன்னாடியும் சொல்லி அவமானப்படுத்திட்டீங்க.
அது பெரிய குற்றம் செய்ததுபோல் ரெண்டு நாளா சாப்பிடலை. மத்த குழந்தைகளும் இவளை கெட்டவள்னு பேசவோ, விளையாடவோ மாட்டேங்குது. தனியாயிருந்து குற்ற உணர்வில் ஏதாவது செஞ்சுக்கிட்டா நீங்கதான் பொறுப்பு.”
“இல்லைங்க மத்த குழந்தைகளும் கெட்டுப்போயிடக்கூடாது. அதனால்தான்...”
“நீங்க பெரிய தப்புனு சொல்லலைனா மத்தக் குழந்தைகளுக்குத் தப்பா தெரியாது. என்னங்க நீங்க எந்தச் சக நண்பர்களோட சினிமா போனதில்லையா? தப்பு தவறு இதையெல்லாம் குழந்தைகளுக்குப் பக்குவமா எடுத்து சொல்லணும். நானே உங்களை ஒரு இளைஞனோட போனவாரம் தியேட்டரில் பார்த்திருக்கேன். உங்களை வேலையை விட்டு நிப்பாட்டிட்டாங்களா?”
“ஐயோ! அது என் கஸின்” கவிதா பதற...
“யாரும் தப்பா சொல்லலைங்க. இத்தனைக்கும் நீங்க கல்யாணமானவங்க. குழந்தைங்க போனா தப்பா?”
பொறுமையாய் கேட்டார்.
“நான் நீலா செஞ்சது சரினு சொல்லலை. தவறுதான். அதைப் பக்குவமாய் எடுத்துச் சொல்லித் திருத்தணும். அதைவிட்டு நீங்க தண்டிச்சு இன்னும் ஒரு தப்பு பண்ணிட்டீங்களே...”
“ஸாரி... நான் ரெண்டு குழந்தைகளையும் தனியாக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கணும். அதற்குப்பதிலா தண்டிச்சிட்டேன். தயவுசெய்து நீலாவை டியூஷனுக்கு இன்னைக்கே வரச்சொல்லுங்க” என்று கைகூப்பினாள் கவிதா.
“ரொம்ப தேங்க்ஸ் டீச்சர்...” என்று சிரித்த முகத்துடன் புறப்பட்டார் மணியன் ஸார்.