

மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு வாயில் புதுமுகம் பொலிவைப் பெற, கான்கிரீட் வேலைகள் இரவு பகலாய்.
‘பாண்டியன்’ அதிவேக இரயில்வண்டி, பத்து நிமிடம் பாக்கியிருந்தது.
முதுகில் தொங்கிய பேக்-பாக், தோளில் மூணு வயது குழந்தை மீனா, கூடவே மனைவி கீதா இடுப்பில் ஆறு மாதக்குழந்தை சகிதம் ஓடி வந்த சங்கர், S3 பெட்டியை அடையாளம் கண்டு ஏறவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.
“உனக்கு சொன்னா புரியவே மாட்டேங்குது? எதுக்கு கடைசி நிமிஷத்தில ஓடி வரணும்?”
“என்ன செய்யறதுங்க? வருஷத்துக்கு ஒரு தடவை தானே எங்க வீட்டுக்கு வரேன். கிளம்பும்போது மனசு பாரமா..”
“சரி, சரி லக்கேஜை சரியா வை...” என்றவன் தடுமாறுவதைப் பார்த்த எதிர் இருக்கை ரமேஷ்,
“அதான் வண்டியை பிடிச்சுட்டீங்கல்ல. அப்புறம் என்ன? குழந்தையைக் கொடுங்க.” என மீனாவை இறக்கி விட்டான்.
“ரொம்ப நன்றிங்க.”
கீதா ஜன்னல் ஓரமாய்க் காற்று வாங்கி சற்று ஆசுவாசப்பட,
ரமேஷுடன் நிமிஷத்தில் ஒட்டிக்கொண்டாள் மீனா.
“நீ எந்த ஊரு? சென்னையா, மதுரையா?” ரமேஷ்.
“எங்க வீடு விழுப்புரம்..”
“வா மீனா. மாமாவைத் தொந்தரவு பண்ணாதே..” சங்கர்.
“என்னங்க , புடவையில தூளியைக் கட்டுங்க. பாப்பாவுக்குத் தூக்கம் வருதுபோல..’ மனைவி கீதா விரட்ட,
மீண்டும் மீனாவை ரமேஷ் பொறுப்பில் விட்ட சங்கர், நடு பெர்த்தைப் மாட்டி, தூளியைத் தயார் செய்ததும், கீதா கீழே படுக்க, குழந்தை மீனாவை நடு பெர்த்தில் ஏற்றி, தூங்க ஆரம்பித்தான் சங்கர்.
“அ.. அம்மாக்கிட்ட போகணும்..” மீனா அழவே,
தூக்கத்தில் அவளைக் கீழே இறக்கிவிட்டு, அசந்தான் சங்கர்.
ரயில் ‘மணப்பாறை’யில் நின்று, மீண்டும் குலுங்கி நகர, திடுமென விழித்த கீதா, பதறி எழுந்தாள்.
“என்னங்க குழந்தை மீனா எங்கே?” எனச் சங்கரை உசுப்ப,
“ஹ.. ஹ..,” என உளறி, சில வினாடிகளை விழுங்கவே,
“ஐயோ, வண்டியை நிறுத்துங்க. மீனாவைக் காணோம்..” கீதாவின் அலறலில், அந்தப் பெட்டியே விளக்குகளால் விழித்தது.
“அபாயச்சங்கிலியை இழுங்க..” யாரோ அலற, வண்டி ‘சட, சட’வென சில நிமிடத்தூரப் பயணத்திற்குப் பின் நின்றது.
சங்கருக்கு ‘சட்’டென ரமேஷ் நினைவுக்கு வர, திருச்சிக்குப் போகாமல், குழந்தை மீனாவுடன், மணப்பாறையிலே இறங்கித் தப்பித்தது புரிந்தது.
உடனே, இரயில்வே உயர்தரப்புக்கு தகவல் போக, அவசரமாய் தேடல் தொடங்கியது.
அதே சமயம், ரமேஷ் அவசரமாய், ‘ஆட்டோ’, ‘அரசுப்பேருந்து’ என மாறி மாறி பயணப்பட்டான் குழந்கை மீனாவுடன்.
‘விஜய்’ பேக்கரி. ‘வடக்கன்ஸ்’ பட்டம் பெற்றவர்கள், பல நிறமான மசாலாக்களில் பூரியைக் கொடுக்க, ‘நம்மவர்கள்’ வாசனைகளுடன் வரிசையாய்.
மகள் ராணி கேட்ட பானிபூரியை பாசமாய் நீட்டினான் பரத். மனைவி பத்மா பிரசவம் முடிந்த ‘பத்தே’ நாளில் மேலே பறந்து விட்டாள்.
ஆசைஆசையாய் ராணி சாப்பிடுவதை பார்த்து ஆனந்தப்பட்ட பரத், அடுத்த நிமிடங்களில் அவளுக்கு ஆபத்து வருவதை அறிந்திருக்கவில்லை.
“அண்ணே என்னையப் பாருங்க. நம்ப ராணி பிழைச்சிட்டா...” தம்பி ரமேஷ் தலையிலடித்துக் கொண்டு கதறினான்.
மகள் ராணி, கடை வாசலில் கார் விபத்தில் சிக்கி கோமாவுக்குள் குடி போக, அண்ணன் பரத் அதிர்ச்சியில் அமைதியாகி, மனம் பேதலித்துப் போனான்.
ஒரே அண்ணன் பரத், பாசமாய்த் தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கியவனின் நிலை கண்டு, கதிகலங்கிப் போனான் ரமேஷ்.
ராணியின் கழுத்து பகுதியில் இரண்டு அங்குல அறுவை சிகிச்சைத் தழும்பு. ஒரு மாதம் போராடியும், ராணி நினைவு திரும்பாமலே தன் அம்மாவிடம் போக, அண்ணன் பரத்தும் அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை.
மூன்று வருடங்களாய், இரவுபகலாய் அதே நிலை. ரமேஷின் மனதுக்குள் பலவித ஆலோசனைகள். அண்ணனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, கிடைத்த குழந்தைதான் மீனா.
‘திருச்சி’ காவல் ஆணையர் அலுவலகம்.
செய்தியாளர்கள் சந்திப்பு அரங்கு. பலவித மீடியாக்களின் செய்தியாளர்கள் தங்கள் ஒலிவாங்கிகளுடன். அதிரடிப்படையுடன் ஆறடியில் ஆணையர் அஜித்குமார் புன்னகையுடன் நுழைய,
“அமைதி. மைக்கை கீழே பிடிங்கப்பா...” சில நிமிடங்களுக்குப் பின், அரங்கு அமைதியானது.
“வணக்கம். நேற்றிரவு பாண்டியன் ரயிலில் காணாமல் போன குழந்தை மீனா குறித்து, பலரும் கற்பனையா பதிவு போட்டீங்க. குழந்தை மீனா, பெற்றோர் கூட, இப்ப பத்திரமாயிருக்காங்க. இதோ..” எனக் கைக்காட்ட,
மீனா வாயில் சாக்லேட்டுடன், சங்கர் தோளில், அருகே கீதாவும் கலங்கிய கண்கள், கூப்பிய கரங்களுடன்.
“சார் எப்படி பிடிச்சீங்க? குற்றவாளி எங்கே?” பத்திரிகைகள்.
“இது ஒரு கடத்தல் முயற்சி என்பதைவிட, மறுபிறப்பு மர்மம் தொடர்பான சம்பவம். இதில் தொடர்புடைய ரமேஷ் ஓர் அதிகாரி. அவரைக் குற்றவாளியா பார்க்கிறதைத் தவிர்த்து, கேள்வி கேட்கலாம்...” என இடப்பக்கம் கையைக் காட்ட,
குனிந்த தலையுடன் வந்து நின்று கும்பிட்ட ரமேஷின் கண்களில் கண்ணீர். முகத்தில் பயம்.
“என்னை மன்னிச்சிடுங்க . நான் திட்டம் போட்டு இதைச் செய்யலை. எங்கண்ணன் பரத் மனநலம் பாதிக்கப்பட்டு மூணு வருஷமாயிருக்காரு..” முகத்தில் அறைந்து கொண்டு அழுதான் ரமேஷ்.
“எனக்கு எல்லாமே அண்ணன்தான்...” என பரத் குடும்பத்துயரத்தை விளக்கியவன்,
“எனக்கு பூர்வ ஜென்ம நிகழ்வுகள்ல, நம்பிக்கை அதிகம். நேத்திக்கு ரயில்ல குழந்தை மீனாவைப் பார்த்ததும், அண்ணன் பொண்ணு ராணிதான் நினைவில் வந்தா. மீனாவோட கழுத்துப்பகுதியிலயிருந்த தழும்பு, அப்படியே ராணிக்கும் இருந்தது. அவ பேசின விதம், எனக்கு ராணியைத்தான் நினைவுபடுத்திச்சு. சாப்பிடும் போது, மீனாவுக்கு ரசமே பிடிக்காதுன்னு அவங்கப்பா அவளைக் கண்டிச்சதும், எனக்கு ஷாக்காகிடுச்சு. ராணிக்கும் இதே குணம் உண்டு. மீனாவும், ராணி மாதிரியே என்கிட்ட ஒட்டிக்கிட்டா. எனக்கு எப்படியாவது எங்கண்ணனை குணமாக்கனும்ன்னு வெறி. அதான்..” முகம் பொத்தியழுதான் ரமேஷ்.
“டக்” கென ரமேஷை உள்ளே அழைத்து போகச்சொன்ன ஆணையர் அஜித்,
“நல்லா புரிஞ்சுக்கங்க. இனிமே, சட்டம் ஒழுங்கு மோசம். பெண் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லைன்னு தவறா எழுதாதீங்க. சமூகத்தில சில பேருக்கு இருக்கிற சில நம்பிக்கைகள், பல பிரச்னைகளுக்குக் காரணம். இதற்கு அறிவியல் ரீதியா ஆதாரங்களும் குறைவு. குழந்தை மீனாவோட ரமேஷ், மணப்பாறை ஸ்டேஷன்ல இறங்கி வந்ததை சி.சி.டிவி கேமரா மூலமாக கண்டுபிடிச்சு, கைது பண்ணி வழக்கு பதிவு பண்ணியிருக்கோம்.
அதே சமயம், மீனாவோட அம்மாவும், அப்பாவும், ரமேஷ் நிலைமையைக் கேள்விப்பட்டதும், மன்னித்துவிட சொன்னங்க. இனிதான் முடிவு பண்ணனும்.” எனச் சொன்ன அஜித் குமார், அம்மா கீதாவை பேச அழைக்க,
“என் குழந்தையை மீட்க பாடுபட்ட காவல்துறைக்கும், அரசுக்கும், மீடியாக்களுக்கும் ரொம்ப நன்றி..”அழுதவர்,
“என் நிலைமை எந்தத் தாய்க்கும் ஏற்படக்கூடாது. ரமேஷ் அண்ணனுக்கு உதவி செய்ய நாங்கள் தயார். மத்தவங்க பிரச்னையைப் புரிஞ்சுகிட்டு, பரஸ்பரம் உதவி செய்றதுதான் மனிதநேயம்...” என கீதா கும்பிட, தன் அதிரடிப்படையை அறிமுகம் செய்து, கூடவே சன்மானமும் ஆணையர் அறிவிக்க,
"க்ளிக், க்ளிக்" என கேமராக்கள் கண் சிமிட்டியது கரகோஷங்களுக்கிடையே.