

இன்று எப்படியாவது அப்பாவின் முகவரியை சிஸ்டர் நவமணியிடம் இருந்து வாங்கி விடவேண்டும். தூங்கி எழுந்தாற்போல் இருந்தது எனக்கு. இங்கு வந்து எத்தனை நாளாகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். வினோதமான நடத்தை உள்ள மற்றவர்களிடமிருந்து நான் வேறுபட்டவன் அன்று என்னுடைய செய்கைகளினால் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருந்தாலும், ஏன் இவர்கள் என் முகவரியை தர மறுக்கிறார்கள். தெளிவாக சிந்தனைகளுடன் அந்த மரநிழலில் அமர்ந்தான் அரசு.
அந்த மனநல காப்பகத்தில் அனுபவமிகுந்த மணி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கபடும் நவமணி, சிஸ்டர் தோட்டத்தின் பக்கம் வரும்போது அவரைப் பாய்ந்து பிடித்து நிறுத்தினான் அரசு.
"சிஸ்டர் இன்னிக்கு நீங்க என்னுடைய முகவரியை கண்டிப்பா கொடுக்கணும். இல்லேன்னா நான் உங்களை இங்கிருந்து போக விடமாட்டேன்." சிஸ்டரை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் அரசு.
பாய்ச்சல்கள் பலவற்றை பார்த்த நவமணி இதற்கு அசராமல் "நான்தான் சொன்னேன்ல ரிஜிஸ்டரை பார்த்து சொல்றேன்னு, என்ன அவசரம்?"
"இன்னிக்கே, இப்பவே நீங்க ரிஜிஸ்டரை பார்த்துச் சொல்லணும். சிஸ்டர் நான் சரியாகிட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என் சொந்தகாரங்களை பார்க்கணும்னு நான் நினைக்கிறது எவ்வளவு நியாயம்னும் உங்களுக்கு தெரியும். தயவு செய்து மத்தவங்க மாதிரி என்னையும் நடத்தாதீங்க சிஸ்டர்" விம்மி வரும் அழுகையை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான்.
கடந்த ஒரு வாரமாகவே எப்படியேல்லாமோ பேசி அவனை திசை திருப்பிய நவமணி கலங்கி போனாள். பின் தெளிந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் "கம் வித் மீ" என்று அவன் கையை பிடித்து அழைத்து சென்றாள்.
வரிசைக் கிரமமாய் அடுக்கி வைக்கப்படாத பைல்கள் மற்றும் ரிஜிஸ்டர்களுக்கிடையே குறிப்பிட்ட ரிஜிஸ்டரை தேடி எடுத்தாள் நவமணி.
அவள் ரெஜிஸ்டரை தேடும் முறையிலிருந்து அரசுக்கு ஒன்று புரிந்தது. தான் நிச்சயமாக சமீபத்தில் இங்கு சேர்க்கப்படவில்லை; குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது ஆகிஇருக்க வேண்டும் என்று யூகித்தான். அதன் பின் வரிசையாய் கேள்விகள் உதித்தன அவன் மண்டைக்குள்.
தன்னை யார் இங்கு கொண்டு வந்து சேர்த்தது? உறவினர் யாரும் வந்து பார்பதில்லையா? தன் தாய் என்ன ஆனாள். ச்சே..... அம்மாதான் அப்பவே இறந்துட்டாங்களே... அப்பா.... அவர் ஏன் வரவில்லை? அவருக்கு என்ன ஆயிற்று….?
"இந்தா அட்ரஸ்", என்று அவன் சிந்தனையை கலைத்தாள் நவமணி. அவள் கையில் அட்ரஸ் எழுதிய ஒரு சீட்டை திணித்தாள். அதில் 87/2 7 வது கிராஸ் ரோடு, செக்டர் 4, லோட்டஸ் அவன்யு, சென்னை 600 109 என்று இருப்பதை பார்த்து அவன் கண்கள் ஆனந்தத்தால் விரிவதை வாஞ்சையுடன் பார்த்தாள்.
அவள் எழுதிய காலெழுத்து பிழையுடன் கூடிய முகவரியை கண்கொண்டு உள்ளுக்குள் சிரித்தபடியே,
"சிஸ்டர் அப்படியே என்னுடைய டேட் ஆப் அட்மிஷனயைம் பார்த்து சொல்லிடுங்களேன்" என்றான்.
"இப்போ எதுக்கு அதெல்லாம் உனக்கு"
"நான் எவ்வளவு நாளா உங்களையெல்லாம் டார்ச்சர் பண்ணியிருக்கிறேன்னு தெரிஞ்சிக்க தான்"
"ஒன்னும் வேணாம் போ" என்று போக எத்தனித்தாள்.
"ப்ளீஸ் சிஸ்டர் ப்ளீஸ்..."
அவனை பரிதாபமாக பார்த்த நவமணி ரிஜிஸ்டரை மீண்டும் துழாவி 28.06.1982 மதியம் 2.30 மணி என்றவள் அவன் முகத்தை பார்த்தாள். அதில் அடித்து பரவிய அதிர்ச்சி கோடுகளின் பின் விளைவுகளை நினைத்து கவலைப்பட்டாள். அதிகம் பிரதிபலிக்காமல் வெளியே சென்று விட்டாள்.
இரண்டு நாள் கழித்து டாக்டர் நரேந்திரன் அரசுக்கு அவனுடைய முகவரியை கொடுத்ததற்கு நவமணியை கடிந்து கொண்டார். பின் அவனுக்கு ஒரு போஸ்ட் கார்ட் கொடுக்க சொல்லிவிட்டு சென்றார்.
கார்டு வாங்கும் போது ஏற்பட்ட சந்தோஷத்தில் அவளுக்கு முத்தம் கொடுத்தான். அசந்தர்ப்பமாக்கப்பட்டது. அந்த 48 வயது நவமணிக்கு.
பைல் ஒன்றில் மூழ்கியிருந்த நவமணி தன்னை யாரோ உற்று பார்ப்பதை அனிச்சையாய் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். எதிரே அரசு.
"சிஸ்டர் எங்கப்பா பதில் போட்டிருக்கார் "பாருங்க" என்று ஒரு கவரை பிரித்தான்.
"என்னை ரொம்ப ரொம்ப விசாரிச்சிருக்கார்; தம்பி ரொம்ப பெரியவனாயிட்டானாம். அம்மா....ம்.... புது அம்மா வந்திருக்கங்களாம். என்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்காங்களாம். தம்பிக்கு இப்போ எக்ஸாம் நடக்குதாம். அது முடிஞ்ச உடனே என்னை வந்து அழைச்சுக்கிட்டு போறேன்னு எழுதி இருக்காங்க சிஸ்டர்" என்று முடித்தவன் "ஓ" வென்று பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான்.
நிச்சயமாக அது ஒரு மனநலம் பாதித்தவன் அழுகை இல்லை. வளர்ந்த அனாதையாகிவிட்ட ஒரு கைவிடபட்டவனின் கழிவிரக்க கொப்பளிக்கும் அழுகை. அடக்கி வைத்திருந்த சோக விசும்பல்கள் கட்டுப்பாட்டை மீறி வெடித்த அழுகை.
"சிஸ்டர் இனிமேலாவது காலெழுத்து போட வேண்டிய இடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா எழுத பாருங்க ப்ளீஸ், தேற்ற முடியாதவனாக தள்ளாடியபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான்.
விக்கித்து நின்ற நவமணியின் கண்கள் கலங்கின. உருண்டோடிய கண்ணீர் மேஜை மேல் இருந்த அந்த காப்பகத்திற்கு redirect செய்யப்பட்ட ‘Not Available’ முத்திரையுடன் கூடிய 1984ம் வருஷத்து கவர் ஒன்றின் மேல்பட்டுத் தெறித்தது.