

அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு அறை அது. பகலுணவுக்குப் பின் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஆசிரியர். அனைத்து மாணவர் மாணவிகளும் சிரமப்பட்டு கண்களை திறந்து வைத்துக்கொண்டு பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர் அமுதாவைத் தவிர. அமுதாவோ கண்களை மூடி, நித்திரையில் ஆழ்ந்துவிட்டதுபோல் அமர்ந்திருந்தாள். கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர் அமுதாவின் பெஞ்சுக்கருகில் வந்து பிரம்பால் பெஞ்சின்மீது ஒரு தட்டு தட்டினார். கண் விழித்த அமுதா ஆசிரியர் திட்டியதைக் கேட்டுவிட்டு, பாடத்தைக் கவனிக்கலானாள்.
அந்த நாள் முடிந்து வெளியில் வரும்போது அமுதாவிடம், அவள் தோழி ரோஜா, “ஏண்டி சரித்திரப் பாடத்தை கவனிக்காம வாத்தியாரிடம் வசவு வாங்கின” எனக் கேட்டாள்.
“போடி, பழங்காலத்தில் வயதான மூத்த குடிமக்களை ஆழமான தாழி ஒன்றிற்குள் அமரவைத்து, மூடி போட்டு மூடி உயிருடன் புதைத்துவிடுவார்களாம். முதியவர்கள் பயந்துவிடாமல் இருக்க சிம்னி விளக்கு ஒன்றை ஏற்றி உள்ளே வைப்பார்களாம். இதை அந்த வாத்தியார் விலாவாரியா விவரிக்க அதை நாம் இமை மூடாமல் கவனிக்கணுமா? என்ன கொடுமை…."
கொதித்தெழுந்தாள் அமுதா.
“என்ன நீ… இப்படிப் பேசுற… இங்க… இப்ப… நம்ம ஊர்ல என்னவெல்லாம் நடக்குது… தெரியுமா உனக்கு?" என்றாள் ரோஜா.
“என்ன நடக்குது?”
“ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத...”
“என்னது… நான் நடிக்கிறேனா?"
“ஆமா. பின்ன என்ன. உங்க வீட்ல தொண்ணூறு வயசுல ஒரு பாட்டி படுத்த படுக்கையா இருக்காங்கல்ல. அவங்கள நாளைக்கு உங்க வீட்டார் கொல்லப் போறாங்க” என்றாள் ரோஜா.
அதிர்ச்சியடைந்தாள் அமுதா.
அந்த ஊரில் வயதான பின்னும் உயிர் போகாமல், இன்றோ நாளையோ என்ற நிலையில் இழுத்துக்கொண்டிருக்கும் பெரிசுகளை ஈவிரக்கமின்றி மேலே அனுப்பி வைக்க, வீட்டிலுள்ளோர் நூதனமான வழிமுறை ஒன்றைக் கையாள்வது உண்டு.
அதற்கு முன்பு, படுக்கையிலிருப்பவரின் ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்குப் போகும்படியான புனிதமான நல்ல நாள் ஒன்றை தேர்ந்தெடுப்பர். அந்த நாளின் இரவில் சடங்குகளை நிறைவேற்றி காரியத்தைக் கச்சிதமாக செய்து முடிப்பது வழக்கமாக உள்ளது.
அமுதாவிடம், வயதானவர்களை வழியனுப்ப, வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பின்பற்றும் ஒன்றிரண்டு வழி முறைகளையும் விவரித்துக் கூறினாள் ரோஜா.
அடுத்த நாள் விடிந்தது. அன்று முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகைத் திருநாள். காலையிலிருந்தே வீட்டில் உள்ளவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள் அமுதா.
முருகனுக்கு வடை பாயசத்துடன் வகை வகையான காய்கறிகளுடன் படையலிட்டு பூஜை நடத்தப்பட்டது. பொழுது சாயும் நேரம் அனைவரது இல்லங்களிலும் அகல் விளக்கின் ஒளி ஜொலி ஜொலித்தது. கோவிலில் சொக்கப் பனை கொழுத்துவதைக் காண பக்தர்கள் கூட்டம் குழுமியது.
அமுதா வீட்டில் பெண்கள் சிலர் கூடி, மர்மமான முறையில் சில செயல்களை செய்துகொண்டிருந்தனர். பிறகு, வீட்டின் உள்புறத்தில் உள்ள ஓர் அறைக்கு சென்று "சாமி…நாங்கள் செய்யப்போகும் இந்த பாவச் செயலை தயவுசெய்து மன்னித்து விடு. இதை நாங்கள் அந்த மூதாட்டிக்குச் செய்யும் நன்மையாகவே நினைக்கிறோம்” என்று உரத்த குரலில் பிரார்த்தித்துக்கொண்டனர்.
பின் வெளித் திண்ணையில் போடப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகில் சென்றனர். அங்கே அவர்கள் செய்திருந்த முன்னேற்பாட்டின்படி சில கிண்ணங்களில் நல்லெண்ணெய், கடலை மாவு, பாசிப் பருப்பை அரைத்து சீயக்காய்ப் பொடியுடன் கலந்து செய்த பேஸ்ட் மற்றும் இரண்டு வாளிகளில் நிரப்பி வைத்த ஐஸ் கட்டி போட்டு குளிர்வித்த தண்ணீர் ஆகிய அனைத்தும் வைத்தபடி அங்கங்கே இருந்தன. வேலையை ஆரம்பித்து ஜோலியை முடித்து விடலாம் என்று கட்டில் மீது பார்த்தபோது அங்கே படுத்திருந்த பாட்டியைக் காணவில்லை.
அனைவரது முகத்திலும் ஒருவித பீதி பரவ, கட்டிலைச் சுற்றி பார்வையை ஓட்டினர். அப்போது வீட்டின் உட்புறமுள்ள வேறொரு அறையிலிருந்து அமுதா வெளிப்பட்டாள்.
அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் ஆவேசமாக வெளிப்பட்டன.
“என்ன பாக்குறீங்க…பாட்டியைக் காணோமென்றா? எனக்கு மட்டும் உங்களின் உயிர் பறிக்கும் திட்டம் தெரியாமல் போயிருந்தால், இந்நேரம் பாட்டியின் உச்சந்தலையில் பருப்புப் பொடி, சீயக்காய் பேஸ்ட், அனைத்தையும் குழைத்து தேய்த்து, பின் அவள் மூச்சு திணறத் திணற ஐஸ் வாட்டரை ஊற்றி பரலோகம் அனுப்பியிருப்பீங்க. இப்பவும் ஒண்ணும் ஆகிடல. பாட்டிக்குப் பதில் அந்தச் சடங்குகளை எனக்கு செய்யுங்க. என்றைக்கோ விடவேண்டிய உயிரை இன்றைக்கு விட்டு விடுகிறேன்” என்று கூறியபடி தன் தலை முடியை விரித்துப் போட்டு கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டாள் அமுதா. கூடியிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியில் பேச்சின்றி நிற்க, அமுதாவின் தாய், மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள்.
பின், அனைவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் அமுதா. அங்கே தரையில் ஒரு மெத்தையில் பாட்டி சுத்தமான புடவையணிந்து படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.
“நீங்கள் செய்யவிருந்த இந்தக் கொடூர செயல் ஊரில் இனி எங்கு நடைபெற இருந்தாலும் அங்கு போலீஸ் வரும்” என்று மற்றவர்களை எச்சரித்து அனுப்பினாள் அமுதா. அவள் தெரிந்துகொண்ட மற்றொரு வழியையும் பூண்டோடு ஒழிக்க எண்ணினாள். ஆம்.. அந்த ஊரில் நர்சிங் பயிற்சி பெற்றிருந்த சில பெண்கள், பணத்திற்கு ஆசைப்பட்டு, முடங்கிக் கிடக்கும் முதியவர்கள் உடலில் ஊசி மூலம் விஷத்தை ஏற்றி வழியனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இதையும் தோழி மூலம் அறிந்திருந்த அமுதா, அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்களின் பெயரைப் பட்டியலிட்டு வைத்திருந்தாள்.
“நீங்கள் செய்துவரும் இந்தத் தவறான வழக்கத்தை இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்க. இல்லையென்றால் போலீஸ் ஸ்டேஷனில் நிற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்” என்று அவர்களை தனித் தனியாக அழைத்து எச்சரித்து வைத்தாள்.
அமுதாவின் அதிர்ச்சி வைத்தியம், எழுபதைக் கடந்து, இனம் புரியாத பயத்துடன், இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த பல பெரியவர்களுக்கும் தெரிய வந்தது.
அதன்பின், அமுதாவின் முயற்சியால் அவர்கள் அனைவரும் நூலகம் சென்று புத்தகம் படிப்பது, பார்க் போன்ற பொதுவிடங்களில் ஒன்றுகூடி பேசி சிரிப்பது, நடமாட முடியாத வயோதிகர்களின் வீடுகளுக்கு சென்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருப்பது என தங்கள் வாழ்வின் ‘Golden Phase’ எனப்படும் இரண்டாம் பகுதியை அனுபவிக்க ஆரம்பித்தனர்.