

பின்னே என்னங்க… சாதாரண செருப்பு... மனுஷன பாடாப்படுத்துதே!
ஒரு மனுசர பார்க்கும்போது முகத்திலிருந்து பார்க்க ஆரம்பிப்பதுதான் சரியாகும். காலிலிருந்து பார்க்க ஆரம்பிப்பது எப்படி சரியாகும்? இப்படி எல்லா விசயத்திலும் தலைகீழாய் மனுசருங்க மாறிப்போயிட்டாங்களே!
ஒருத்தர எடைப்போட்டுப் பார்க்க எத்தனையோ விசயங்கள் இருக்கு.
அவங்களோட தோற்றம், உடல்வாகு, உடல்மொழி, தலைமுடி வாரியிருக்குற விதம், முகலச்சனம், தனித்திறமை, உடுத்தியிருக்கும் உடை, பேசும் விதம், அவங்களது அணுகுமுறை, படிப்பு, பண்பு, நல்ல பழக்கவழக்கம் இப்படி எத்தனையோ இருக்கும்போது.... காலுல போட்டிருக்கும் செருப்பப் பார்த்துட்டு ஒரு மனுசர எடைபோட்டுப் பார்க்குறாங்களே....?
எனக்கு ஒரு ஜவுளிக் கடையில் சேல்ஸ் மேன் வேலை. மாசம் எட்டாயிரம் சம்பளம். இதுல என் வீட்டு வாடகைக்கே அஞ்சாயிரம் போயிடும். மேற்கொண்டு குடும்பச் செலவுக்கு, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஜவுளிக் கடைக்கு, போக வர பஸ் செலவுக்கு என்று அல்லல் பட்டு வந்ததில், இந்த காதறுந்த செருப்ப மாத்த கடைசிவரை வாய்க்காமலே போய்விட்டது. வாய்க்கும் வயித்துக்குமே அல்லல் படும்பாடு.
நல்லவேளை, இசைக் கச்சேரி நடத்தும் சிறு நிறுவனத்தில், விளம்பரம் சேகரித்து தரும் வேலையில் ஒரு நண்பரது சிபாரிசில், இப்போதுதான் சேர்ந்திருக்கேன்.
காதை கிழிக்கும் ஹாரன் சத்தமும், கருப்பு நிற புகை கக்கும் இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், கார், பஸ் என பரபரக்கும் சென்னை நகர அண்ணா சாலையில் ஸ்டெபிலைசர் தயாரிக்கும் ஒரு கம்பெனி அலுவலக முகவரியைத் தேடி நடந்து நடந்து காலே வலிச்சிருச்சு.
ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டேன். சின்னச் சந்து அது. ஏதோ ஒரு சாதாரண கடை மாதிரிதான் இருக்குது.
உள்ளே நுழைந்ததும் என்னால் நம்பவே முடியவில்லை! குறுகலாக நீண்டிருக்கிறது. நன்கு உள்அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. அலுவலகத்திற்குள் அவ்வளவு ஒரு அமைதி. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பேசுகிறார்களா? அல்லது வாயசைக்கிறார்களா? என்கிற சந்தேகம் எனக்கு. சாலையில் கூச்சலிடும் அதே மனிதர்கள் அலுவலகத்தில் மட்டும் இப்படி சாந்த சொரூபினிகளாக எப்படி மாறிப்போகிறார்கள்? எனக்கு என்னவோ இருவேறுபட்ட உலகத்தில் உலாவுவதாக ஓர் உணர்வு!
என்னை, அந்த நிறுவனத்தின் விளம்பர மேலாளரிடம் அறிமுகம் செய்து கொண்டதும், அந்த மேலாளர், என் காலில் மாட்டியிருந்த செருப்பைத்தான் முதலில் கவனிக்கிறார். என் வலது கால் செருப்பு காது அறுந்து “என்னையும் பார் என் லட்சனத்தையும் பார்“ என்பது போல் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் யோசிக்கத் தொடங்குகிறார்.
பின்னர், அவர் அமைதியாக என்னை உற்று நோக்கியது கண்டு, என்னையே ஒரு முறை கவனித்துக்கொள்கிறேன்.
நான் தரையின் மீதுதான் நிற்கிறேனா? அல்லது செருப்பின் மீது நிற்கிறேனா? என்று தேய்ந்துபோன என் செருப்பைக் கண்டு விளம்பர மேலாளருக்கு சந்தேகம் வந்துவிட்டது போல! என் முகம் பார்த்து பேச மறுத்து, “அடுத்த முறை பார்த்துக்கலாம்“ என்று ஏறெடுத்தும் பார்க்காமலே சொல்கிறார்!.
ஏமாற்றமே கைமேல் பலனாக எனக்குக் கிட்டியது. வெளியேறுகிறேன்.
அண்ணா சாலை வாகனப் பரபரப்புக்கு இடையே அந்த நெடியசாலையில் நடைபாதையில் பரக்கப் பரக்க நடக்கிறேன். உச்சி வெயில் உஷ்ணத்துக்கு செருப்பு தாங்கல, பாதத்தை அனல் சுடுகிறது!
என்ன செய்ய... வாழ்க்கையை நகர்த்தணுமே!
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு வரை நடக்கிறேன்.
மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனம் அது. நுழைவு வாயிலில் வரிசையாக அணிவகுத்து காத்திருக்கிறது செருப்புகள். கலர் கலரா தினுசு தினுசா விலையுயர்ந்த செருப்புகள். பூட்சுகள். 'அட! காலுல போடுற கலுதைக்கு இவ்வளவு செலவு செய்யனுமா?'ன்னு மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும், இந்த இடத்தில் என் செருப்பை கழட்டிவிட மனம் கூசுகிறது! காலில் செருப்புடனே அலுவலகத்துக்குள் போயிடலாம்னு நினைக்கிறபோதே “காலணிகளை இங்கே விடவும்“ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் கண்ணுக்குத் தெரிகிறது.
திரும்புடா... திரும்பு உள்மனம் சொல்கிறது. திரும்பிப் பார்க்காமலே நடக்கிறேன். மனதில் என்னென்னமோ நினைப்புகள். எவ்வளவு தூரம் நடந்திருக்கிறேன், எப்படிஎப்படியோ சுத்தி நடந்ததில் நான் வேலை செய்த அதே ஜவுளிக்கடை மங்கலாக கண்ணுக்குத் தெரிகிறது. கல்லாவில் ஓனர்தான் உட்கார்ந்திருக்கிறார்.
“என்ன செல்வம்... இப்போதான் உனக்கு விடிஞ்சதா? சரி... சரி... வந்ததே பாதி நாள் முடிஞ்சிருச்சு. இன்னும் ஏன் பேசிகிட்டு. பின்னாடி லாரியில சரக்கு வந்திருக்கு. எல்லாரும் இறக்கிட்டு இருக்காங்க. நீயும் கூட போயி பட்டுனு ஆகுற வேலையப் பாரு...“
வயித்துல சிறு குடலை பெருங்குடல் திங்குது. என்ன செய்ய வயித்துப் பசியை விட வாழ்க்கைப் பசி பெருசாச்சே!
ராமர் அண்ணன்தான் துணி பண்டலை லாவகமா என் முதுகில் ஏற்றுகிறார். என் முதுகில் பாரம் கனக்கவில்லை. ராமர் அண்ணனின் கைராசி அப்படி!