

அந்தச் சிறு கிராமத்தில் அவர்கள் குடும்பம் நடுத்தரமானதுதான். தெற்கு, வடக்குப் பண்ணையாளர்களும், அவர்களின் பணக்கார உறவினர்களும் இருந்தாலும், அவர்களுக்கு அடுத்தபடியாக நடுத்தரமான, அதே சமயத்தில் நடுநிலை மாறாத குடும்பம் அவர்களுடையது. பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழிலாக விளங்கிய நேரம் அது. பல குடும்பங்களில் ஒருவரைப் படிக்கவைத்தால், மற்றவரை வேளாண் பணிக்கு ஒதுக்கிவிடும் நிலைதான் அங்கு வழக்கமானது.
ஆனால் அவர்கள் குடும்பத்தில் மட்டும் ஆறு பேரில், மூத்த பெண்ணைத் தவிர்த்து, 4 ஆண்களும் ஒரு பெண்ணும் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடிக்க, கடைசிப் பையனை எம்.ஏ., வரை படிக்க வைத்து, கிராமத்தில் வரலாறு படைத்தார்கள். ஒவ்வொருவரும் பணிசெய்து தலையெடுக்கக் குடும்பப் பொருளாதாரம் மேலோங்கியது. மூத்தவர் பிசினஸ், ஒப்பந்தம் என்று தன் வசதிகளைப் பெருக்க, மற்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்து சிறக்க, குடும்ப கௌரவம் மேலும் தழைத்தது.
மூத்த அண்ணனுக்குத் திருமணம் நடைபெற்றபோது கடைக்குட்டியான ரகுவுக்குப் பதினாறு வயதுதான். நகரத்திலிருந்து வந்த மூத்த அண்ணிக்குக் கிராம வாழ்க்கை சற்றே சிரமமாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டார்.
மாமியார் அவ்வளவு மோசமில்லை என்றாலும், மாமியாரின் குணம் எப்பொழுதாவது தலைதூக்கும்போதெல்லாம் அண்ணியைப் புண்படத்தான் பேசுவார். அப்பொழுதெல்லாம் அண்ணியின் மூத்த மகனாக இருந்து ஆறுதல் அளிப்பான் ரகு. “அம்மாவின் குணம் நீங்கள் அறிந்ததுதானே! விடுங்கள் அண்ணி!” என்று அன்பாகப் பேசுவான்.
அம்மாவையும் உரிமையோடு கண்டிப்பான். “அண்ணி நகரத்துப் பெண்! நம் பழக்க வழக்கத்தை அவ்வளவாக அறியாதவர். நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போனால் என்ன அம்மா? எதற்கெடுத்தாலும் சப்தம் போடத்தான் வேண்டுமா?” என்று கடைக்குட்டி செல்லம் என்பதால் அவன் பேசுவதை அம்மா கோபக்கண்ணோடு பார்ப்பதில்லை!
“யப்பா! என்னை உட்டுடு! ஒங்க பட்டணத்து அண்ணியை இனி நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன்!” என்று அம்மா நல்ல மூடில் இருக்கையில் கூறிச் சமாளிப்பாள்! கொஞ்சங் கோபமாக இருக்கும்போது, “நீ சின்னப்புள்ள… ஒனக்குச் சிலது புரியாது விடு!” என்பாள்! அவனும் அம்மாவின் மூடு அறிந்து நாசூக்காக நடந்து கொள்வான்!
மூத்த அண்ணனின் பிசினஸ் படு வேகமாக முன்னேற, கிடைத்த லாபத்தையெல்லாம் ஒப்பந்த வேலைகளில் கொட்ட, லாபம் பல மடங்கு வர ஆரம்பித்தது. அண்ணன் பெரும் ஒப்பந்ததாரர்களுடன் நட்பையேற்படுத்திக் கொள்ள, அதுவே அண்ணிக்கு ஆனந்தமாக அமைந்தது.
அந்த வட்டாரத்திலேயே அனுபவமும், ஆற்றலும் நிறைந்த பெரிய ஒப்பந்ததாரருடன் அண்ணன் நெருங்கிப் பழக, அவரின் வாழாவெட்டித் தங்கை, அண்ணனுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள்!
அரசல்புரசலாக, அது ரகுவின் காதுகளையும் எட்ட ஆரம்பித்தது. முதலில் அவன் நம்பவில்லை.
அண்ணனையும், அண்ணியையும் உற்று நோக்கியதில் சந்தேகம் அவனுள்ளும் மெல்லப் பரவ ஆரம்பித்தது. அண்ணனின் மீது மிகுந்த மரியாதையும், அளவு கடந்த பாசமும் அவனுக்குண்டு. வயது வித்தியாசம் அதிகம் என்றாலும், அதுவே சின்ன வயதில் அண்ணனை அண்டி வாழவும் வழி செய்தது. அப்பொழுதெல்லாம் இறக்கத்தில் அண்ணனுடன்தான் தூங்குவான். ஒரு பக்கம் உயர்ந்த திண்ணையும், மறுபுறம் அண்ணனும் தனக்கு மிகுந்த பாதுகாப்பு என்பதாக, பயப்படும் அந்த வயதில் அவன் உணர்வான்.
அன்று கல்லூரிக்கு மதியம் விடுமுறை. அனைவரின் விருப்பத்திற்கு உகந்த விரிவுரையாளன் அவன்! அவன் வீட்டுக்கு, அந்த ஒப்பந்ததாரரின் வீட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். பைக்கில் சென்றுகொண்டிருந்தவனின் மனது ஏனோ அலை பாய்ந்துகொண்டிருந்தது. எதார்த்தமாக ஒப்பந்ததாரரின் இல்லவாசலை நோக்க, அண்ணனின் கார் அங்கு நின்றுகொண்டிருந்தது. அவனுக்குள்ளே ஏதோ ஒன்று உறுத்த, பைக்கை வீட்டு வாசலுக்கு விட்டான்.
எப்பொழுதும் பல பேருடன் பிசியாக இருக்கும் அந்த வீடு அமைதியாக இருந்தது. அரவமே இல்லை. வீட்டின் மெயின் டோர் அருகே சென்று காலிங் பெல்லை அழுத்தினான். ஒப்பந்ததாரரின் தங்கை வந்து கதவைத் திறக்க, அவனைக் கண்டு அதிர்ந்தாள்! உள்ளே அமர்ந்திருந்த அண்ணனைக் கண்டு அவன் பேரதிர்ச்சியுற்றான். அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கண்கள் சிவக்க, அவன் உடல் வெப்பமாவதை உணர்ந்தான்.
“உள்ள வாங்க தம்பி! வந்து ஒக்காருங்க… ஒங்க அண்ணன்கூட இப்பத்தான் வந்தாரு… என் அண்ணனைப் பார்க்க… அண்ணன் எலக்ஷன் வேலையா வெளியூர் போயிட்டாரு! அதான் சொல்லிக்கிட்டிருந்தேன்!” என்று அவள் பேசியதிலிருந்தே, அவள் சமாளிக்கிறாள் என்பதும், ஒருவரும் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்துத் திட்டமிட்டே அவர்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதும் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. எதுவுமே பேசாமல் அவன் அவசரமாகச் சென்று தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
வீட்டிற்கு வந்த ரகு, அம்மாவிடம் தனக்குத் திருமணமே வேண்டாமென்று பிடிவாதமாகச் சொல்ல, அம்மா அரண்டே போனாள்! “என்னடா சொல்றே! எப்படிடா இப்படி ஒரு குண்டைப் போட ஒனக்கு மனசு வந்தது?
போன வாரம் நாம போயிப் பார்த்திட்டு வந்த பெண் வீட்டுக்காரவங்க அடுத்த வாரம் நம்ம வீட்டுக்கு வர்றதா சொல்லி இருக்காங்களே! நீயும் சரின்னுதானேடா சொன்னே?”
“ஆமா! சொன்னேன்! அது அப்ப… இப்ப நான் சொல்றதுதான் ஃபைனல்!”
அண்ணா-அண்ணிக்குக் குழந்தை பிறக்காது என்று தெரிந்ததும், தானே குழந்தையாக இருப்பதாக ரகு சொல்லி இருவரையும் தேற்றி வைத்திருந்தான்! 'தான் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டதால்தான் அண்ணன் தடுமாறி விட்டாரோ?’ என்ற எண்ணம் அவன் மனதை வருத்த, அதுவும் அண்ணனின் செய்கையைக் கண்கூடாகப் பார்த்தபிறகு அது மேலும் இறுக்கமாகிட, தீவிர ஆலோசனைக்குப் பிறகு அவன் அந்த முடிவை எடுத்துவிட்டான்.
இந்தப் பிறவியில் திருமணம் செய்து கொள்வதில்லையென்றும், அண்ணன்-அண்ணியின் குழந்தையாகவே வாழ்ந்து முடித்து விடுவதென்றும், அதனை அம்மா மூலம் தெரிவித்தும் விட்டான்!
அந்தக் கும்ப கர்ணனோ, அண்ணியின் வயதொத்த சீதையைக் காப்பாற்ற அண்ணனிடம் வாதிட்டான். வாதில் வெல்ல முடியாவிட்டாலும் தன் வல்லுயிரைத் தியாகம் செய்தான்!
‘தான் உயிர்த்தியாகம் செய்யாவிட்டாலும், அண்ணியின் வாழ்வு அமைதியும், நிம்மதியும் பெற இந்தத் தியாகத்தைச் செய்தே ஆவேன்!’ என்று உள்ளத்தில் உறுதியேற்றான் ரகு!
கும்ப கர்ணன்கள் இறந்துவிட்டதாக யார் சொன்னது? அவர்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ரகுவைப் போல! சிலரை நாம் அடையாளம் காண்கிறோம்! பலர் அடையாளத்தைக் காட்டாமலே அழிந்து போகிறார்கள்! இதுவே நிதர்சனம்!