சிறுகதை: சொர்க்கமும் நரகமும்..!

மன்னர் வீரசிங்கன் தனது நாட்டை எவ்வாறு நரகத்தில் இருந்து சொர்க்கமாக மாற்றினார்? ஒரு ஊக்கமளிக்கும் சிறுகதை.
தமிழ் கதை | King Veera Singan and the Blind Siddhar
தமிழ் கதை | King Veera Singan and the Blind SiddharImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

"ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குல திலக, ராஜ பராக்கிரம, மாமன்னர் ‘வீரசிங்கன்’ பராக், பராக், பராக்…." வீரர்கள் முழக்கமிட, மன்னர் யானையின் மேல், அம்பாரியில் அமர்ந்து கொண்டு, நகர் வலம் வந்தார்.

நாட்டின் பெயர், ‘வீர நாடு’.

நாட்டின் பெயருக்கு ஏற்ற வீரம் மன்னனுக்கு கிடையாது. ஆனால், மிகவும் நல்லவன். நாட்டை நிர்வகிக்கும், திறமையும் இல்லை. எதற்கெடுத்தாலும், அமைச்சர்கள் கூறுவதையும், தளபதியார் கூறுவதையும், கேட்டே ஆட்சி நடத்தினான்.

அதனால், மன்னனுக்கு அன்றாடம் மக்கள் படும் துன்பம் தெரியாது. கஷ்டம் தெரியாது. அவன் நினைத்தது எல்லாம், அமைச்சர் குழாம் சொல்லியபடி, மக்கள் சொர்க்கத்தில் வாழ்வது போல், வாழ்கிறார்கள் என்றுதான். ஆனால் நிலைமையோ, தலைகீழ். மழை இல்லை; தானிய உற்பத்தி இல்லை; ஆறுகளில் நீர் இல்லை; குழந்தைகளுக்கு கொடுக்க பால் இல்லை... ஆக, மக்கள் நரகத்தில் வாழ்வது போல்தான் வாழ்ந்தார்கள்.

மன்னர், அன்று தன் பிறந்த நாளைக்காக, மக்களுக்கு ராஜ தரிசனம் கொடுக்கும் விதமாக, யானையின் மேல் அம்பாரியில் அமர்ந்து வந்தார்.

அனைத்து மக்களும், மன்னருக்கு ஏதாவது பரிசுப்பொருட்களை கொடுத்து, மன்னர் மனம் குளிரச்செய்து, விழுந்து கும்பிடுவார்கள். மன்னரும் ஆசி கூறி, பதிலுக்கு, ஒரு பொற்காசு கொடுத்து மக்களையும் மகிழ்விப்பார்.

மன்னர் கிளம்பிவிட்டார். மக்களிடம் எந்த ஆர்வமும் இல்லை. சோகம்தான் குடி கொண்டிருந்தது. அமைச்சர் குழுவும், தளபதி ஆட்களும், மக்களை கட்டாயப்படுத்தி பரிசு கொடுக்க வைத்தனர்.

மக்களும் தங்களிடம் இருந்த, ‘ஒரு நெல்’, ‘ஒரு பயிறு’, ‘'ஒரு உளுந்து’, ‘ஒரு வேர்கடலை’ என்று பெயருக்கு கொடுத்து வணங்கினர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மாயப் போர்வைக்குள்...
தமிழ் கதை | King Veera Singan and the Blind Siddhar

மன்னன், அதிர்ச்சி அடைந்தான். “இந்நாட்டை ஆளும் மன்னனுக்கு, ஒரு நெல், ஒரு பயிறு, ஒரு குந்துமணி உளுந்து, ஒரு வேர்க்கடலையா? இது அவமானம்” என்று மிகவும் கோபமடைந்தவன், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், எப்போதும் போல் பதிலுக்கு மன்னரின் பரிசாக ஒரு பொற்காசை கொடுத்தான்.

மக்கள், வாங்க மறுத்தனர். இது, மன்னருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “பொற்காசு ஏன் வேண்டாம்? இது என்னை அவமானப்படுத்தும் தண்டனைக்குரிய குற்றம்," என்றார்.

ஒரு தாய், தன் குழந்தையை தூக்கி வந்து, பொற்காசு வேணாம். இந்த குழந்தைக்கு, ‘பால்தான்’ வேணும் என்றாள்.

பக்கத்து வீட்டில் இருந்தவள் அதே போல் பொற்காசை நிராகரித்து, என் பிள்ளைகளுக்கு, ‘சமைப்பதறக்கு அரிசி வேண்டும்’ என்றாள்.

இப்படியாக பலரும் தங்களுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும்; தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி யாரும் பொற்காசுகளை வாங்க வில்லை.

மன்னர் இம்முறை அமைச்சர்களை ஆலோசிக்கவில்லை. மாறாக சுற்றிலும் பார்த்தார். காய்ந்து போன, ‘வயல்கள்’, ‘வயிறு ஒட்டிய 'பசுக்கள்’, ‘வறண்ட கிணறுகள்’, ‘ஏரிகள்’, ‘ஆறுகள்....

"அய்யோ, இது கொடுமை. மக்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?" என்று மனதில் பதறும் போதே பெருத்த கூச்சல்.

மன்னர், சத்தம் வந்த திசையை உற்று நோக்கினார். ஒரு வீரன் வழியில் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரனை எழுப்ப முயற்சித்தும் அவன் எழாமல் தகராறு செய்ய அவனை குண்டு கட்டாக வீரன் தூக்க மீண்டும் அந்த பிச்சைகாரன் பழைய இடத்துலேயே வந்து உறங்கினான்.

இப்போது, மன்னர் அம்பாரியில் இருந்து கீழே குதித்து அந்த வீரனை தள்ளிவிட்டு அந்த பிச்சைக்காரனிடம் சென்றார்.

அவனுக்கு இரண்டு கண்களும் குருடு.

உடன் ஒரு பெரியவர் ஓடிவந்தார்.

இதையும் படியுங்கள்:
சிந்திக்க வைக்கும் 4 சிறுகதைகள்!
தமிழ் கதை | King Veera Singan and the Blind Siddhar

"மன்னா, அவனை ஒன்றும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு தெய்வீக சக்தி படைத்தவன். எது சொன்னாலும் அப்படியே நடக்கும். கண்கள் தான் குருடே ஒழிய, அவன் ஆன்மா எப்போதும் திறந்து கொண்டே இருக்கும். எதையும் கணித்து தீர்வு கூறிவிடுவான். நாங்கள் இவனை ‘'குருட்டு சித்தர்’ என்றுதான் வழிபடுகிறோம்," என்றார்.

உடன் அமைச்சர்கள் மற்றும் தளபதி அங்கு ஏதேதோ விளக்கம் கூற வந்த போது, ‘அய்யோ பேய் வருகிறது’, ‘பிசாசு வருகிறது’ என்று அவன் உரக்க குரல் கொடுக்க, மன்னர் அவர்களை அங்கிருந்து செல்ல கட்டளை கொடுத்தார்.

இப்போது, மன்னர் பேசினார்.

“குருட்டு சித்தருக்கு என் வணக்கங்கள். என் நாடு ஏன் இப்படி இருக்கிறது? ஏன் மக்கள் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள்?" என்றதும், அந்த ‘குருட்டு சித்தர்’ சிரித்தார்.

"உன்னிடம் இல்லாத செல்வம், எதுவுமே இல்லை. ஆனால் அவை கெடு மதியர்களாலும், சுயநலவாதிகளாலும், முடக்கப்பட்டு விட்டது. நீயோ, ஒரு குருடனாய் என்னை போல் இருக்கிறாய்," என்றார்.

“புரியவில்லையே!”- இது மன்னர்.

உடன் சித்தர் மன்னரிடம் பேசினார். “என்னை கெடு மதியன், சுயநலமி, விஷமக்காரன், கேடு கெட்டவன் என்று மனதில் எண்ணிக்கொள். நான் அமர்ந்திருக்கும் இந்த மண்ணை, உன் நாடு என்று மனதில் நினை," என்றார்.

"நல்லது. தங்கள் உத்தரவுப்படி நினைத்தேன்," என்றார் மன்னர்.

“இப்போது கேடுகெட்ட என்னை, இந்த மக்களில் ஒருவரை கொண்டு அப்புறப்படுத்து,” என்றார் சித்தர்.

அதன் படி, ஒரு வாலிபன் அந்த சித்தரை தூக்கி தொலைவில் அமர வைத்தான்.

தமிழ் கதை | King Veera Singan and the Blind Siddhar
தமிழ் கதை | King Veera Singan and the Blind SiddharImage credit: AI Image

"மன்னா, நான் அமர்ந்த இடத்தை தோண்டு," என்றார்.

மன்னர், தன் கரங்களாலேயே, தோண்டினார். தோண்ட, தோண்ட, ‘வைரம்’ ‘வைடூரியம்’ ‘தங்கம்’ ‘கோமேதகம்’ என்று எண்ணற்ற செல்வப்புதையலை கண்டு அதிசயித்தார்.

“என்ன இதெல்லாம். எனக்கு விளங்க வில்லையே?” என்றார் மன்னர்.

"இந்த நாடு, அவ்வளவு செல்வம் நிறைந்த நாடு. செழுமையான வயல்கள் கொண்ட நாடு. ஆண்டு முழுதும் வெள்ளமென நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளை கொண்ட நாடு. செழிப்பான மடியும், சொம்பு சொம்பாக பால் கொடுக்கும் பசுக்களும் நிறைந்த நாடு..."

“சரி அவை எல்லாம் ஏன் இப்போது இல்லை?" என்றார் மன்னர் பதட்டத்துடன்.

"இந்த குருடன், எப்படி செல்வ புதையல் மீது அமர்ந்து, மறைத்திருந்தேனோ, அதைப்போல் கெடு மதியாளர்கள் அதை மறைத்து கொண்டிருக்கிறார்கள்."

"எப்படி?"

"நீர் நிலைகளுக்கு உரிய அமைச்சர் மற்றும் அதிகார வர்க்கம், அதை வற்ற செய்து ஆற்று மணலை அள்ளி அள்ளி, அடுத்த நாடுகளுக்கு விற்று பணம் பார்க்கிறார்கள்.

கால்நடைகளுக்கு அதிகாரம் பெற்ற அமைச்சர் மற்றும் அதிகார வர்க்கம், கால் நடைகளை மற்ற நாடுகளுக்கு, அடி மாடாக விற்று பொற்காசுகள் கொள்ளை அடிக்கிறார்கள்.

உணவு உற்பத்திக்கு உரிய அமைச்சர் மற்றும் அதிகார வர்க்கம், அந்த கவலையே இன்றி, ஆற்று மணல் கொள்ளையில் பங்கு கொண்டு, பல நாடுகளில் ஆள் ஆளுக்கு மாளிகைகள் கட்டிக்கொண்டு விட்டனர்.

இவர்கள் இருக்கும் வரை உனக்கு புதையல் தெரியாது.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புது உறவு!
தமிழ் கதை | King Veera Singan and the Blind Siddhar

மன்னர் புரிந்து கொண்டார். உடன், அத்தனை அமைச்சர்களையும், தளபதியையும், அவர்கள் துறை சார்ந்த அதிகார வர்க்கத்தையும் சிறைபிடித்தார். வாலிபர்களை கொண்டு நாட்டை புனரமைத்தார். அண்டை நாட்டில் இருந்து, ஆற்று நீரை தன் நாட்டு ஆற்றுக்கு திருப்பிவிட செய்து, விவசாயத்தை செழிக்க செய்தார். பயிர் வளர, கால்நடைகள் உண்டு கொழுத்தன. குழந்தைகளும், பெரியவர்களும், பாலும் உணவும் உண்டு மகிழ்ந்தனர்.

குருட்டு சித்தர், நாட்டின் மன்னருக்கு இணையாக மதிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் இப்போது, சொர்க்கத்தில் வாழும் நிலை உணர்ந்தனர்.

மன்னர் ஆட்சி செய்வது என்பது, வெறும் துறை சார்ந்த அமைச்சர்களும், அவர்கள் சார்ந்த அதிகாரிகள் மட்ட நிலை அல்ல; மாறாக, மன்னரும் முக்கிய பங்கு கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து, தூய நல்லாட்சி நடத்தி, நாட்டை சொர்க்கத்துக்கு இணையாக மாற்றினார் மன்னர்.

logo
Kalki Online
kalkionline.com