சிந்திக்க வைக்கும் 4 சிறுகதைகள்!

மனித உறவுகள், எதிர்பாராத ஏமாற்றங்கள் மற்றும் வாழ்வியல் பாடங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு
தமிழ் கதைகள்
தமிழ் கதைகள்Image credit: AI Image
Kalki Strip
Kalki Strip

1. கடன்:

தமிழ் கதைகள் | two women speak secret
தமிழ் கதைகள் | two women speak secretImage credit: AI Image

அலுவலகத்தின் தனிமை நேரத்தில் கீதா ரகசியக் குரலில் என்னிடம் கேட்டாள். “கோமதி, மேரி உன்கிட்டே பணம் கடன் கேட்டு வந்தாளா?”

“ம்ஹூம் இல்லையே. நாலு மாசம் முன்னாடி என்கிட்டே ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தா. அதையே போன வாரம் தான் திருப்பிக் கொடுத்தா!” என்றேன் வெறுப்பாக.

“என்னவோ போ. அவளுக்கு மறுபடியும் பணத் தேவையாம். ஆபிசுல எல்லோர்கிட்டேயும் கைமாத்து கேட்டுட்டு இருக்கா. ஜாக்கிரதை!”

கீதா எச்சரித்துவிட்டு நகர, மேரியின் மேல் எரிச்சலாக வந்தது.

இந்த மேரிக்கு மாதத்தின் எல்லா நாட்களுமே பற்றாக்குறைதானா? யாரிடமாவது பண உதவி கேட்டுக் கொண்டே இருப்பாளா? போன முறை குழந்தைக்கு காய்ச்சல் என சொல்லி கடன் கேட்டாள். பரிதாபப்பட்டு தந்து விட்டேன். ஒரு வாரத்தில் அதைத் திருப்பித் தந்து விடுவேன் என்றவள்.. அதன் பிறகு என் கண்ணில்படவே இல்லை. ஆபிஸ் வருகிறாளா என்பது கூட தெரியாமல் மர்மமாக இருந்தது. யாரையாவது விசாரிப்பதற்கும் மனம் ஒத்துழைக்கவில்லை...

ஒருமுறை நேராக இருவரும் பார்க்க நேர்ந்தது. என்னை கவனிக்காதவள் போல வேறு திசை நழுவினவளைப் பிடித்து, கொடுத்த கடனை திரும்பக் கேட்டேன். “உனக்கு கொடுக்கத் தான் எடுத்து வெச்சேன் கோமதி..” என நீட்டி முழக்கி சமாளிக்கப் பார்த்தாள். நம்பாமல் முறைத்தேன். கடுமையாகப் பேச ஆரம்பிக்க.. ஏதேதோ புலம்பி கண்ணீர் வடித்தாள்.

“அடுத்த வாரம் கண்டிப்பா தந்திடறேன்..” என தவணை கேட்டாள்.

ஆனால் அடுத்த வாரம், அதற்கடுத்த வாரமும் பணம் வரவில்லை. நானும் என் பணத்தை விட்டுத்தருகிற மாதிரி இல்லை. எனக்கும் தேவைகள் இருந்தன. என் விடாமுயற்சியின் பலனாக மூன்று மாதம் கழித்து என்னை மிகவும் இம்சைப்படுத்தி அதைத் திரும்பக் கொடுத்தாள் மேரி. தாமதத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.! இப்படியும் ஒரு மனித ஜென்மம் என மனம் வெதும்பினேன் நான்.

இதையும் படியுங்கள்:
'திகில்' கதை : 13 ஆம் நம்பர் வீடு!
தமிழ் கதைகள்

இப்போது என்னடாவெனில் திரும்பவும் தன் கடன் வேட்டையை துவங்கியிருக்கிறாளாம்! நல்லவேளை கீதா முன்னெச்சரிக்கையாக என்னிடம் சொன்னது நல்லது. மேரி உதவி கேட்டால் நான் பணம் தருவதாக இல்லை. போதுமடா சாமி.

மறுநாள் அலுவலகம் முடிந்து பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருந்த போது ஒதுக்குப்புறமிருந்து பேச்சுக் குரல் கேட்டது. ஒன்று ஃபாத்திமாவுடையது. இன்னொன்று மேரி!

மேரியின் குரலில் கெஞ்சல். “எல்லோர்கிட்டேயும் உதவி கேட்டுட்டேன். யாருக்குமே பெரிய மனசில்லை. நீ தான் நம்ம ஆஃபிசுலேயே இரக்க மனசுக்காரி! இந்த ஒரு தடவை மட்டும்..”

“எல்லோர்கிட்டேயும் கேட்டியா? கோமதிகிட்ட.?”

காதுகள் உன்னிப்பாகின. என்னைத் தான் பேசுகிறார்கள்!

“அய்யோ அவளா. அவகிட்டே கடன் வாங்கினா அவ்ளோ தான். திருப்பிக் கொடுக்கவே முடியறதில்லை! கடன் கொடுக்கிறவங்களுக்கும் ஒரு ராசி இருக்கணும். வாங்கினா உடனே திரும்பிக் கொடுக்கிற மாதிரி. அது கோமதிகிட்டே சுத்தமா இல்லை, அதனால அவகிட்டே நான் கடன் கேட்கலை!”

அப்படியெல்லாம் கூட இருக்குமா. மேரியின் பதிலைக் கேட்டு அதிர்ந்து நிற்கிறேன் நான்.!

2. அறிவுரை:

 தமிழ் கதைகள் | Two man interview a old man
தமிழ் கதைகள் | Two man interview a old manImage credir: AI Image

“ஹலோ.. வாழைப்பழம் ஒரு சீப்பு வாங்கிட்டேன்; சந்தகை பாக்கெட் ரெண்டு, பழ ப்ரெட் ஒண்ணு... இன்னும் வேறெதோ சொன்னியே... மறந்துடுச்சு...”

சாலையோரம், மெல்ல தனது டீவிஎஸ்சை ஓட்டினவாறே மகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார் நரசிம்மன்..

“யோவ் பெரிசு.. ஒண்ணு போன் பேசு, இல்லைன்னா வண்டியை ஓட்டு. ரெண்டையும் ஒரே நேரத்தில பண்ணி ஏழரை உண்டாக்காதே..”

பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்த தினேஸ் கத்தினான்.

“ஏம்பா நான் பாட்டுக்கு மெல்ல ஓரமாத்தானே...” நரசிம்மன் அவமானத்தில் தடுமாறினார்.

“ஓரமாவாவது தூரமாவாவது. சொல்றதைக் கேளுய்யா. லெஃப்ட் போறவன் எப்படிப் போவான்? வயசானா புத்தி வேலை செய்யாதா? வீட்டுல அக்கடான்னு கிடக்க வேண்டியது தானே..? ஏன்ய்யா ரோட்டுக்கு வந்து எங்க உயிரை எடுக்கறீங்க..?”

நரசிம்மன் ஏதோ பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் அதைக் கேட்க விரும்பாதவனாக சரேல் என சீறிப் பாய்ந்தான் தினேஸ்.

“என்னப்பா? ஹலோ.. என்னாச்சு..?” மறுமுனையில் பதறினாள் மகள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஐந்தாம் பரிமாணம்!
தமிழ் கதைகள்

“ஒ.. ஒண்ணுமில்லம்மா. அப்புறம் பேசறேன்...” நரசிம்மன் வண்டியை நிறுத்தி, சீட் திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து அருந்திக் கொண்டார். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும் மனதில் குத்தியிருந்த முள் வலித்தது.

மறுதினம் நேரு பூங்காவில் காத்திருந்த தன் காதலி ஸ்வேதாவை ஆர்வமாக சந்தித்தான் தினேஸ்.

“நேத்து சாயங்காலம் ஆறரை மணிக்கு எங்கே இருந்தே..?” என்றாள் அவள்.

“எங்கேயும் போகலை. ஆஃபிஸ் முடிஞ்சு நேரா வீட்டுக்குத் தான்..”

“ரோட்டுல ஒரு வயசானவர் போன் பேசிட்டே வண்டி ஓட்டிட்டுப் போனதுக்கு கடுப்பாகி கோபத்துல திட்டினியா..?”

”ஆமாம் ஸ்வேதா. வயசான காலத்துல கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம..! வண்டி ஓட்டுவாரா, போன் பேசுவாரா.? பேலன்ஸ் கிடைக்காம தள்ளாடிக்கிட்டு.. முன்னாடி வர்றவன்.. பின்னாடி வர்றவன்ல்லாம் இவரால தடுமார்றான். ஸ்டுபிட் ஃபெல்லோ!”

“முட்டாள். அது எங்க அப்பாடா. போன்ல அந்தப் பக்கம் இருந்தது நான் தான். என்கூடத் தான் பேசிட்டு வந்தாரு. உன் வாய்ஸ் தெளிவாக் கேட்டது. ஏன்டா இப்படிப் பண்ணினே?”

விழித்தான்.

“உன்னை மறக்கவே மாட்டாரு. அந்தளவுக்கு அவரை வெச்சு செஞ்சிருக்கே. எப்படிடா வந்து தைரியமா என்னை பொண்ணு கேட்பே? எல்லாம் போச்சு போ.”

அவள் அழ ஆரம்பிக்க அவன் திகைத்து உட்கார்ந்திருந்தான்.

3. இலக்கு:

 தமிழ் கதைகள் | Two man interview a old man
தமிழ் கதைகள் | Two man interview a old manImage credit: AI Image

ஞாயிறு என்பதால் நகருக்குள் சுற்றிக் கொண்டிருந்தேன். பூங்காவைப் பார்த்ததும் வாக்கிங் போகலாம் என்ற எண்ணத்தில் உள்ளே நுழையப் போக...

“சார்.. ஒரு நிமிசம்” என்றொரு தடுப்புக் குரல்!

திரும்பினால் கையில் செல்போனில் ஒருவன் என்னை வீடியோ எடுக்க, மற்றொருவன் ஒரு சின்ன மைக்கை என் வாயருகே நீட்டினான்.

“என்னப்பா ஆட்சியைப் பற்றின கருத்தா? இல்லை புதுப் பட விமர்சனமா..?” என்றேன் கிண்டலாக.

“அதெல்லாம் இல்லை சார், சுய முன்னேற்றம்! சார் உங்களுக்குன்னு மனசுல ஒரு லட்சியம் இருக்கும்ல.. அதை அடைய முடியலைன்னு எப்பவாவது வருத்தப்பட்டிருக்கீங்களா..?”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வாழ்க்கை எட்டிப் பார்க்கும் தூரம்தான்!
தமிழ் கதைகள்

நான் யோசித்து ஆமாம் எனத் தலையாட்டினேன்.

“ஏதாவது தங்கு தடைகள் வரும்போது உடைஞ்சு போய் எழ முடியாம முடங்கிப் போயிடறீங்களா..?”

“ம். உண்மை தான்.!”

“சிக்கல்களை சமாளிச்சு இலக்கை விரைவில் அடைஞ்சு வாழ்க்கையை ஜெயிக்கனும்ன்னு விரும்பறீங்களா..?”

“ஆமாம்ப்பா, ஆமா..!”

“அப்போ இந்தாங்க சார்.. இதுதான் உங்க பெஸ்ட் சாய்ஸ்.! ரியோடா ஈ பைக். ஒரு தடவை சார்ஜ் பண்ணினா ரொம்ப தூரம் நிக்காம ஓடும். பெட்ரோல் பத்தின கவலை இல்லை, நீங்க நினைச்ச இடத்துக்கு தடையில்லாம போகலாம். உங்க இலக்கை எளிதில் அடையலாம்.!”

அவன் கை காட்டின இடத்தில் ஒரு கருப்பு நிற மின் வாகனம் பளபளத்தபடி நின்று கொண்டிருந்தது!

4. உதவி:

 தமிழ் கதைகள் | A man and a old woman
தமிழ் கதைகள் | A man and a old womanImage credit: AI Image

ஓவர்டைம் பார்த்துவிட்டு உலகமகா அலுப்புடன் வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பசியில் பாதி மயக்கம். இரவு மணி ஒன்பதைக் கடந்திருந்தது. வாகனப் போக்குவரத்துகள் அதிகம் இல்லாத அமைதியான சாலை.

மாரியம்மன் கோவில் தாண்டியதும் அருகிலிருந்த சாந்தி பஸ் ஸ்டாப்பில் அந்த அம்மாவைப் பார்த்தேன். பேருந்துக்குக் காத்திருக்கிறார் போல. கண்ணியமான தோற்றம். பதட்டம். இந்நேரத்தில் இந்த வழியாக பேருந்து கிடையாதே.

யோசித்தவன் யூடர்ன் அடித்து அவரை நெருங்கினேன். “அம்மா இந்நேரத்துல இங்கே வண்டி வராதே.. எங்கே போகணும்..?”

“அண்ணாசாமி குடியிருப்புக்கு. ஒரு நிகழ்ச்சிக்குப் போய் லேட்டாகி இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்..” என்றார் பரிதாபமாக.

போன மாதம் காலமான என் அம்மா மனதிற்குள் வந்தார். “உட்காருங்க. இறக்கி விட்டுடறேன்..”

தயங்கினார்.

“சும்மா உட்காருங்கம்மா. இந்நேரத்துல இங்கே இருக்கிறது ஆபத்து.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புது உறவு!
தமிழ் கதைகள்

சுற்றிலும் பார்த்தவர் வண்டியில் மெளனமாக ஏறினார்.

வண்டியை நகர்த்தினேன். நான் போகிற வழியில் அவர் சொன்ன இடம் இல்லை, அரை கிலோமீட்டர் தள்ளியிருந்தது. என்றாலும் அவரை பத்திரமாக வீட்டில் இறக்கிவிட்டுவிடலாம்..

நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. குடியிருப்பின் உள்ளே நுழைந்தேன்.

“தம்பி அந்த ஈபி கம்பம்கிட்ட..”

நிறுத்த, இறங்கிக் கொண்டார்.

“நன்றிப்பா..”

புன்னகைத்தபடி வண்டியைத் திருப்ப என்னை நிறுத்தி சொன்னார்.

“ஒரு நிமிசம்.. யாரு என்னன்னு தெரியாத எனக்கு இந்த ராத்திரி நேரத்துல லிஃப்ட் தர்றியே. நான் தப்பான ஆளா இருந்தா உன் உயிருக்கு, உடமைக்கு என்ன உத்திரவாதம்? இனி இப்படி அப்பாவியா இருக்காதாப்பா. சூதானமா நடந்துக்கோ.. சரியா?”

logo
Kalki Online
kalkionline.com