

ஜெர்மனி..!
அன்புள்ள அம்மா...
நீங்கள் நலமா..? நான் நல்லா இருக்கிறேன். உங்கள் இருவரையும் நினைக்காத நாள் இல்லை. இங்கு ஊட்டியைவிடக் குளிர் அதிகம். உங்கள் இருவருக்கும் ஒரு உல்லன் ஸ்வெட்டர் வாங்கி வைத்து இருக்கிறேன். தீபாவளிக்கு வரும்போது நிச்சயமாக எடுத்து வருகிறேன். விமானப் பயணத்திற்கும் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டேன்.
அம்மா…
நான் நன்றாகவே சமைக்கிறேன். ஆனால், உங்கள் சுவை வருவது இல்லை. கிட்டத்தட்ட நன்றாகவே இருக்கும். ஆபீஸ்ஸில் வேலை அதிகம். சில நாள் இரவு ஹோட்டலில் சாப்பிட்டு விடுவேன். இங்கே இந்தியா ஹோட்டல் ஒன்று உள்ளது. அதில் சாப்பிட்டு விடுவேன்.
சனி, ஞாயிறு விடுமுறை. அந்த இரண்டு நாட்கள்தான் சமைப்பேன்.
சாதம், சாம்பார் மற்றும் கறி செய்வேன். உங்களுக்குத்தான் தெரியுமே? எனக்கு உருளைக்கிழங்கு என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று.
சனி அன்று சாம்பார் மற்றும் கிழங்கு கறி. ஞாயிறு அன்று சப்பாத்தி மற்றும் மசால் செய்வேன்.
நான் சாப்பிடும்போது உங்கள் இருவருக்கும் கொடுக்க ஆசை.
நீங்கள் இருவரும் இங்கே வந்தால் போதும். நல்ல சம்பளம். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய். பணம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். போதுமான வருமானம் உள்ளது. கண்டிப்பாக நீங்கள் இருவரும் இங்கு வர வேண்டும்.
இருவரும் ஜெர்மனிக்கு வந்த பிறகுதான் என் திருமணம். நான் யாரையும் காதலிக்கவில்லை. நீங்கள் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்துகொள்கிறேன். அப்பாவை 'தமிழ் கல்யாண மேட்ரிமோனி'யில் என் பெயரைப் பதிவு செய்யச் சொல்லுங்கள்.
எனக்கு ரொம்ப அழகான பெண் தேவை இல்லை. பார்க்கச் சுமாராக இருந்தால் போதும். ஆனால் 2 விஷயங்களை முன் வைக்க வேண்டும்.
1. நன்கு ஆங்கிலம் பேசுபவராக இருக்கவேண்டும்.
2. வெளி நாட்டில் வசிக்க சம்மதம் வேண்டும்.
அப்பா இப்போது பதிவு செய்தால் நான் தீபாவளி சமயத்தில் ஊட்டிக்கு வரும்போது… பெண்ணைப் பார்த்துவிடலாம். பின்னர் கல்யாணம்.
எனக்கு வயது 29 ஆகிவிட்டது…
நான் கல்யாணம் செய்துகொள்ள அவசரப்படவில்லை. மீதி உங்கள் விருப்பம்.
அப்பாவிடம் சொல்லுங்கள்... பாவம் அப்பா... என்னைக் கஷ்டப்பட்டு படிக்க எவ்வளவு பாடுபட்டார் என்பது எனக்குத் தெரியும். இன்னும் எத்தனை ஆண்டுகள் வேலை செய்வது..? வேலையை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அவருக்குச் சர்வீஸ் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. உடனே விருப்ப ஓய்வு பெறச் சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்...
அம்மா…! டியர் அம்மா…!!
நான் வெளிநாட்டில் வேலை செய்வது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். அவரிடம் சொல்லுங்கள்… இந்தச் சம்பளம் இந்தியாவில் கிடைக்காது. வாழ்க்கைக்குப் பணம் முக்கியம் இல்லையா…?
அப்பாவின் ஆசைப்படி நான் சில வருடங்களில் இந்தியாவில் வேலை செய்ய முயற்சி செய்கிறேன். பணி கிடைத்தவுடன் இந்தியாவுக்கு வந்துவிடுவேன். எனக்கு பணம் முக்கியம் இல்லை. நீங்கள் இருவரும்தான் எனக்கு முக்கியம்.
சரிம்மா… நான் முடிக்கிறேன்.
அப்பாவிற்கு என் நமஸ்காரங்கள்.
தீபாவளிக்குச் சந்திப்போம்.
என்றென்றும் உங்கள் நினைவுடன்
ரவி.
*********************
அன்புள்ள ரவி… !
வணக்கம்.
நாங்கள் இருவரும் இங்கு நன்றாகவே இருக்கிறோம்.
நீ நலமா? நல்லா சாப்பிடுகிறாயா? நல்ல தூங்குகிறாயா?
எங்கள் இருவருக்கும் சதா உன் சிந்தனைதான். நீ வேலை கிடைத்து வெளிநாடு சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீ போன கடிதத்தில் அப்பாவை வேலையை ராஜினாமா செய்து அங்கே வரச் சொன்னாய். நான் பேசினேன்.
அவர் இப்போது ராஜினாமா செய்யமுடியாது. இன்னும் 2 வருடங்கள்தான் இருக்கிறது. பிறகு ஓய்வுதான்.
அதற்கு பிறகு நாங்கள் இருவரும் அங்கு வந்துவிடுகிறோம்.
நீ உன் கல்யாணக் கண்டிஷன்படியே அப்பா தமிழ் மேட்ரிமோனி செயலியில் நீ நினைப்பது போலவே 'பெண் நல்லா ஆங்கிலம் பேச வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று பதிவு செய்து உள்ளார். உன் சந்தோஷமே எங்கள் சந்தோஷம்.
நாங்கள் பெண் பார்த்துவிட்டு வாட்ஸ் ஆப் மூலம் செய்தி அனுப்புகிறோம். நீ இரண்டு நாட்கள் இங்கு இருக்கும்படி வர வேண்டும். நீ சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கல்யாண வேலைகளைப் பார்ப்போம்.
பிறகு நீ சிகரெட் குடிப்பது எனக்குத் தெரியும். தயவுசெய்து அதைக் குறைத்து, முடிந்தால் விட்டுவிடு. இளைஞர்கள் பப் சென்று மது அருந்துதல் மற்றும் பெண்களுடன் டேன்ஸ் ஆடுவார்கள். நீ இதைச் செய்யாதே…! இது அந்நிய கலாச்சாரம். மது பக்கமே எக்காரணம் கொண்டும் போகாதே.
நீ நிச்சயமாக தவறு செய்ய மாட்டாய் என நன்கு தெரியும். இருந்தாலும் சொல்வது என் கடமை. ஏனெனில் நீ என் மகன்.
நீ தினமும் சமையல் செய்கிறாயா…? உனக்கு சமையல் செய்ய பிடிக்கும் என்று எனக்கு நன்கு தெரியும். அங்கு இந்திய ரிஸ்டாரண்ட் இருக்கு என்று சொல்லி இருந்தாய். சமையல் செய்ய முடியவில்லை என்றால் ஹோட்டலில் சாப்பிடுகிறேன் என்று சொல்லி இருந்தாய். மிக்க மகிழ்ச்சி.
துணிகளை வாரத்தில் இரண்டு விடுமுறை தினம் மட்டுமே துவைத்தால் போதும். அங்கு மிகவும் குளிராக இருக்குமே…? நீ உல்லன் ஸ்வெட்டர் வாங்கி விட்டாயா..?
அப்பா உன் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருக்கிறார். அவர் உன்னை நினைக்காத நாளே இல்லை. நானும் அதே மாதிரிதான்.
அப்பா ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் வரை உன் கல்யாணத்தை தள்ளிப்போட வேண்டாம். உன் மனைவியை அழைத்து சென்றுவிடு.
இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் இருவருமே அங்கே வந்து விடுகிறோம்.
நாங்கள் உனக்குப் பிடித்தமான பெண்ணை மட்டுமே பார்ப்போம்.. நீ கவலைப்படாதே.
நீ நம்பும் முருகன் உன்னைக் கைவிட மாட்டார்.
உனக்கு என்ன வேண்டும்… ?
1. பருப்பு பொடி, 2. புளியஞ்சாத மிக்ஸ், 3. எலுமிச்சை ஊறுகாய், 4. அப்பளம், 5. வடாம், 6. முள்ளு முறுக்கு, 7. தட்டை.
உனக்கு எது வேணும் என்று தகவல் அனுப்பிவை. நான் லிஸ்டில் போடாத சாமான் ஏதாவது இருந்தால் அதையும் தகவலில் அனுப்பி வை.
நீ எது வேண்டுமானாலும் தயங்காமல் கேள். நான் செய்து உனக்கு அனுப்பி வைக்கிறேன்.
டியர் ரவி…!
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எங்களால் உன்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை.
சரி… இரண்டு வருடம்தானே…? சமாளிக்கிறோம்.
நீ ஜாக்கிரதையாக இரு. முடிக்கிறேன்.
என்றும் உன் நினைவாகவே
இருக்கும்…
உன் உயிர் அம்மா,
காயத்ரி…