சிறுகதை: அன்பின் வலிமை!

Father and Children
Father and Children
Published on
Kalki Strip
Kalki

“நீங்க வேலைக்குப் போகாம வீட்டிலேயே இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் அப்பா” என்றாள் எட்டு வயது சுமதி, அப்பாவின் மேல் சாய்ந்தபடி. “ஆமாம்” என்று தலையாட்டினான், ஆறு வயது தம்பி, ராமு, அப்பாவின் மடியில் அமர்ந்தபடி.

“ஏம்மா, நான் ஆட்டோ ஓட்றது உனக்கு பிடிக்கலையா” என்று கேட்டான் கார்த்திக்.

“இல்லப்பா, எனக்கு உங்க கூட ஆட்டோல போறது ரொம்ப பிடிக்கும். முன்பெல்லாம் எல்லாம் நீங்க சவாரி முடிச்சிட்டு வரும் போது ஆடிக்கிட்டு வருவீங்க. முகத்தைப் பார்க்கவே பயமா இருக்கும். அம்மா ஏதேனும் கேட்டாங்கன்னா அடீப்பீங்க. நீங்க வரதுக்குள்ள தூங்கணும்னு அம்மா எங்களை தூங்க வைப்பாங்க. நாங்க கண்ணை மூடிக்கிட்டு தூங்கற மாதிரி இருப்போம். தூங்க மாட்டோம். பாவம் அம்மா, அழுதுகிட்டு இருப்பாங்க”

“ஆனால், நீங்க இப்ப வீட்டில இருக்கீங்க. எங்களுக்கு கதை சொல்றீங்க. எங்களோட விளையாடறீங்க. அம்மாவை அடிக்கிறதில்லை. அம்மா இப்போ சிரிச்ச முகமா இருக்காங்க. அதானால தான் அப்பா கேட்டேன்” என்றாள் சுமதி.

கள்ளம் கபடமற்ற குழந்தையின் பதில், பெருத்த ஊசி எடுத்து இதயத்தைக் குத்துவது போல உணர்ந்தான் கார்த்திக். 'என்னை நம்பி கைப்பிடித்தவளுக்கும், குழந்தைகளுக்கும் ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருந்திருக்க வேண்டியவன், குடி போதையில் எத்தனை மோசமாக நடந்து கொண்டிருக்கிறேன்' என்று தன்னையே நொந்து கொண்டான்.

கார்த்திக் ஆட்டோ ஓட்டுநர். மனைவி அஞ்சலை, அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் நான்கு வீடுகளில் வீட்டு வேலை செய்கிறாள். சுமதி, ராமு என்று இரண்டு குழந்தைகள். நன்றாக இருந்த கார்த்திக், கெட்ட சகவாசத்தால், இரண்டு வருடங்களாக குடிக்கு அடிமையாகி இருந்தான். ஆட்டோ ஓட்டி சம்பாதித்த பணம் அத்தனையும் சாராயத்தில் தொலைத்து விட்டு, அஞ்சலையிடம் பணம் கேட்டு நச்சரிப்பான். கொடுக்கவில்லை என்றால் அடிப்பான்.

குடிப் பழக்கம் அதிகரிக்க கார்த்திக்கின் கல்லீரல் செயலிழந்தது. அவன் ஹெப்படைட்டீஸ் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டான். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திக், உயிர் பிழைப்பது கடினம் என்றார்கள் டாக்டர்கள். ஆனால், தீவிர சிகிச்சையினால் பிழைத்துக் கொண்டான். உடல் பழைய நிலையை அடைய அவன் குறைந்தது ஆறு மாதமாவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், குடியை அறவே நிறுத்த வேண்டும் என்றும் டாக்டர் சொன்னார். மறுபடியும், குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டால், அது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கை செய்தார். கார்த்திக் ஆட்டோ ஓட்ட முடியவில்லை.

அஞ்சலை வைத்திருந்த தங்க நகைகள், அவள் சிறுகச் சிறுக சேர்த்த பணம், கார்த்திக் வைத்திய செலவில் கரைந்து போனது. அஞ்சலை வேலை செய்யும் வீடுகளில், அவர்கள் செய்த உதவியினால் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது.

வருமானம் அதிகரிக்க, உதிரிப் பூக்கள் வாங்கி, பூ தொடுத்து விற்று வந்தாள் அஞ்சலை.

தினமும் குடித்துப் பழகிவிட்ட கார்த்திக் மிகவும் சிரமப்பட்டான். பதட்டம் அடைந்தான். கோபம் அதிகரித்தது. தேவையின்றி நடமாடக் கூடாது என்று டாக்டர் உத்தரவு இருந்ததால், சாராயக் கடை தேடிப் போக முடியவில்லை. சிறிது சிறிதாக அவன் மனம் குழந்தைகள் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.

அவனைப் பார்த்து பயந்து கொண்டிருந்த குழந்தைகள் அவனருகில் வர ஆரம்பித்தன. குழந்தைகளுடன் கொஞ்சிக் குலாவும் போது மனம் லேசாவதை உணர்ந்தான் கார்த்திக். வீட்டு வேலையில் மனைவிக்கு உதவ ஆரம்பித்தான். குழந்தைகளுடன் விளையாடும் போதும், மனைவிக்கு உதவும் போதும் அவன் மனது 'செய்த தவறு போதும். இனி சாராயம் பக்கம் போகக் கூடாது' என்று வலியுறுத்தும்.

கார்த்திக்கின் ஆட்டோ நிறுத்துமிடம், இரண்டு தெருக்கள் தள்ளி கோவிலின் அருகில் இருக்கிறது. ஒருநாள், காய்கறி வாங்க கடைக்குச் சென்ற கார்த்திக், அந்தக் கோவில் குருக்களைப் பார்த்தான்.

கார்த்திக்கின் நிலையை உணர்ந்த குருக்கள் “கார்த்திக், கோவிலுக்கு நிறைய பூக்கள், மாலைகள் தேவைப்படறது. கோவில் வாசலிலே கடை வைத்துக் கொண்டு இருந்தப் பெண்மணி, இப்போ வரதில்லை. நீ தினமும் கோவிலுக்கு வேண்டிய உதிரிப் பூக்கள், கட்டின பூச்சரம், தொடுத்த மாலைகள் இதெல்லாம் வாங்கிண்டு வரலாம். வேற கோவிலுக்கும் கொடுக்கலாம். வீட்டிலே சாமிக்கு போடறதுக்கு, பூஜைக்கு அப்படின்னு நிறைய வீடுகளில வாங்கிப்பாங்க. நீ ஏன் இதை செய்யக் கூடாது?” என்று கேட்டார்.

குருக்களின் அறிவுரைப் படி கார்த்திக் பூ வியாபாரத்தில் இறங்கினான். விடியற்காலையில் எழுந்து பூக்கடை சந்தைக்குச் சென்று தேவையான உதிரிப் பூக்கள், பூச்சரங்கள், மாலைகள் வாங்கி வந்து கோவிலுக்குக் கொடுப்பான். அஞ்சலையும் பூதொடுத்து அடுக்கு மாடி குடியிருப்பில் உதிரிப் பூக்களும், பூச்சரங்களும் விற்க ஆரம்பித்தாள்.

சிறிது சிறிதாக பழங்கள், காய்கறிகள் வாங்கி விற்க ஆரம்பித்தான் கார்த்திக். வீடுகளுக்குச் சென்று காய்கறிகள், பழங்கள் கொடுக்க ஆரம்பித்தான். தன்னுடைய உழைப்பை முழுமையாக பூ, பழம் வியாபாரத்தில் செலுத்திய கார்த்திக் குடியை மறக்க ஆரம்பித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அழகே உன்னை ஆராதிக்கிறேன்!
Father and Children

இந்தத் தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதோடு, அவன் மனதிற்கு நிம்மதியும் கிடைத்தது. அவனது தன்னம்பிக்கையும் அதிகரித்தது. கார்த்திக்கின் இந்த மன மாற்றம் அஞ்சலைக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. இறைவன் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழி காட்டியதாக மகிழ்ந்தாள். இது தொடர வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.

குடியைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நன்றாக சொந்தத் தொழில் புரிந்து கொண்டிருக்கும் கார்த்திக், நண்பர்கள் சகவாசத்தால் பழைய பாதைக்குத் திரும்பி விடுவானோ என்ற பயம் அஞ்சலை மனதில் எழும். கார்த்திக், பழைய நிலைக்குத் திரும்பினால், அப்பாவின் மீது ஆசையை வளர்த்துக் கொண்ட குழந்தைகள் மனது என்ன பாடுபடும்? நிலை கொள்ளாமல் தவித்தாள் அஞ்சலை.

எதிர் பார்த்தது போலவே, ஒரு நாள் கார்த்திக்கின் நண்பர்கள் வந்தார்கள். “என்னப்பா, டாக்டர் சொன்ன ஆறு மாதம் முடிந்து போச்சே. இனிமேல் குடிக்கலாம் இல்லையா?” என்று கேட்டான் சோமு.

“நீ இல்லாம குடிக்க மஜாவே இல்லப்பா. நீ எப்போ எங்க கூட கடைக்கு வரப் போறே அப்படின்னு எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கோம்” என்றான் பரத்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மதிப்பு!
Father and Children

கார்த்திக் என்ன சொல்லப் போகிறான்? என்ன செய்யப் போகிறான்? என்று காத்திருந்தாள் அஞ்சலை.

“இல்லை, சோமு, நான் இனிமேல் குடிக்க வரமாட்டேன். நான் உங்களோட நல்ல நண்பனா சொல்கிறேன். நீங்களும் இனிமேலே குடிக்காதீங்க. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை சாராயத்திலே செலவு செய்யறதிலே யாருக்கு என்ன லாபம்? நீங்களும் இந்தப் பழக்கத்தை விட்டு விலகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் நான் செய்கிறேன்” என்றான் கார்த்திக்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நெரிசல்!
Father and Children

கார்த்திக்கின் இந்த மனமாற்றத்திற்கு யார் காரணம்? டாக்டரின் புத்திமதியா? மனைவி, குழந்தைகளின் அன்பா? அல்லது திருந்தி வாழ வேண்டும் என்ற கார்த்திக்கின் மன உறுதியா?

கோரானா ஊரடங்கினால், மதுக் கடைகள் மூடப்பட்ட போது, சிலர் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டதாகக் கூறுகிறார்கள். பூரண மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டால், கார்த்திக் போன்று எத்தனை மனிதர்கள் மது அரக்கனின் பிடியிலிருந்து விடுபடுவார்கள்? அந்த நாள் வரும் என்று எதிர் நோக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com