

காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான் விமல். அவன் கண்ணில் பட்டது அந்த கர்நாடக மாநிலச் செய்தி.
“ரமா, இதைப் பாத்தியா கர்நாடகாவில் டாக்டர்களின் பெயர்களுக்கு முன்னால் Dr. போடுவதுபோல இனிமேல் டீச்சர்கள் Tr. என்று போட்டுக்கொள்ளலாம் என்று ஆணைப் போட்டிருக்கிறார்கள்…” என்றபடியே ரமா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டான். அவளும் மற்றொரு டம்ளர் காபியுடன் அருகில் அமர்ந்து அந்தச் செய்தியைப் படித்தாள்.
“அப்போ நாங்கள் எல்லாம் ஹோம் மேக்கர் என்று நீட்டி முழக்கிச் சொல்லாமல் Hr, என்று போட்டுக்கொள்ளலாமா. Hr. ரமா! நல்லா இருக்கில்லே?”
“அது சரி அப்போ நானும் காலேஜ் புரொஃபசர்தானே.. Pr. என்று போட்டுக்கொள்ளலாமா?”
“போட்டுக்கோங்க... யார் அடிக்கிறா?” என்று சொல்லியபடி காலி தம்ளர்களை எடுத்துச் சென்றாள்.
“சரி நான் கீழே வாக்கிங் போய்விட்டு வரேன். ஏதாவது வாங்கி வரணுமா” என்று புறப்பட்டுக்கொண்டே கேட்டான் விமல்.
“இப்போ ஒண்ணும் ஞாபகமில்லை. ஏதாவது தேவை என்றால் மெசேஜ் பண்றேன். வீட்டுக்கு வர முன்னாடி அதைப் பாருங்க” என்று விட்டு அடுப்படிக்குச் சென்றாள் ரமா.
படித்த செய்தியின் நினைவோடு நடக்கத் தொடங்கியவனுக்கு அருகில் வந்தான் வக்கீல் ஜெய்.
“ஹலோ குட் மார்னிங்... என்ன காலையிலேயே பலமான யோசனை?” என்றான்.
அவர்களது பல அடுக்கு மாடிகள் கொண்ட பிளாக்குகளை சுற்றி நடக்க நடை பாதை இருந்தது. அதில்தான் தினமும் காலை மலையில் நடை பழகுவார்கள் பலரும்.
“குட் மார்னிங் ஜெய். ஒன்னுமில்லே கர்நாடகா நியூஸ் ஒண்ணு படித்தேன்; அதுதான் மண்டையிலே ஒடிக்கிட்டு இருக்கு,” என்றான் விமல்.
“நானும் படிச்சேன் அந்த டீச்சர் மேட்டர்தானே. நாங்க லாயர்ஸ்கூட Lr. ன்னு போட்டுக்கலாமா என்றால் ஜட்ஜ் என்ன சொல்லுவாரோ. சரி விடுங்க அவரையும் Jr.னு போட்டுக்கச் சொல்லலாம்..
எதிர்பட்ட ஜூமோட்டோகாரன் “சார் பிளாக் 4A எங்கே இருக்கு” என்றான். இருவரும் அவனுக்கு வழி காட்டினார்கள். அப்போது ஜெய், “இவர்கள் பெயருக்கு முன்னால் zr. என்று போட்டுக்கொள்ளுவார்களா” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
“செய்தாலும் செய்வார்கள். அப்போ கூரியர்காரன் சும்மா இருப்பானா அவன் Cr என்று போட்டுப்பேன் என்பானே” என்று பதில் சொன்னான் விமல்.
“என்னப்பா ஒரே சிரிப்பா இருக்கு. அப்படி என்ன ஜோக் அடிச்சீங்க ஜெய்” என்றார் எதிரில் நடந்து வந்த சபரி இவர்களுடன் சேர்ந்துக்கொண்டார். ஜெய் விஷயத்தைச் சொன்னவுடன் அவரும் சிரித்துவிட்டு. “அப்போ நாங்கள் எல்லாம் என்ன போட்டுக்கறது,” என்று அப்பாவியாகக் கேட்டார்.
“ஏன் சார் நீங்கள் பிரைவேட் கம்பெனியில் வேலை செய்வதால் Pr. னு பேட்டுக்கோங்க, காசா பணமா?” என்றார் ஜெய்.
“இது நல்லா இருக்குப்பா ஏற்கனவே பிரதர்ஸ் எல்லாம் ப்ரோ ஆயாச்சு... சிஸ்டர் எல்லாம் சிஸ் ஆயாச்சு... எங்களையும் இப்படி கூப்பிடப் போறீங்களா? சரிதான் போங்க...” என்று ஆமோதித்தார் சபரி.
அபார்ட்மெண்டில் கடை வைத்திருக்கும் அண்ணாச்சி கடைத் திறக்க வந்தவர் இவர்களைப் பார்த்தவுடன் ஒரு வணக்கம் வைத்தார். “விமல், அப்போ அண்ணாச்சி பேருக்கு முன்னால் ஒரு Tr. சேர்த்தே கூப்பிடவேண்டியதுதான்” என்றான் ஜெய்.
“அது என்ன Tr.” என்று அப்பாவியாகக் கேட்டார் சபரி.
“அவர் டிரேடர் அதனால் Tr. சரிதானே வக்கீல் சார்” என்றான் விமல்.
“கரெக்ட் சார். சரியா புடிச்சிட்டீங்க” என்று ஆமோதித்தார் ஜெய்.
“சபாஷ்... இப்படியே போனால் எல்லோருக்கும் ஒரு அடைமொழி கொடுத்துவிடுவார்போல நம்ம வக்கீல் சார்” என்றார் சபரி.
“கொடுத்திடலாம் சார், ஹோட்டல் சர்வருக்கு Sr., போஸ்ட்மேனுக்கு Pm, ஆட்டோ ஓட்டினால் Ar , கேப் ஓட்டினால் Cr. லாரி ஓட்டினால் Lr. , பஸ் ஓட்டினால் Br. இப்படி ஒருத்தரையும் விடாமல் கூப்பிட வேண்டியதுதான்...” என்று சொல்லிக்கொண்டே போனார் ஜெய்.
“ஜெய் சரியான ஃபார்ம்ல இருக்கார் சார். இன்னிக்கு முழுக்க அடைமொழி திருவிழாதானோ” என்றார் விமல். எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.
“ஆரம்பிச்சு வச்சவரே நீங்கதான் சார் . ஜஸ்ட் ஃப்லோல வரதுதான் சார்” என்று சொன்னார் ஜெய்.
“இன்னும் யாரெல்லாம் பாக்கி இருக்காங்க. அவங்களையும் சொல்லிடுங்க ஜெய்...” என்று தூண்டிவிட்டார் சபரி.
காவி வேட்டி கட்டிக்கொண்டு இவர்களைக் கடந்து வேகமாகப் போனார் ராஜா. அவரைப் போனபிறகு மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் விமல்.
“ஏன் ஜெய் இப்போவே எல்லா சாமியர்களும் சத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி சாரதி என்றெல்லாம் போட்டுக்கறாங்க.
இதை கேள்விப்பட்டா அவர்களும் சொல்லிக்கொடுக்கும் யோகா மெடிடேசன் எல்லாம் சேர்த்து யோகா குரு Yg. என்றும் மெடிடேசன் ஸ்பெசலிஸ்ட் Mg. என்றெல்லாம் போட்டுப்பாங்க போல,” என்றான் விமல்.
“சரிதான் சாமியார்களையும் நீங்க விட்டு வைக்கப் போவதில்லையா” என்றார் சபரி.
“ஏனப்பா விமல் அவர்கள் ஆடுவதும், குதிப்பதும், கும்பலாய் இமயமலை யாத்திரை என்று ஏகப்பட்ட வேலைகள் செய்கிறார்கள். இதுவும் சேர்ந்துகொண்டால் இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் போயிடுமப்பா” என்று வருத்தப்பட்டான் சபரி.
“அதபத்தி அவங்க எங்கே கவலை படறாங்க! இன்னும் இரண்டு ரீல்ஸ் எடுத்து போட்டுவிடுவார்கள் இந்த ஸ்மால் டைட்டில் போட்டபடி” என்றான் ஜெய்.
அந்த நேரம் பார்த்து ஜெய்க்கு போன் வந்தது அவனது மனைவி ரமாதான் கடையில் வாங்க லிஸ்ட் அனுப்பியதைச் சொன்னாள்.
விமல் ஜெய் மற்றும் சபரியிடம், “எனது Hr. அண்ணாச்சி Tr கிட்ட போய் சில பொருள்கள் வாங்கச் சொல்லிவிட்டாள். நான் விடுகிறேன் ஜுட்” என்றான்.
“இப்படிப் பேசிக்கொண்டு போனால் நம்மை அந்த Gr. (காட்) தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னார் ஜெய். எல்லோரும் சிரித்தபடி சபையைக் கலைத்தனர்.