

சிந்தனை கோடுகள் நெற்றியில் தெரிய வீட்டினுள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் ராம்.
"என்னங்க இன்னும் அந்தத் தொழிலதிபர் பூபதி ராஜா கொலை கேஸ் முடிவுக்கு வரலையா? உம்முனு இருக்கீங்களே?" என வரவேற்றாள் இன்ஸ்பெக்டர் ராமின் மனைவி மாலினி.
"ஆமாம்மா... கேஸ் கொஞ்சம் இழுபறியாத்தான் இருக்கு" என்ற ராமிடம், "ஆமா அவரோட பார்ட்னர் மதியழகனை சந்தேகத்தின் பேரில கைது செய்திருக்கோம்னு சொன்னீங்களே... அது என்னாச்சு?" என்று கேட்டாள் மாலினி.
"அவர் இன்னும் எங்க கஸ்டடிலதான் இருக்காரு. ஆனா, அவர் ஹார்ம்லெஸ். பாக்டரியோட நஷ்டக்கணக்கைப் பார்த்துட்டு கோபத்துல 'உன்னைக் கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போகவும் தயார்'னு பூபதிராஜாவைப் பார்த்து மதியழகன் சத்தம் போட்டது என்னவோ உண்மைதான்.
ஏன்னா அவங்க தொழிற்சாலை நஷ்டத்துலதான் ஓடுது. இப்போ பூபதி ராஜா இறந்ததால எல்லாம் பார்ட்னர் மதியழகன்தான் செட்டில் பண்ணனும். அதனால மதியழகன் அவரைக் கொலை செய்ததற்கு சான்ஸ் கம்மி" என்றார் ராம் சற்று சலிப்புடன்.
"நாங்க, பூபதிராஜாவோட மனைவி அவரோட மச்சான் எல்லாரையும் சந்தேக வளையத்துலதான் வெச்சிருக்கோம். ஏன்ன அவர் தன்னை இரண்டு கோடிக்கு இன்ஷுயூர் பண்ணி இருக்காரு. அதனால பயனடையறவங்க அவரோட மனைவியும் மச்சானும்தான்" என்றார் ராம்.
"சரி ஃபாரன்சிக் ரிப்போர்ட் என்ன சொல்லுது?" என்றாள் மாலினி திரும்பவும்,
"அதுவும் கொஞ்சம் மேட்ச் ஆக மாட்டேங்குது. பாடிய குளத்துல இருந்து எடுத்ததால முகம் முழுக்க மீன் கடிச்சு சிதைஞ்சிடுச்சு. நாலு அஞ்சு நாள் ஆனதுனால பாடியும் வேற அழுகிடுச்சு. பூபதி ராஜாவோட பிரேஸ்லெட்டை வச்சுதான் அது அவரோட பாடின்னு கண்டுபிடிச்சோம்" என்ற ராம் "சரிமா நான் சாப்பிட்டுட்டு ஸ்டேஷன் கிளம்புறேன்" என்று கூறினார்.
"சீக்கிரம் இந்த கேஸ் முடிவுக்கு வந்துடும் எனக்கு பட்சி சொல்லுது" என்று கூறி சிரித்த மாலினி ''சாப்பிட வாங்க...'' என்றாள்.
பைக்கை ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் ராம். அவர் அருகில் வந்த எஸ்ஐ வேணு, "சார் பூபதிராஜா வீட்டு போன் காலை டிரேஸ் பண்ணினதுல அவரோட மனைவிக்கு செங்கல்பட்டிலிருந்து இன்னைக்கு மூணு தரம் கால் வந்திருக்கு சார்" என்றார் பணிவாக.
"ஏன்யா அங்க அவரோட சொந்தக்காரங்க யாரும் இருக்காங்களா?" என்ற ராமிடம் "பூபதிராஜாவோட மாமா ஊரு அதான் சார்" என்றார் எஸ்ஐ வேணு.
"அட என்ன இப்படி இழுக்குது இந்த கேஸ். கொலையா...? தற்கொலையா...? எந்த முடிவுக்கு வர முடியலையே" என்றார் ராம் எரிச்சலுடன்.
அப்போது ஒரு கான்ஸ்டபிள், குடிகாரன் ஒருவனை அறைந்து இழுத்தபடி ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.
"பழனி அது என்ன கேஸ்?" என்றார் இன்ஸ்பெக்டர் ராம் அவரைப் பார்த்து.
"சார் இவன் கையில கட்டு கட்டா பணம் இருக்குது. என்கிட்ட பிணம் வாங்கிட்டு போனவனே இங்க பிணமாகிக் கிடக்கானேன்னு நியூஸ் பேப்பரைப் பார்த்து புலம்பிட்டு இருந்தான் சார்" என்றார் கான்ஸ்டபிள் பழனி.
நியூஸ் பேப்பரை வாங்கி செய்தியை பார்த்த ராம் திடுக்கிட்டார் தொழிலதிபர் கொலை என்ற தலைப்பில் வந்த செய்தியில் பூபதி ராஜாவின் படம் போடப் பட்டிருந்தது. பேப்பரில் செய்தியைப் படித்த ராம் மேலும் அதிர்ந்தார்.
பூபதிராஜா தன்னை இரண்டு கோடிக்கு இன்ஷூயூர் செய்துள்ளார். இது இன்சூரன்ஸ் பணத்துக்காக நடந்த கொலையா அல்லது தற்கொலையா என்ற கேள்விக்குறியுடன் செய்தியை முடித்து இருந்தனர்.
ராமின் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது. ஒருவேளை அதுவாக இருக்குமோ என்றவர் எழுந்து அந்த குடிகாரனை மிரட்டி அடித்து விசாரித்தார். மார்ச்சுவரியில் வேலை பார்க்கும் அவனிடம் போனவாரம் நிறைய பணம் கொடுத்து அனாதைப் பிணம் ஒன்றை வாங்கிச் சென்றது பூபதிராஜாதான் என்று கூறினான் அந்தக் குடிகாரன்.
இன்ஷூரன்ஸ் பணம் இரண்டு கோடியை வாங்க அனாதை பிணத்தின் முகத்தை சிதைத்து அதன் கையில் தன் பிரேஸ்லெட்டை கட்டி குளத்தில் போட்டு, தான் கொலை செய்யப்பட்டதுபோல் பூபதிராஜா ஆடி இருக்கும் நாடகம் இன்ஸ்பெக்டர் ராமுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது.
தங்கள் கஸ்டடியில் இருந்த மதியழகனை உடனடியாக விடுதலை செய்த ராம் செங்கல்பட்டில் தலைமறைவாகி இருக்கும் பூபதிராஜாவை பிடிக்க தனிப்படையுடன் விரைந்தார்.