சிறுகதை: ஈரம்

Friends
Friends - Tamil short storyAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

சனிக்கிழமையின் பிறப்பை 'கௌசல்யா சுப்ரஜா ராம' போற்றிப் பாடி வீடுகளில் தெய்வீக மணத்தைப் பரப்பிய நேரம் காலை ஆறு முப்பது.

தென்மேற்கு பருவக்காற்று வானிலிருந்து மழையை தெளித்து, வாசலைச் சன்னமாய்ச் சாரலாய் நனைக்க, வாசல் ஊஞ்சலில் அமர்ந்து செய்தித்தாளை பிரித்தவரின் பார்வையில், அந்த பள்ளிக்கூட வைரவிழா சிறப்பு அழைப்பிதழ் போய் நின்றது.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியின் ‘வைர விழா’ அழைப்பிதழ் அது.

சிறப்புரை பட்டியலில் தனது பெயர் இரண்டாவதாக இருப்பதில் முன்னாள் மாணவரான இராமசாமிக்கு வருத்தம்தான்.

வெளியே மழையின் வேகம் சற்று கூட, இராமசாமியின் வறண்ட பள்ளிக்கூட நினைவுகள் ஈரமானது.

புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளிக்கூடம். பரந்திருந்த காய்கறி மார்க்கெட்டுக்கு இடையில், வாசலில் ஒரு சிறிய ஆர்ச் வடிவ இரும்பு போர்டுடன். உள்ளே நுழைந்ததும், பெரிய விளையாட்டு மற்றும் பிரார்த்தனை மைதானம்.

இராமசாமி எப்போதும் வகுப்பில் முதல்நிலை தான்.

தன் நண்பர்கள் முன்னிலையில், ஓர் கர்வம் அவனுக்கு.

“என்னங்க, காபி போட்டுட்டேன். உள்ள வர்றீங்களா? இல்ல...” முற்றுப்பெறாத மனைவி மாலதியின் கேள்விக்கு,

“இல்லை மாலதி. நானே வர்றேன். சந்தோசமான செய்தி. இன்னைக்கு செய்தித்தாள்ல...“ உற்சாகமாய் அடுப்படியில் மாலதியை அடைய, எதிரே வந்தவள்மீது இலேசாய் மோதி நின்றார்.

“அட, என்னங்க.. அப்படி என்ன அவசரம்?“- மாலதி.

“ஓ.. ஓ.. சாரி.”

“என்ன விசேஷம்? ஐயா, ரொம்ப மகிழ்ச்சியா தெரியறீங்க?”

பள்ளி வைரவிழா அழைப்பிதழ் விளம்பரத்தைக் காட்டிய இராமசாமி,

“மாலதி, எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? நாளைக்கு மாலையில திருச்சியில நிகழ்ச்சி. சமூகத்தில, உயர் பதவியில உள்ள மூணே மூணு பேர் சிறப்பு விருந்தினர். அதில ஐயா ஒரு ஆளு. பள்ளி நிர்வாகத்தில்கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க.” மூச்சு விடாது பேசிய இராமசாமியை,

“என்னங்க உங்க பெயர் ரெண்டாவதா போட்டிருக்கு?“ இடைமறித்தாள் மாலதி.

“ஆமா..” ஒற்றைச் சொல்.

“எனக்கு தெரியுங்க. எல்லாத்திலேயும் முதல்நிலை வரணும்னு நினைப்பீங்க. அனா.. இதில..” என மாலதி வாய்விட்டு சிரிக்க,

“மாலதி, சரியா பிடிச்சிட்டியே!“ செல்லமாய் மனைவியின் கன்னத்தை தட்ட,

“உங்கள நல்லா படிச்சிருக்கேன். நமக்கு திருமணம் ஆகி 10 வருஷம் முடியப் போகுது. இப்பவும் உங்கள புரியாம எப்படி?“

“சரி, சரி. மாலதி நாளைக்கு காலையில கிளம்பி திருச்சி வரை போயிட்டு வந்திடறேன். ஓகே.”

உற்சாகமாய்ப் போகும் கணவனைக் கண்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மாலதி.

இராமசாமி தான் வகுப்புத் தலைவன். இதனால், வகுப்பில் அனைவருக்கும் இவன் மேல் ஒரு பயம்.

“டேய், இராமசாமி கிட்ட கவனமா இருக்கணும். பய, எதையாவது வாத்திக்கிட்ட போட்டு விட்டுருவான்.“

இராமசாமிக்கு போட்டி மனோகரன்... தமிழில் மட்டுமே. மற்ற பாடங்களில் அவன் சராசரி. மனோகருக்கு தமிழில் புலமை. இராமசாமிக்கு சிறந்த ஒழுக்கம், பாடங்களைப் படிப்பதில் அபார ஈடுபாடு. நேர்த்தி உண்டு.

“ஆமா.. அந்த மனோகரன் என்ன ஆனான்? எப்படியும் என்னைய மாதிரி பெரிய ஆளாக இருக்க முடியாது.“ மனதுக்குள் எண்ணம்.

மறுநாள், காலையில் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு பயணப்பட்டார் இராமசாமி.

திருச்சி நகருக்கான இணைப்பு சாலை அறிவிப்பு பலகை பார்த்து வண்டியின் போக்கை மாற்றினார் இராமசாமி.

புத்தூர் நாலுரோடு தாண்டியவரின் பார்வை ஏக்கமாய் முடிந்தது. தான் பயின்ற காலத்தில் பார்த்த வீடுகள், கடைகள் காணாமல் போயிருந்தன.

விழா மேடை சிறப்பாய் அலங்கரிக்கபட்டிருந்தது. மைதானம் முழுவதும் சாமியான பந்தல். விழா தொடங்க, பத்து நிமிஷம் பாக்கியிருந்தது.

மூன்று சிறப்பு விருந்தினர்களுக்கு இருக்கை, கூடவே, பள்ளி நிர்வாகிகள் அமர மேலும் மூன்று இருக்கைகள்.

முதலில், அழைக்கப்பட்ட முதல் சிறப்பு விருந்தினர் ஒரு போலீஸ் அதிகாரி.

இராமசாமியிடம் மரியாதை நிமித்தம் வணக்கம் கூற, இவரும் ஆமோதித்தார்.

அடுத்த அரை மணி நேரத்திற்குப் பின், இராமசாமிக்கு பேச அழைப்பு.

மூன்றாம் சிறப்பு விருந்தினர் சினிமா இயக்குனர் சிங்காரம்.

அறிவிப்பைத் தொடர்ந்து, மேடையில், பெரிய ஸ்கிரீனை இரண்டு நிமிடம் இராமசாமி வந்து நிரப்ப,

பல கைதட்டல்களின் பின்னணியில் மேடை ஏறிய இராமசாமி, பேச்சைத் தொடங்கி ஐந்து நிமிடத்திற்குள் குறுக்கிட்டது மீண்டும் இயக்குனர் சிங்காரம் வருகை பற்றிய அறிவிப்பு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உதவி ஆசிரியர்!
Friends

“நமது பள்ளியின் மற்றொரு முன்னாள் மாணவர், புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் சிங்காரம் வருகிறார்” என அறிவிக்க,

கைதட்டலில், அரங்கமே அதிர.. தொழிலதிபர் இராமசாமியின் பேச்சு நின்றுபோனது.

கோபம் கொப்பளிக்க, பேச்சை முடித்துக்கொள்ளும் மனநிலையில் திரும்ப எத்தனித்த தொழிலதிபர் இராமசாமியை,

திரைப்பட இயக்குனர் சிங்காரம் வழிமறித்து வணக்கம் சொல்லி, கூட்டத்தினரைப் பார்த்து அமைதி காக்க வேண்டினார்.

“இங்கு நான் எதற்காக அழைக்கப்பட்டேன்? எனப் புரியவில்லை. எல்லோரும் அவரவர் துறையில் உழைத்ததால் தான், இன்று உங்கள் முன்னால் மேடையேறி உள்ளோம். திரைப்பட இயக்குனரின் வருகை உங்களுக்கு ஒரு திருப்புமுனை என்றால் இவ்விழாவிற்கு அவர் மட்டுமே போதும்.“ காட்டமாய்த் தொடங்கிய இராமசாமி,

தொடர்ந்து,

“சுயமாய், சிந்தித்து செயல்படுங்கள். நாம் ஒரு வேலையில் சேர்வதை விட, நாலு பேர் நம் வேலையில் சேருவது நமக்குப் பெருமை.“

தொடர்ந்த கைதட்டலுக்கு இடையே,

“திரைத்துறை நண்பர் மத்தியில், உங்களிடம் என் பேச்சு பயனளிக்காது. இனியாவது, எல்லோரும் நிகழ்ச்சி நிரல் நேரத்தை கடைபிடித்து வருவது உகந்தது” பேசிய இராமசாமி,

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நந்தினி டீச்சர்!
Friends

இயக்குனர் சிங்காரத்தை திரும்பிப்பார்த்துவிட்டு தன் பேச்சை முடிக்க,

அடுத்த அழைப்பு... இயக்குனருக்கு.

“அனைவருக்கும் வணக்கம். வரும் வழியில், ரசிகர்களின் அன்பு அழைப்பு காரணமாய் எனது வருகை காலதாமதமாகிவிட்டது. மிகவும் வருந்துகிறேன். நான் சாதாரணமானவன். உங்களோடு சரிசமமானவான். நாம் வரலாற்றில் ஒரு பக்கமாய் இல்லாமல் வரலாறாக மாறுவோம். நினைவில் கொள்ளுங்கள்."

“அருமை, அருமை. பாராட்டுக்கள்” பள்ளி முதல்வர் மைக் முன்பு வந்து பாராட்டிக் கைதட்ட, மனமின்றி, தானும் கைதட்டினார் இராமசாமி.

இராமசாமியைப் பார்த்து சிங்காரம், கைகூப்பி வணங்க,

“இராமசாமி ஐயா, நல்ல படிப்பாளி. பெரிய தொழிலதிபர். கடுமையான உழைப்பாளி. அவர் படித்து முடித்ததும், வேலை தொடர்பான தேடலில், தான் ஒரு பைக் விபத்தில் சிக்கி, 15 நாட்கள் நினைவு இழந்த நிலையில், இருந்ததாகவும், முகம் தெரியாத ஒருவர் அவரைக் காப்பாற்றி, இரத்தம் தந்து மருத்துவமனையில் நினைவு திரும்பும் வரை உடன் இருந்து கவனித்ததாகவும் கூறி, அவரை தேடுவதாய் தெரிவித்தார்...”

கேட்டதும், இராமசாமிக்கு படபடப்பு.

“அவர் பார்க்க விரும்பிய மனிதன் நான். இந்த சிங்காரம்...”

முடிக்கும் முன் சரேலென எழுந்த இராமசாமி,

ஓடிப்போய் குனிந்து, சிங்காரத்தை கட்டித் தழுவ,

சில நிமிடங்கள், அரங்கமே அதிர்ச்சியாகி அமைதியானது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அழுக்குப் பிள்ளையார்!
Friends

“நா.. இராமசாமி. இந்த நிலைக்கு, உயர்ந்து உங்க முன்னாடி உயிரோடு நிற்க, சிங்காரம் சார் தான் காரணம். உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன், சிங்காரம்,” என்று இரு கையெடுத்துக் கும்பிட,

அவசரமாய் அதை தடுத்த சிங்காரம்,

“இறுதியா ஒரு முக்கியமான விஷயம். நான் ரொம்ப ஒழுக்கமா, நல்ல உழைப்பாளியா, மக்கள் ரசிக்கிற இயக்குனராக இருக்கேன். உங்க முன்னாடி நிற்கறேன். அதுக்கு நம்ம இராமசாமி ஐயா தான் முக்கியக் காரணம்,“ என இராமசாமியைக் காட்ட,

இராமசாமி உள்பட அரங்கமே இருக்கையின் நுனிக்கு நகர்ந்தது.

“இந்த இராமசாமி தான் எனக்கு ரோல்மாடல். ஆமா, இவன் என் வகுப்புத் தோழன். என் நிஜப் பெயர் மனோகரன்.“

சொன்னதும் தாவி கட்டி அணைத்துக்கொண்டார் இராமசாமி.

“என்னைப் பற்றி சொல்லாமல் இரகசியம் காத்தமைக்கு, பள்ளி நிர்வாகத்திற்கு என் சிறப்பு நன்றி. வணக்கம்.“ சொல்லிவிட்டு,

இராமசாமியின் பக்கம் திரும்பிய சிங்காரம்,

“நம்முடைய நட்பின் ஆழம்.. ஈரம், இன்னும் காயலை. காரணம், நம்முடைய ஈரநெஞ்சம்.“

முத்தாய் முடிக்க,

‘ஓ’ எனப் பேரிரைச்சைலுடன் கொட்டிய மழையில், வருகை தந்தோரின் உடலும், உள்ளமும் ஈரமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com