

ராமன் ஒரு தபால்காரர் (போஸ்ட் மேன்). அவரது பணிக்காலம் இன்றுடன் முடிவு அடைகிறது.
மனைவி சில வருடங்களுக்கு முன் கோரானாவால் இறந்துவிட்டார். தனது ஒரே மகனான முத்துவை கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார்.
முத்து டிகிரி முடித்து அயல்நாடான கனடாவுக்குச் சென்றுவிட்டார்.
முத்து என்றால் ராமனுக்கு உயிர். ராமு என்றால் முத்துவிற்கு உயிர்.
இன்று கனத்த இதயத்துடன்…
தனது கடைசி நாள் தபால்களை டெலிவரி செய்ய ஆரம்பித்தார்.
அவர் மனம் பதட்டம் அடைந்து இருந்தது. ஒவ்வொரு தபாலையும் சரியாக பார்த்துக் கொடுத்தார். இன்னும் சில தபால்கள்தான்.
அவர் நினைவு முத்து மீது. பிறகு தனது ஓய்வு காலம் பற்றிய கவலை.
மிஞ்சிய கடிதம் ஒரே ஒரு தபால். அப்போதுதான் அவர் அது அயல்நாடு கடிதம் என்று உணர்ந்தார்.
அம்மா…!
கடவுளே…!!
அது அவருக்கு வந்த கடிதம்தான் என்று.
வீட்டில் போட்டுவிட்டு தபால் நிலையம் கொடுத்த பிரியாவிடை நிகழ்ச்சிக்குச் சென்றார்.
எல்லோரும் அவரது அயராத உழைப்பைப் போற்றி பேசினார்கள். சக ஊழியர்கள் அவருக்கு ஒரு ஸ்மார்ட் போன் பரிசாகத் தந்தார்கள். அவர் இதுவரை போன் வைத்துக்கொள்ளவில்லை.
அவரைப் பேசச் சொன்னார்கள்.
அவர்… பேச முயற்சி செய்தார். ஆனால், வார்த்தைகள் வரவில்லை.
மீண்டும் மீண்டும் இதே நிலைமைதான். விம்மி விம்மி…
நன்றி... நன்றி...நன்றி என்று ஆனந்தக்கண்ணீரோடு சொல்லி தனது இருக்கையில் அமர்ந்தார்.
அவரது ஞாபகம் முழுக்க முழுக்க தனக்கு வந்த கடிதம் பற்றித்தான் இருந்தது. அது முத்து அனுப்பியது என்று தெரிந்துகொண்டார்.
எல்லோருக்கும் நன்றி தெரிவித்து வீட்டுக்குச் சென்றார். சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். தனது கடைசி தபால் தனக்கு வந்ததை நினைத்து, கவரைப் பிரித்தார்.
கடிதம் படித்தார்.
“அன்புள்ள அப்பா…! இதுதான் என் கடைசி கடிதம்…!” படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன என்று தெரியாமல் கண்ணீர் விட்டு விட்டு… தொடர்ந்து படித்தார்.
“அப்பா… எனது கடைசிக் கடிதம் என்று படித்ததும் அதிர்ச்சியா…?
ஆம். அப்பா நான் உங்களுக்கு எழுதும் கடைசிக் கடிதம் இதுதான். கவலைப்பட வேண்டாம்.
நான் நலம்…!”
“அப்பாடி… !” என்று பெருமூச்சுவிட்டார்.
தொடர்ந்து படித்தார்...
“அப்பா... நான் திரும்ப அங்கு வரப்போகிறேன்…!”
ராமனுக்கு ஷாக்.
தொடர்ந்து படித்தார்.
“அப்பா… எனக்கு வேலை ஒன்றும் போய்விடவில்லை.
நான் கணக்கச்சிதமாக இதுவரை உழைத்தற்குப் பலன் கிடைத்துவிட்டது.
வீட்டில் இருந்தே வேலை செய்ய என்னை அனுமதித்துவிட்டார்கள்.
அதாவது Work from Home.
அப்பா..! இப்போது மகிழ்ச்சியா…? இனி காலம் முழுவதும் நான் உங்களுடன்தான் இருப்பேன்…!”
ராமன் ஆனந்தக்கண்ணீர் வடித்து, தொடர்ந்து படித்தார்.
“அப்பா... நான் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி அங்கு வருகிறேன்.
டிக்கெட் எடுத்துவிட்டேன்…!”
ராமன் காலண்டரைப் பார்த்தார்.
இன்னும் 18 நாட்கள் இருந்தன.
தொடர்ந்து படித்தார்:
“அப்பா.. இனி நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஓய்வு எடுங்கள். நான் என்றும் உங்களைப் பிரியமாட்டேன்...”
ராமன் நிம்மதி அடைந்தார்.
இப்படிக்கு,
உங்கள் உயிர் முத்து…
என கடிதத்தை முடித்து இருந்தார். ராமன் சந்தோஷம் அடைந்தார்.
பிறகு ஒவ்வொரு நாளும் காலண்டரைப் பார்த்து அடுத்த மாத ஒன்றாம் தேதிக்கு எத்தனை நாட்கள் என்று எண்ணி எண்ணிப் பார்த்தார்.
இன்னும் இருந்தது...
மூன்றே மூன்று நாட்கள்..!
இந்தக் கதையை வாசிப்பதன் மூலம் பெற்றோர் - குழந்தைகள் இடையேயான ஆழமான பாசத்தையும், வாழ்வின் எதிர்பாராத இன்பத் திருப்பங்களையும் உணர்ந்து உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மன நிம்மதியைப் பெறலாம். குடும்ப உறவுகளின் மேன்மையைப் புரிந்து கொண்டு, கடினமான சூழ்நிலைகளிலும் அன்பால் வாழ்க்கையை வெல்லும் ஊக்கத்தைப் பெறலாம்.