

கூட்டுக் குடும்பத்தின் நிஜமான பாசத்தை முழுமையாக உணர்ந்து, இரத்த உறவுகளுடன் இருக்கும் பிணைப்பை மேலும் ஆழமாக்கி வாழ்வின் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள உதவும் உத்வேகம் தரும் சிறுகதை.
"அந்த வீணாப்போன பய விடியுமுன்ன எங்க போயித்தொலஞ்சான்?" என்றார் அப்பா.
"ஜிம்முக்குப் போயிருக்கான் வெட்டி முறிக்க..."
இது பெரியண்ணனின் பதில்.
"பார்ரா விடியா மூஞ்சிக்குக்கூட விடியுது..." என்கிறாள் தங்கச்சி நம்பர் 1.
"தறுதலக்கி அது ஒண்ணுதான் கொறச்சல்..." -
தாத்தாவின் கமெண்ட்.
"ஏல இவனே... எங்க போயி தொலஞ்சே...?" அம்மாவின் தேடல்.
"கழுத கெட்டா குட்டிச்சுவரு அது வேற... எங்க போகும் இது...?" - பெரியக்கா
"அம்மா அந்த விளங்காதவன் ஊா் வம்பு பேசிக்கிட்டிருப்பான்..."
தங்கச்சி 2 வின் போட்டு கொடுத்தல்.
"விளங்காத பய... பத்து பைசா சம்பாதிக்கத் துப்பு இல்ல..." - சின்ன பெரியப்பா.
"புள்ளைய வையாதலே நல்ல நாளும் பொழுதுமா...?" - பாட்டி
"ஆமா அந்தக் கடங்காரனுக்கு சப்போர்ட்டுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல..." - சின்னக்கா
"இந்தக் கிழட்டு கிழவிதான் செல்லம் கொடுத்து அவனக் கெடுத்து வச்சிருக்கா..." - சித்தப்பா.
"ஏட்டி சம்முகவடிவு போனைப் போட்டு அந்தச் சேட்டைக்காரப் பெயல வரச் சொல்லு...' - பெரியப்பா
"ஏல கொழுந்தா ரகுராமா சீக்கிரம் வால... இங்க ஆள் ஆளுக்கு உன்ன மானங்கெட்ட வசவு வஞ்சு உரிச்சு உப்பத் தடவுதாக ...
ரகு என்கிற அந்த வீட்டின் ராகு வீடு வந்து சேர்ந்ததும், "ஏல இன்னக்கியாவது குளி..." என்றாள் பெரியக்கா.
"கூடயே உங்க பெரியண்ணனையும் குளிக்கச்சொல்லு... " என்றாள் பெரிய அண்ணி.
குளித்து முடித்து வெளியில் வந்தபோது அத்தனை பேரும் ஹாலில் கூடி நின்று, வரவேற்று கைதட்ட, அம்மா ஆரத்தி எடுத்தாள்.
திகைச்சுப் போனான் ரகு.
"என்னாச்சு வேலைக்கு ஆர்டர் வந்திருக்கா...?
- புரியாமல் முழித்தான்.
"நாசமாப் போச்சு... அது இந்த சென்மத்துல நடக்குமா? வெக்கம் கெட்ட பிறந்த நாள்தான் வருஷா வருஷம் வருது. மானங்கெட்டுப்போயி. வா வந்து இந்த புது டிரஸ்ஸப் போட்டுக்கோ..." என்றார் அப்பா.
"இந்தா இந்த வாட்சை கட்டிக்கோ... இது இந்த வருஷ பிறந்த நாள் கிப்டு..." என்றார் மாமா.
"இந்தா இது காஸ்ட்லி ஷு... மாட்டு..." என்றார் அண்ணன். தாத்தாவின் கிப்டு ATM கார்டை கையில் கொடுத்து, "இன்னைக்கு மட்டும் ஒரு நாள் முதல்வர் மாதிரி, நீ அந்த கார்டுக்கு ஒரு நாள் முதலாளி. இஷ்டத்துக்கு உபயோகிச்சுக்கோ." குட்டீஸ்களும் ஆளுக்கொரு கிப்டு தந்தார்கள். அவர்களே வரைந்த படம், செய்த பொம்மை, பூ வேலை நெய்த கர்ச்சீப் என்று அந்தக் கூட்டுக் குடும்பத்தின் ஒவ்வொருத்தரின் அன்பு மழையிலும் நனைந்தபடி வாங்கி வைத்திருந்த கேக்கை வெட்டி ஒவ்வொருத்தருக்கும் ஊட்டி விட்டான்.
"மத்தியானம் - சைவம். நைட்டுக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல டின்னர். உன் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிரு..." என்றார் அப்பா.
அந்த நாள் இனிய நாள். எம்புட்டு பாசத்தை தேக்கி வைத்து தேன் மழையாகப் பொழிகிறது அந்த கூட்டுக் குடும்ப அன்பு மேகங்கள் என்று நெகிழ்ந்தபடி பெரிய கோயில் குளக்கரை படிகளில் அமர்ந்து நண்பர்களோடு அரட்டையடித்துக்கொண்டிருந்தான் ரகுராமன்.
"அந்த வீணாப்போன பயல எங்க காங்கல...?" என்று மக்யா நாள் காலை தண்டத்தீவட்டி ரகுவை வைய ஆரம்பித்தார் அப்பா...!