

நாட்டு வைத்தியர் முதலியார், அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்து திண்ணையில் அமர்ந்தார். துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
வைத்தியரை பார்த்ததும் எதிர்வீட்டு ராமு அவரை நோக்கி வந்தார்.
''முதலியார்! அம்மா எப்படி இருக்காங்க?'' என்று கேட்டார்.
அதற்கு வைத்தியர், ''நீங்க உள்ளே போய் அந்த ஐயாவை கூட்டிட்டு திண்ணைக்கு வாங்க முதல்லே. அப்புறம்,'' என்றார்.
வீட்டுக்குள்ளிருந்த நாணாவை அழைத்துக்கொண்டு வந்தார் ராமு.
இருவரும் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.
இருவரையும் பார்த்து வைத்தியர் ''நேத்து பார்த்ததற்கு இன்னைக்கு அம்மாவின் நிலைமை மோசமாகத்தான் இருக்கு. நாடித்துடிப்பு கொறைஞ்சிகிட்டே வருது. நாளை காலை வரை கெடு. அதற்குள்ளே முடிஞ்சாலும் முடிஞ்சதுதான். ராமு அய்யா! நீங்க உங்க சைக்கிளை எடுத்துட்டு போயி போஸ்ட் ஆபீஸ் போய் அம்மாவுடைய தம்பிக்கு தந்தி அனுப்பி உடனே வரச்சொல்லுங்க.''
அந்தக் காலகட்டத்தில் தந்தி ஒன்றுதான் தொடர்பு சாதனமாக இருந்தது. தம்பியும் இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அக்காவின் உடல்நிலையைப் பார்த்து கண் கலங்கினார்.
கொஞ்ச நேரம் கழிந்த பிறகு அவரது அக்கா பார்வதி தனது இரண்டு பெண்கள் மூன்று மகன்களை அருகில் அழைத்தார். பிறகு தன் தம்பியை ''மணி இங்கே வா'' என்று கை ஜாடை காட்டினார்.
அவரது கையில் குழந்தைகள் கைகளை வைத்து, ''என் குழந்தைகளைக் காப்பாற்றி. படிக்க வைத்து, முன்னுக்கு கொண்டு வரவேண்டியது உன் பொறுப்பு'' என்றார்.
அவரும் கண்கலங்கியபடியே, ''நிச்சயமாக காப்பாத்துவேன்'' என்று வாக்குறுதி அளித்தார். மறுநாள் விடியற்காலையில் அவரது சகோதரி காலமாகிவிட்டார். அவருடைய மூன்று பெண்களில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகியது. மீதி இரண்டு பெண்கள் கிராமத்தில் இருந்தார்கள். அன்று பிரேத சம்ஸ்காரம், மறுநாள் அஸ்தி கரைத்தல் ஆகிய சாஸ்திரச் சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூட்டி, எதிர் வீட்டில் சாவியை ஒப்படைத்தார்.
தனது அக்காவின் கணவர், குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய கிராமத்துக்கு வந்து விட்டார்.
மணி ஒரு கிராம கர்ணம். ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வேறு எந்த வசதியும் கிடையாது. அவருக்கு மூன்று பெண்கள் மற்றும் மூன்று மகன்கள். தாயார் அவரோடுதான் இருந்துவந்தார்.
இப்போது வீட்டில் அவரது இரண்டு பெண்கள், சகோதரியின் இரண்டு பெண்கள் ஆக நான்கு பெரிய பெண்கள். அவருடைய மகன்கள் மூன்று பேர், சின்னப்பெண் மருமான்கள் மூன்று பேர்கள். ஆக மொத்தம் பதினோரு பேர் குழந்தைகள். அவர், அவரது மனைவி, தாயார், அக்காவின் கணவர் ஆகமொத்தம் 15 பேர்.
தனது ஊருக்கு அருகில் இருந்த டவுனில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து ஏற்பாடு செய்து, அங்கு தனது மகன் இரண்டு பேர்கள் ஒரு பெண் அக்காவின் மகன்கள் இரண்டு பேர்களையும் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து, அவர்களுக்கு சமைத்துபோட அவரது அம்மாவை அங்கு அனுப்பி வைத்தார். அவரது அக்கா இறந்துபோய் பத்து மாத காலத்தில் அக்காவின் கணவர் இறந்துவிட்டார்.
அக்காவின் மூத்த மகன் அரசு பணியில்சேர்ந்து முதல் சம்பளம்கூட வாங்காத சூழ்நிலை. மூன்று ஆண்டுகள் சென்றபின், ஒருநாள் மணியின் மனைவியின் உறவினர் ஒருவர் அவரது பையனுக்கு பெண் கேட்டு சம்பந்தம் பேச வந்தார்.
''மணி, எனது அக்காவின் இரண்டு பெண்கள் கல்யாண வயதில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்காவது கல்யாணம் பண்ணிய பிறகுதான் என் பெண் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்'' என்றார்.
வந்தவர் ''இதுதான் பிரச்னை என்றால் உன் மருமாளுக்கு வரன் நான் பார்த்து தருகிறேன். சரியா?'' என்றார்.
''இன்னைக்கு ராத்திரி ரயிலில் தஞ்சாவூர் போய் அவரது உறவினர் பையனை பார்க்கலாம்'' என்று தஞ்சாவூரில் விடியற்காலம் போய் இறங்கினார்கள்.
உறவுக்காரப் பெண்மணி வாசலில் கோலம் போட்டுகொண்டிருந்தவர், காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தார். தன் வீட்டிற்கு அவரது உறவினரும் வேறு ஒருவரும் வருவதை கண்டு நின்றார். வந்தவர்களை வரவேற்று உள்ளே அழைத்துப் போனார். மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்த தன் கணவரைக் கூப்பிட்டார். அந்த உறவினர்கூட வந்தவரை அறிமுகம் செய்து வைத்தார். ''உங்கள் பையனின் ஜாதகம் வாங்க வந்திருக்கிறோம்'' என்றார். பெண் ஜாதகம் பையன் ஜாதகம் பரஸ்பரம் கைமாறின.
அன்று நாள் நன்றாக இருந்ததால் ஜோசியர் வரவழைக்கப்பட்டார்.
அவரும் ''மிகவும் பொருத்தமான ஜாதகம் மேற்கொண்டு லௌகீக விஷயங்களை நீங்கள் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார்.
அடுத்து பெண் பார்க்கவும் நாள் குறிக்கப்பப்டது. ஒரே நாளில் தன் பெண் மற்றும் மருமாளின் கல்யாணங்களை தெருவடைத்துப் பந்தல் போட்டு ஒரே பந்தலில் வெவ்வேறு முகூர்த்த நேரங்களில் சிறப்பாக நடத்தினார்.
கேட்டரிங் சர்வீஸ் என்பதைக் கேள்விப்படாத காலமது. ஊரில் யாரும் இரண்டு நாளுக்கு அடுப்பு மூட்டக்கூடாது என்றும், கல்யாண சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என அன்புக் கட்டளை போட்டார்.
மூத்த மருமான் மற்றும் அடுத்த மருமாளுக்குக் கல்யாணம், இரண்டு மருமான்களின் உபநயனம், மூன்று பேர்களின் கல்யாணம், இரண்டு மருமாள்களின் வளைகாப்பு சீமந்தம், சீர்வரிசை, மூத்த மருமாள் உள்பட மூன்று பேர்களின் தலா இரண்டு பிரசவங்கள் அதற்கான சீர்வரிசை எல்லாவற்றையும் குறைவின்றி சிறப்பாக செய்தார்.
தன் அக்காவின் மாப்பிள்ளை, தன் மாப்பிள்ளை இருவரையும் சரிசமமாகப் பாவித்து நடத்தினார். மருமாளின் கணவரை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிட்டு வந்தார். எந்த மாப்பிள்ளை வந்தாலும் பகல் அல்லது இரவு எந்த நேரத்தில் வந்தாலும் மாப்பிள்ளை விருந்தோம்பல் உபசரிப்பு தடபுடலாக இருக்கும்.
தனது இரண்டாவது மகள், மூத்த மகனின் திருமணங்களை நடத்தி முடித்து, அப்பாடா என்று நிம்மதியாக உட்கார நினைத்த காலத்தில், ஆஸ்துமா அவரை ஆட்கொண்டது. அதனால் மழை, குளிர் காலங்களில் மூச்சுவிட மிகச் சிரமப்பட்டார்.
தனது சகோதரிக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றிவிட்டேன் என்று நேரில் சொல்லவோ என்னவோ, வயதான தன் தாயாரைப் புத்திரசோகத்தில் ஆழ்த்திவிட்டு, மரணத்தில் தான் முந்திக்கொண்டார்.