

ஒரு சிறிய நகரத்தின் ஓரத்தில் அழகான ஓட்டு வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் சண்முகம் என்பவரும், அவருடைய மனைவி மீனாட்சியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரே மகன் அருண். சண்முகம் சிறிய மளிகைக் கடை நடத்தி, மகனைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தார்.
அருண் படிப்பில் திறமையானவன். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தான். அவனுடைய கனவு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலைக்குச் சென்று நகரத்தில் வசிப்பது. பெற்றோரின் அன்பும், தியாகமும் அவனுக்குத் தெரிந்திருந்தாலும் வயது வளர வளர அவனுடைய எண்ணங்களும் மாறத் தொடங்கின.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் அருணுக்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்தது. முதல் சம்பளம் பெற்றபோது தந்தையின் கையில் பணத்தை வைத்து, ''அப்பா இனிமேல் உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்றான்.
சண்முகத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
''எனக்கு உன் பணம் வேண்டாம் மகனே. நீ எங்களை நினைத்துக்கொண்டிருந்தால் அதுவே போதும்'' என்றார்.
அந்த வார்த்தையின் அர்த்தத்தை அப்போது அருண் முழுமையாக உணரவில்லை.
காலம் நகர்ந்தது. அருணுக்குத் திருமணம் நடைபெற்றது. அவனுடைய மனைவி லாவண்யா நகர வாழ்க்கைக்கு பழகியவள். ஆரம்பத்தில் மாமனார், மாமியாரிடம் அன்பாகப் பழகிய அவள், நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் எளிமையைப் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினாள்.
ஒருநாள் இரவு உணவு மேசையில்,
''இந்த வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு புதிய வீடு வாங்கலாம். உங்கள் அப்பா அம்மாவை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம். நமக்கு வசதியாக இருக்கும்'' என்றாள் லாவண்யா.
அருண் அதிர்ச்சியடைந்தான்.
''அப்படிப் பேசாதே. அவர்கள் என் பெற்றோர். என்னை வளர்ப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா?'' என்றான்.
''நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. நம்முடைய வாழ்க்கையைப் பற்றித்தான் சொல்கிறேன்'' என்றாள் அவள்.
அந்த உரையாடல் சண்முகத்தின் காதில் விழுந்தது. அவர் எதுவும் பேசவில்லை. மனைவியிடம் மட்டும்,
''நம்மால் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது. காலம் மாறிவிட்டது'' என்று கூறினார்.
மீனாட்சியின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
நம் மகன் நம்மை விட்டுவிட மாட்டான். என்ற நம்பிக்கையுடன் இருந்தாள்.
ஒருநாள் சண்முகத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அருண் அலுவலக வேலையில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை. அருகில் இருந்த அயலவர் ராமசாமி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு அருண் மருத்துவமனைக்கு வந்தான்.
மருத்துவர் கூறினார்.
''கவலைப்பட வேண்டாம். அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டோம். ஆனால் தொடர்ந்து மருந்து, ஓய்வு, அன்பான கவனிப்பு தேவை.''
அருண் தந்தையின் அருகில் அமர்ந்தான்.
சண்முகம் மெதுவாகக் கண்களைத் திறந்தார்.
''வந்துட்டியா மகனே?''
''ஆம் அப்பா…''
"அலுவலகத்துக்கு போக வேண்டாமா?"
அந்த நிலையிலும் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் மகனின் வேலையைப் பற்றிக் கேட்ட தந்தையைப் பார்த்த அருணின் மனம் உடைந்து.
அவன் தந்தையின் கையைப் பிடித்தான்.
''அப்பா… என்னை மன்னிச்சிடுங்க.''
சண்முகம் சிரித்தார்.
''எதற்காக?''
''உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக…''
''மகன் தன் பெற்றோரைப் புரிந்துகொள்வதற்கு காலம் ஆகலாம். ஆனால் பெற்றோர் மகனைப் புரிந்துகொள்ள ஒரு நொடியே போதும்'' என்றார் சண்முகம்.
அந்த வார்த்தைகள் அருணின் மனத்தில் ஆழமாகப் பதிந்தன.
அன்று இரவு மருத்துவனையின் வழித்தடத்தில் தனியாக அமர்ந்திருந்த அருண் தனது குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தான்.
தான் பள்ளிக்குச் செல்லும்போது மழையில் குடைபிடித்துக் கொண்டு வந்த தந்தை..
தான் தேர்வில் தோல்வியடைந்தபோது தன்னம்பிக்கை ஊட்டிய தாய்.
தனக்குப் புத்தகம் வாங்குவதற்காகத் தந்தை புதிய சட்டை வாங்காமல் இருந்த நாட்கள்.
தான் கல்லூரியில் சேருவதற்காக தாய் தன்னுடைய நகையை அடகு வைத்த நாள்…
எல்லாமும் அவன் கண்முன்னே தோன்றின.
இவர்கள்தான் என் வாழ்க்கையின் முதல் ஆசிரியர்கள். இவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதைதான் என் மனிதநேயத்தின் அடையாளம் என்று அவன் மனத்திற்குள் கூறிக்கொண்டான்.
மறுநாள் காலை அவன் வீட்டிற்குத் திரும்பினான்.
லாவண்யாவிடம் அமைதியாகப் பேசினான்.
''நம்முடைய வாழ்க்கையில் வசதி முக்கியம். ஆனால், நம்மை உருவாக்கியவர்களை மறந்துவிட்டு கிடைக்கும் வசதிக்கு என்ன அர்த்தம்?''
லாவண்யா அமைதியாக இருந்தாள்.
''நாளை நாமும் வயதாகப் போகிறோம். நம் குழந்தைகள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதே மரியாதையை இன்று நம் பெற்றோருக்குக் கொடுக்க வேண்டும்.''
அவள் தலையைக் குனிந்தாள்.
''நான் தவறு செய்துவிட்டேன். அம்மாவிடமும் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்கிறேன்'' என்றாள்.
சில நாட்களுக்குப் பிறகு சண்முகம் மருத்துவனையிலிருந்து வீடு திரும்பினார்.
வீட்டு வாசலில் நின்றிருந்த லாவண்யா அவரை வரவேற்றாள்.
''அப்பா… உள்ளே வாங்க…''
சண்முகம் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.
லாவண்யா அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
''இனி இந்த வீடு உங்களுடைய வீடு மட்டும் இல்லை அப்பா.. எங்களுடைய வீடும் கூட, நீங்கள் இல்லாமல் இந்த வீட்டிற்கு அர்த்தமே இல்லை'' என்றாள்.
மீனாட்சியின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் வழிந்தது.
அன்று இரவு குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.
சண்முகம் மெதுவாகச் சொன்னார்.
''உறவு என்பது ஒரே வீட்டில் வாழ்வது மட்டும் அல்ல. ஒருவருடைய உணர்வுகளுக்கு ஒருவா் மதிப்பளிப்பதுதான் உண்மையான உறவு."
அருண் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான்.
அந்த நாளிலிருந்து அந்தக் குடும்பத்தில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது. பெரிய வீடு, விலையுயர்ந்த பொருட்கள், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றைவிட அன்பு, மரியாதை, விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவையே குடும்பத்தின் செல்வமாக மாறின.
காலம் பலவற்றை மாற்றலாம். மனிதர்களின் வயதை மாற்றலாம். அவர்களின் வசதிகளை மாற்றலாம். ஆனால் உறவுகளின் மதிப்பை நாம் காப்பாற்றினால் மட்டுமே வாழ்க்கையின் அர்த்தம் மாறாமல் இருக்கும்.