சிறுகதை: இல்லை என்றாகும் உறவு!

சொந்த மகளின் காதலுக்குத் தடை சொன்ன சொந்தங்கள்: கலங்காத தந்தையின் சோகமான சிறுகதை!
சிறுகதை | Brothers
சிறுகதை | BrothersImage credit: Gemini AI
முகிலை இராசபாண்டியன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் முகிலன் குடியிருப்பு சொந்த ஊர். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகவும் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றவர். ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், ஐந்து நாவல்கள், மூன்று நாடகநூல்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை படைத்தவர். கல்கி, கலைமகள், கணையாழி, தினமணி கதிர், தாய் முதலான இதழ்களில் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. கல்கி ஆன்லைனிலும் தற்போது தடம் பதித்துள்ளார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

செல்லப்பனின் இரண்டாவது மகள் ஷீலாவுக்குக் கல்யாணம். எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.

இன்னும் சொந்தக்காரர்களுக்குப் பத்திரிகை கொடுக்கவில்லை என்று நினைக்கும்போது செல்லப்பனுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நண்பர்கள், தூரத்துச் சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டார். தன்னுடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்கா முதலானவர்களுக்கும் சித்தப்பா, மாமா முதலானவர்களுக்கும் இன்னும் கொடுக்கவில்லை.

ஒவ்வொரு நாளும் இந்த ரத்த உறவுகளுக்குப் பத்திரிகை கொடுக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால் எப்படிக் கொண்டுபோய்க் கொடுப்பது என்றுதான் தெரியவில்லை.

போன வெள்ளிக்கிழமை, அவர்களின் குலதெய்வக் கோயிலில் பத்திரிகையை வைத்து, சாமி கும்பிடுவதற்காகப் போனார். பூசாரி தங்கமுத்து, அவரது சித்தப்பா மகன்தான்.

‘சாமிக்கு முன்னால வைக்கமுடியாது’ன்னு சொல்லிவிட்டார்.

அவருடன் போயிருந்த அவரது மனைவி தங்கம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. அவரது வாயைப் பொத்தி அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் செல்லப்பன்.

அந்தக் கோயிலைக் கட்டும்போது முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தது செல்லப்பன்தான்.

அப்போது அவர்களுக்குப் பணம் பெரிதாகத் தெரிந்தது. செல்லப்பனும் வேண்டியவராக இருந்தார்.

இப்போது செல்லப்பன் வேண்டாதவர் ஆகிவிட்டார்.

மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அவர்களின் தேவைக்குத் தகுந்த மாதிரி, முகங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

‘யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. நேரில் போய்ப் பத்திரிகை கொடுக்க வேண்டியது எனது கடமை’ என்று நினைத்த செல்லப்பன் காலையில் எட்டு மணிக்குப் புறப்பட்டார்.

முதலில் அண்ணன் வீட்டுக்குத்தான் போனார்.

பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, காலிங் பெல்லை அழுத்தினார்.

அவரது அண்ணன் முத்தையாதான் வந்து கதவைத் திறந்தார்.

பத்திரிகையுடன் செல்லப்பன் நிற்பதைப் பார்த்தபிறகு, எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டார்.

கதவுக்குப் பக்கத்தில் வந்தார் செல்லப்பன்.

அடுக்களையிலிருந்து வெளியே வந்த அண்ணியும் ‘வா’ என்று கூப்பிடவில்லை.

சிறுகதை | A man with invitation
சிறுகதை | A man with invitationImage credit: Gemini AI

“அண்ணாச்சி! பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். பத்திரிகை குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்!”

முத்தையா பதில் சொல்லவில்லை.

ஹாலின் நடுவில் போடப்பட்டிருந்த சோஃபாவில் உட்கார்ந்து, சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஹாலின் ஓரத்தில் கிடந்த மேஜையின் மேல் பத்திரிகையை வைத்தார் செல்லப்பன்.

“ஒரு பயலும் இங்க பத்திரிகை வைக்கப்புடாது...” என்று வேகமாகச் சத்தம் போட்டார் முத்தையா.

பத்திரிகையை வைத்துவிட்டு உடனே திரும்பினார் செல்லப்பன்.

அவர் வீட்டு வாசலைத் தாண்டுவதற்கு முன்பாகவே பத்திரிகை, தெருவில் போய் விழுந்தது.

அதைக் கையில் எடுத்துக்கொண்டு பைக்கில் ஏறினார்.

இதே அவமானம்தான் எல்லா வீடுகளிலும் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரிந்தது. எந்த அவமானமாக இருந்தாலும் தாங்கித்தான் ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் தம்பியின் வீட்டுக்குப் போனார்.

வீட்டில் தம்பியின் மகன் மட்டும்தான் இருந்தான்.

உள்ளே போனதும் அவனிடம் பத்திரிகையைக் கொடுத்தார்.

“அப்பாகிட்ட குடுத்திடுங்க பெரியப்பா” என்றான் தம்பி மகன் சேகர்.

“அப்பா வீட்டில இல்லல்லியா மக்ளே! அதுதான் ஒனக்கிட்ட தந்தேன்!” என்று சொன்ன செல்லப்பனிடம் எதிர்த்துப் பேசுவதற்குச் சேகர் விரும்பவில்லை.

அவருக்கு முன்னாலேயே பத்திரிகையைப் பிரித்துப் படித்தான்.

ஒன்றும் சொல்லாமலேயே நின்றான்.

“சரி மக்ளே! எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திடுங்க” என்றார்.

பதில் சொல்லாமல் நின்றான் சேகர்.

ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் அவமானம்தான் கிடைத்தது. இதை எல்லாம் எதிர்பார்த்துத்தான் அவர் இந்த வேலையில் இறங்கியிருந்தார்.

காலையில் கல்யாணம் நல்லபடியாக நடந்தது. சொந்தக்காரர் என்று யாரும் வரவில்லை. மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த எல்லாச் சொந்தக்காரர்களும் வந்திருந்தார்கள். கல்யாண மண்டபம் முழுவதும் மாப்பிள்ளை வீட்டுச் சொந்தங்களால் நிறைந்திருந்தது.

செல்லப்பனின் மனைவி குடும்பத்திலிருந்து ஒன்றிரண்டு பேர் வந்திருந்தார்கள். செல்லப்பனின் நண்பர்களில் ஒன்றிரண்டு பேரும் மணப்பெண் ஷீலாவுடன் வேலை பார்க்கும் பெண்கள் கொஞ்ச பேரும் வந்திருந்தார்கள்.

அதே மண்டபத்தில் மாலையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதும் சொந்தக்காரர்கள் யாரும் வரவில்லை. செல்லப்பனின் வியாபார நண்பர்கள் நூறு பேர் வந்திருப்பார்கள். ஷீலாவுடன் படித்த தோழிகளும் வேலை பார்க்கும் பெண்களும் வந்திருந்தார்கள். மீதி எல்லோரும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்தான்.

செல்லப்பனின் மனத்திற்குள் வருத்தம் இருந்தாலும் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விலை!
சிறுகதை | Brothers

செல்லப்பனின் மூத்த மகளும் மருமகனும் கூட அந்தக் கல்யாணத்திற்கு வரவில்லை. கல்யாணத்திற்கு ஒரு நாளைக்கு முன்னால் மூத்த மகளின் வீட்டிற்குப் போயிருந்தார் செல்லப்பன்.

முன் அறையிலேயே உட்கார வைத்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்.

தன் மகள் என்ற பாசம் அவரைச் சூழ்ந்திருந்ததால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டார்.

கல்யாணத்திற்குச் செய்ய வேண்டிய சீர்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் முறையாகச் செய்தார் செல்லப்பன்.

கல்யாணம்முடிந்த கையுடன் கணவன் வீட்டிற்குப் போய்விட்டாள் ஷீலா.

சோர்ந்துபோய் உட்கார்ந்தார் செல்லப்பன்.

ராத்திரி ஒன்பது மணியிருக்கும்.

யாரோ வந்து காலிங் பெல்லை அழுத்தினார்கள். தங்கம்மாள்தான் போய், கதவைத் திறந்தார்.

ஊர்க் குடிமகன்தான் வந்து நின்றான்.

“அய்யா...! ஊருக்குள்ள ஒரு கட்டுப்பாடு போட்டிருக்காங்களாம்...”

நிமிர்ந்து பார்த்தார் செல்லப்பன்.

“ஒங்க வீட்டு நல்லது கெட்டது எதையும் நான் நடத்தி வைக்கப்புடாதுன்னு சொல்லியிருக்காங்க...”

“ஒண்ணும் பிரச்னை இல்லியே! இன்னைக்கிக்கூட நீ ஒண்ணும் பண்ணலியேப்பா! காலையில கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான் நடத்தினாங்க...”

“ஆமாய்யா...”

“அப்பிடியே இருந்துட்டுப் போறேன்...”

“இதைச் சொல்லிடச் சொன்னாங்க...”

“வேற ஏதாவது சொன்னாங்களா...?”

“இல்லிங்க அய்யா...” என்று இழுத்தான் குடிமகன்.

“நான் செத்துப் போனாகூட எந்தக் காரியத்தையும் நீ செய்யக்கூடாதுன்னு சொன்னாங்க. அவ்வளவுதானே...! அதெல்லாம் பரவாயில்ல. நீ போய்ட்டு வா...!” என்றார் செல்லப்பன்.

குடிமகனிடம் வீறாப்பாகப் பேசியிருந்தாலும் செல்லப்பனின் உள்ளத்திற்குள் ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட முள் குத்துவதைப்போல் உணர்ந்தார். ஒரு பெண், ஒரு ஆணைக் கல்யாணம் செய்துகொண்டாள். இந்தக் கல்யாணத்திற்கு இந்த ஊரில் உள்ளவர்களும் சொந்தக்காரர்களும் ஏன் இவ்வளவு எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் என்று நினைக்கும்போது மனித சமுதாயம் போகும் திசையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அரைகுறைத் தூக்கத்துடன் அன்றைய இரவு கழிந்தது.

அதிகாலையிலேயே சேகர் வந்து நின்றான்.

“என்ன சேகர், உள்ளே வா!” என்று அழைத்தார் செல்லப்பன்.

அவன் உள்ளே வரவில்லை.

“நீங்க தரவேண்டிய ஒரு இலட்சம் ரூபாயையும் தரச் சொன்னாங்க!”

“நேற்றே ரூபாயைத் தயாரா எடுத்துவச்சிருக்கேன். நான் வாங்கினதுபோல நானே வந்து பத்துமணிவாக்கில தாறேன்னு சொல்லு...”

“நானே வாங்கிட்டுப் போயிடுறேன்.”

“ஏன்? நான் எடுத்துட்டு வரக்கூடாதா?”

“இல்லை...”

“பத்து மணிக்கு ரூபாய் வந்து சேரும்னு போய்ச் சொல்லு...”

தலையை ஆட்டியபடியே போனான் சேகர்.

பத்து மணிக்குத் தம்பி வீட்டுக்குப் போனார் செல்லப்பன்.

அவர் வருவதைப் பார்த்தபிறகும் பார்க்காதவர்போல் நின்றார் தம்பி செல்வன்.

“செல்வா...! ரூவா கொண்டு வந்திருக்கிறேன்...”

“ம்...ம்...ம்...!”

“ஏன்டே...! எனக்க மொகத்தைக் கூடப் பாக்க முடியாத அளவுக்கு நான் பாவி ஆயிட்டேன் இல்லை...”

சிறிது நேரம் அங்கே அமைதி.

செல்லப்பன்தான் தொடர்ந்து பேசினார்.

“எனக்க பொண்ணு வேற சாதிக்காரனைக் கல்யாணம் பண்ணிட்டா! அதுனால நானும் வேற சாதிக்காரன் ஆயிட்டேன் இல்லியா? நீ எனக்குத் தம்பி இல்லன்னு ஆயிடும் இல்லியா...?”

திரும்பிப் பார்த்தார் செல்வன்.

“ஷீலா விரும்பின பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தது ஒங்க எல்லாருக்கும் தப்பாப் போச்சு. வேற எவனையும் அவ கல்யாணம் பண்ணிக்காம இருந்தாலும் இருக்கலாம். வேற சாதிக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் தப்பு.”

“நீங்க கல்யாணம் பண்ணி வைக்காம விட்டிருக்க வேண்டியதுதானே!”

“அவளே அவனோட கல்யாணம் பண்ணிட்டுப் போய்ட்டா என்னுடைய மகள் இல்லியா? ஒனக்கு அண்ணன் மகள் இல்லியா?”

“வேற ஒரு சாதிக்காரப் பயலோட போன அவளை நான் எப்பிடி எனக்க அண்ணன் மகள்னு சொல்லுவேன்?”

“ஒரு பொண்ணு, வேற சாதிக்காரன கல்யாணம் பண்ணிட்டா அவ வேற யாரோ ஆயிடுறா...! கல்யாணப் பத்திரிகை கொண்டு வந்து தந்த நான் யாரு? எனக்கு அப்பன் யாரு? அம்மா யாரு? அப்பா, அம்மா, அண்ணன் இப்பிடி எத்தனையோ ஒறவு இருந்தபெறகும் ஒரே ஒரு ஒறவு மாறிப்போச்சின்னு நீ கல்யாணத்துக்கு வரல்லை...! இப்ப எனக்க மொகத்தைப் பாக்கவே மாட்டேங்குற...! என்னால அப்பிடி இருக்க முடியாதுப்பா.

நீ என்னை வெறுத்தாலும் நீ எனக்குத் தம்பிதான். அவளோட வேலை பாக்கிற ஒருத்தனைப் பிடிச்சிப் போயிப் பழகிட்டா.

அப்பிடிப் பழகுன பெறகு, வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்றது அவளுக்குப் பிடிக்கல்லை. அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா. அதுதான் எனக்குச் சரின்னு தோணுச்சு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: க்ளிக்... க்ளிக்... க்ளிக்!
சிறுகதை | Brothers

ஒருத்தன்கிட்ட பழகிக்கிட்டு, வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்றதுதான் சரின்னு ஒனக்கும் அண்ணனுக்கும் எல்லாருக்கும் தோணியிருக்கு. எது நல்ல பழக்க வழக்கம்னு இப்ப முடிவெடுக்கவேண்டாம். அவ தனக்கு எது நேர்மைன்னு தெரிஞ்சிருக்கோ அதைச் செய்திருக்கிறா. அவ நல்லா இருப்பா. எனக்கு அது போதும்.

ஒங்கிட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால வாங்கின பணம் இந்தா இருக்கு. இந்தப் பணத்தை நான் சம்பாதிக்கல்லை. வேற சாதிப் பையனைக் கல்யாணம் பண்ணுன என் பொண்ணுதான் சம்பாதிச்சா. இந்தப் பணத்துக்கு ஏதாவது சாதி வேறுபாடு இருக்குதா தம்பி. அப்படி நீ வேறுபாடு பாத்தா இதை எடுத்துக்காத. நான் இங்க வச்சிட்டுப் போறேன்,” என்று சொன்ன செல்லப்பன் அங்கே நிற்காமல் திரும்பிவிட்டார்.

‘பணத்துக்கு ஏதாவது சாதி வேறுபாடு இருக்குதா தம்பி’ என்று அண்ணன் சொன்னது செல்வனின் காதுக்குள் அப்படியே நின்றது. செல்வனுக்கு ஏதோ புரிந்ததுபோல் தெரிந்தது. இந்தப் புரிதலைக் காலம் நிச்சயம் கொடுக்கும்.