சிறுகதை: விலை!

பொருளாதாரச் சுமையை மறைத்து நண்பனின் கண்ணீரைத் துடைத்த மனிதனின் சிறுகதை.
சிறுகதை | A man helps his friend
சிறுகதை | A man helps his friendImage credit: Gemini AI
சகா

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

“மனசே சரியில்லை கலா.. கோயிலுக்குப் போவோமா..?” மனைவியிடம் கவலையுடன் கேட்டார் வைகுண்டம்.

கலா காரணம் கேட்கவில்லை. கடவுள் தரிசனம் முடித்துவிட்டு அவரே சொல்லுவார் என அவளுக்குத் தெரியும்.

“சரிங்க போகலாம்” என பதில் சொல்லிவிட்டு வேகமாக சமையலறையை ஒழித்துவிட்டு, “ஒரு பத்து நிமிசம்..” என்றபடி படுக்கை அறைக்குள் நுழைந்தாள். “எந்தக் கோயிலுங்க..?”

வைகுண்டம் யோசித்தபடி “ஏதாவது அம்மன் கோயில் போகலாமா..? ம்ஹூம், இன்னைக்கு என்ன சனியா..? சரி ஆஞ்சநேயர் கோயில் போவோம்..”

முடிவெடுத்தவராகத் தலையாட்டினார். “கார்லேயே போயிட்டு வந்துடுவோம்..”

கோயிலைக்கூட சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாத குழப்பமான மனநிலையில் கணவர் இருப்பதை உணர்ந்தாள் கலா.

தான் சொன்ன மாதிரி பத்து நிமிடத்தில் புடவை மாற்றிக்கொண்டு தலையை மேலாக சீவிக்கொண்டு “ரெடிங்க..” என்றபடி வந்து நிற்க..

தலைசாய்த்து சோஃபாவில் அமர்ந்திருந்த வைகுண்டம் எழுந்தார்.

“மாலை அங்கேயே வாங்கிப்போம் கலா..”

இருவரும் வாசலுக்கு வந்து கதவை மூடும் நொடியில்.. மெயின் கேட் தாழ் நீக்கும் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்க்க.. வைகுண்டத்தின் பால்ய கால சினேகிதர் அஹமதுல்லா தயக்கத்துடன் அங்கே நின்றிருந்தார்.

“வாடா அஹமது...” மலர்ந்தார் வைகுண்டம்.

“ஸாரிடா... ஜோடியா எங்கேயோ கிளம்பிட்டீங்க... போயிட்டு வாங்க, நான் அப்புறம் வர்றேன்..”

“சும்மா வாடா..”

“வாங்கண்ணா..”

கிளம்பினவர்கள் உள்ளே வந்தார்கள்.

தயங்கின அஹமது சுதாரித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

“சர்க்கரை கம்மியா டீ தானேண்ணா...”

“ம்.. ஆமா..”

இதையும் படியுங்கள்:
திகில் சிறுகதை: பொம்மை!
சிறுகதை | A man helps his friend

“வசதியா உட்கார்றா. வீட்டுல எல்லோரும் நல்லாயிருக்காங்களா..? ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கறோம்ல்ல. என்ன விசேசம்…?”

தயங்கினார் அஹமது. “ம்..? ம்..”

“நம்ம கல்லூரி மக்கள் யாரையாவது சந்திச்சியாடா..?”

“உதயசந்திரனை போன வாரம் பார்த்தேன். நடராசுவை நேத்து கடைவீதியில சந்திச்சேன்.”

“ஓ, நல்லாயிருக்காங்கதானே..? வாட்ஸ்அப் க்ரூப் எப்படிப் போகுது.

ரொம்ப நாள் ஆச்சு அந்தப் பக்கம் வந்து. ஃபார்வார்ட் மெசேஜ்களா குவிஞ்சு கிடக்குமே..”

“ஆமா. முக்கியமான விசயத்தை மட்டும் போடுங்கடான்னு சொன்னாக் கேட்க மாட்டேன்றாங்க. குப்பைத் தொட்டி மாதிரி கண்டதையும் கொட்டறாங்க.. எத்தனை தடவைதான் சொல்றது..”

சிரித்தார் வைகுண்டம்.

டீ வந்தது. “உனக்குடா..”

“நான் இப்பத்தான் குடிச்சேன். நீ எடுத்துக்குடா..”

தயக்கத்துடன் ஒரு வாய் அருந்தினார் அஹமது.

“பாப்பா காலேஜ் படிப்பு எப்படிப் போகுதுடா. இது மூணாவது வருசம்தானே..?”

“ஆமாடா. அது விசயமாத்தான் ஒரு உதவி கேட்டு..”

கலா நாகரீகம் கருதி மெல்ல நகர்ந்தாள்.

“என்னடா.. சொல்லு..”

“வந்து.. காலேஜ் ஃபீஸ் கட்டணும்டா. மொத்தம் ஒன்றரை லட்சம்! கொஞ்சம் போதலை. இருபதாயிரம் குறைபடி. உன்னால.. நீ ஏதாவது உதவ முடியுமா.. ஸாரி உன் சூழ்நிலை என்னன்னு தெரியாம..”

யோசித்தார் வைகுண்டம்.

“ரெண்டு மாசத்துல முகூர்த்த சீசன் வரும்டா. ரொட்டேசன்ல பணத்தைத் திருப்பித் தந்துர்றேன்.”

புன்னகைத்தார் வைகுண்டம். “என் தயக்கத்துக்கு அது காரணம் இல்லடா. கையில அத்தனை பணமா இல்லை. ஓபன் செக் தர்றேன். இந்தியன் வங்கியில போய் எடுத்துக்கறியா. உன் ஆதார் நகல் கேட்பாங்க..”

“இருக்குடா.. கொடுத்துடலாம்.”

“சரி டீயைக் குடி.. ஆறுது பாரு..”

வைகுண்டம் எழுந்து டீவியின் கீழே இருந்த செல்ஃப் திறந்து காசோலை புத்தகம் எடுத்தார். “பேர் எழுதிக்கடா..” என்றபடி தொகை எழுதி கையெழுத்து போட்டு கிழித்துத் தந்தார்.

அஹமது பவ்யமாக வாங்கிக்கொண்டார். “ரொம்ப தேங்க்ஸ்டா. இந்த உதவியை..”

சிரித்தார் வைகுண்டம். “சீக்கிரம் கிளம்பு இன்னைக்கு சனிக்கிழமை!

பேங்க் அரை நாள்தான்..”

“ஆமா ஆமா..” வேகமாக எழுந்தார். “நான் வர்றேன்டா..”

கலா உள்ளேயிருந்து வர.. “டீ வழக்கம்போல அருமைம்மா. நான்கிளம்பறேன்.”

அஹமதுல்லா கிளம்பினார்.

“என்னங்க நம்ம நகரலாமா..?”

ஏதோ யோசனையிலிருந்தவர் பதில் பேசவில்லை. கலா நெருங்கி வந்து கணவர் அருகில் அமர்ந்தாள். ஆதரவாக கை பற்றினாள். பார்வையில் கேள்விக்குறி. ‘என்னாச்சுங்க..?’

சிறுகதை | A husband and wife
சிறுகதை | A husband and wifeImage credit: Gemini AI

“கம்பெனியில நிதி நெருக்கடி கலா. பொருளாதார நிலைமை சரியில்லை. ஆர்டர் டெலிவரி பண்ணின இடத்திலிருந்து சொன்ன நேரத்துக்கு பணம் இன்னும் வரலை. மெசின் ஒண்ணு போன வாரம் ஃபால்ட்டாகி ரொம்ப செலவு வெச்சுடுச்சு. புது ஆர்டர்க தள்ளிப் போகுது..”

கலா குழப்பத்துடன், வியப்புடன் கணவரைப் பார்த்தாள்.

அவளது பார்வையைப் புரிந்துகொண்டவர் புன்னகைத்தார். “இத்தனை சிரமமான சூழல்லேயும் இருபதாயிரம் ரூபாயைத் தூக்கி இவன் கடன் கொடுத்திருக்கானே..ன்னு நினைக்கிறே! அதானே..”

தலையாட்டினாள்.

“உன்கிட்டே புலம்பினதையெல்லாம் அவன்கிட்ட சொன்னா.. அவன் அதை நம்புவான்னு நினைக்கிறியா கலா..?”

யோசித்தவள் “கண்டிப்பா மாட்டாரு. நீங்க பணம் தர்றதை தவிர்க்க பொய் சொல்றீங்கன்னு நினைப்பாரு.”

“அதனாலதான் என் கஷ்டத்தைச் சொல்லல. இதெல்லாம் நாம பணக்காரனா இருக்கிறதுக்காக நாம் கொடுக்கிற விலை. பணக்காரனுக்கும் தேவைகள் இருக்கும், சிரமங்கள் இருக்கும்ன்னு அத்தனை சீக்கிரம் யாரும் நம்பறதில்லை. சொன்னாலும் ஏத்துக்க அத்தனை சுலபத்துல மனசு வராது. அது ஒருவிதமான மனோபாவம்.”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: க்ளிக்... க்ளிக்... க்ளிக்!
சிறுகதை | A man helps his friend

பதில் சொல்லத் தெரியாமல் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“விடு, இதெல்லாம் எனக்குப் பழகிடுச்சு. நீ கிளம்பு, நாம கோயிலுக்குக் கிளம்புவோம்..”

“கவலைப்படாதீங்க, நம்ம கஷ்டத்தை ஆஞ்சநேயர் சரி பண்ணிடுவாரு..”

ஆறுதலாக சொன்ன மனைவியைப் பார்த்து நிம்மதியுடன் புன்னகைத்தார் வைகுண்டம்.