

இப்போது தேர்தல் திருவிழா. மற்ற மாநிலங்கள் உற்று நோக்க செய்யும் அளவிற்கு ஒரு காரியத்தை எங்க ஊர் கவுன்சிலர் செய்தார்.
கவுன்சிலர் குசேலனுக்கு பலமுனை போட்டிகள் இருந்தாலும், அவர் தன்னுடைய நேர்மையால், பழக்க வழக்கங்களால், பல சேவைகளை செய்து தெருவாசிகளின் குடும்ப விஷயங்களிலும் நல்லது, கெட்டதுகளிலும் பங்கேற்று சேவை செய்ததனால், இந்த முறையும் தனது சுயேட்சை சின்னமான 'வேஷ்டி சட்டை' சின்னத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு போட்டி என்றால் அது அவராகத் தான் இருக்க முடியும். கடந்த 7 முறைகளாக தன்னுடைய ward இல் வெற்றி பெற்றதனால் பிரதான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் அவருக்கு எதிராக நிற்பதையும் நிறுத்திக் கொண்டன.
ஆனால் இந்த முறை அவருடைய சித்தாந்தங்களுக்கும், சேவைகளுக்கும் ஒரு மாற்றாக கஜேந்திரன் ஒரு பெரிய முன்னெடுப்பை கொண்டு வந்து எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்து 'ஒரு விரல் புரட்சி' ஏற்படுத்திக் கொண்டு இருந்தார் என்றால் அது மிகையாகாது !
இது எல்லா தேசிய ஊடகங்களிலும், பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்தது. எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டுதான் இதை பார்த்தார்கள்.
உள்ளூர் ஊடகங்கள் தொடர்ந்து 30 நாட்களாக அவரை பேட்டி எடுப்பதே வேலை என இருந்தன.
அவர் ஒரு 'வார்டு கவுன்சிலர்'கான போட்டியில் பங்கு பெறவில்லை! மாறாக ஒரு புதிய சித்தாந்தத்தையும் , ஒரு புதிய படைப்பையும் தன்னுடைய மானுடத்துக்கு பரிசாக அளிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்று எல்லா ஊடகங்களும் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
அப்படி என்னதான் அவருடைய சித்தாந்தம் என்பதை இப்போது பார்ப்போம்...
******************
அவருடைய தேர்தல் அறிக்கை இவ்வாறாக பிரசுரிக்கப்பட்டு தன் மக்களுக்கு கொடுத்திருந்தார்.
அன்பான தெருவாசிகளே !!
உங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
என்னுடைய ஆலோசனைகளை ஏற்று என்னுடன் உழைத்தற்கு நன்றி.
அன்பான வேட்பாளர்களே !!
தயவுசெய்து எங்கள் தெருவை பாருங்கள்.
இங்கே 50 குடும்பங்கள் இருக்கின்றன.
நாங்கள் சில சத்தியங்களுக்கும், உண்மைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் உட்பட்டு ஒரு நடைமுறை சித்தாந்தத்தை முன்னெடுத்துள்ளோம். அவைகளை உங்களிடம் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம்.
1. இங்கே "மக்கும்" மற்றும் "மக்கா" குப்பைகள் சரியாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்காக துப்புரவு பணியாளர்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது.
2. நாங்கள் எல்லோரும் "நெகிழி" பயன்பாட்டை 100% புறக்கணித்து உள்ளோம்.
3. எங்கள் தெருவில் "தண்ணீர் குழாய்கள்" உடைபட்டு வீணாவதை கண்டால், அதை உடனடியாக நாங்களே சரி செய்து ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறோம்.
4. நாங்கள் "நுகர்வு கலாச்சாரத்திற்கு" எதிரானவர்கள்.
5. என்னுடைய தேவைகளுக்கே முன்னுரிமை.
6. எங்களுடைய விருப்பம் அல்லது ஆசை அல்லது பேரவா என்னவென்றால், அடுத்தவனைப் பார்த்து பொறாமைப்படுவதை முற்றிலுமாக அகற்றுவது.
7. அதற்காக எங்கள் பிள்ளைகளை முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்க வைப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
8. மேலும் அங்கே பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அந்தப் பள்ளியின் மேம்பாட்டிற்காகவும் ஒவ்வொரு குடும்பமும் தன்னால் முடிந்த உதவியை முன்வந்து செய்வதால் எங்களுக்கு இது சாத்தியமாக உள்ளது.
9. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா குழந்தைகளுக்கும் மத, இன, மொழி வேறுபாடு இன்றி ஒரு சமத்துவமான சமுதாயம் படைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்க முன் முயற்சி எடுக்கப்பட்டு அதன் காரணமாக 'வாசிப்பு பழக்கத்தை' சிறார்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.
அரசிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்:
a. நல்ல பாதை வசதி
b. பாதை தோறும் மரங்கள் வளர்க்க அனுமதிப்பது.
C. எங்கள் தெருவிற்கு ஒரு 108 ஆம்புலன்ஸ் வசதி ( 24*7 மருத்துவ வசதி)
d. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் விளையாட ஒரு பூங்கா.
இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் தொண்டன் கஜேந்திரன் .
************
இந்த அறிக்கை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டிற்கு தெரிய வந்ததால் அரசு அதிகாரிகள் உடனடியாக வந்து பல உண்மைகளை கண்டறிந்து இந்த ஒரு செயலாக்கத்தை ஒரு "National Agenda" வாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்று எங்களிடம் சொல்லிவிட்டு சென்றார்கள்.
தேர்தலின் வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் வரும்போது குசேலன் தன் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டு அதனை கஜேந்திரனிடமும் கொடுத்து அவருடைய வெற்றியை உறுதி செய்தவுடன் தன்னுடைய பங்கிற்காக ஒரு பெரிய தொகையை அவர் வழங்கி சென்றார்.
இது ஒரு எதார்த்தத்திற்கான பயணம்!