
அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல். காரை அந்த வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, உள்ளே இருந்தவரை காரிலேயே இருக்கச் சொல்லி, விடுவிடுவெனச் சென்று கதவை தட்டினான் அரவிந்தன்.
கதவைத் தட்டியதும் பெரியவர் வெளியே வந்தவர், ”யாருப்பா நீ? என்ன வேணும்?”
“என்ன தெரிலையா பெரியப்பா? நான் அரவிந்தன். ஒங்க தம்பி பையன். சென்னையிலருந்து வந்திருக்கேன்.”
“அடடே வா! எவ்வளவு வருஷம் ஆச்சு பாத்து!" உள்ளே குரல் கொடுத்தார். "சிவகாமி நம்ம அரவிந்தன் வந்துருக்கு.”
பெரியம்மா படுக்கையிலருந்து மெல்ல எழுந்தார்.
“இரண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.” கொண்டு வந்த பழங்கள், ஹார்லிக்ஸ் பாட்டில் போன்றவற்றைக் கொடுத்தான்.
“நல்லா இருப்பா. எதுக்குப்பா இதெல்லாம்? இரு நான் டீ போட்டு வரேன்.”
“வேண்டாம் பேசாம உக்காருங்க.”
"ஆமாம் பசுபதி நல்லா இருக்கானா? பார்வதி எப்படி இருக்கு? ஒன் தங்கச்சி நிம்மி என்ன பண்ணுது?”
அதிக வாஞ்சையுடன் மனசுல களங்கம் இல்லாத அந்த விசாரிப்பை கண்டு நெகிழ்ச்சியானான் அரவிந்தன்.
“நான் ஒரு ஐ. டி கம்பனி எம்.டி,. அப்பாஓய்வு ; நிம்மிக்குக்கல்யாணம் பண்ணியாச்சு.”
பெரியப்பா பழைய மாதிரி தான்... மிகவும் சாதாரண வாழ்க்கை.
ஆனால் அப்பாவோ காசு வந்ததும் எப்படி எல்லாம் மாறிப் போனார் என்று நினைத்துக் கொண்டான் அரவிந்தன்.
அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த போஸ்ட்மேன் தங்கவேலு அரவிந்தனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “சாரி சார் கொஞ்சம் டவுன் வரை போக வேண்டிய வேலை. சார் தான் என் பையனுக்கு வேலை போட்டுக் கொடுத்தவர். சொந்த ஊர் மாவூர் என்றும், ஒங்க பேரைச் சொன்னதும் அடையாளம் கண்டுக்கிட்டார். நீங்க சாருக்கு பெரியப்பான்னு தெரிஞ்சதும் சந்தோஷப்பட்டேன். நான் வருவது சஸ்பென்சாக இருக்கட்டும், ஒங்க கிட்ட சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டார்.”
“பெரியப்பா, இவர் மூலம் தான் நீங்க இங்கே இருப்பது தெரிஞ்சுது. மனசு கேட்கலை பெரியப்பா... இவ்வளவு நாள் நீங்க எங்க இருக்கீங்க என்று தெரியாம போச்சு. எனக்கு விஷயம் புரிந்த நாளிலருந்து ஒங்கள ஒரு தியாகியா தான் நினைச்சுகிட்டு இருக்கேன். பெரியம்மாவக்கு உடல்நிலை சரியில்லை. ஒங்களுக்கு இருதய மாற்றுச் சிகிச்சை பண்ணனும் என்கிற செய்தி கேட்டு பதறிப் போய்ப் பாக்க வந்தேன் பெரியப்பா. எங்க அப்பாவை அந்தக் காலத்தில் ஆசிரிய பயிற்சி பள்ளியில் படிக்க வைச்சு அவருக்கு வாத்தியார் வேலையும் வாங்கிக் கொடுத்துருக்கீங்க...
“ஆனா அந்த நன்றி கெட்ட மனுஷன் நீங்க ஏதோ அவசர தேவைக்கு ஆயிரம் ரூபாய் பணம் கேட்டப்ப , பொதுச் சொத்தான வீட்டின் மீது எனக்கு எந்தப் பாத்தியதையும் கிடையாதுன்னு விடுதலைப் பாத்திரம் எழுதி வாங்கிகிட்டுப் பணத்தை வாங்கிக்கச் சொன்னாராம். நீங்களும் 'பரவாயில்லை தம்பி நீயே வைச்சுக்கோ' என்று விடுதலை பாத்திரம் எழுதிக் கொடுத்தீங்களாம். யாருக்கு வரும் அந்த நல்ல மனசு?
"அப்பா அன்னிக்கு அப்படி நடந்ததற்கு அவர் மாமனார் தான் காரணமாம். நீங்களும் ஊரை காலி பண்ணிட்டு எங்கே போனீங்கன்னு தெரிலன்னும் அம்மா நான் விபரம் தெரிஞ்சவுடன் என்கிட்ட சொன்னாங்க. போஸ்ட்மேன் மட்டும் நீங்க இருக்கிற ஊர் ஒங்க நிலைமை இதெல்லாம் சொல்லாமல் போனால் ஒங்கள நான் கண்டு பிடிச்சு இருக்க முடியாது.
"கொடுமை செஞ்சு ஒங்க உறவுகளை இழந்த அவருக்கு ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்து விட்டான். அப்பாவுக்குப் பக்க வாதம் வந்துருச்சு. அப்பா ஒங்கள பார்க்க சங்கடப்பட்டு, கார்ல் இருக்காரு. 'நான் செஞ்ச செயலுக்கு மன்னிப்பும் பிராயசித்தமும் செய்யணும்; ஆனா அண்ணன் என்னை ஏத்துக்குமான்னு?' அழுதார்."
அரவிந்தன் நிதானமாகவும் விரிவாகவும் பேசினான்.
“இத பாரு அரவிந்த் அந்த விசயத்தை நான் அப்பவே மறந்துட்டேன். அவனைக் கூட்டிக்கிட்டு வா.”
"என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்க அண்ணே!”
“வாங்க அண்ணே எங்க வீட்டில தங்கி அண்ணிக்கும் ஒங்களுக்கும் சிகிச்சை எடுத்துக்கலாம்.”
"இந்தாங்க பெரியப்பா," பெரிய கவரை நீட்டினான் அரவிந்தன்.
“என்னப்பா இது?”
“பிரிச்சு பாருங்க...”
பிரித்தார். அதில் புத்தம் புதிய கட்டாக இரண்டு லட்சம் பணமும், வீட்டு மூல பத்திரமும், பதிவு செய்வதற்காகத் தயார் நிலையில் உள்ள பத்திரமும் இருந்தது.
"எதுக்கு அரவிந்தா இதெல்லாம்?"
"அந்த வீட்டை திரும்பவும் ஒங்க கிட்ட ஒப்படைக்கப் போறோம். நாளைக்கு ரெஜிஸ்டர் முடிஞ்ச அப்படியே ஒங்கள சென்னைக்கு அழைச்சுட்டு போறோம். சட்டப்படி பார்த்தா இது ஒங்க சொத்து. இருபது வருஷம் முன்பு ஆயிரம் ரூபாய்க்கு ஒங்க வீட்டை விடுதலைப்பத்திரம் எழுதிகொடுத்த தியாக உள்ளத்துக்கு நன்றிக்கடன்; கொடுத்த பணம்.... இங்கே வாங்கின கடனை அடைக்க.”
தடைப்பட்டிருந்த உறவு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.