

சில பேருக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால் அத்தனை வசதி இருப்பதில்லை.. ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் பணம் இருக்கும். ஆனால் நல்ல குணம் இருக்காது.
ஒரு சமயம் பணமும் குணமும் சந்தித்துக் கொள்கின்றன. அப்படி சந்தித்துக் கொள்ளும்போது ‘பணம் முக்கியமா, குணம் முக்கியமா’ என்ற சந்தேகம் அவர்களுக்கே ஏற்பட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது...
பணம்: இங்க பாரு தம்பி, குணம், மனம் இதெல்லாம் இருந்தா மட்டும் ஒண்ணும் ஆகாது. கையில் பணம் இல்லன்னா ஒண்ணும் கிடையாது, ஒண்ணும் செய்ய முடியாது. குணத்தை வைத்து என்ன பண்ணுவ?? ஒருவேளை சோற்றுக்குக் கூட பணம் தான் தேவை.. புரிஞ்சுதா?
குணம்: இல்ல அண்ணாத, நீ தப்பா சொல்ற. என்னதான் பணம் இருந்தாலும், குணம் இல்லனா ஒண்ணுமே ஆகாது. குணம் இல்லாதவனுடைய பணம் குப்பை தொட்டில் இருக்கிறதுக்கு சமம் பா.. பணம் இல்லை என்றால் கூட எப்படியாவது புரட்டலாம். ஆனால் குணம் இல்லன்னா ஒண்ணும் பண்ண முடியாதுப்பா, நீ புரிஞ்சுக்கோ..
இப்படியே இவர்களுடைய வாக்குவாதம் நடந்து கொண்டே இருந்தது. பிறகு இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இரண்டு பேரும் அப்படியே நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தார்கள். பிறகு இருவரும், 'நாம இரண்டு பேரும் இங்கு நடக்கிற காட்சிகளை பார்ப்போம்.. அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருவோம். நீ உசத்தியா நான், உசத்தியா?' என்று சபதம் செய்து கொண்டார்கள்.
அப்படியே இவர்கள் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மருத்துவமனைக்குள் கார் ஒன்று வேகமாக நுழைந்தது. அதிலிருந்து அவசரமாக ஒரு நபர் கீழே இறங்கி உள்ளே சென்று ஸ்ட்ரச்சரை கொண்டு வந்தார். அதில் தன் மனைவியை உட்கார வைத்து கொண்டு போகுமாறு அங்கிருப்பவர்களிடம் கூறினார். மேலும் 'அவளுக்கு பிரசவ வலி எடுத்து விட்டது, சீக்கிரமாக டாக்டரை கூப்பிடுங்கள்' என்றார். அங்கு இருந்தவர்கள் 'டாக்டர் ரவுண்ட்ஸில் இருக்கிறார், சிறிது நேரம் வெயிட் பண்ணுங்கள் வந்த பிறகு உள்ளே அழைத்து செல்கிறோம்' என்று கூறினார்கள்.
அந்த நபருக்கு கோபம் வந்து விட்டது. 'நான் எதற்காக பத்து நிமிடம் வெயிட் பண்ண வேண்டும்? என்னிடம் பணம் இல்லையா? வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று கொள்கிறேன்' என்று கூறி மனைவியை மறுபடியும் காரில் உட்கார வைத்தார். காரை ஓட்டிக்கொண்டு இன்னொரு மருத்துவமனைக்குச் சென்றார்.
இந்த பணமும், குணமும் அந்த காரின் பின்னாலேயே சென்றார்கள். இங்கு ஒரு பத்து நிமிடம் அவரால் வெயிட் செய்ய முடியவில்லை. ஆனால் இன்னொரு மருத்துவமனைக்கு செல்ல முப்பது நிமிடம் ஆகிவிட்டது. அதற்குள் அவரின் மனைவியால் வலியை தாங்க முடியவில்லை.
இன்னொரு மருத்துவமனையிலும் சென்று அங்கு இருப்பவர்களை வேக வேகமாக கூப்பிட்டார். மனைவியை இறக்கி கொண்டு செல்லுமாறு சொன்னார். அங்கேயும் அவர்கள் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ண சொன்னார்கள். இவர் கத்திவிட்டு மனைவியை மறுபடியும் வேறு ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக காரை ஓட்டினார். ஒரு பத்து நிமிடம் இருந்திருந்தால் முதல் மருத்துவமனையிலேயே இந்நேரத்திற்கு டெலிவரியே ஆகி இருக்கும். இப்ப கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.
அந்த மனைவி வலி தாங்க முடியாமல் காரிலேயே இறந்து விட்டாள். கூடவே வயிற்றில் இருக்கும் குழந்தையும் போய்விட்டது.
இதை பார்த்த குணமானது பணத்திடம், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்! அந்த நபருடைய கோப குணத்தால் தான் மனைவியும் குழந்தையும் இறந்து விட்டார்கள். பாவம் இவருடைய குணத்திற்காக அவர்கள் இருவரும் பலியாகி விட்டார்கள். இப்போது இந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார் என்றது குணம். பணமோ பேசாமல் மௌனமாகவே இருந்தது.
மறுபடியும் இருவரும் அப்படியே நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் மெயின் ரோட்டில் ஒரு சிறிய கடை இருந்தது, அதில் ஒரு 20 வயது இளைஞன் காற்றடிப்பது, பஞ்சர் என இரண்டு சக்கர வாகனங்களுக்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கூட ஒரு சிறு பையனும் இருந்தான். இரண்டு பேருமே கிழிந்த துணிகளை தான் அணிந்திருந்தார்கள். ஏதோ வந்த வருமானத்தை வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு வயதான கிழவி அந்த பக்கமாக போய்க் கொண்டிருந்தாள். அவள் அந்த கடைக்குள் சென்று அந்த இளைஞனிடம், 'தம்பி, ரொம்ப பசிக்குது சாப்பிட ஏதாவது கொடு,' என்றாள். அவனோ, 'ஆயா எங்கிட்ட எதுவுமில்லை. இந்தா, இந்த ஐம்பது ரூபாயை எடுத்துக்கோ பக்கத்து கடையில் பிஸ்கட், பிரட் எல்லாம் இருக்கிறது வாங்கி சாப்பிடு' என்றான்.
அதைப் பார்த்த கடைக்காரர் அந்த ஆயா சென்ற பிறகு அவனிடம் கேட்டார், 'நீயே சாப்பாட்டுக்கு லாட்டரி அடிக்கிற, இதுல பெரிய தான பிரபு, ஐம்பது ரூபாயை தூக்கிக் கொடுக்கிற.. உனக்கு ஒரு நாளைக்கு 100, 200 கூட வராது?' என்றார்.
அதற்கு அந்த இளைஞன், 'ஐயா, பணம் இல்லை என்றால் பிச்சை கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குணம் இல்லை என்றால் மிகவும் கஷ்டம். குணத்தை பிச்சை எடுத்த வாங்க முடியுமா? என்னிடம் இருக்கிற மூலதனமே இந்த குணம் தான். இந்த குணத்தை நான் எக்காரணத்தைக் கொண்டும் விடமாட்டேன். குணம் போனால் வராது, மேலும் குணத்தை யாராலும் கொடுக்கவும் முடியாது,' என்று கூறினான்.
அவனுடைய பதிலை கேட்ட பிறகு அந்த கடைக்காரர் மட்டுமல்ல பணமும் வாய் அடைத்து போய் குணத்தோடு கைகோர்த்து சென்று விட்டது.
வெறும் பணம் மட்டும் இருந்தால் போதாது குணமும் வேண்டும். பணம், குணம் இரண்டும் இரு கண்கள்.