சிறுகதை: பரிமாற்றம்!

பெற்றெடுத்த சொந்தங்களே கைவிட்டபோது, கைதூக்கிவிட்ட முன்னாள் மாணவி: நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | Teacher's family and student
சிறுகதை | Teacher's family and studentImage credit: Gemini AI
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on: 
Kalki Strip
Kalki Strip

ராஜி, அரைகுறை உறக்கத்தில் திரும்பிப் படுத்தவள், அடுப்பறையில் பாத்திரம் நகர்த்தப்படும் சத்தம் கேட்டு, பதட்டமாய் அருகிலிருந்த அலைபேசியை உயிர்ப்பிக்க, நாலு வயது பேரன் விவேக் வெள்ளந்தி சிரிப்புடன்.

மணி விடிகாலை 4.30.

‘சட்’டெனப் பரவிய உற்சாகத்துடன் கணவனைத் தேடி, சமையலறை அடைய, டிகாஷன் காபிக்கு பில்டரைத் தட்டிய நிலையில் வேலுமணி.

“எ... என்னங்க..” பாசமாய்க் கணவன் கையை ராஜி பிடிக்க,

“அது.. நம்ம பையன் நகுல், மருமகள் கலாவதி, கூடவே பேரன் விவேக் ஒரு மணி நேரத்தில் வராங்களே அதுக்குத்தான்..”

“ம்., ரொம்ப பாசந்தான் உங்களுக்கு..”

“அங்கே மட்டும் என்ன வாழுதாம்? முறுக்கு, அதிரசம்னு பேரனுக்குப் பிடிக்கும்னு கை கடுக்க, நேற்று நீ செஞ்சியே...ஹா..ஹா."

“புரியுது, உங்க கிண்டல் எனக்கு. வருஷத்துக்கு ஒரே தடவை நம்ம பையன் குடும்பத்தோட வர்றான். ஆனா, நம்ம ஊருக்கு மாற்றலாகி வர மாட்டேங்கிறான். மருமக ஊருக்கே மாற்றல்ல போயிட்டான்..”

“என்ன செய்ய ? இப்ப காபி குடிச்சிட்டு அவங்களுக்காக வாசல்ல காத்திருப்போம்..”

அடுத்த அரை மணி நேரம் அவஸ்தையாய்க் கழிந்தது. மணி ஆறை கடந்த நிலையில், வாசலில் கார்.

பாய்ந்து சென்று, பேரனைக் கையில் வாங்கத் துடித்தார் வேலுமணி.

“அப்பா, முதல்ல டிக்கியிலுள்ள என் பெட்டியை இறக்குங்க. டிரைவர் அடுத்த ட்ரிப்புக்கு ...” அதட்டலாய் நகுல்.

“சார், பெரியவரை விரட்டாதிங்க. நானே இறக்கித் தரேன்..” ஓட்டுனர்.

தூக்கத்திலேயே பேரன் விவேக், தாத்தாவிடம் தாவி இருவருக்கும் மாறி, மாறி 'இச்'.

“வாம்மா கலா. வாடா நகுல்.”

“அத்தை, எங்களுக்குப் பயணக் களைப்பு. சீக்கிரமா டிபன் தயார் பண்ணுங்க...” பதிலுக்கு காத்திராது, 'அவர்களின்' அறைக்குள் பாய்ந்தாள் கலா.

“எ..., என்ன டிபன்?” வேலுமணி.

“அட, ஏம்பா இப்படி கேக்கிற? பேரனுக்கு இட்லிதான். எங்களுக்கும்...”

“வந்து, மறந்திட்டேன்..”

“ஏன்? எங்களுக்கு என்ன தேவைன்னு ஒரு லிஸ்ட் அனுப்பி இருந்தேனே. ஏ.ஸி..”

“அது மெக்கானிக் கிடைக்கல. எப்படியும் இன்னைக்கு..."

“அப்ப, நாம எப்படி தூங்க முடியும்?..” கலா குரலை உயர்த்த ,

“வருஷத்துக்கு ஒரு முறைதான் சொந்த வீட்டிற்கு, ஊருக்கே நான் வரேன். இனிமே..” நகுல் முடிக்கும் முன், “அய்யய்யோ.. எதுவும் சொல்லாதடா. மாவு வாங்க உடனே கிளம்பிட்டேன். உன் குடும்பத்தோட எங்க ரூம்ல தங்கிக்க. ப்ளீஸ்..” பதறி கைகூப்பிய வேலுமணியன் கண்களில் கண்ணீர். ராஜிக்கும்.

சிறுகதை | Teacher's family and student
சிறுகதை | Teacher's family and studentImage credit: Gemini AI

“என்ன பாட்டி, தாத்தா. உங்க ரெண்டு பேர் கண்லேயும் ஒரே சமயத்துல தூசி எப்படி விழுந்தது?..” எனப் பேரன் கேட்டதும், உற்சாகமாய் அவனைக் கொஞ்சுவதில் தாத்தா, பாட்டிக்கு இடையே போட்டி.

அடுத்த ஐந்து நாட்களும் வேகமாய் நகர்ந்துவிட, நகுல் குடும்பத்தோடு கிளம்பிப் போய்விட்டான். சோகமாய் வேலுமணி.

“புரியுதுங்க. என்ன செய்ய? இனி, ‘நமக்கு நாமே துணை’ அதுக்கு மேல அவன் பார்த்துப்பான்..” சொல்லி முடிக்கவும், வாசலில் கார்.

“காலையிலேயே யார்?..” வேலுமணியும், ராஜியும்.

‘தக,தக’வென ஜொலித்த வைரநெக்லஸில் நடுத்தர வயதுப்பெண்.

“ஐயா, அம்மா வணக்கம். நலமா? நான் ரேணுகா. உங்க ‘மாடல் பள்ளி’யோட பழைய மாணவி. முப்பது வருஷம் முன்னாடி இங்கேதான் படிச்சேன்,” என இருவரின் பாதங்களைத் தொட்டுப் பணிந்தாள்.

“ஞாபகம் இருக்கு. நடுவில வந்தியே..” ராஜி.

சில நிமிடப் பேச்சுகளுக்குப் பின், ரேணுகாவை உள்ளே அழைத்தனர்.

“ரேணுகா, சி.ஏ. படிச்சு, அகில இந்திய அளவில இரண்டாவது ரேங்க் வாங்கினியே. சரியா?..”

“சரியா சொன்னீங்க ஐயா. ஆமா, பள்ளிக்கூட போர்டு கீழே கிடக்கே. ஏன்?”

“ரேணுகா, நான் பள்ளிக்கூடத்தை மூடி ஒரு வருஷமாயிடுச்சு...” எனப் பல விஷயங்களைச் சொல்லி முடித்தார் .

“நானும் ஊருக்கு வந்து நாலைஞ்சு வருஷமாயிடுச்சு. சென்னையில, எனக்கு நாலு அலுவலகம். அடுத்து நம்ம ஊர்ல. அதை, நீங்கதான் வந்து திறந்து, என்னை ஆசீர்வதிக்கணும். பக்கத்தில என்ன ‘மாடர்ன் ஸ்கூல்’னு கட்டடம்?”

“நான் பள்ளிக்கூடத்தை மூடறதுக்கு அவங்கதான் முக்கிய காரணம். அவங்க மிரட்டி, நம்ம பள்ளிக்கூடத்தைக் கேட்கிறாங்க...” உண்மையை உடைத்து, உடைந்தார் வேலுமணி.

“ரொம்ப அநியாயமா இருக்கே. உங்களுக்கு பையன் இருந்தாரே? அவர் தடுக்கலையா?”

“அவனே ஆண்டுக்கொரு முறைதான் வந்து போவான். நீ என் பொண்ணு மாதிரி. அதான், உண்மையச் சொல்லிட்டேன்.” - ராஜி.

“ஐயா, அம்மா. நீங்க ரெண்டு பேரும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. கொஞ்ச நாள் வராம போனதுக்கு என்னை மன்னிச்சுடுங்க. உங்க பையனோட தொடர்பு எண் கொடுங்க. நானே பேசறேன். கவலைப்படாதீங்க. என் செல்வாக்கைப் பயன்படுத்தி உங்களுக்கு உதவி செய்யறேன்,” என்ற ரேணுகா, காரில் பறந்து போனாள்.

“ராஜி, எதுக்கு நம்ம பையனைப் பற்றிய உண்மையைச் சொன்னே?“

“எனக்கு என்னமோ ரேணுகாதான், நமக்கு கடவுள் அனுப்பிச்ச தீர்வா தெரியுது.”

சில மாத நகர்வுகளுக்குப் பின்,

“என்ன ராஜி, பக்கத்து ஸ்கூல்காரங்க திடீர்ன்னு அமைதியாயிட்ட மாதிரி தெரியுது?” என வேலுமணி சொல்லி முடிக்கவும், வாட்டச்சாட்டமா இரண்டு பேர் வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்தனர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அந்த நள்ளிரவில்...!
சிறுகதை | Teacher's family and student

“ஐயா, எங்க முதலாளி உங்கள நேர்ல பார்க்கணுமாம். தகவல் சொல்ல வந்தோம்...” என அறிவிக்க,

“என்னங்க, நம்ம ராசி நம்மள விடாது போல. இனிமே, நமக்கு யார் இருக்கா? பேசாம மாடல் ஸ்கூலையும், வீட்டையும் வித்துட்டு போயிடலாம்...” சோகமாய் ராஜி.

கார் வந்து நிற்க, மீண்டும் ரேணுகா.

“ஐயா, அம்மா நலமா? பையன் பேசினானா? போன மாசம் நான் அவன்கிட்ட பேசினேன்.”

“அவனைப்பத்தி பேசாத. ஆமா, மூணு மாசம் முன்னாடி வந்தியே? இப்ப திடீர்னு..” எனக் குழப்பமாய் ராஜி.

“எல்லாம் காரணமாத்தான்.” மர்மமாய் சிரித்தபடி, சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினாள் ரேணுகா.

வேலுமணி, பக்கத்துப் பள்ளிக்கூட முதலாளிக்காக வாசலில் காத்திருந்தார்.

அடுத்த ஒரே மாதத்தில், ‘மாடர்ன்’ பள்ளி புதுப்பிக்கப்பட, திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ராஜி மற்றும் வேலுமணி அழைக்கப்பட்டனர்.

அதே சமயம் “தாத்தா..” எனப் பேரன் விவேக் திடீரென ஓடி வந்து கட்டிப்பிடிச்சான்.

வாசலில் குழப்பமாய் மகன் நகுல் மற்றும் மருமகள் கலா.

அருகில் வந்த மகன் சொன்ன தகவலில் ஆடிப்போனார் வேலுமணி.

“அப்பா எனக்கு வேலை போயிடுச்சு. இனிமே எங்களை..”

என இருவரும் அழ,

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஒரு புது விடியல்!
சிறுகதை | Teacher's family and student

“ஐயா, அம்மா. வாங்க, நல்லநேரம் முடிஞ்சிடப் போகுது. நகுல் தம்பி நீங்களும் வாங்க..” என ரேணுகா புதுப்பிக்கப்பட்ட பள்ளியின் ரிப்பனை வெட்ட கத்திரிக்கோலை நீட்டினாள்.

‘மாடல் ஸ்கூல்’

“இனிமே, இதுதான் உங்க பள்ளி. உங்க பையனுக்கு செக்ரட்டரி வேலை. எனக்கு அவங்களோட நிலைமை போன மாசமே தெரியும். புதிய சமுதாயம், நல்ல சமுதாயமாக அமையனுங்கிற ஆசையில, பள்ளியை உங்ககிட்ட நான் ஒப்படைக்கிறேன்.”

அங்கே அன்பு பரிமாற்றம் அம்சமாய் அரங்கேறியது.

logo
Kalki Online
kalkionline.com