

அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, இரவு மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. வழக்கமாக கோவையிலிருந்து வரும் ரயில் இரவு 10.45-க்கே சென்னையை அடைந்துவிடும். அன்று தாமதம். 12.45-க்குத்தான் சென்ட்ரலைத் தொட்டது. பசியும் தூக்கமும் சேர்ந்து உடலைப் பிசைந்து கொண்டிருந்தன.
வழக்கமாக கார் புக் செய்வேன். அன்று அரை மணி நேரமாக முயன்றும் ஒரு கார்கூட கிடைக்கவில்லை.
‘சரி... பைக் புக் பண்ணிப் பார்ப்போம்.’
ராபிடோவைத் திறந்தேன். பைக் உடனே புக் ஆனது.
அடுத்த நொடியே அழைப்பு. “மேடம்... சென்ட்ரல் பிள்ளையார் கோயில் பக்கத்துல நிக்கிறேன்.”
நானும் அங்கே போய் நின்றேன். அவன் என்னைப் பார்த்ததும்,
“OTP சொல்லுங்க மேடம்.”
நான் பைக்கைப் பார்க்கக்கூட இல்லை. OTP-யைச் சொல்லிவிட்டேன்.
அவன் போனைப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு எவ்வளவு அமௌன்ட் காட்டுது?”
“நானூற்று ஐம்பது.”
“மேடம்... ஒரு ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுங்க.”
அவனைப் பார்த்தேன்.
“யோசிக்காதீங்க மேடம். ஐம்பது ரூபாய்தானே. நான் திரும்பி வரும்போது தனியாத்தான் வரணும்.”
“சரி...”
“நீங்க இங்கயே இருங்க. பைக் எடுத்துட்டு வர்றேன்.” அவன் நடந்துபோனான்.
அப்போதுதான் அந்தச் சிறிய குரல் என்னைத் தட்டியது.
‘பைக்கையே பார்க்காம OTP சொல்லிட்டியே!’
சுற்றிப் பார்த்தேன். கோயிலுக்கு அருகே இரண்டு இளைஞர்களுடன் அவன் நின்றிருந்தான்.
அவர்கள் கையில் இருந்த ஏதோ ஒன்றை மாறி மாறி முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
என்ன அது? எதற்கு அதை முகர்கிறார்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறார்கள்? கேள்விகள் ஒவ்வொன்றாக வந்து மனதுக்குள் இடம் பிடித்தன.
அவன் என்னைப் பார்த்தான். நான் உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பைக்குடன் வந்தான்.
பைக்கை என் அருகில் கொண்டு வந்து, “ஏறுங்க மேடம்...” என்றான். நான் ஏறினேன். அடுத்த நொடியே பைக் இருளுக்குள் நகர்ந்தது.
அவன் ஹெல்மெட் போடவில்லை. எனக்கும் கொடுக்கவில்லை. அவனுடைய ஹெல்மெட் பெட்ரோல் டேங்க் மீது கிடந்தது.
காதில் ஹெட்செட். யாருடனோ தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
சென்னை பகலில் எனக்குப் பழக்கமான நகரம்.
ஆனால் அந்த நள்ளிரவில்... அதே சாலைகள் அந்நியமாகத் தெரிந்தன. பகலில் மனிதர்கள் நிரப்பியிருந்த இடங்களில் இப்போது இருள் மட்டும் இருந்தது.
ஒவ்வொரு திருப்பத்திற்குப் பின்னாலும் ஏதோ ஒன்று காத்திருப்பதுபோல.
“நீங்க என்ன பண்றீங்க மேடம்?” திடீரென்று கேட்டான்.
“பெருங்களத்தூர்ல ஐ.டி. வேலை.”
“ஹாஸ்டல்ல தங்கியிருக்கீங்களா?”
“இல்ல. தனியா வீடு.”
“ஓ...”
அவன் மீண்டும் ஹெட்செட்டில் பேச ஆரம்பித்தான்.
என் வயிற்றுக்குள் ஏதோ இறுகியது.
பசி மட்டும் இல்லை. பயமும்.
சில நிமிடங்கள் கழித்து அவன் மீண்டும் திரும்பிப் பார்த்தான்.
“மேடம்... ஒரு பார்சல் இருக்கு. போற வழியில குடுத்துட்டுப் போயிடலாமா?”
அந்த ஒரு வாக்கியம் போதும்.
உடம்புக்குள் ஓடிய ரத்தமெல்லாம் ஒரே நொடியில் காதுகளுக்குள் வந்து அறைந்தது. அடுத்த நொடி, பயம் உடம்பு முழுவதும் மெல்ல மெல்லப் பரவியது.
பார்சல்?
யாருக்கு?
எதற்கு?
என்ன பார்சல்?
இந்த நேரத்தில்?
அந்த இரண்டு இளைஞர்கள்...
அவர்கள் முகர்ந்து பார்த்தது இதுதானா?
நான் ஏன் இவனுடைய பைக்கில் ஏறினேன்?
“சரி...”
என் வாய்தான் சொன்னது. மனம் மட்டும் கத்திக்கொண்டிருந்தது.
‘தப்பு... தப்பு... தப்பு...’
மெதுவாக போனை எடுத்தேன்.
ராபிடோவில் புகார் செய்யலாமா? போலீஸுக்கு போன் பண்ணலாமா? வீட்டுக்குச் சொல்லலாமா?
வீட்டில் சொன்னால் முதலில் கேட்பார்கள் -
‘இந்த நேரத்துல ஏன் பைக் புக் பண்ணின?’
அதற்குள் இவன் எங்கே கூட்டிச் செல்கிறான்?
ராபிடோவில் புகார் செய்யும் பகுதியைத் திறந்தேன்.
திரையில் ஒரு எச்சரிக்கை.
“புகார் பதிவு செய்யப்பட்டால், அது தொடர்பாக டிரைவருக்குத் தகவல் தெரிவிக்கப்படலாம்.”
அந்த வரியைப் பார்த்ததும் விரல்கள் நின்றுவிட்டன.
டிரைவருக்குத் தகவல் தெரிவிக்கப்படலாம்.
நான் புகார் செய்தது இவனுக்குத் தெரிந்துவிட்டால்?
இவன் என்ன செய்வான்? பைக்கை நிறுத்துவானா? என்னை இறக்கிவிடுவானா?
அல்லது...
அதற்கு அப்புறம் என்ன நடக்கும்?
“மேடம்... என்ன போன் பாக்குறீங்க?”
அவனுடைய குரல் திடீரென்று காதருகே விழுந்தது.
“ஒண்ணுமில்ல...”
போனை அணைத்தேன்.
அந்த நொடியிலிருந்து அவன் ஒவ்வொரு அசைவும் எனக்குச் சந்தேகமாகத் தெரிந்தது.
ஹெட்செட்டில் பேசுவது. அடிக்கடி திரும்பிப் பார்ப்பது.
சாலையை மாற்றுவது. வேகத்தைக் கூட்டுவது.
எல்லாமே.
அவன் சில நொடிகள் அமைதியாக ஓட்டிவிட்டு,
“அது கொஞ்சம் தூரமா காமிக்குது மேடம். உங்கள விட்டுட்டு அங்க போய் கொடுத்துறேன்.” அந்த வார்த்தைகள் கேட்டதும், உள்ளுக்குள் இறுகிக் கிடந்த பயம் கொஞ்சம் தளர்ந்தது.
அந்த நேரத்தில் மணி ஒன்றே முக்கால். சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. நகரமே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வயிறு பசியால் எரிந்துகொண்டிருந்தது.
ரயிலில் எதுவும் சாப்பிடவில்லை. பதினொன்றரைக்குள் வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது நள்ளிரவு கடந்துவிட்டது. சாலையோரத்தில் ஒரு சிறிய கடை மட்டும் விளக்குடன் திறந்திருந்தது.
“கொஞ்சம் ஓரமா நிறுத்த முடியுமா? ஏதாவது சாப்பாடு வாங்கிக்கிறேன்.”
“என்ன மேடம்... ரிக்வெஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க சொன்னா போதும்.”
அவன் சிரித்தான். பைக்கை ஓரமாக நிறுத்தினான்.
நான் இரண்டு தோசை வாங்கினேன். Google Pay செய்து விட்டு திரும்பி வந்தேன். அப்போதுதான் - என் பேண்ட் ஏதோ ஒன்றில் சிக்கியது. மெட்ரோ தூணின் அருகே நீட்டிக்கொண்டிருந்த இரும்புக்கம்பி. நான் அதை கவனிக்கவே இல்லை. கால் இடறியது.
உடல் சமநிலையை இழந்தது. அடுத்த நொடியில் தரையில் விழுந்தேன்.
“அய்யோ... அக்கா!” அவன் பைக்கை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்தான்.
“என்ன அக்கா ஆச்சு?” என்னைத் தூக்கினான்.
“ஒண்ணுமில்ல... விழுந்துட்டேன்.”
“வலி இருக்கா?”
“கொஞ்சம்.”
“ஹாஸ்பிடல் போவோமா?”
“வேண்டாம். பரவாயில்லை. வீட்டுல விட்டுட்டா போதும்.”
அவன் என் கையைப் பிடித்துப் பார்த்தான். ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு,
“நடக்க முடியுதா?” என்றான்.
நான் தலையசைத்தேன். அவன் பைக்கை எடுத்தான்.
அந்தப் பயணத்தில் முதல்முறையாக அவன் குரலில் எனக்கு பயம் தெரியவில்லை. அக்கறை தெரிந்தது.
சில நிமிடங்கள் இருவரும் அமைதியாகச் சென்றோம்.
பிறகு அவனே பேச ஆரம்பித்தான்.
“நான் பி.ஜி. படிச்சிருக்கேன் அக்கா.”
நான் அவனைப் பார்த்தேன்.
“எனக்கு சினிமான்னா ரொம்ப ஆசை. நடிக்கணும்னுதான் சென்னைக்கு வந்தேன்.”
பைக் இருளைக் கிழித்துக்கொண்டு சென்றது.
“ஆனா அது அவ்வளவு சுலபமில்லைன்னு இங்க வந்துதான் புரிஞ்சுது.”
சிரித்தான். அந்தச் சிரிப்பில் தோல்வி இருந்தது.
“மூணு வருஷம் ஆச்சு அக்கா.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
“இப்பதான் ரெண்டு படத்துல சின்ன ரோல் தர்றதா சொல்லியிருக்காங்க. டேட் மட்டும் இன்னும் சொல்லல.”
அவன் குரலில் இருந்த உற்சாகம் அடுத்த நொடியே தளர்ந்தது.
“அதுவரைக்கும் சும்மா இருக்க முடியாதுல்ல?”
“ம்...”
“அதனால வண்டி ஓட்டுறேன்.”
“இந்த வண்டியா?”
“ஆமா அக்கா.”
அவன் பைக்கின் மீது கையைத் தட்டினான்.
“வீட்டுல இருந்த பழைய வண்டி. இங்க கொண்டு வந்தேன். பதினஞ்சாயிரம் செலவு பண்ணி சரி பண்ணேன்.”
சிரித்தான்.
“இப்ப பாருங்க... நல்லாத்தானே போகுது?”
அப்போதுதான், முதல் முறையாக, நான் ஏறி வந்த அந்தப் பைக்கை நிதானமாகப் பார்த்தேன்.
பழைய பைக். தேய்ந்த உடல்.
ஆனால் இரவை நம்பி ஓடிக்கொண்டிருந்தது.
“பெட்ரோல்... சாப்பாடு... தங்குற செலவு...” என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போனான். பிறகு மெதுவாகச் சொன்னான்.
“எல்லாத்துக்கும் காசு சரியா போயிடுது அக்கா.”
சிறிது இடைவெளி.
“கையில எதுவும் மிஞ்சுறதில்ல.”
அவன் சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் இன்னும் சினிமா கனவு இருந்தது. தோல்வி இருந்தது. ஆனால் அதைவிட - விடாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் பிடிவாதம் இருந்தது.
என் வீடு வந்துவிட்டது.
பைக் நின்றது.
நான் இறங்கினேன்.
“நன்றி.”
பணத்தை அனுப்பினேன்.
அவன் போனைப் பார்த்தான்.
“ஐநூறு வந்திருக்கு அக்கா.”
“சரி.”
“நன்றி அக்கா.”
அவன் சிரித்தான்.
பைக் திரும்பியது.
நான் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தேன்.
ஒன்று. இரண்டு. மூன்று.
மூன்றாவது படியில் நின்றுவிட்டேன்.
என் மனதில் ஒரே ஒரு கேள்வி.
நான் ராபிடோவில் புகார் செய்திருந்தால்?
அந்தச் செய்தி அவனுக்குப் போயிருக்கும். அவன் வேலை போயிருக்கும். ஒருவேளை போலீஸிடம் விளக்கம் சொல்ல வேண்டியிருந்திருக்கும். நான் சந்தேகித்தது உண்மையா, பொய்யா என்று தெரிந்துகொள்ளும் முன்பே - ஒரு மனிதனை குற்றவாளியாக்கியிருப்பேன்.
அவன் வழியெங்கும் என்னை
“என்னை அக்கா... அக்கா...” என்றுதான் அழைத்தான்.
நான் மட்டும்...
ஒருமுறைகூட அவனை
“தம்பி” என்று அழைக்கவில்லை.
கீழே பார்த்தேன். அவனுடைய பைக்கின் சிவப்பு விளக்கு இருளுக்குள் ஒரு சிறிய புள்ளியாகிக்கொண்டிருந்தது. அந்தப் புள்ளியும் மறைந்தது.
நான் மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.
அன்று நள்ளிரவில் நான் பயந்தது - ஒரு அந்நியனைப் பார்த்து.
ஆனால் வீட்டுக்குள் நுழைந்தபோது புரிந்தது.
அவன் அந்நியன் இல்லை.
அவனை அந்நியனாக்கியது என் பயம்தான்.