காகிதத்தின் நறுமணம் முதல் கன்னிமாரா நினைவுகள் வரை: டிஜிட்டல் உலகில் மறையும் புத்தகக் காதல்!

டிஜிட்டல் யுகத்தில் காகித புத்தகங்களின் வாசனையையும், பழைய நூலக நினைவுகளையும் மீட்டெடுக்கும் சுவாரஸ்யமான பதிவு.
புத்தகம் | Elderly man reading book in library
புத்தகம் | Elderly man reading book in libraryImage credit: Gemini AI
Updated on
Kalki Strip
Kalki Strip

இணையம், டிஜிட்டல் வடிவங்கள் வளர்ந்ததால் சிறு நூலகங்கள், ரயில் நிலைய புத்தகக் கடைகள், வீட்டு அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் போன்ற பழைய வாசிப்பு கலாச்சாரம் எப்படி மறைந்தது என்பதை எழுத்தாளர் வருத்தத்துடன் பதிவு செய்கிறார். அச்சுப் புத்தக வாசிப்பு பழக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளாகவும், நூலகங்கள் ஒரு தலைமுறையின் நினைவாகவும் இந்தக் கட்டுரை நிறைவடைகிறது.

நான் ஒரு பழமை வாதி. டிஜிட்டல் உலகமாக மாறிய இந்தக் காலத்திலும் என்னால் காகிதத்தில் அச்சடித்த புத்தகங்களைக் கைவிட இஷ்டம் இல்லை. புத்தகங்களைப் படிக்க தூண்டும் ஒருவித நறுமணம் அச்சடித்த புத்தகங்களுக்கு உண்டு. நான் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றால் அதை முதலில் பிரித்து முகர்ந்து விட்டுத்தான் படிக்க தொடங்குவேன்.

எனக்கு பத்து வயதாக இருக்கும்போதே நூலகங்கள் மீதான காதல் எனக்குள் துளிர்விட்டது. எங்கள் ஊரில் ஒரு சிறிய வாசகசாலை மற்றும் நூலகம் இருந்தது; அதை நான் அடிக்கடி சந்தா மாமா அம்புலி மாமா போன்ற இதழ்களைப் படிப்பேன். என் வகுப்பில் எங்கள் பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்களைக் வாங்கிய ஒரே பையன் நான்தான்.

நான் படித்த முதல் ஆங்கில நாவல் R.L. Stevensonனின் Treasure Island. புத்தகங்களின் பொக்கிஷமான மெட்ராஸ் கன்னிமாரா நூலகத்திற்கு நான் முதன்முறையாகச் சென்றபோது புத்தகக் கடலில் ஒரு சிறு புழுவைப்போல ஆகிவிட்டேன். அந்தப் பழைய பாணி மர நாற்காலிகள், மேசைகள் மற்றும் தும்பிகள்போல சிறகடித்து சுற்றும் சீலிங் மின்விசிறிகள் இப்போதும் என் கண்களுக்கு முன்னால் வந்து நிற்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் 10 ஜப்பானிய நுட்பங்கள்!
புத்தகம் | Elderly man reading book in library

நான் கன்னிமாராவுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பெரிய புல்வெளியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுபோல தோன்றும். அன்றைய வேலையில்லாத புத்தகப் பிரியர்களுக்கு மதிய வேளைகளில் கன்னிமாராவின் புத்தக அடுக்குகளை நிதானமாக ஆராய்வது ஒரு தனி அனுபவமாக இருந்தது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தாலே முகத்தை மூடி உறங்குபவர்களும் உண்டு. நூலகத்தின் ஊழியர் ஒருவர் அப்படி தூக்கத்தில் வாசிப்பவர்களை எழுப்பிச் செல்வது வழக்கம்.

புத்தகம் | Elderly man reading book in library
புத்தகம் | Elderly man reading book in libraryImage credit: Gemini AI

கன்னிமாராவுக்குப் பிறகு நான் விரும்பிய நூலகம் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகமாகும், அது ஒரு புத்தகங்களின் கூடாரம். கன்னிமாரா ஒரு கடல் என்றால், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் ஒரு நீச்சல் குளம்.

நான் என்னை உறுப்பினராகப் பதிவு செய்த நாளன்று, நூலக உதவியாளர் என்னிடம் அட்டையைக் கொடுத்து, தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் அலமாரிகளுக்கு இடையே நான் நகரும்போது அவர் என்னிடம் வந்து ‘ஸ்டார்ட் வித் சோமர்செட் மௌம்’ என்று கிசுகிசுத்தார்.

வேலையில்லாமால் திண்டாடிய இரண்டு வருட காலம் ஒரு வரமாக மாறியது. நான் பிற்பகல் நேரத்தை கன்னிமாராவிலோ அல்லது பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலோ செலவிட்டேன்.

இரண்டு முறை சோமர்செட் மௌம் புத்தகங்களைப் படித்தேன். வின்ஸ்டன் சர்ச்சிலின் இரண்டாம் உலகப் போர் என்ற புத்தகம் படித்து முடித்தவுடன் எனக்கு MA ஆங்கிலம் படித்தது போலானது.

இதையும் படியுங்கள்:
நிலத்தின் கண்ணீர்: இந்திய சினிமாவில் விவசாயிகளின் போராட்டப் பதிவு!
புத்தகம் | Elderly man reading book in library

வாழ்க்கையின் மற்ற எல்லா வழிகளிலும் அம்சங்களிலும் மாற்றம் இருக்கட்டும். ஆனால், நூலகங்களும் அவற்றைப் உபயோக படுத்தும் பழக்கமும் இருக்க வேண்டும். நூலகங்களுக்குள் நாம் புத்தகப் புழுக்களாக நுழைந்து பட்டாம்பூச்சிகளாக வெளியேறுகிறோம். எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அறுபதுகளில் மயிலாப்பூர் தி. நகர், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் சிறு சிறு நூலகங்கள் இருந்தன.

இன்டர்நெட் வந்த பிறகு அவை அனைத்தும் நொடித்துபோயின மக்கள் இப்போது அச்சிடப்பட்ட புத்தகங்களை விரும்புவதில்லை. அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு பென் டிரைவ்கள் மற்றும் எஸ்டி கார்டுகளில் வைக்கப்படுகின்றன.

சிறிய ரயில் நிலையங்களில்கூட அன்று பிரத்யேகமாக புத்தக கடை ஒன்று இருக்கும். முக்கால் வாசி ஸ்டேஷன்களில் இதை ஹிக்கின்பாதம் நிறுவனத்தார்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் ஒரு பயணத் தோழனாக இருந்தது இப்போது புத்தக கடை இருக்கும் ரயில் நிலையம் ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம்? முன்பெல்லாம் மெத்த படித்தவர்கள் வீடுகளில் வரவேற்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரி இருக்கும். தாங்கள் படித்த ரசித்த புத்தகங்களை வருவோர்க்கு காண்பிப்பதில் பெருமை அடைந்த அந்தத் தலைமுறை தலைமறைவாகிவிட்டது.

இந்தக் கட்டுரை, வாசிப்பு அனுபவத்தின் மீதான பிடிப்பை ஆழப்படுத்தி, டிஜிட்டல் ஆரவாரத்திற்கு மத்தியில் காகிதப் புத்தகங்கள் மற்றும் வரலாற்று நூலகங்கள் மீதான வாஞ்சையை மீட்டெடுத்து மனதிற்கு ஒரு நிம்மதியான பயணத்தை அளிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com