Cobra Effect - நாகப்பாம்புகளைக் கொல்லப் போய், வளர்க்கத் தொடங்கிய கதை!

Cobra Effect
Cobra Effect
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒரு சிக்கலுக்கு வழங்கப்படும் தீர்வு அச்சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில் அதனைத் தீவிரமடையச் செய்யுமெனில் அந்த விளைவு நாகப்பாம்பு விளைவு (Cobra Effect) என அழைக்கப்படுகிறது. இது எதிர்பாராத விளைவு வகைகளுள் ஒன்றாகும். அரசியலிலும் பொருளியலிலும் தவறான தூண்டு காரணங்களைச் சித்தரிக்க இப்பெயர் பயன்படுகிறது.

இந்தியாவின் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வே இப்பெயர் ஏற்படக் காரணமாகும். பிரித்தானிய அரசு, தலைநகர் டில்லியில் நச்சுள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை கூடியதால் கவலை கொண்டது. பிரித்தானிய அரசு பாம்புகளைக் கொல்ல பொது மக்களை ஊக்குவித்தது. அப்படிக் கொல்லப்படும் பாம்புகளுக்காக, அவர்களுக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. முதலில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது. வெகுமதிக்காக மக்கள் நிறைய நாகப்பாம்புகளைக் கொன்றனர். ஆனால், சில காலத்துக்குப் பின் குறைந்த உழைப்பில் நிறைய வெகுமதி பெறுவதற்காக, சிலர் நாகப்பாம்புகளை வளர்க்கத் தொடங்கினர்!

இது அரசுக்குத் தெரிய வந்தவுடன் தன் வெகுமதித் திட்டத்தை நிறுத்திக் கொண்டது. வெகுமதி கிடைக்காததால் பாம்புகளை வளர்த்தவர்களே அவற்றைத் தப்பிக்க விட்டனர். இவ்வாறு பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு கையெடுத்த தீர்வினால் அவற்றின் எண்ணிக்கை கூடியது.

இதையும் படியுங்கள்:
ஒரே இரவில் காணாமல் போன கிராமம்... ஆளில்லா மர்மம்... 6 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை!
Cobra Effect

இத்தகைய பிற தீர்வுகளுக்கும் 'நாகப்பாம்பு விளைவு' என்ற பெயர் ஏற்பட்டது.

இதேப் போன்று, வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் எலித் தொல்லையைக் குறைக்க, நகர நிருவாகிகள் எலிகளைப் பிடித்து வந்தால் வெகுமதி என்று அறிவித்தனர். ஆனால், நகர மக்கள் பலர் அவ்வெகுமதியால் தூண்டப்பட்டு எலிகளைத் தாங்களே வளர்க்கத் தொடங்கினர். இதனை உணர்ந்த நகர நிருவாகம் வெகுமதித் திட்டத்தைத் திரும்பப் பெற்றது. வளர்க்கப்பட்ட எலிகள் மீண்டும் பாதாளச் சாக்கடைகளில் திறந்து விடப்பட்டன.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரியில் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் எது? அதை எழுதியது யார்?
Cobra Effect

ஒரு விளைவை எதிர்பார்த்து அறிவிக்கப்படும் வெகுமதி, அதற்கு நேர்மாறான பலனைப் பெற்றுத் தருமெனின் அதனை, கெடு வெகுமதி என்றும் சொல்வர்.

logo
Kalki Online
kalkionline.com