இரவு 8 மணி கல்யாணம், வாழை இலை பந்தி - 70களில் கிராமத்து திருமண நினைவுகள்!

இரவில் நடந்த கல்யாணம், வாழை இலை விருந்து, உறவுகளின் பங்களிப்பு. 60-70களின் கிராமத்து திருமண நினைவுகளைப் பார்ப்போம்.
கல்யாணம் | Wedding
கல்யாணம் | WeddingImage credit: Gemini AI
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா

கவிஞர், சிறுகதை, நாவல், நகைச்சுவை எழுத்தாளர். பத்திரிக்கை யாளர். இயற்பெயர் பாரதி. பிறந்த ஊர் கரடிகுளம் (கழுகுமலை). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர் நெல்லையில் வசித்து வருகிறார். 18 வயதில் எழுத ஆரம்பித்த இவர் கடந்த 50 வருடங்களாகத் தமிழில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். இவர் எழுதிய சுமார் 16000 நகைச்சுவைத் துணுக்குகள் 550 ஒரு பக்கச்சிறுகதைகள் 50 சிறுகதைகள் 3000 த்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஏராளமான பேட்டிகள், நாடகங்கள் கட்டுரைகள் என்று வெளி வந்த அனைத்தும் தொகுக்கப்பட்டு 32 புத்தகங்களாகப் பிரபல பிரசுரங்கள் மூலம் வெளியிடப் பட்டுள்ளன.

Updated on: 
MM strip
MM strip

இன்றைய ஆடம்பர மண்டபத் திருமணங்களுக்கு மத்தியில், 1960 மற்றும் 70-களில் கிராமங்களில் நடந்த எளிமையான திருமணங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மறந்துபோன அந்த அழகிய கிராமத்து வாழ்வியலை இந்தக் கட்டுரையில் காண்போம்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் அதே போல மின்னும் ஆடம்பரமான திருமண மண்டபங்களிலும் நடக்கும் திருமணங்களையே பார்த்திருக்கும் இன்றைய தலை முறையினருக்கு 60 களிலும் 70 களிலும் நாட்டுப்புறங்களில் நடந்த திருமணங் களைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தவர்களும் மிக வயதானவர்களாக இருப்பார்கள். 50 களில் பிறந்தவர்கள் 50 சதவீதத்தினர் இருக்கவும் வாய்ப்புகள் குறைவு. இது அப்போதைய திருமணங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரை.

அந்தக்கால கிராமங்களில் பெரும்பாலும் இரவு 7 மணிக்கு மேல்தான் கல்யாணம் நடக்கும். மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நல்ல நேரம் கெட்ட நேரம் என்று எதுவும் இல்லையாமே...?

இன்னொரு முக்கிய காரணம் அம்புட்டுப் பேரும் விவசாயிகள். விவசாயக் கூலிகள். வேலை முடிந்து வீடு திரும்பி குளித்து முழுகித் தயாராகி கல்யாண வீடு வந்து சேர இரவு 8 மணி ஆகிவிடும்.

அந்த நேரத்தில்தான் தாலி கட்டும் நடக்கும். சவுண்ட் சர்வீஸ்காரர் ஸ்பீக்கர் அலறுவதை நிறுத்தி விட்டு மைக்கில் "எல்லோரும் கல்யாண வீட்டுக்கு சாப்பிட வாங்க" என்று அழைப்பார்கள்.

ஏற்கனவே வெத்தலை பாக்கு வச்சு பத்திரிக்கை வச்சு அழைப்பு விடுத்திருந்தாலும் சாப்பாட்டு பந்தி நேரத்தில் மைக்கில் கூப்பிடணும்.

இதையும் படியுங்கள்:
தினசரி வரவு-செலவு நோட்டு உங்கள் குடும்பத்தின் சேமிப்பை எப்படி இரட்டிப்பாக்கும்?
கல்யாணம் | Wedding

ஈயம் பூசிய பெரிய பெரிய பித்தளை அண்டாக்களில் சோற்றை வடித்து ஓலைப்பாய்களில் வேஷ்டியை நனைத்து அலசிப் பிழிந்து விரித்துப் போட்டு ஆவி பறக்கும் சாதத்தைக் கொட்டி அதேபோல இன்னொரு வேஷ்டியை போட்டு மூடி விடுவார்கள். 

சருகச்சட்டிகளில் கத்தரிக்காய் முருங்கைக்காய் மாங்காய் போட்டு பருப்புக்குழம்பு (சாம்பார்) வைத்து விடுவார்கள். ஒரு அவியல் மற்றும் அப்பளம் கட்டாயம் உண்டு. அப்புறம் தெரு நீளத்துக்குத் தரையில்  சம்மணம் போட்டு குத்தவச்சி பந்தி நடக்கும். தரையில்தான் வாழை இலைகள் விரித்து செம்புகளில் தண்ணீர் வைப்பார்கள். பனை நாரினால் பின்னப்பட்ட கடஹாப் பெட்டிகளில் சாதத்தை அள்ளிப்போட்டு குத்து குத்தாக இலையில் குமித்து பரிமாறுவார்கள். குழம்பை அகப்பைகளில் கோலி கோலி ஊற்றுவார்கள்.

ஒரு வீட்டு திருமண தினத்தன்று பார்த்து காலையிலேயே ஒருத்தர் இறந்து போனார். துக்க வீடு முதல் தெரு. திருமண வீடு 2 வது தெரு. மாலையில் முகூர்த்தம்.  சவுண்ட் சர்வீஸ்காரர் வந்து உயரமான கம்புகள் நட்டு ஸ்பீக்கர் குழாய்களையும் டியூப் லைட்டுகளையும் கட்டி கிராமபோன் பெட்டியில் கொலம்பியா ரிக்கார்டை வைத்து காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்தை ஒலிக்க விட்டார். 

அடுத்த பாட்டு விநாயகனே வினை தீர்ப்பவனே ஓடிக்கொண்டிருக்கும்போது ரெண்டாவது தெருவில் ஒரு வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்கத் தொடங்கியது.

திருமண வேலைகள் நடைபெறுவது தெரிந்திருந்த துஷ்டி வீட்டில் ஒப்பாரி கூட அடக்கி அழப்பட்டு அப்புறம் சன்னஞ் சன்னமாக அழுகை நின்று போனது.

அதே போல சவ அடக்கம் முடியும் வரை எல்லா சுப மங்கள காரியங்களும் திருமண வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரேடியோ ஒலிக்கவில்லை குலவை சத்தம் கேட்கவில்லை. கல்யாண வீட்டில் எந்த சடங்கும் நடக்கவில்லை..

துக்க வீட்டிலும் அவசர அவசரமாக இறுதிச் சடங்கு வேலைகளைத் துவங்கி விட்டார்கள்.

சில சமயங்களில் தூர தேசங்களிலிருந்து மகனோ மகளோ வர வேண்டியது இருந்தால் மறு நாள் காலை வரை இறந்தோரை வைத்திருப்பது வழக்கம். இது போன்ற அக்கம்பக்கத்து வீடுகளில் சுபகாரியம் நடக்கும்போது அப்படியெல்லாம் காத்திருக்க மாட்டார்கள். இப்பெல்லாம் அடுக்கு மனைகள் எனும் அபார்ட்மெண்ட்டில்  ஒரு வீட்டில் திருமணம் நடக்க அடுத்த வீட்டில் துஷ்டி ஒப்பாரி கேட்பது சகஜம். இந்தப்பக்கம் ஜானவாசம் போகும் அந்தப்பக்கம் இறுதி ஊர்வலம் போகும்.

ஆனால் கிராமங்களில் சட்டு புட்டு என்று சவ அடக்கம் செய்து விட்டு திருமண வீட்டு சுபகாரியங்களுக்கு  இடையூறு செய்யாமல் தோதுவாக வழி விட்டு விடுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாகவோ உறவுக்காரர்களாகவோ கூட இருக்க மாட்டார்கள்.

துக்கம் நடந்த நாளில் ஊரில் எவரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். வீட்டுக்கு இம்புட்டு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து ஏழை பாளைகள் என்றில்லை அது எத்தனை பெரிய பணக்கார வீடாக இருந்தாலும் துக்க வீட்டாரிடம் கொடுத்து விடுவார்கள்.

சரி. அடுத்து திருமண வீட்டுக்கு வருவோம்.. இந்தக்காலம் போல அந்தக் காலத்தில் மண்டபம் கச்சேரி சமையல் பரிமாற்றம் எல்லாம் காண்ட்ராக்ட் விடுவது எதுவும் கேள்விப்பட்டதே இல்லை.

எல்லாம் உறவினர்களும் நண்பர்களும் தான். ரொம்ப வசதியான பண்ணையார் வீட்டு கல்யாணமெனில் திருநெல்வேலியிலிருந்து தவசிப் பிள்ளைகளை வரவழைத்து சமையல் செய்வார்கள். சிலப்பம் அவர்களே பரிமாறுவார்கள்.

கல்யாணம் | Wedding
கல்யாணம் | WeddingImage credit: Chatgpt

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு உறவினர்கள் சூழ, குலதெய்வ வழிபாடு செய்து பந்தக்காலின் நுனியில் மஞ்சள், குங்குமம், மாந்தழை மற்றும் பூக்கள் கட்டி கால் நட  தோண்டிய குழியில் நவதானியங்களைப் போட்டு முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவார்கள். வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப பொன்னுருக்கி திருமாங்கல்யம் செய்வார்கள். சிலர் மொளப்பாரி வளர்த்து திருமணப் பந்தலில் வைப்பதும் வழக்கம்.

மாப்பிள்ளை அழைப்பு பெண்ணழைப்பு முடிந்து திருமணத்தன்று அதிகாலையில் நலுங்கு வைப்பார்கள். மஞ்சள் மற்றும் எண்ணெய் தேய்த்து தலையில் பால் வைத்து மங்கள நீராட்டு செய்வர். நாத்தனார்கள் பாய் தலையணை பெட்ஷீட்டுகளை சுமந்து கொண்டு முன்னே செல்ல பின்னால் மணமக்களும் உறவினர்களும் சென்று  கோவில் தெரு முனைகளில் வைத்து சாஸ்தா கும்பிடுவார்கள்.

தாலி கட்டிய பின் மணமகன் மணமகளின் காலில் மெட்டி அணிவிப்பார். மணமக்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பர். 

அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பால் பழம் அருந்திவிட்டு மறு வீடு போவார்கள். இரு வீட்டாரும் சாஸ்திர சம்பிரதாயங்கள் எனும் பெயரில் செய்யும் அட்ராசிட்டியில் அலப்பறையில் எத்தனை அழகாக பியூட்டிசியன் வந்து மேக்கப் போட்டாலும் மணமக்கள் பேயறைந்தது போல் 'பே...' என்றுதான் மணவறையில் குத்த வச்சிருப்பார்கள். மேற்படி சடங்குகள் ஜாதி மதங்கள் வசதி வாய்ப்புகளுக்கு  ஏற்ப வேறுபடும். கூடக் குறைய இருக்கும்.

இப்போதெல்லாம் சில திருமணச் சடங்குகள் வாரக்கணக்கில் நடக்கின்றன.

மாப்பிள்ளை வீடு பார்த்தல், பொண்ணு வீடு பார்த்தல், பொண்ணு கேட்டு போவது, நிச்சயதார்த்தம் செய்வது, அதுக்கு ஒரு திருமண மண்டபம், மெல்லிசைக் கச்சேரி, முகூர்த்தத்திற்கு ஒரு மண்டபம், அதற்கு தவில் நாதஸ்வர கச்சேரியெல்லாம் அமர்க்களப்படும்.

ஆனால் இப்போது அதெல்லாம் போய்  காது சவ்வைக் கிழிக்கும் செண்டை மேளம், வானவெடி என்று காசைத் தண்ணியாகச் செலவழிக்கிறார்கள். பல திருமணங்களின் வரவேற்பில் மணமக்களும் குத்தாட்டம் போடுவதைக் காண முடிகிறது.

பெரும்பாலும் செட்டி நாடு திருமணங்களில்தான் நாம் பார்த்து பிரமித்திருப்போம். பத்து நாட்களுக்கு நடக்கும். விருந்தினர்கள் தங்க ஒரு கல்யாண மண்டபம், திருமணத்திற்கு ஒன்று சீர்வரிசைகளை பரப்பிவைத்து கண்காட்சி போல் பார்வைக்கு வைக்க ஒரு மண்டபம் என்று மூன்று மண்டபங்கள் பிடித்துப் போட்டு விடுவார்கள். கோவில் திருவிழா மண்டகப்படி போல் திருமணம் படு விமரிசையாக நடக்கும்.

இதையும் படியுங்கள்:
மாடு படுத்தால் மழை வருமா? பாரம்பரிய நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?
கல்யாணம் | Wedding

சின்ன கல்யாணங்களில் புரோகிதர்கள் மேடையில் வைத்து ஹோமம் வளர்த்து மந்திரம் சொல்லி சடங்குகளை செய்து முடித்து விடுகிறார்கள். மத்தியான சாப்பாட்டோடு அத்தனை பேரும் காணாமல் போய் விடுகிறார்கள். கல்யாண மண்டப கணக்கை முடிக்க அலையும் பெண்ணின் தகப்பனாரைத் தவிர்த்து.

இதெல்லாம் எதுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று சில பல காதல் ஜோடிகள் பெற்றோர்களுக்கு சல்லிக் காசு செலவு வைக்காமல் கமுக்கமாக ஓடிப்போய் திருமணம் செய்து காொண்டு செட்டில் ஆகி ஜாம் ஜாம் என்று வாழ்பவர்களும் உண்டு. சில குடும்பத்தார், பேருக்கு ஜாதி குடும்ப கவுரவம் அது இது என்று குதித்து ஆர்ப்பாட்டம் செய்து கொஞ்ச நாளில் சமரசமாகி ஒண்ணுக்குள் ஒண்ணாகி விடுகிறார்கள்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இன்றைய ஆடம்பரத் திருமணச் செலவுகளுக்கு மத்தியில், எளிமையும் மனிதநேயமும் நிறைந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையை வாசகர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். உறவுகளின் முக்கியத்துவத்தையும், சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உயரிய பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் தெளிவான பார்வை இதன் மூலம் கிடைக்கும்.