/* For Author name */ /* For Bottom Author name */

தினசரி வரவு-செலவு நோட்டு உங்கள் குடும்பத்தின் சேமிப்பை எப்படி இரட்டிப்பாக்கும்?

₹30,000-40,000 பட்ஜெட்டில் அனாவசியச் செலவுகளைத் தவிர்த்து, மாதம் ₹2,000 முதல் ₹3,000 வரை எளிதாகச் சேமிக்க உதவும் எளிய வரவு-செலவு திட்டம்.
வரவு-செலவு நோட்டு  | Family Budget
வரவு-செலவு நோட்டு | Family BudgetImage credit: Gemini AI
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 
MM strip
MM strip

வரவுக்குள் குடும்பம் நடத்துகிறோம் என்று நினைத்தாலும், மாத இறுதியில் பணம் கரைவது ஏன் தெரியுமா? ₹30,000 முதல் ₹40,000 பட்ஜெட்டில் கூட ஒளிந்திருக்கும் வீண் செலவுகளைக் கண்டுபிடித்து, மாதம் ₹2,000 முதல் ₹3,000 வரை எளிதாக மிச்சப்படுத்த ஒரு சின்ன நோட்டு போதும்! குடும்பச் சேமிப்பின் ரகசியச் சாவியைத் திறந்து, எதிர்காலத்தை வளமாக்கும் இந்த எளிய பழக்கத்தைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும் சரி, தெருமுனையில் இருக்கும் மளிகைக் கடையாக இருந்தாலும் சரி; வரவு - செலவுக் கணக்குகளைத் துல்லியமாக எழுதி வைப்பது அத்தியாவசியம். வணிகத் தலங்களுக்கு இது சட்டப்படி கட்டாயம் என்பதால், ஆடிட்டர்களை நியமித்துக் கணக்குகளை நிர்வகிப்பது தவிர்க்க முடியாத நடைமுறையாக உள்ளது. ஆனால், குடும்பங்கள் என்று வரும்போது வரவு - செலவுகளை எழுதி வைக்க வேண்டிய சட்டக் கட்டாயம் எதுவும் இல்லை. அதன் அவசியத்தை உணர்ந்த ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்த நற்பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன.

வரவுக்கு ஏற்ற செலவு செய்தல், திட்டமிட்டுப் பணத்தைக் கையாளுதல், வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்தல் ஆகியவையே ஒரு குடும்பத்தின் பொருளாதார நெறிமுறைகள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் வரவு - செலவு எழுதி வைக்கிற வழக்கமே கிடையாது. நட்பு வட்டாரம், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் எனப் பலரிடமும் விசாரித்துப் பார்த்ததில் கிடைத்த கசப்பான உண்மை இது.

இதையும் படியுங்கள்:
சின்ன வெங்காயம் பெரிய சரித்திரம்: 5,000 ஆண்டுகாலச் சுவையும் ரகசியமும்!
வரவு-செலவு நோட்டு  | Family Budget

இல்லத்தரசிகளின் கையில் இருக்கும் ‘பட்ஜெட் சாவி’!

மாதாந்திர வீட்டுச் செலவுகள் மற்றும் குடும்பச் செலவுகளை நிர்வகிப்பதும், பணத்தைச் சேமிப்பதும் பெரும்பாலும் குடும்பத் தலைவிகளான பெண்களைச் சார்ந்தே இருக்கிறது. இதை ஆண்கள் செய்யக் கூடாது என்பதில்லை; ஆனால், ஆண்களைவிடவும் பெண்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு, பார்த்துப் பார்த்துச் சிறப்பாகச் செய்ய முடியும். ஏனென்றால், வீட்டை நிர்வகிப்பதில் பெரும் பங்கு அவர்களுடையதுதான். ஆகவே, அதன் செலவினங்கள் என்னென்ன என்பதும், எவ்வளவு என்பதும் அவர்களுக்குத்தான் முழுதாகவும், துல்லியமாகவும் தெரியும்.

எனவே, இல்லத்தரசிகள் ஒரு நோட்டு அல்லது பழைய டைரியில் தினமும், அன்றைய நாளில் குடும்பத்திற்கு ஆன அனைத்துச் செலவுகளையும் ஒவ்வொன்றாகக் குறித்து வைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படித் தொடர்ந்து எழுதி வந்த பிறகு, வரவு-செலவு நோட்டை எடுத்து ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.

அதில் வாடகை, மளிகை, கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் அறியாமலேயே செய்த அனாவசியச் செலவுகள், ஆடம்பர விரயங்கள் எவை என்பதை அந்த வரவு-செலவு நோட்டு நமக்குக் கண்கூடாகக் காட்டிவிடும். தேவையற்ற சிறு சிறு செலவுகளைக் கண்டறிந்து தவிர்த்தாலே, அதுவே கணிசமான மிச்சமாக ஆகும்.

₹30,000 - 40,000 பட்ஜெட்டில் எவ்வளவு மிச்சப்படுத்தலாம்?

உதாரணமாக, மாதாந்திரச் செலவு ₹30,000 முதல் ₹40,000 வரை ஆகக்கூடிய ஒரு கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நாளும் ஆகக்கூடிய செலவுகளைத் தவறாமல் எழுதி வைத்து, மாத இறுதியில் பரிசீலித்தால் சுமார் ₹2,000 - 3,000 வரையிலான அனாவசியச் செலவுகளையாவது நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.

பெரும்பாலான குடும்பங்களில் திட்டமிட்டுச் செலவழிக்கும் வழக்கம் இருப்பதில்லை. வரவுக்குள் குடும்பம் நடத்தினாலும், வரவு முழுவதையும் செலவழித்துவிட்டு மாத இறுதியில் கையைத் பிசையும் பழக்கமே நிலவுகிறது. 'ஏதோ கொஞ்சம் சேமிக்கிறோம்' என்பார்களே தவிர, அதை முறையாகச் செய்வதில்லை; சேமிப்பை எப்படி அதிகப்படுத்துவது என்ற இலக்கும் இருக்காது.

வரவு-செலவு நோட்டு  | Family Budget
வரவு-செலவு நோட்டு | Family BudgetImage credit: Chatgpt

ஆடம்பரம் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு வகையில் அனாவசியச் செலவுகள் ஒளிந்திருக்கும். குறைந்தபட்சம் 500 - 1,000 ரூபாயாவது இதற்கு விரயமாகும். தினசரி செலவுகள் ஒவ்வொன்றையும் எழுதி வைப்பதன் மூலம் இதைக் கண்டறிந்து தவிர்க்கலாம். அந்தத் தொகையை மிச்சப்படுத்தி சேமிப்பிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளிலோ செலுத்தினாலே வருடக் கணக்கில் அது கணிசமான நிதியாக உருவெடுக்கும். அது குழந்தைகளின் எதிர்காலக் கல்வி, அவசர மருத்துவத் தேவைகள் போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும்.

இல்லத்தரசிகளின் இரண்டு தவறான வாதங்கள்!

புதிதாகத் திருமணமான இளம் பெண்கள் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த இல்லத்தரசிகள் வரை பலரிடம் பேசியபோது, கணக்கு எழுதாதவர்கள் பொதுவாக இரண்டு முக்கிய வாதங்களை முன்வைக்கிறார்கள்:

வாதம் 1: "நான் ரொம்பக் கவனமாகத்தான் செலவு செய்கிறேன், அனாவசியமாக எதற்கும் செலவு செய்வதில்லை. என்னால் முடிந்ததை மிச்சப்படுத்தியும் விடுகிறேன்."

வாதம் 2: "வரவு - செலவை நோட்டில் எழுதுவதால் என்ன லாபம் வரப்போகிறது? செய்ய வேண்டிய செலவுகளைச் செய்யாமல் இருக்க முடியுமா?"

செய்ய வேண்டிய செலவுகளைச் செய்துதான் ஆக வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், செய்யக் கூடாத செலவுகளையும் நீங்கள் செய்கிறீர்களா என்பதை நீங்களாகவே உணர்ந்துகொள்வதற்கும், அதை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிந்து தவிர்ப்பதற்கும் இந்த வரவு-செலவு நோட்டு பயன்படும்.

எழுதிப் பார்ப்பதன் வலிமை!

எந்தவொரு யோசனையையும் மனதில் மட்டுமே திட்டமிடுவதைவிட, ஒரு காகிதத்தில் அல்லது நோட்டில் எழுதிப் பார்ப்பது சிறந்தது. மனதில் நினைக்கும்போது வராத தெளிவு, எழுதும்போது கிடைக்கும். ஒரு சிறு திட்டத்தை எழுதிப் பார்த்து, அதில் உள்ள சாதக பாதகங்களை அலசி, அடித்தல் திருத்தல்கள் செய்து மேம்படுத்தும்போது, அதன் இறுதி வடிவம் துல்லியமாக இருக்கும்.

இப்படி எழுதித் தயாரித்த பட்ஜெட் குறிப்பேடுகளை அடிக்கடி உங்கள் பார்வையில் படும் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் அதைப் பார்க்கும்போது திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்தத் தோன்றும்; புதிய சேமிப்பு, முதலீட்டு உத்திகளும் உங்களுக்குள் உருவாகும்.

குறிப்புகளை எழுதித் திட்டமிடும் பழக்கம் பொருளாதார மேலாண்மைக்கு மட்டுமல்ல; உங்களது சொந்தக் காரியங்கள், அலுவலக வேலைகள் அனைத்திற்குமே தெளிவு தரும்; அதன் விளைவாகப் பெரும் பலனும் அளிக்கும்.

நிதி ஆலோசகர்கள் சொல்வது போல, "சேமிப்புதான் உங்களின் முதல் செலவாக இருக்க வேண்டும்." மாதத் தொடக்கத்திலேயே அத்தியாவசியச் செலவுகளைப் பட்டியலிட்டு, அதற்கான தொகையை மட்டும் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள தொகையைச் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு முதலிலேயே அனுப்பிவிட வேண்டும். எஞ்சிய தொகையில்தான் குடும்பச் செலவுகளை நிர்வகிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பப்ளிக் டாய்லெட், ATM பட்டன் தொட பயமா? கிருமிகளை விட ஆபத்தான விஷயம் இதுதான்!
வரவு-செலவு நோட்டு  | Family Budget

நற்பழக்கச் சங்கிலி:

இதுவரை கணக்கு எழுதும் வழக்கம் இல்லாத பெண்களே...! இன்றே ஒரு நோட்டை எடுங்கள்! ஒரு மாதத்திற்கு உங்களது தினசரிச் செலவுகளைக் குறித்து வையுங்கள். பிறகு எந்தவிதச் சார்புமின்றி அதைச் சுயபரிசோதனை செய்து பாருங்கள். வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வழிகள் உங்கள் கண்ணுக்குத் தெரியும்.

வரவு - செலவுகளை எழுதி வைப்பது, முன்கூட்டியே திட்டமிடுவது, முதலீடு செய்வது ஆகிய நற்பழக்கங்கள் உங்களுக்குப் பணப் பலனைத் தருவதோடு நின்றுவிடாது; இந்த ஒழுக்கம் உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலுமே பிரதிபலித்து, உங்களது குடும்பத்தின் எதிர்காலத்தையே பிரகாசமாக ஒளிரச் செய்யும்!