

கீர்த்தனா அவள் சொந்த ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவள் மிகவும் நன்றாக படிக்கும் மாணவி.
கீர்த்தனா பத்தாம் வகுப்பில் 500க்கு 459 மதிப்பெண்கள் பெற்றாள்.
கீர்த்தனாவின் தாயார் வாசுகி அவளை மேல் படிப்பிற்காக அருகில் இருக்கும் ஊரில் அவளைச் சேர்த்து படிக்க வைத்தார்கள்.
அவள் பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியைவிட்டு வெளியேறினாள்.
கீர்த்தனாவிற்குக் கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருப்பினும் கீர்த்தனாவின் தாயார் வாசுகி அவளை நர்சிங் படிப்பில் சேர்த்துவிட்டார்.
நர்சிங் படிப்பின் மீது கீர்த்தனாவிற்கு ஈடுபாடு இல்லாத போதிலும் அவள் படிப்பின்மீது அதிக விருப்பம் கொண்டிருந்ததன் காரணத்தினால் அவள் நர்சிங் படிப்பை நல்முறையில் படித்து முடித்து வெளியேறினாள்.
திருமண வயது எட்டியது கீர்த்தனாவின் தாயான வாசுகி அவளுக்குத் திருமண வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.
இறுதியாக வாசுகி உறவினர் பையனுக்கே கீர்த்தனாவைத் திருமணம் செய்துவைத்தார்கள்.
திருமணம் ஆகி கீர்த்தனா மிகவும் சந்தோசமான இல்லற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தாள்.
ஆனால், அது நெடுங்காலம் நீடிக்கவில்லை. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
ஒரு பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடனும், மற்றொரு பெண் குழந்தை சற்று ஊனமுற்று இருந்தது.
இதனால் கீர்த்தனா மிகுந்த மனவேதனை அடைந்தாள். மற்ற குழந்தைகளைப்போல தன் குழந்தை இல்லாமல் ஊனமுற்று இருப்பதை பார்த்து, கணம் கணம் அவள் துடித்தாள்.
சிறிது காலம் கழித்து கீர்த்தனாவின் கணவன் தவறான பாதையில் செல்ல தொடங்கினான். அவன் மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தைக் கவனிக்காமல் போனான்.
கீர்த்தனாவிற்கு குழந்தையின் நிலைமை ஒரு புறம் வாட்டினாலும் கணவனின் நிலைமை மறுபுறம் அவளை அதிகமாகவே வேதனை அடையச் செய்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் கீர்த்தனாவின் கணவன் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து அவளையும் அவளுடைய குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினான்.
இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த கீர்த்தனா தன்னுடைய தாயான வாசுகி வீட்டில் அவனுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் கூட்டி வந்து அடைக்கலம் புகுந்தாள்.
இருப்பினும் கீர்த்தனா மனம் தளரவில்லை. அவள் நர்சிங் படிப்பு முடித்து இருந்தாள். நன்றாக படித்தப் பெண் அல்லவா, சற்று வாழ்க்கையை வேறு கோணத்தில் அவள் பார்க்கத் தொடங்கினாள்.
கணவன், ஊனமுற்ற குழந்தை என்று இரண்டையும் அவள் பிரித்துப் பார்க்க தொடங்கினாள்.
கணவனின் நிலையை சரிசெய்ய முடியாது. ஆனால் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என்று எண்ணிய அவள் படித்த நர்சிங் படிப்பிற்கு ஏற்ப வேலை தேடத் தொடங்கினாள்.
அவளுடைய கடினமான உழைப்பிற்குப் பின் அவளுக்கு இறுதியாக அரசாங்கத்தில் ஒரு மருத்துவமனையில் நர்சிங் வேலை கிடைத்தது.
முன்பு இருந்ததுபோல கீர்த்தனா அரசாங்க வேலை கிடைத்தப்பின்பு மனம் தளரவில்லை தன்னுடைய கணவனைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.
அவளுடைய குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் வயதை எட்டினர். அவளுக்கோ நல்ல அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிட்டது. அதனால் குழந்தைகளை நல்ல பள்ளி நிறுவனத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாள்.
அவள் எண்ணியப்படியே இரண்டு குழந்தைகளையும் நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைக்க தொடங்கினாள்.
தினசரி காலையில் எழுந்து கிளம்பி வேலைக்குச் செல்வது... மாலை நேரத்தில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது என்று அவள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
என்னதான் பெண்களுக்கு நகை, சொத்து, சுகங்களை தாய் தந்தையர் சேர்த்து வைத்தாலும் 'கல்வி ஒன்றே அழியாச் செல்வம்' என்பதற்கு ஏற்ப அவளது கல்வி ஒன்றே அவளுக்குத் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவியது.
பெண்களுக்கு தங்களுடைய உழைப்பில் வரும் பணம் பொருளாதாரம் நிலையை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு மரியாதையையும் தைரியத்தையும் கொடுக்க வல்லது.
'தன் கையே தனக்குதவி' என்ற பழமொழிக்கு ஏற்ப பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்வில் யாரையும் சார்ந்து வாழாமல் தம்முடைய சொந்தக் காலிலேயே வாழ்க்கை நடத்துவதற்குரிய தைரியத்தையும் மனவலிமையும் தர வல்லது.
*****************
ஆதினி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
திருவிழா காலம் நெருங்கியது.
அவளும், அவளுடைய தோழிகளும் திருவிழாவிற்குப் புத்தாடை என்ன வாங்குவது? என்று பேசினார்கள்.
இவ்வாறு பேசும்போது பல பெண்களின் ஆசை தாவணி, எடுப்பதுதான்!
ஆதினி தன்னுடைய தாய், தந்தையிடம் கூறியபோது அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தாய், தந்தை அவள்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள்.
பெண் பிள்ளைகள் தாவணி கட்ட ஆரம்பித்தாலே அவர்களுக்குத் திருமண வரன் அதிகம் வரத் தொடங்கும் என்று ஆதினியின் பெற்றோர்கள் எண்ணினார்கள்.
ஆதினிக்கு தாவணி வாங்கி கொடுத்தால் அவளுக்கு விரைவில் திருமணம் ஆகி தங்களை விட்டுச் சென்றுவிடுவாள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.
அதனால் ஆதினிக்குத் தாவணி வாங்கித் தர மறுத்தனர்.
திருவிழா அன்று ஆதினியின் தோழிகள் அனைவரும் தாவணியில் இருக்க, ஆதினி மட்டும் சுடிதார் அணிந்திருந்தார்.
இது அவள் மனதில் தாவணி மீது பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தியது.
அவள் பத்தாம் வகுப்பு படிப்பு முடித்தபின் மேல் படிப்பிற்காக அருகில் இருக்கும் ஊருக்குப் படிக்கச் சென்றாள்.
அவள் பதினோராம் வகுப்பில் நன்கு படித்து வந்தாள்.
தீபாவளி பண்டிகை நெருங்கியது.
ஆதினி மீண்டும் பெற்றோர் இடத்தில் புது டிரஸ் தாவணியாக வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்பொழுதும் அவர்கள் ஆதினிக்குத் தாவணி வாங்கித் தரவில்லை.
ஆதினி பலமுறை மன்றாடினாளும் அவளுக்குத் தாவணி வாங்கித் தர அவளுடைய பெற்றோர்கள் விரும்பவில்லை.
ஆதினியின் பெற்றோர் தாவணி வாங்கித் தராததற்கு அவளிடம் பல காரணங்களைக் கூறினார்கள்.
இருப்பினும் ஆதினியின் மனம் எந்தக் காரணத்தை ஏற்கவில்லை.
மாறாக தாவணி வாங்கி தராதக் காரணத்தினால் ஆதினிக்குப் பெற்றோர்மீது கோபம் மற்றும் வெறுப்பே ஏற்பட்டது.
ஆதினி பல விசேஷங்களுக்குத் தாவணி கேட்டபோதும் வாங்கித் தராமல் இருக்க அவளுக்கு அதன்மீது ஏக்கமே ஏற்பட்டது.
அவள் தாய், தந்தை இடம் தாவணி கேட்பதையே விட்டுவிட்டாள்.
கேட்டால் மட்டும் என்ன? வாங்கித் தரவா போகிறார்கள்! என்று எண்ணம் எழுந்தது.
காலங்கள் உருண்டோடின.
ஆதினி 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தாள்.
ஆதினி திருமண வயதை அடைந்தவுடன் ஆதினியின் பெற்றோர் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து, நன்முறையில் திருமணம் முடித்து வைத்தார்கள்.
திருமணம் ஆன சில மாதங்களுக்குப் பின் ஆதினியின் பிறந்தநாள் வந்தது.
பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க எண்ணிய ஆதினியின் கணவர் ஆதினியிடம் கேட்டபோது அவள், 'தனக்கு என்ன வேண்டும் என்று கூறமுடியாமல் திணறினாள்.
மீண்டும் பலமுறை ஆதினியின் கணவர் வற்புறுத்தி கேட்டபோது அவள் ''தனக்கு தாவணி அணிய ஆசையாக உள்ளது'' என்று கூறினாள்.
அதைக் கேட்டவுடன் ஆதினியின் கணவனின் தாய், ''வயது பெண்கள் மட்டுமே தாவணி அணிவார்கள், திருமணமான பெண்கள் புடவை மட்டுமே அணிவார்கள்'' என்று கூறிவிட்டார்கள்.
ஆதினியின் ஆசை புகுந்த வீட்டிலும் தரைமட்டமானது.
ஆதினியின் மனதில் பிடித்தவை அனைத்தையும் தாய், தந்தை, மற்றும் கணவன் வாங்கித் தந்தாலும், தாவணி மற்றும் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் ஒரு ஓரத்தில் ஏங்கிக்கொண்டே இருந்தது.
அது அவளுடைய வாழ்வில் பெரும் மனக்குறையாக மாறியது.
வாழ்க்கையில் தகுந்த நேரத்தில் படிப்பு, வேலை, திருமணம் நடக்கும்.
ஆனால், தாவணி அணிவதனால் விரைவில் திருமணம் நடந்துவிடும் என்பது பழங்கால மூடத்தனம்.
இவ்வாறு பெண் பிள்ளைகளிடத்தில் பல ஆசைகள் மூடத்தனத்தினால் நிராகரிக்கப்படுகின்றன.
வாழ்வில் விரும்பியவற்றை விரும்பிய நேரத்திலேயே செய்துவிட வேண்டும். காலங்கள் கடந்தால் அது நம் கைக்கு கிடைக்காது.
அந்த ஆசை மட்டுமே நிராசையாக நெஞ்சில் நிறைந்திருக்கும்.