

‘அம்மா விசும்பும் சத்தம்’. அன்பு மகள் கயல்விழி, திரும்பிப் பார்த்தாள்.
“அம்மா…” அழைத்தாள்
“ம்...” திரும்பினாள் வசந்தா.
“அம்மா, ஏன் அழறீங்க?”
“வலிக்குதம்மா...”
“எனக்குத்தான்மா, அடிவயிற்றை அப்படி வலிக்குது.”
“எனக்கு, இதயத்தை வலிக்குதடி...”
“ஏம்மா?”
“இன்று நீ பெரிய பெண்ணாயிட்டே. மகிழ்ச்சிதான். ஆனா, அதுக்குபிறகு, செய்ய வேண்டிய சடங்கெல்லாம் அதிகமா இருக்கே...”
“என்னம்மா சடங்கு?”
“என்னடி அப்படி கேட்டுட்டே. ஒரு பெண், பூப்படைந்தா, அவ்வளவு பெரிய நிகழ்வு. அதை ஊர் கூடி கொண்டாடணும். அதுக்கு, பூப்பு நீராட்டு விழான்னு, பெரிய சடங்கு செய்யணும். அதுக்கு, எவ்வளவு செலவாகும். உனக்கு, நல்ல நல்ல டிரெஸ் எல்லாம் எடுக்கணும். போடி, என்னை அழவிடாதேடி. ஆம்பிளை, இல்லா குடும்பத்துல, ஓடிப்போன புருஷன், “ஒண்டிக்கட்டையா நான்” அதை நினைத்துதான்டி அழறேன். சந்தோஷப்பட வேண்டிய தருணம். ‘ஆனா, நான் அழறேன்’ பாரு...” என்று தன் செல்ல மகளைக் கட்டிபிடித்து ஓவென அழுதாள் வசந்தா.
“அம்மா, அதெல்லாம் நாம ஏற்படுத்திக்கிட்ட, ஒரு சம்பிரதாயம். அந்த காலத்துல, மக்கள் தொகை அதிகம். ஒரு வீட்டுல, பத்து பிள்ளைங்க இருக்கும். அதுல பெண் பிள்ளைங்கதான், அதிகம் இருக்கும்.
என் வீட்டுல, ஒரு பெண், இப்ப குடும்ப வாழ்வுக்கு தயாராகிட்டான்னு, ‘டாம் டாம்’ அடிச்சு, அக்கம் பக்கம், சொந்த பந்தத்துக்கு, தெரியனும்னுட்டு செய்தாங்க. இப்ப வீட்டுக்கு, ஒரு பிள்ளை. அதுவும், பெண் பிள்ளைகள் விகிதம், ரொம்ப குறைந்து போயிடுச்சாம். பசங்கள் எல்லாம் ‘லோ லோ லோன்னு’ திருமணத்துக்குப் பெண் கிடைக்காம அலையறாங்களாம். நமக்கு ‘சடங்கும் வேண்டாம்’. ‘செலவும் வேண்டாம்’. வர்றவங்க, கொடுக்கிற ‘மொய்பணமும்’ வேண்டாம்” என்றாள் கயல்விழி ஒரு தீர்கமான முடிவுடன்.
“இவ்வளவு புத்திசாலியா... என் மகள்...” என்று உச்சி முகர்ந்தவள், இப்போது, ஆனந்தக்கண்ணீர் உகுத்தாள்.
“சரியா, நீ பிறந்த இரண்டாவது வயசுல, சில குறும்படம் தயாரிச்சி காசு பாத்த உன் அப்பா, ஒரு குறும்படத்துல நடிச்ச ஒரு நடிகையோடு, சொல்லாமலேயே என்னை அம்போன்னு விட்டு ஒடிட்டான். பின், எப்படியோ கண்டுபிடிச்சு, நான் கதறின கதறலில், இரண்டு லட்சம் கொடுத்து, பிற்பாடு தேவைப்பட்டா வான்னும் அனுப்பிட்டான். எத்தனை முறை, உன் உணவுக்காக, மருத்துவ செலவுக்காக, படிப்புக்காக, அலைந்து, அவனிடம் கேட்டிருப்பேன்.
‘கிடைத்தது அடியும், உதையும்தான்’. என்னால, எந்தக் காவல் நிலையத்துக்கும் சென்று, புகார் கொடுக்கவும் முடியலே. காரணம், அவன் பெரிய கட்சியோட, நெருக்கம் உள்ளவன்.
காவல்காரங்க, அவன் பெயரைச் சொன்னாலே, எந்த கேசும் பதியவே மாட்டாங்க. ஆனா, எப்படியோ கயல்விழி, நான் உன்னைப் படிக்க வெச்சு, இப்ப நீயும் ஆளாயிட்டே. நீ, தலைக்கு குளித்து முடிந்ததும், நாம ‘அண்டாவுல சர்க்கரை பொங்கல்’ செஞ்சு, கோயிலுக்கு போய்வரும் பக்தர்களுக்கும், அமர்ந்திருக்கும் ஆண்டிகளுக்கும், போடுவோம். இறைவன் நம்மைக் காக்கட்டும்” என்று கூறி, உடனே, ‘தன் கை வளையல்’ ஒன்றை எடுத்து நகைகடைக்குச் சென்று விற்று வந்தாள். இதில், கயல் விழிக்கு விருப்பமில்லாட்டாலும்; வேறு வழியில்லை. அது பெரிய கோயில். இரு நூறு பேர்களுக்காவது, பாக்குமட்டை தட்டில், உணவு கொடுக்க வேண்டியிருக்கும். ‘சரி’ என்று மனதை தேற்றிக்கொண்டாள்.
அன்று, கோயிலில் சம கூட்டம். மகிழ்வுடன் வந்த பக்தர்களுக்கு, கயல்விழியே சர்க்கரை பொங்கலை, கொடுத்து மகிழ்ந்தாள்.
இப்போது, வாசலில் இருக்கும், ஆண்டிகளுக்கு போட்டாள்.
“அம்மா, இன்னும் ஒரு தட்டு கொடுங்கம்மா...” என்று கூறவும் கோபமடைந்த கயல்விழி “ஏன்யா... இன்னும் எத்தினை பேர் இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டாமா?’ என்று கூறவும், “என்ன தர்க்கம்?” என்று
தாய் வசந்தா, ஓடி வந்து பார்த்தவள், உடன் வேகமாக அந்த இடத்தை விட்டு அழுதுகொண்டே, ஓடிவிட்டாள். மகளுக்குப் புரியவில்லை.
ஒரு நாள் விவரம் அறிந்தாள். குறும்படங்கள், அத்தனையும் தோல்வி. ஏகக் கடன். சேர்த்துக்கொண்ட நடிகை வேறொருவனுடன் ஓடிவிட்டாள்’. இப்போது, இன்னும் ஒரு தட்டு கேட்டவன், வசந்தாவின் புருஷன்தான். அதுதான், அவள் அழுகையுடன் அந்த இடத்தை விட்டு, ஓடியதற்குக் காரணம் என்று புரிந்துகொண்ட கயல்விழிக்கு, வருத்தம் இருந்தாலும், தாயை தேற்றி ஒரு நிலைக்குக்கொண்டு வந்தாள்.
அம்மா, “தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் கோயில் வாசலில் பிச்சைதான் எடுப்பான்” அழுதபடி, கயல்விழி, தன் தாயை கட்டிக்கொண்டாள். அவள் கண்களில் இருந்தும், கண்ணீர் பொல பொலவென, கொட்டியது. என்ன இருந்தாலும், அவள் அப்பா இல்லையா...?