

ஆடி மாத அம்மன் வழிபாட்டையும் மெகா சீரியல்களையும் ஒப்பிட்டு, இயக்குநர்கள் இந்த மாதத்தின் பக்தி சூழலை கதைகளில் பயன்படுத்தும் விதத்தை கட்டுரை சாடலுடன் விவரிக்கிறது. சீரியல்கள் காரணமாக காசிப்பிங் குறைந்து, வீட்டுப் பெரியவர்கள் தங்கள் உலகத்தில் மூழ்கி அமைதியாக இருப்பதையும், அதே நேரத்தில் நீண்டு கொண்டே போகும் கதைகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதையும் எழுத்தாளர் சுவையாக பதிவு செய்கிறார்.
ஆடி மாத அம்மன்களும் நமது மெகா சீரியல்களும்!
நமது மெகா சீரியல் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நேரங்காலமறிந்து செயல்பட்டுத் தங்கள் சீரியல்களை எவ்வாறு இழுத்துக் கொண்டு போவதென்ற யுக்தியை மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இது ஆடிமாதம் என்பதையும், இம்மாதத்தில் அம்மன் கோயில்களில் ஆடிக் கூழும், திருவிழாக்களும் களை கட்டுமென்பதையும் அறிந்த அவர்கள், தங்கள் சீரியல்களில் அம்மனுக்கே ரோல்கள் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்!
மெகா சீரியல்கள் வர ஆரம்பித்த பிறகு ‘காசிப்பிங்’ என்றழைக்கப்படும் புறம் பேசுதல் வெகுவாகவே குறைந்து விட்டது. இதற்கான தரவுகள் இருக்கிறதோ இல்லையோ, நடைமுறையில் அதனை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.
அவ்வளவு ஏன்? சில சீரியல் நேரங்களில் உறவினர்களைச் செல்லில் கூப்பிடுவதையும், அந்த நேரங்களில் அவர்கள் வீட்டுக்குச் செல்வதையுங் கூடப் பலர் தவிர்த்து விடுகிறார்கள்! ”எல்லாரும் சீரியல் பார்த்துக்கிட்டிருக்கறப்போ அங்க போயி டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே!” என்ற மனநிலை, பலரிடமும் பெருகி விட்டது.
ஒரு விதத்தில் இவையெல்லாம் நல்ல சைன்களே! அமைதி நாட்டில் நிலவ இது போன்றவையும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. எப்பொழுதுமே மனிதர்கள் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று இருந்து விட்டால், ஒருவருக்கும் பிரச்னை இருக்காது. அந்த விதத்தில், தொடரும் மெகா சீரியல்களால் சமுதாயம் நன்மை பெறுகிறது என்றே சொல்ல வேண்டும். மக்கள்,பெரும்பாலும் வீட்டுப் பெரியவர்கள், தாங்களுண்டு, தங்கள் சீரியலுண்டு என்று இருக்க ஆரம்பித்து விட்டார்கள்.
‘அன்னம்’ சீரியலில் கணவனும், மனைவியும் எலியும், பூனையுமாக இருக்க, மனைவி, மூத்த மகனுக்கும், ரிடையரான வாத்தியார் சண்முகம் இளைய மகனுக்கும், அவனின் மனைவியான ஆசிரியரின் தங்கை மகளான அன்னத்திற்கும், அணுசரணையாக இருக்கிறார்கள். தம்பியின் காதலி, அண்ணனின் மனைவியாகிக் குடும்பத்தையே பழி வாங்கத் துடிக்கிறாள்.
நகராட்சிக் கமிஷரான அவள் அலுவலகத்திலேயே, அவளின் கீழ் அவள் பழைய காதலன் பணியாற்ற, அவனைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கிறாள்.
குடும்ப அமைதிக்காகவும், சண்முகத்தின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகவும் அன்னம் பல தியாகங்களைச் செய்கிறாள். இருந்தாலும் அவளைக் குறை சொல்வதிலேயே தாயும், மூத்த மகனும் குறியாக இருக்க, ஓப்பிடியார்களுக்குள் ஓயாத போட்டியே கதைக்களமாகி சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த ஊர் அம்மனே அன்னத்திற்கு உதவ முன் வருகிறாள்!
பூ விற்கும் சிறுமியாக அவள் வந்து, கமிஷனரின் தலைக்கனத்திற்குப் பாடம் புகட்டி வருகிறாள்! சீரியல்களில் எவ்வளவோ உண்மையாகவும், தன்மையாகவும், புத்திசாலித் தனமாகவும் நடந்து கொள்ளும் நாயகிகளே தொடர்ந்து துன்பங்களை அனுபவித்து வருவதாகக் காட்டுவதும், அநீதி இழைக்கும் வில்லிகள் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதும், ஆடி மாதத்தில் அம்மனுக்கே பிடிக்கவில்லை போலும்! அதனால்தான் அம்மனே களத்தில் குதித்து விட்டாள் போலும்! அம்மனின் திருவிளையாடல்களால் நல்லவர்கள் பயனடைந்தால் நலந்தானே!அவளின் விளையாடல்களைப் பார்ப்பதில் நமக்கும் மகிழ்ச்சிதானே!
அன்னத்தில் பூக்காரச் சிறுமியாக அறிமுகமான அம்மன், ’புது வசந்தம்’ சீரியலில், அட்வகேட்டாகவே அறிமுகமாகி விடுகிறாள்!
அந்தக் கதாநாயகியும் பெற்றோருக்கு ஒற்றைப் பெண்ணாகப் பிறந்து, பணக்காரச் சூழலில் வளர்க்கப்பட்டாலும், தான் புகுந்த வீட்டுப் பெருமையைக் காப்பாற்றவும், ஓப்பிடியாளின் அட்டகாசம் எவ்வளவு பாதித்தாலும் அத்தனையையும் துச்சமாக எண்ணி அவற்றைப் புறந்தள்ளவும் உறுதி பூண்டு செயல்படுவது பாராட்டுக்குரியது!
‘எதிர் நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் நான்கு ஓப்பிடியாள்களும் ஒன்றாகச் சேர்ந்து, அடாவடி செய்யும் ஆண் வர்க்கத்தை எதிர்ப்பதாகக் காட்டியவர்கள், இப்பொழுது அவர்களையும் பிரித்து விட்டார்கள்.
ஜனனிக்கும் ஆடி மாத அம்மன் உதவி செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், துணிச்சல்காரியான தர்ஷிணி கூடக் காலை வாரி விட்ட நிலையில், அவளைத் தன் உயிரையும் துச்சமென மதித்துக் காப்பாற்றிய ஜனனிதான் தன்னைக் கடத்தினாள் என்று அவள் சொன்னதைக் கேட்டபோது, ஜனனியைவிட அதிகமாகக் கோபப்பட்டது ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிச் சொல்ல நேர்ந்ததற்காக அவள் தனிமையில் அழுகிறாள்!
இயக்குனர் திருச்செல்வம் அவள் மூலம் ஒரு ரகசியத்தைச் சொல்ல வருவதாகத் தெரிகிறது. ஒரு விதத்தில் மெகா சீரியல்கள் மூலம் நாமும் பொறுமையைக் கற்றுக் கொள்கிறோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆடி மாத அம்மனே! உன்னிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம்!எப்படி நீ அன்னம் மற்றும் புது வசந்தம் கதாநாயகிகளைக் காப்பாற்ற களத்தில் இறங்கி விட்டாயோ, அதைப் போல ரசிகர்களாகிய எங்களையும், நீண்டு கொண்டே போகும் மெகா சீரியல்களிலிருந்து காப்பாற்றுவாயாக!
இந்த கட்டுரையின் மூலம் நெடுநாட்களாகத் தொடரும் சீரியல்களின் திரைக்கதை உத்திகள் மற்றும் கலாச்சார மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, பொழுதுபோக்கு உலகிலுள்ள உளவியல் திருப்பங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.